முஸ்லிம்களுக்கெதிரான பெளத்த மேலாதிக்கம் இணக்க அரசியலை கேள்விக்குள்ளாக்குகிறதா? - மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்


பாகம் 2
1988ல் முஸ்லிம்களின் முதலாவது தனித்துவ அரசியல் வரவான முஸ்லிம் காங்கிரசின் பிரவேசம் வடக்கு கிழக்கில் "தமிழ் பேசும் மக்கள்"அல்லது "தமிழர்கள்" என்று அதுவரைகாலமும் சொல்லப்பட்டுவந்த பதத்தின் அரசியல் அர்த்தத்தை புதியதொரு பரிணாமத்துக்கு நகர்த்தியது.அதாவது முஸ்லிம்கள் அல்லாத "தமிழ் பேசும் மக்கள்"அல்லது முஸ்லிம்கள் அல்லாத "தமிழர்கள்" என்று அர்த்தப்பட வழிகோலியது.அன்றிலிருந்து நாங்கள் வேறு உங்களின் தமிழ் பேசும் அடையாளத்துக்குள் நாங்கள் இல்லை என்று அது தமிழ் தேசியத்தை நோக்கி உரத்து சொன்னது. இந்த விலகலின் காரணங்களையிட்டு தம்மீதான சுயவிமர்சனம் எதையும் தமிழ் தேசிய வாதிகளோ தமிழ் தேசியவாதத்தின் தலைமையை தம்பிடியில் வைத்திருந்த தமிழீழ விடுதலை புலிகளோ மேற்கொள்ளவில்லை.மாறாக மீண்டும் மீண்டும் முஸ்லிம்கள் மீது ஆளுமை செலுத்தி தமது அரசியலுக்கு ஆதரவாக அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கவே தமிழீழ விடுதலை புலிகள் முயன்றனர்.


1990ம் ஆண்டு புலிகள் நிகழ்த்திய படுகொலைகளையும் வடமாகாண முஸ்லிம்கள் மீதான இன சுத்திகரிப்புக்களையும் அவ்வாறே இனம்காண முடியும்.தமது அமைப்பில் பயிற்சி பெற்று தம்மோடு இருந்த முஸ்லிம் போராளிகளை தனியாக பிரித்து வரிசையில் வைத்து புலிகள் நிகழ்த்திய படுகொலைகள், தமிழீழ விடுதலைக்காக பயிற்சி பெற்று பல இயக்கங்களிலும் இருந்த பலநூறு முஸ்லிம் போராளிகளை இராணுவத்தினரிடம் சரணடைய வைத்தது.காத்தான்குடி, ஏறாவூர் போன்ற இடங்களில் இடம்பெற்ற புலிகளின் தாக்குதல்களுக்கு பின்னர் முஸ்லிம் ஊர்காவல் படைகளை இத்தகைய முஸ்லிம் இளைஞர்களைக்கொண்டே அரசாங்கம் உருவாக்கியது..காலப்போக்கில் இந்த முஸ்லிம் ஊர்காவல் படையினர் தத்தமது கிராமங்களை புலிகளிடமிருந்து காப்பாற்றுபவர்களாக மட்டுமன்றி காட்டிகொடுப்பாளர்களாகவும் இராணுவத்தின் துணை படைகளாகவும் மாறினார்.சில சந்தர்ப்பங்களில் முஸ்லிம்  இளைஞர்களிடத்திலிருந்து உருவாகிய தன்னார்வ தீவிரவாத குழுக்கள் ஜிகாத் என்னும் பெயரிலும் இயங்கினர். இவை போன்ற குழுக்கள் புலிகளது முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலீடாக தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல்களை நாடாத்தினர்.குறிப்பாக அம்பாறை மாவட்ட வீரமுனை படுகொலை, மட்டகளப்பு மாவட்ட புதுக்குடியிருப்பு (தாழங்குடா)படுகொலை போன்றவை இவ்வாறே இடம்பெற்றன. இத்தகைய நிகழ்வுகள் முஸ்லிம்களை தமிழீழ விடுதலையின் முழு எதிரிகளாக சித்தரித்த புலிகளின் பிரச்சாரங்களுக்கு நியாயப்பாடுகளை வழங்கின.
இத்தகைய சந்தர்ப்பங்கள் தமிழ் -முஸ்லிம் இருதரப்பாரின் காலாகாலமான இன உறவுகளை சீர்குலைத்தன.அமைதி பற்றியும் மனித உரிமைகள் பற்றியும் இனங்களிடையேயான ஒற்றுமை பற்றியும் அக்கறைகொண்ட பொதுமக்கள் மெளனம் காக்க மட்டுமே முடிந்தது. இருதரப்பிலும் தீவிரவாதமும் பயங்கரவாதமும் மேலெழுந்தது.புலிகள் மேற்கொண்ட முஸ்லிம் வர்த்தகர்கள் மீதான கடத்தல் சம்பவங்கள் பலதடவைகளில் கிழக்கில் இனமுறுகல்களையும் கலவரங்களையும்  தோற்றுவிக்க காரணமாக இருந்துள்ளது. புலிகளது முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனங்கள் தமிழீழ விடுதலையின் பெயரால் நடத்தபடுகையில் முஸ்லிம்கள் அந்த கொள்கையிலிருந்து விலகலும் அன்னியப்படலும் இயல்பே.தமது இனத்தின் இருப்பே கேள்விக்குள்ளாக்கப்படுகையில் அதற்கான பாதுகாப்பைகோரி அரசாங்கத்திடம் முறையிடலில் நியாயத்தன்மைகள் இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது.
சுருங்க கூறின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த பாமாரர்களாலும் சாமானியர்களாலும் பல நூற்றாண்டுகாலமாக பேணப்பட்டுவந்த இனநல்லுறவும் மதநல்லிணக்கமும் சகிப்புத்தன்மையும் மெத்த படித்த அரசியல் விற்பன்னர்களான தமிழ் தலைவர்களாலும் உலகமகா சமதர்ம போதகர்களான தமிழீழ புரட்சியாளர்களாலும் சுக்குநூறாக்கப்பட்டன.அதன் பலனாக தமிழீழ பிரிவினையை விட ஐக்கிய இலங்கையே தமக்கு பாதுகாப்பானது என்னும் முடிவை நோக்கி (தமிழ் பேசும்) முஸ்லிம்கள் தள்ளப்பட்டனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரிவினை ஒன்று உருவானால் தமிழர்களின் கையில் அதன் அதிகாரங்கள் ஒப்படைக்கப்படும் நிலையில் அது தமது வாழ்வுக்கு உத்தரவாதத்தை அளிக்காது என்கின்ற அச்சம் முஸ்லிம்களிடத்தில் உருவானது.அதன்காரணமாக அத்தகைய நிர்வாகம் ஒன்றில் முஸ்லிம்களின் இருப்பினை உறுதி செய்துகொள்வதற்கான பொறிமுறைகள் குறித்த உத்தரவாதங்களை கோரி முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதிகள் குரலெழுப்பினர் .இக்கோரிக்கைகள் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் கோசங்களாக அவ்வப்போது வெளிப்பட்டன.
கிழக்குமாகாணமே இலங்கையில் அதிகளவு முஸ்லிம்களை கொண்ட மாகாணம் என்பதால் முஸ்லிம்காங்கிரஸின் அரசியல் கோரிக்கைகள் அங்குவாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களிளிருந்தே பிறப்பெடுத்தது. அதிலும் செறிவாக முஸ்லிம்கள் வாழும் பிரதேசமான கிழக்கு மாகாணத்தின் தென்பகுதியான அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாகக்கொண்டு முஸ்லிம்களுக்கான தனியலகு கோரிக்கை எழுந்தது.இக்கோரிக்கை காலத்துக்கு காலம் கரையோர மாவட்டம்இதென்கிழக்கு அலகு என்றவாறான பல பெயர்களில் முன்வைக்கப்பட்டது.எந்த அஸ்ரப் தமிழீழத்துக்காக ஒருகாலத்தில் குரல் கொடுத்தாரோ அதேஅஸ்ரப் தலைமையிலேயே முஸ்லிம்களுக்கான மேற்படி தனித்துவ கோரிக்கைகள் மேலெழுந்தன. இவற்றை வென்றெடுக்கும் முயற்சியில் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் நோக்கில் நடத்தப்படும் எந்த பேச்சுக்களிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் சமதரப்பாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கைவிடுத்தது.
இதுபோன்றதொரு அவசியம் முஸ்லிம்களுக்கு ஏன் உருவானது என்பதுபற்றி தமிழ்  தேசிய தரப்பிலிருந்து ஒரு சாதகமான அணுகுமுறையை யாரும் பின்பற்றவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளோ புலிகளின் போசகர்களாக மிதவாத அரசியலில் பங்கெடுத்த தமிழ் தலைமைகளோ இவை பற்றி எதிர்மறை நிலைப்பாடுகளையே எடுத்தனர். தமிழ் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் ,வெகுசன ஊடகங்கள், சிவில்சமுக உறுப்பினர்கள் ஏன் பாவிகளை மீட்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திவரும் பாதிரிமார்கள் என்று யாரும் முஸ்லிம்களின் தனித்துவ கோரிக்கைகள் சார்ந்த நியாயப்பாடுகளை ஏற்றுக்கொள்ளவோ அங்கீகரிக்கவோ இல்லை.விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில புகலிட மாற்று கருத்தாளர்கள் மட்டுமே இதில் விதிவிலக்காக கருத்துக்களை முன்வைத்து வந்தனர்.
ஆனால்தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் அதிகார பகிர்வு முயற்சிகளில் முஸ்லிம்களின் தனித்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கின்ற புரிந்துணர்வுகள் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் காலத்தில் இருந்துள்ளன என்பதும் பண்டா -செல்வா ஒப்பந்தம் போன்ற உடன்பாடுகளில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கான தனியான நிர்வாக சபைகள் உருவாக்கபடுவதற்கான ஏற்பாடுகள் மிக தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின்  பெயரில் அவரை தந்தையாக ஏற்று அரசியல் செய்யும்(புலிகளால் கூட துரோகபட்டம் சூட்டப்படாது தப்பித்து வாழும் ஒரே தலைவர்) அவரது அரசியல் வாரிசுகள்  அதையெல்லாம் பற்றி அக்கறை கொள்ள வில்லை.மாறாக முஸ்லிம்களுக்காக முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்து வந்த தனித்துவ கோரிக்கைகளை தமிழர்களின் உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் குரல்களாகவும்  தமிழர்கள் மட்டும் போராடி பெறும் உரிமைகளில் இலவச பங்கு கேட்கும் சந்தர்ப்பவாதமாகவும் குற்றம் சாட்டினர்.மட்டக்களப்பில் புலிகளின்கடத்தல்கள், கப்பங்கள், கொலைகள், பொருளாதாரதடை மற்றும் பயணத்தடைகள் போன்ற நெருக்கடிகாரணமாகதமிழர்களும் முஸ்லிம்களும் ஒருமித்து வாழும் பகுதிகளில் இருந்த முஸ்லிம்கள் சொல்லொண்ண துயரங்களை அனுபவித்தனர்.மட்டக்களப்பு அம்பாறை பிரதேசத்தில் மட்டும் புலிகளின் கட்டுபாட்டுபகுதிகளில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சுமார் 65ஆயிரம் ஏக்கர் நெற்காணிகள் கைவிடப்பட்டன. களுவாஞ்சிகுடி போன்ற தனித்தமிழர் வாழும் பகுதிகளில் இருந்த சந்தைகளுக்கு முஸ்லிம் வியாபாரிகள் வரக்கூடாதென்கின்ற புலிகளின் சட்டம் 10 -15 வருடங்களுக்கு நீடித்தது. இதன் காரணமாக தமது அன்றாட கல்வி சமுக  பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முஸ்லிம்களுக்கானதாக பிரதேச சபைகளும்கல்வி வலையங்களும் பிரிக்கப்படவேண்டும் என்று முஸ்லிம் மக்கள் கேட்க தொடங்கினர்.இதனடிப்படையில் (முஸ்லிம்)மட்டகளப்பு மத்தி கல்விவலையகோரிக்கை எழுந்த போது அன்றையதமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெயானந்தமூர்த்தி தலைமையில் அதை எதிர்த்து மட்டகளப்பு காந்தி பூங்காவில் உண்ணாவிரதமிருந்தனர்.
ஒரு புறம் புலிகளின் தாக்குதல்களும் மறுபுறம் அரசியல் வாதிகளின் எதிர்ப்புகளும் முஸ்லிம்களின் இருப்புக்கள் மீது பாரிய கேள்விகளை எழுப்பிய போது அதை சமாளிக்கவும் அந்நிலையிலிருந்து மீளவும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் முழுமையான அரசஆட்சியாளர்கள், சார்ந்து வாழுவதை தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை.ஒருகட்டத்தில் புலிகளின் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து காணப்பட்ட காலகட்டங்களில் காரைதீவு விசேட அதிரடிப்படை முகாம் மூடப்பட இருந்தது.ஆனால் அது மூடப்பட கூடாது என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஹுப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார். ஆனால் அந்தந்த காலங்களில் அததகைய பேச்சுக்களினதும் செயல்பாடுகளினதும் காரண காரியங்கள் ஆராய படாமல் முஸ்லிம்களின் செயல்பாடுகள் அனைத்துமே தமிழ் சமூகத்துக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் எதிரானது என்றும் முழு முஸ்லிம் சமூகமுமே தமிழீழ போராட்டத்தை காட்டிக்கொடுக்கும்செயலில் ஈடுபடுகின்றது என்றும் மே தமிழர் தரப்பு புரிந்து கொண்டது.அத்தகைய முஸ்லிம்களுக்கு எதிரான பொதுசன உளவியல் ஒன்றை கட்டியமைக்கும் செயற்பாட்டில்புலிகளின் பிரச்சார ஏடுகளுக்கு நிகராக தினக்குரல் போன்ற தமிழ் பத்திரிகைகளும் முக்கிய பங்காற்றின .தமிழ் தரப்பிலிருந்து எவ்வித சாதகமான அணுகு முறைகளும் முஸ்லிம்களை நோக்கி வராத வேளைகளில் கடந்த சுமார் 25 வருட காலமாக முஸ்லிம்களின் அரசியல் பங்கெடுப்பும் ஆதரவும் செயல்பாடுகளும் இலங்கை பெரும்பான்மை ஆட்சியாளர்கள் சார்ந்தே இடம்பெற்று வந்திருக்கின்றது. இதன் விளைவாக முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் பங்கெடுப்பு, மற்றும் தனித்துவம் என்பன கூட இறுதியில் ஆட்சியாளர்களின் கரங்களில் பாராதீன படுத்தப்படும் நிலைக்கு இட்டுச்சென்றது.
தொடரும்
மூலம் : http://www.thenee.com/html/120714-3.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...