நாட்டின் முன்னேற்றப் பயணம் பின்தள்ளப்படும் அபாயம்!-வானவில் இதழ் 47, 48, 49 (ஜனவரி 18, 2015)

வானவில் இதழ் 47, 48, 49

ஜனவரி 18, 2015

நாட்டின் முன்னேற்றப் பயணம்

பின்தள்ளப்படும் அபாயம்!


footworld1


லங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்பார்த்ததை விட அமைதியான முறையிலும், நேர்மையான முறையிலும் நடந்து முடிந்துள்ளது. தேர்தலின் பின்னரான அதிகார கையளிப்பும் சுமுகமாக நடந்துள்ளது.


ஆனால் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் தற்போது வெற்றியீட்டியுள்ள எதிரணியினரும், உள்நாட்டு – வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் பெரும் தேர்தல் மோசடிகளில் ஈடுபடுவதற்கும், வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதற்கும் திட்டமிட்டுள்ளதாக பல விதமான பொய் பிரசாரங்களை செய்தனர். அதையும் மீறி எதிரணி வெற்றி பெற்றால் இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியில் தொடர்வதற்கு மகிந்த திட்டமிட்டிருந்ததாகவும் பிரசாரம் செய்து வருகின்றன.
இப்படியான ஒரு தோற்றப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா. போன்றனவும் ஏற்படுத்த முயன்றன. ஆனால் எல்லாவிதமான பொய் பிரசாரங்களையும் முறியடித்து மகிந்த அரசாங்கம் தேர்தலை வெற்றிகரமாக நடாத்தி முடித்ததுடன், தேர்தல் பெறுபேறுகள் முற்றாக வெளிவருவதற்கு முன்னரே ஜனநாயகத்தை மதித்து, தோல்வியை ஏற்று, மகிந்த அதிகாரத்தை சுமுகமாக கையளித்துவிட்டு, தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையை விட்டும் வெளியேறி சென்றார்.

அத்துடன் கடந்த 10 வருடங்களாக சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்ச, தனது தலைமைப்பதவியை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார். சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட முடிவெடுத்தபோது, அக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தத்தேர்தலின் பின்னர் மகிந்த அரசு கடைப்பிடித்த ஜனநாயக நடைமுறையை, 1981இல் அப்போதைய ஜே.ஆர். தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் வட மாகாணத்தில் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலை நடாத்திய முறையுடன் ஒப்பிட்டு பார்த்தால், ஐ.தே.க சொல்வதென்ன, நடைமுறையில் செய்வதென்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த தேர்தலில் பிற்போக்கு வலதுசாரி சக்திகளின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை வெல்ல வைப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சகல பிற்போக்கு சக்திகளும் கைகோர்த்தன.
உள்நாட்டில் ஐ.தே.க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ், சரத் பொன்சேகா, ஜே.வி.பி, இடதுசாரி சந்தர்ப்பவாதிகள், சகலவிதமான அரச சார்பற்ற நிறுவனங்கள் என ஒரு பெரிய பட்டாளம் ஒன்று சேர்ந்ததுடன், தமது வெற்றியை உறுதிப்படுத்த ஆளும் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்தவரையே தமது வேட்பாளராகவும் நியமித்தனர்.

மறுபக்கத்தில் வெளிநாட்டைப் பொறுத்தவரை, அமெரிக்கா – பிரித்தானியா தலைமையிலான மேற்குலக வல்லாதிக்க சக்திகள், புலம்பெயர் நாடுகளிலுள்ள புலி சார்பு சக்திகள் என்பன ஒன்றிணைந்து எதிரணி வேட்பாளரின் வெற்றிக்கு கடுமையாக உழைத்தன.

ஆனால் உள்நாட்டு – வெளிநாட்டு பிற்போக்கு சக்திகள் கடும் பிரயத்தனம் செய்த போதிலும் மைத்திரிபால சிறிசேன 51 வீதம் மட்டுமே பெற்று அரும்பொட்டான வெற்றியையே ஈட்ட முடிந்தது. அதுவும் வாழ்நாள் முழுவதும் சர்வதேச – உள்நாட்டு பிற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து அரசியல் செய்வதையே மரபாக பேணி வரும் பிற்போக்கு தமிழ் தலைமையும் (தமிழ் தேசிய கூட்டமைப்பு), சந்தர்ப்பவாதத்தையும், பதவி வெறியையும் மூலதனமாக கொண்டு அரசியல் செய்து வரும் முஸ்லீம் காங்கிரசும் ஆதரவளித்தமையாலேயே மைத்திரிபால வெற்றியீட்ட முடிந்தது. தேர்தல் வெற்றி சம்பந்தமான வரைபடத்தை எடுத்துப் பார்த்தால், அதில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற இடங்கள் அச்சொட்டாக புலிகள் வெளியிட்ட ‘தமிழ் ஈழ’ வரைபடம் போன்று இருப்பதை அவதானிக்க முடியும்.

அதேவேளையில் சிங்கள மக்களில் பெரும்பாலோர் மகிந்த ராஜபக்சவையே ஆதரித்து வாக்களித்துள்ளனர். அதன் மூலம் அந்நியர் ஆட்சிக் காலத்திலும் சரி, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் பெரும்பாலான காலங்களிலும் சரி, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நின்ற தமது பாரம்பரியத்தை சிங்கள மக்கள் கைவிடாது பாதுகாத்து வருகின்றனர் என்ற உண்மை புலனாகின்றது.
மகிந்த ராஜபக்சவை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்ற முடிவை உள்நாட்டு – வெளிநாட்டு சக்திகள் எடுத்ததிற்கு முக்கியமான சில காரணங்கள் உண்டு.

அதில் முதலாவது, அவரது அரசு பின்பற்றிய உலக வல்லாதிக்க எதிர்ப்பு வெளிநாட்டு கொள்கை.
இரண்டாவது, அவரது அரசு தயவு தாட்சண்யமின்றி பிரிவினைவாத, பயங்கரவாத, பாசிச புலிகளை ஒழித்துக் கட்டியது. அத்துடன் போர்க்குற்றங்கள் என்ற போர்வையில் நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க எடுத்த முயற்சிகளுக்கு இடமளிக்காமை.
மூன்றாவது, யுத்தத்தின் வடுக்களை துரிதமாக ஆற்றி, நாட்டை பொருளாதார ரீதியில் துரித வளர்ச்சியை (7 வீதம்) நோக்கி இட்டுச் சென்றது.
எது எப்படியிருந்த போதிலும், 1978இல் ஜே.ஆர். தலைமையிலான ஐ.தே.க அரசு கொண்டு வந்த எதேச்சாதிகார அரசியல் அமைப்பை மாற்றாத வரை பிற்போக்கு சக்திகள் வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் மீண்டும் மீண்டும் ஆட்சி பீடம் ஏறுவர் என்பதை இந்த தேர்தல் மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கின்றது.

1977இல் எப்படி அன்றைய ஐ.தே.க, அன்று ஆட்சியில் இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசின் தற்காலிக பொருளாதார நெருக்கடிகளை பயன்படுத்தி மக்களுக்கு நல்லாட்சி தருவதாக பொய் வாக்குறுதிகள் தந்து ஆட்சியை கைப்பற்றிவிட்டு, பின்னர் 17 வருடங்களாக மக்களையும் நாட்டையும் நரக குழிக்குள் தள்ளினரோ, அச்சொட்டாக அதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் இன்றும் எதிரணியினர் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

ஒரு புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகளை கணிப்பிட ஒரு சில நாட்கள் போதாது என்பது உண்மையென்ற போதிலும், புதிய ஜனாதிபதியின் பின்னால் அணிதிரண்டு நிற்கும் உள்நாட்டு – வெளிநாட்டு சக்திகள் யார் யார் என்பதை வைத்து அது எந்தப் பாதையில் செல்லப் போகின்றது என்பதை அனுமானிப்பது ஒன்றும் சிரமமான விடயமல்ல. வெளிநாட்டு வல்லாதிக்க சக்திகள் பெரும் பிரயத்தனப்பட்டு இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தது பொழுதுபோக்கு வேடிக்கைக்காக அல்ல.

எனவே பின்வரும் விடயங்களை புதிய அரசு முனைப்புடன் செயல்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

• இதுவரை காலமும் தென்னாசிய பிராந்தியத்தில் உலக வல்லாதிக்க சக்திகளின் மூலோபாய திட்டங்களுக்கு எதிராக இருந்து வந்த ஒரேயொரு நாடான இலங்கை இனிவரும் காலங்களில் அந்த ஆதிக்க சக்திகளின் ஒரு முக்கியமான தளமாக மாற்றப்படலாம்.

• இலங்கையின் செழிப்பு மிக்க வளங்கள் அந்நிய ஏகபோக கம்பனிகளுக்கு தாரை வார்க்கப்படுவதுடன், கட்டுப்பாடற்ற சுரண்டலை இலங்கை மக்கள் மீது நடாத்துவதற்கும் கதவு திறந்து விடப்படும்.

• இலங்கையின் வெளிநாட்டு கொள்கையின் மூலைக்கல்லாக விளங்கிய அணிசேரா கொள்கை மாற்றப்பட்டு ஏகாதிபத்திய சார்பு
கொள்கை பின்பற்றப்படலாம்.

• ஊடக சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வைகளில் தேசிய அபிலாசைகளுக்கு விரோதமான நச்சுத்தனமான கல்வி, கலை, கலாச்சார செயற்பாடுகளுக்கு கதவு திறந்து விடப்படும்.

• முன்னைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட சகல தேசிய வளர்ச்சி திட்டங்களும் கைவிடப்படலாம்.

• முன்னைய அரசாங்க காலத்தில் நியமனம் பெற்ற சகல சேவைத்துறை ஊழியர்களும் ஒவ்வொருவராக பழி வாங்கப்படலாம்.

• முன்னைய அரசுகள் வழமையாக பின்பற்றியது போல தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படலாம்.

இதுபோன்ற இன்னும் பல விடயங்கள் நடைபெறலாம்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் உரிமைகளுக்கென போராட்டங்கள் நடாத்துவதும், ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால் அரசில் இணைவதுமான கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றி வரும் தமிழ் தலைமைகளின் கபடத்தனமான போக்குகளையிட்டு இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னும் ஒன்றையும் ஞாபகப் படுத்துவது அவசியம்.
1965இலும் ‘தேசிய அரசாங்கம்’ என்ற போர்வையில் டட்லி சேனநாயக்கவின் ஐ.தேக. அரசில் ஏழு கட்சிகள் கூட்டுச் சேர்ந்தன. அவற்றில் தமிழ் இனவாதம் பேசிய தமிழரசு, தமிழ் காங்கிரஸ் கட்சிகளும் மறுபக்கத்தில் தீவிர சிங்கள இனவாதம் பேசிய கே.எம்.பி.ராஜரத்ன, ஆர்.ஜீ.சேனநாயக்க போன்றோரும் அடங்கியிருந்தனர். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக மாவட்ட சபைகள் அமைப்பதாக டட்லி தமிழரசு கட்சியினருடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஆனால் இறுதியில் எதுவுமே வழங்கப்படவில்லை. நாலரை வருடம் ஆட்சியில் ஒட்டிக்கொண்டு இருந்துவிட்டு 1970 தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆட்சியை விட்டு வெளியேறி தமிழரசு தலைமை தமிழ் மக்களை ஏமாற்ற முனைந்தது. ஆனால் மக்கள் அவர்களது ஏமாற்றுக்கு எடுபடாமல் 1970ஆம் ஆண்டு தேர்தலில் அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டினர்.

அந்த தேர்தலில் அ.அமிர்தலிங்கம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், மு.சிவசிதம்பரம், ஈ.எம்.வி.நாகநாதன், மு.ஆலாலசுந்தரம் ஆகிய தமிழரசு – தமிழ் காங்கிரஸ் தலைவர்களை மக்கள் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இப்பொழுதும் தமிழ் மக்களின் நலன்களை அடகு வைத்து தமது சொந்த நலன்களுக்காக எதிரணி வேட்பாளரை ஆதரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அதே வகையான பாடம் ஒன்றை புகட்டுவர் என எதிர்பார்க்கலாம்.

அதுமாத்திரமின்றி, 1977இல் ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்று இறுமாப்புடன் 17 வருடங்களாக மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐ.தே.க அரசு, 1994இல் எப்படி மக்களால் தூக்கி வீசப்பட்டதோ, அதுபோன்ற ஒரு நிலையே மக்களுக்கு எதிராக இன்றைய அரசு செயற்பட்டாலும் ஏற்படும் என துணிந்து கூறலாம்.
 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...