மைத்ரீயும் (மலையகத் ) தமிழரும் ! எஸ்.எம்.எம்.பஷீர்



"நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
 புல்லா விடுதல் இனிது "
                                                     இனியவை நாற்பது 





இலங்கையின் தேர்தல்களில் ஜனாதிபதி மீது நிறைவேற்று அதிகாரம் குவிந்து கிடப்பதால் வழக்கம்போலவே ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தல்களும் பரபரப்பானவை. இந்த முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வழக்கமான ஜனாதிபதி தேர்தலைவிட ஒருவரே மூன்றாம் முறையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை சட்டபூர்வமாக அனுமதிக்கும் வண்ணம் 18ஆவது சட்ட திருத்தம் கொண்டு நிறைவேற்றப்பட்டு இடம்பெறுகின்ற தேர்தலாகும்.

அதிலும் குறிப்பாக 18ஆவது சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட காரணமாக இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரும் அரசாங்கத்தின் சுகாதார அமைச்சருமான  மைத்ரீபால சிறிசேன இன்றைய ஜனாதிபதிக்கு எதிராக போட்டியிடுகிறார் என்பதும், நாளை மறுதினம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதும் இங்கு சொல்லப்பட வேண்டிய சங்கதியே அல்ல ! .

ஆனாலும் மைத்ரீபால சிறிசேனாவின் மீது அபரிதமான  நம்பிக்கை கொண்டிருப்பதாக பிரகடணப்படுத்தும் இலங்கையின் பிரதான எதிர்கட்சியும், பிரபலமான அரசியல் தனி நபர்களும் சிறு சிறு தேசிய மட்டத்திலான கட்சிகளும் மற்றும் சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் முளைவிடும் அரசியல் குழுக்களும் ஒன்று திரண்டு இன்றைய ஜனாதிபதிக்கு எதிராக களத்தில் இறங்கி உள்ளன. யுத்தத்தின் பின்னரான 2010 ஜனாதிபதித் தேர்தலில் மேற்குலக நாடுகள் வகுத்த வியூகத்தில் இருந்து தப்பிய மகிந்தவை இந்தமுறை எப்படியும் சாய்த்து விடவேண்டும் என்பதில் மேற்குலக வியூகத்தில் உள்நாட்டு மேற்குலக விசுவாசிகளின் பங்கு அபரிதமானது. 

சென்ற தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதிக்கு ஆதரவளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித  "நிபந்தனையுமின்றி" மைத்ரீக்கு ஆதரவளிப்பதாக முன்வந்துள்ள நிலையில் முஸ்லிம் சமூகத்தின் மீதான சிங்கள பௌத்த இனவாத நடவடிக்கைள் ஏற்படுத்திய ரணங்கள் இன்னும் ஆறவில்லை என்பதை முஸ்லிம் மக்களில் அநேகர் இன்றைய ஜனாதிபதிக்கு எதிராக காட்ட இந்த தேர்தலை பயன்படுத்த விழைகிறார்கள்.

இந்நிலையில், இந்த தேர்தலில் வெல்வது யாராக இருந்தாலும் மைத்ரீ பற்றிய சில சங்கதிகள் கவனத்தை ஈர்க்கின்றன . மைத்ரீ என்பவர் தனது பன்னிரெண்டாவது வயதில் பீக்கிங் (சீன) சார்பு சண்முகதாசனின் அணியிலான கமுனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர் என்று ஒருமுறை தன்னை அறிமுகம் செய்து கொண்டவர். 1971 ஜே வீ பீ சந்தேக நபராக கைது செய்யப்பட்டு சிறை சென்றவர். இவர் ஒரு தீவிர இடதுசாரி என்று அறியப்பட்டவர் . எப்படி இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேட்பாளர் தேடுதலில் கண்டுபிடிக்கப்பட்டார் , எவ்வாறு அந்தக் கூட்டத்துள் இயைவு உற்றார்  என்பது ஒரு புறமிருக்க  மைத்ரீபால வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் இனப் பிரச்சினை பற்றி எவ்வித காத்திரமான செய்தியையும் சொல்லவில்லை என்பதையும் பொருட்படுத்தாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு " ஆட்சி மாற்றத்துக்கு " உதவ கை கொடுப்பதாக சொல்கிறது.

ஆனால் மைத்ரீபால விஞ்ஞாபனம் வெளியிட்டபின்னர் வெளிவந்துள்ள  அவரின் தேர்தல் தொடர்பான பிரசுரம் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு பின்னர் வெளிவந்துள்ளது. அதுவும் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னரே வெளி வந்துள்ளது. இது பற்றி பலர் இன்னமும் அறியவில்லை ஏனெனில் இந்த விளக்க  "விஞ்ஞாபனம்"  ஒரு கேள்வி பதில் வடிவத்தில் மைத்ரீயின் நேர்காணலாக  சிங்களத்தில் மட்டும் வெளி  வந்துள்ளது.  சரி அப்படி என்னதான் அவர் சொல்லுகிறார் என்று பார்த்தால்  விஞ்ஞாபனத்தை ஒத்த அளவில் பல பக்கங்களுடன் " மைத்ரீயின் சுக துக்கங்களும் , சந்தேகத்தைப் போக்குதலும் " என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த விஞ்ஞாபன விளக்க  நூலில் தானே இறுதி யுத்த காலத்தில் ( ஜனாதிபதி நாட்டில் இல்லாத பொழுது வழக்கம்போல் ) பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்ததாகவும், அவ்வாறு தான் ஐந்து தடவைகள் இருந்துள்ளதாகவும்  "யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது "  (அதாகப்பட்டது , பிரபாகரன் கொல்லப்பட்டது , "சரணடைந்தோர் " கொல்லப்பட்டது உட்பட  )  என்ற செய்தியை தனக்கே முதலில் அறிவிக்கப்பட்டது ".என்று மைத்ரீ உரிமை கோரி உள்ளார். இனிமேல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும்  புலம்பெயர் புலிகளுக்கும் யுத்தக் குற்றத்தை முன்னெடுக்கும் அருகதை  இல்லாமல் போய் விடும் அல்லது மைத்ரீயையும் விசாரணைக்கு உட்படுத்தக் கோர வேண்டும். மீண்டும் ஒரு மைத்ரீ எதிர்ப்புப் போராட்டத்தை தொடங்க வேண்டும் . 

பெரும்பான்மை சிங்கள மக்களுக்குள் மகிந்தவுக்கு எதிராக யுத்த வெற்றி குறித்து (யுத்த முடிவு குறித்து) தனது வகிபாகத்தை அழுத்தமாக வலியுறுத்த முன்றுள்ளார் மைத்ரீ. அதையும் விட இன்னுமொரு புனையப்பட்ட ஆதரமற்ற இனவாதம் பிரவகிக்கும் செய்தி ஒன்றையும் மைத்ரீ இந்த நூலில் சொல்லுகிறார். அதாவது 1960 களில் மலையகத்தில் "நாம் தமிழர்" இயக்கம் இயங்கியதாகவும் , அது இலங்கையைப் தமிழர்களுக்கு பிரித்துக் கொடுக்க மறைந்த நடிகர் , முன்னாள் தமிழக முதலமைச்சர்  எம்.ஜி ராமச்சந்திரனின் ஆதரவுடன் இயங்கியதாகவும்;  தான் அதற்கு எதிராக , நாட்டைப் பிரிக்கும் தமிழர்களுக்கு ( மலையகத் தமிழர்களுக்கு எதிராக- மலையைக் தமிழர்கள் எப்பொழுது நாட்டைப் பிரிக்கக் கோரினார்கள் என்பது உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது ) மைத்ரீயிடம்தான் கேட்க வேண்டும். ஆனால் நாம் தமிழர் இயக்கம் என்றாலே நெடுமாறனும் சீமானும் உங்களுக்கு ஞாபகம் வரலாம், "நாம் தமிழர் இயக்கம்" என்ற ஒன்று உலகின் எந்தப் பாகத்தில் 1960 களில் இருந்திருக்கவில்லை, அதனையும் நாங்கள் மைத்ரீயிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் அதில் சுவாரசியமானது என்னவென்றால் அந்த இயக்க நடவடிக்கைகளை எதிர்த்து (அதாகப்பட்டது மலையகத் தமிழர்கள் நாட்டைத் துண்டாட செயற்படுவது ) காவல் துறை நடவடிக்கைகளில் தான் சம்பந்தப்பட்டது  பற்றியும் அவர் பிரஸ்தாபிக்கிறார்.



இதைப் பார்க்கும் பொழுது மைத்ரீ யாரின் நண்பர்  என்பதை புரிந்து கொள்ளலாம். மலையகத் தமிழர்கள் 1979ல் சிங்கள கலவரத்தில் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மலையைக் தமிழர்களைச் சந்தித்த அன்றைய ஜனாதிபதி ஜே ஆர். ஜெயவத்தனா  அம் மக்களிடம்  " இப்பொழுது தெரிகிறதா தமிழ் ஈழம் ? கோழி தருவோம் , முட்டை தருவோம் தமிழ் ஈழம் மட்டும் தர மாட்டோம் விளங்குகிறதா ? " என்று கேட்டதற்கும்  மைத்ரீயின் இந்த கபடத்தனத்துக்கும் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை.!



No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...