ஜெரமி பக்ஸ்மன் எனும் "பெரும் சிங்கம் இன்று தூங்குகிறது" !!

எஸ்.எம்.எம்.பஷீர்

ஏன் பிரித்தானியாவிற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஆசனம் இருக்கிறது என்பதும் ,  வெளிநாடுகளில் நடைபெறும் யுத்தங்களில் பிரித்தானிய துருப்புக்களை ஈடுபடுத்த பிரித்தானிய பிரதமர் தயார் நிலையில் இருப்பதும் (பிரித்தானியாவின் ) ஏகாதிபத்திய வரலாற்றை விளக்குகிறது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை பார்ப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது முற்றிலும் ஒரு தவறான விடயமாகும் , நிச்சயமாக எவரும்  அன்னியர்கள்  தங்களை காலனித்துவப்படுத்தி ஆள்வதை விரும்ப மாட்டார்கள், “                 
                                                               ஜெரமி பக்ஸ்மன் (Jeremy Paxman)                                                                                     


பீ பீ சீ இரண்டின் (B.B.B-2)  பின்னிரவுச் செய்திகளைத் தொடர்ந்து இடம்பெறும் செய்தியின் பின்னணி நிகழ்ச்சியான "நியூஸ் நைட்" (NEWSNIGHT) நிகழ்ச்சி தொகுப்பாளர்  ஜெரமி பக்ஸ்மன் இவ்வருட ஜூன் மாதத்தில் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் இருந்து நிரந்தரமாக விலகிச் செல்கிறார். சுமார் இருபத்தி ஐந்து வருடங்கள் மிகவும் பிரபல்யம் பெற்ற நிகழ்ச்சியாக நியூஸ் நைட் நிகழ்ச்சியை நடத்தி , அதன் மூலம்  உலகளவில் தனக்கென ஒரு தனியான  இடத்தை பெற்றிருந்த ஜெரமி பக்ஸ்மன் இனிமேல் தான் அந்த நிகழ்ச்சியை நடத்தப் போவதில்லை என்று அறிவித்து விலகிச் சென்றுள்ளார்.ஜெரமி பக்ஸ்மனின் அறிவுத் திறனும் எந்த பதவியில் உள்ளோரையும்,  குறிப்பாக ஆட்சித் தலைவர்களை  நேர்காணும் துணிச்சலும் அவரை தனித்துவமாக ஏனைய நிகழ்ச்சித்  தொகுப்பாளர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டியது. நியூஸ் நைட் எனும் நிகழ்சியை பக்ஸ்மன் இன்று நடத்துகிறார் என்பதுவே பலரை பின்னிரவுச் செய்தியைப் தூக்கத்தைப் புறந்தள்ளி பார்க்க ஆவலுடன் காத்திருக்க வைத்தது. அதனால்தான் இங்கிலாந்தின் பிரபல தினசரிகளில் ஒன்றான டெய்லி டெலிக்ராப் பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் டான் ஹோட்ஜெஸ் ஜெரமி பக்ஸ்மன் தனது நியூஸ் நைட்நிகழ்ச்சியை விட்டு விலகிச் செல்வது குறித்து  "பெரும் சிங்கம் இன்று தூங்குகிறது" ("great lion sleeps tonight") ,என்று கூறியது ஜெரமி பக்ஸ்மனின் ஆளுமைக்கு சான்றாக அமைகிறது,


தனது உலகளாவிய பரந்து பட்ட  மக்கள்  அரசியல் வரலாறு தொடர்பாக உள்ள ஆர்வம் காரணமாக பல ஆய்வுகளை அவதானங்களை மேற்கொண்டு , பல நூல்களை ஜெரமி பக்ஸ்மன் எழுதி உள்ளார் அவற்றில் குறிப்பாக பிரித்தானிய சாம்ராட்சியம் பற்றிய ஒரு வரலாற்று ஆய்வும் (நூலும்) , "பெரிய பிரித்தானியாவின் பெரும் யுத்தங்கள்" என்ற நூலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த அண்மைய வெளியீடுகளாகும். பிரித்தானியா உலக யுத்தங்களில் நடந்து கொண்ட விதங்களை , அதன் ராஜீய அணுகுமுறையில் உள்ள சூட்சிகளை மிக வெளிப்படையாக விமர்சிக்கும் ஜெரமியின் நேர்மையையும் அவரின் நூல்களில் காண முடிகிறது.  அத்தகைய வரலாற்று சம்பவங்கள் தொடர்பான அவரின் தொலைக்காட்சி ஆவணப்படங்கள் கூட  அத்தகைய விமர்சனங்களை கொண்டிருந்தன.

குறிப்பாக அவருக்கு அந்நிகழ்ச்சியை விட்டு விலகிச் செல்லும் எண்ணம் கருக்கொண்ட நிகழ்வாக மறைந்த  இசைத் தொகுப்பு தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஜிம்மி சவைல் , மற்றும் பெருமகன் மாக் அல்பைன் மீது முன்வைக்கப்பட்ட பாலியல் அவதூறுகள் பீ பீ சீ யின்  நியூஸ் நைட்  நிகழ்ச்சியின் நன்மதிப்பிற்கு ஊறு செய்யும் விதமாக எழுந்த விமர்சனங்கள் தொடர்பாக தான் நியூஸ் நைட் நிகழ்ச்சியை விட்டு வெளியேற விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் அது குறித்து பீ பீ சீக்கு எதிராக அவர் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் பீ பீ சீ நிர்வாகம் அதிருப்தி கொண்டது. ஆயினும் தானும் பெரும்பான்மை மக்கள் படுக்கைக்குச் செல்லும் நேரத்தில் 25 வருடமாக நிகழ்ச்சி நடத்தி சாதாரண வாழ்க்கை முறையை இழந்துவிட்டதாகவும் , எல்லோரையும் போல் நேரத்துக்கு தூங்க வேண்டும் என்பதாகவும் தெரிவித்திருந்தார். பீ பீ சீ செய்தி இஸ்தாபனம்  நியூஸ் நைட் நிகழச்சியை நடத்துவதற்கு  ஜெரமி பக்ஸ்மனுக்கு  ஆண்டுக்கு 800,000 பவுண்ட்ஸ்களை  ஊதியமாக வழங்கியது.

"போர்வர்ட் ப்ரைஸ் போர் போயற்றி"  -FORWARD PRIZE FOR POETRY  (முற்போக்கு கவிதைக்கான பரிசு )

இந்த வருட "போர்வர்ட் ப்ரைஸ் போர் போயற்றி”  குழுவில் இடம்பெறும் ஐந்து நடுவர்களில் தலைமை நடுவராக  இம்முறை ஜெரமி பக்ஸ்மன் இடம் பெறுகிறார்.

இந்த வருட "போர்வர்ட் ப்ரைஸ் போர் போயற்றி"கான சிறந்த பரிசுக்கான கவிதையை அல்லது கவிதைத் தொகுப்பை தேர்வு செய்யும் பணியில் சுமார் 170 கவிதைத் தொகுப்புக்களையும் சுமார் 254  உதிரிக் கவிதைகளையும் சீர்தூக்கிப் பார்த்துவிட்டு   ஜெரமி பக்ஸ்மன் " இப்பொழுது கவிஞர்கள் மொத்தத்தில் மக்களுடன் பேசுபவர்களாக இல்லாமல் பிற கவிஞர்களுடன்  பேசுவதாகவே எனக்குத் தோன்றுகிறது " என்று இன்றைய ஆங்கிலக் கவிதைகள் பொதுவாக மக்களுக்காக எழுத்தப்பட்டதாக இல்லை , மாறாக ஒரு வகையில் இன்றைய கவிஞர்கள் தமது கவிதை மேதாவிலாசத்தை காட்ட , பிற கவிஞனுடன் போட்டி போடும் விதத்தில் கவிதைகளை எழுதுகிறார்கள் என்பதை நாசூக்காக தெரிவித்த ஜெரமியின் கருத்து சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

ஸ்ரீ லங்காவை பூர்வீகமாகக் கொண்ட லீட்சில் பிறந்து வளர்ந்த பிரபல கவிஞரும் நாவலாசிரியருமான செனி செனிவிரட்னவின் “Wild Cinnamon and Winter Skin, “ (காட்டுக் கறுவாவும் குளிர்காலத்  தோலும்)  எனும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைளும் “போர்வோர்ட் ப்ரைஸ் போர் போயற்றியின்” பாராட்டுதல்களைப் பெற்ற கவிதைகளை கொண்டது.  அது போலவே  பிரித்தானியாவில் வாழும் இன்னுமொரு இலங்கையரான ரொமேஷ் குணசேகர எனும் நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளரும்  “போர்வோர்ட் ப்ரைஸ் போர் போயற்றியில்”  சிறந்த கவிஞர்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவில் ஒரு தடவை இடம் பெற்றிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.இந்நடுவர்களில் ஒருவரான கவிஞர் டென்னி அப்சி  முதன் முறையாக கவிதைகளில் பல இராக் , இலங்கை அல்லது அயர்லாந்து முரண்பாடுகளால் அகத்தூண்டல் கொண்ட கவிஞர்களின் படைப்புக்களைக் கொண்டுள்ளன என்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். போட்டிக்கு வந்த கவிதைகளில் அவர்களின் திறன்களை காண முடிகிறது என்றும் அவர் குறிப்பிடுவதில் இருந்து பரிசுகள் பெறப் போகும் சிலரில் முரண்பட்டுப் பிரதேசத்தைச் சேர்ந்த சில கவிஞர்களும் தேர்ந்தடுக்கப்படலாம் என்பதை இக்கருத்து பூடகமாக சொல்கிறதோ என ஊகிக்க வைக்கிறது.   

எது எப்படியாயினும். இந்தக் கவிதைத் தேர்வில் பரிசு பெறப்போகும் கவிஞர்கள் யார்  என்பதை இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 30 ம் திகதி  நடைபெறப் போகும் கவிதைக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியில் தெரியவரும்.
முன்னர் ஒரு தடவை , சுவாரசியமாக இராக் யுத்தத்தில் பங்குபற்றிய ஒரு பிரித்தானிய இராணுவ வீரர் கெவின் பவர்ஸ் என்பவரின் ஒரு தனிக் கவிதை முதல் பரிசு பெற்றவருக்கு அடுத்ததாக தெரிவு செய்யப்படும் ஐவரின் சிறந்த கவிதைகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டது.


ஜெரமி பக்ஸ்மனுடனான எனது ஒரு சிறிய சந்திப்பின் பொழுது அவர் தனக்கு மிகவும் பரிச்சயமான இடமாக மட்டக்களப்பையும் கிழக்கு மாகாணத்தையும் சிலாகித்துப் பேசிய பொழுது எப்படியான அனுபவங்களையும் தகவல்களையும் கூட கொண்டிருக்கிறார்  என்பதை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அவரின் நியூஸ் நைட் நிகழ்ச்சியை இழக்கின்ற இலட்சோபலட்சம் மக்களில் நானும் ஒருவனே . ஜெரமி பக்ஸ்மனின் இடம் இலகுவில் நிரப்பப்படக் கூடிய கூடியதொன்றல்ல எனபது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஆம் ,  ஒரு சிங்கம் இப்பொழுது இரவுகளில் தூங்குகிறது! 


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...