தூண்டலும் தொக்கிய விளைவுகளும் ! (3)


எஸ்.எம்.எம்.பஷீர்

எனது "தூண்டலும் தொக்கிய  விளைவுகளும்" என்ற கட்டுரைத் தொடரில் பௌத்த மதத்தின் மனிதாபிமான கோட்பாடுகள் சில நூறு புத்த  மத துறவிகளின் அனுசரணையுடன் வழிநடத்தப்படும் பௌத்த சிங்களவர்களால் தகர்க்கப்பட்டு வருகின்றன,   என்பதையும் வரலாற்று ரீதியில் பௌத்த மதத்தின் மீதான , சிங்களவர்கள் மீதான ஏனைய இனத்தவரின் எதிர்ப்புணர்வுகள் புத்தரின் மீதான எதிர்ப்புணர்வாய் வெளிப்பட்டு வந்ததையும், இலங்கையில் பொதுசன தொடர்பு சாதனங்கள் குறிப்பாக திரைப்படங்கள் ஊடாக முஸ்லிம் மக்கள் மீது நாசூக்காக விதைக்கப்பட்டு வரும் காழ்ப்புணர்வு பற்றியும், எழுதிக் கொண்டிருந்த வேளையில், அழுத்தகம வேருவளை இன வெறியாட்டம் மிக விரைவாக நடந்து முடிந்து விட்டது. 
பௌத்த தீவிரவாத இன விரோத உணர்வுகள் மனித அழிவுகளுக்கும் அவலங்களுக்கும்  வழி சமைத்து விட்டது. மத இன விரோத கருத்துக்களை வெளிப்படுத்துவோர் மீது சட்டம் தனது கடைமையை செய்யவில்லை என்ற வழக்கமான சங்கதியே இங்கும் நடந்தேறி இருக்கிறது. சட்டத்தையும் ஒழுங்கையும் பேண வேண்டியவர்கள் "சமாதி"  நிலையில் இருந்திருக்கிறார்கள். ஆகவே புத்தரை பின்பற்றி செல்ல புறப்பட்ட சில புத்த மத துறவிகள் தங்களின் வன்முறையத் தூண்டும் செயல்களால் வழி தப்பி விட்டார்கள். வழி தவறிச் செல்ல பௌத்தர்களுக்கு வழி காட்டி  உள்ளார்கள்.  எனவேதான் சித்தார்த்தன் கவுதமாராக மாறிய கதையும் , இந்த இனவாத பௌத்த பிக்குகளை மாற்றவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. 

sitharthar

புத்தரின் ஒரு பகுதி வாழ்க்கையை தத்ரூபமாக சித்தரிக்க முயன்ற ஒரு வரலாற்றுத் திரைப்படம் என்ற வகையில் பெரும்பான்மை சிங்கள மக்களினால் "ஸ்ரீ சித்தார்த்த கவுதமர்" பலமுறை பரவசத்துடன் பார்க்கப்பட்டது. இப்படத்தின் முற்காட்சியின் பொழுது இலங்கையின் ஜனாதிபதி உட்பட பலர் கலந்து கொண்டனர், புத்தர் ஞானம் பெறும் வரையான அவரின் வாழ்க்கையினை திரைப்படமாக்க வேண்டும் என்ற முயற்சியில் நவீன் குணரத்ன சுமார் ஏழு ஆண்டுகள் ஈடுபட்டிருந்தார் . அவர் சக ஜீவிதம் , இன சௌஜன்யம் விரும்பும் ஒரு சிறந்த பௌத்தர். ஒரு மனிதாபிமானி . அந்த வகையில் தனது திரைப்பட நடிகர்களுக்குமான தேர்விலும் , குறிப்பாக சித்தார்த்தர் அவரின் மனைவி யசோதரா போன்ற பாத்திரங்களில் நடிப்பவர்களை அவர் மிகுந்த அவதானமாகவே  தேர்ந்தெடுத்தார். இவரின் திரைப்படம் பௌத்தர்கள் சிலரின் விமர்சனத்துக்கு உட்பட்டாலும் பெருமளவில் ஒரு வெற்றித் திரைப்படமாகும். திரைப்பட விமர்சனமாக இதனை எழுதுவது எனது நோக்கமல்ல. ஆனால் இப்படம் பௌத்த சிங்கள மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்குமா அல்லது அபப்டி ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தத்தான் வேண்டுமா ? என்ற கேள்வி தர்க்கத்துக்கு அப்பால் எழுந்தமானமாக    எழுகிறது. 

பொதுவாக சினிமாக்கள் மக்களின் மனதை மாற்றி சமூக மாற்றங்களை ஏற்டுத்திவிட்டதாக வரலாறு இல்லை , பொழுதுபோக்குக்காக தயாரிக்கப்படும் சினிமாக்கள் போலல்லாது  உலகின் புகழ் பெற்ற மனிதர்கள் பற்றிய தனி மனித வரலாற்றுத் திரைப்படங்கள்  , நல்ல கருத்துக்கள் கொண்ட சில சினிமாக்களைப் போல சில மனிதர்களை சில பொழுதுகளில் சிந்திக்கத் தூண்டலாம் , தனி மனிதர்கள் என்ற வகையில். அந்த வகையான நல்ல தூண்டுதல் , அவசியமானதும் கூட என்பதால்தான் வரலாற்றுப் புகழ் மிக்க மனிதர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் எமது கவனத்துக்கு உரியவை ஆகின்றன. 

உலகின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனி மனிதர்களை மையமாக கொண்ட  வரலாற்று திரைப்படங்களில் நடிப்பவர்கள் , அல்லது அப்படியான திரைப்படங்களை  தயாரிப்பவர்கள்  பலர் எப்பொழுதும் அப்பாத்திரங்களின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி எடுத்துரைப்பதும்  அப்படங்களில் குறிப்பிட்ட வரலாற்றுப் பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் அந்த பாத்திரங்கள் தங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி  சிலாகிப்பதும் ,ஒரு புதிய சங்கதியே அல்ல. உதாரணத்துக்கு பத்துக் கட்டளைகள் (Ten commandments ) எனப்படும் திரைப்படத்தில் நடித்த சார்ல்டன் ஹெஸ்டன்  ( Charlton Heston ) என்பவர் தனக்கு மோசஸ் எனும் தீர்க்கதரிசியின் பாத்திரத்தில் நடித்த பொழுது ஏற்பட்ட உள்ளுணர்வு , மற்றும் , தனது மத நம்பிக்கை உறுதியடைந்தது பற்றிக் குறிப்பிட்டதையும், அமெரிக்க கறுப்பின மக்களின் குடியுரிமை செயற்பாட்டாளர் மல்கம் எக்ஸ்ஸின் (மாலிக் எல் ஷபாஸ் ) பாத்திரத்தில் நடித்த பிரபல ஹாலிவூட் நடிகர் டென்சில் வாசிங்டன் ( Denzel Washington) அந்த பாத்திரமாக தான் நடித்த அனுபவத்தை சிலாகித்து பேசியதையும், உலக குத்துச் சண்டை சம்பியனாகத் திகழ்ந்த காசியஸ் கிளேயின் ( முகமத் அலி) பாத்திரத்தில் நடித்த ஹாலிவூட்  நடிகர் வில் ஸ்மித் (Will Smith) படம் முடிந்த பின்னர் "  “நான் அபரிதமாக மாறிவிட்டேன்”  ("I'm profoundly changed”) என்று கூறியதையும் , ; மகாத்மா காந்தியாக நடித்த பெங் கிங்க்ஸ்லி (Ben Kingsley) தனக்கு ஏற்பட்ட மனநிலை மாற்றத்தையும் பயிற்சியையும் கூறுவதுபோல்;  ஸ்ரீ கவுதம சித்தார்த்தர் பாத்திரத்தில் நடித்த ககன் மாலிக் , தான் ஒரு சுப்பர் ஸ்டார் ஆக வர வேண்டும் என்று விரும்பியிருந்ததாகவும் தனக்கு நன்கு உழைத்து சக நடிகர்கள் போல் பணமும் புகழும் பெற வேண்டும் என்று விரும்பியிருந்ததாகவும் , ஆனால் சித்தார்த்தர் தனது அரச சுக போகங்களை மனைவியை பிள்ளையை கைவிட்டு கட்டுக்களற்ற சுதந்திரம் தேடி , மனித குல நன்மை நாடி , செல்ல முடிந்ததை தன்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்ல என்றும். சித்தார்த்தரின் பாத்திரத்தில் நடிக்க தொடங்கியவுடன் ,- அப்பாத்திரத்துடன் தான் ஒன்றிபோய் விட்டதாகவும்  தான் கண்டிருந்த சுப்பர் ஸ்டார்  கனவு , செல்வம் திரட்டும் எண்ணம் எல்லாமே அர்த்தமற்றவை போல உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் இனிமேல் மனித குல மேம்பாட்டிற்கு தன்னால் ஏதும் செய்ய முடியுமா என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டதாகவும்அதற்கு விடையாக , குறைந்தது ஒரு நாளைக்கு ஏதேனும் ஒருவருக்கு ஏதேனும் உதவியை செய்ய வேண்டும் என்று ஒரு பிரதிக்கினையையும் அவர் எடுத்துக் கொண்டார். அதுவே அவரின் திரைப்படத்தைப் பார்த்த மக்களுக்கு ஒரு செய்தியாகவும் அவர் சொல்ல விரும்பினார். .

தான் மனதளவில் மாறிவிட்டேன் என்று குறிப்பிட்டார் ககன் மாலிக் . அந்த வகையில் புத்தனாக நடித்தவரே மன நிலையில் மாற்ற முற்று இன்று மக்கள் நலனுக்கு ஏதேனும் செய்வதே குறிக்கோள் என்று புறப்பட்டுவிட்டார்.

முன்பாக இந்தியாவில் ஹிந்தியில் வெளிவந்த புத்தர் பற்றிய ஒரு சில திரைப் படங்களைபோல் அல்லாது இந்தப் படம் ஒரு இலங்கைத் திரைப்படம் என்பதை வேறுபடுத்தி பார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்திய வணிக மாடல் நடிகை அஞ்சாய் சிங் ( இவர் ஒரு சீக்கிய சமூகத்தவர் )   புத்தரின் மனைவி யசோதரவாக நடித்திருந்தார் , அவரும் கூட புத்தர் தனது மனைவியை , குழந்தையை வீட்டு நீங்கி செல்ல செய்த தியாகத்தை  தான் உணர்ந்து பற்றி குறிப்பிட்டிருந்தார்.   

சித்தார்த்தர் கவுதமராகும் வரலாறு திரையில் கண்முன்னே  காட்சியாய் விரிந்த பொழுது , அவர் பற்றிய பல வாசிப்புக்களை விட, மனதை ஆகர்சிக்கும் வண்ணம் அந்த திரைப்படம் அமைந்திருந்தது. ! 

ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு புள்ளியில் உலகின் சில மனிதர்கள் உலகில் போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.வரலாற்றில் மிகுந்த செல்வாக்கு  மிக்க 100 மனிதர்களை தரப்படுத்திய அமெரிக்க வரலாற்றாசிரியர் மைக்கல் ஹார்ட் என்பவரின் The 100: A Ranking of the Most Influential Persons in History எனும் நூலில் முஹம்மது (ஸல் ) அவருக்கு முதலாம் இடத்தையும் மூன்றாம் இடத்தை ஜீசசுக்கும் நான்காம் இடத்தை புத்தருக்கும் வழங்கி இருந்தார். அந்த வகையில் உலகின் மிகுந்த செல்வாக்கு செலுத்திய மனிதர்களுள் ஒருவர் சித்தார்த்தர் , அவரை அகௌரவப் படுத்தும் படுத்தும் வகையில் பல பௌத்த துறவிகள் அண்மைக் காலமாக நடந்து கொள்வது ஆத்திரத்தை விட . ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறது. மத வழிகாட்டும் மத குருக்கள் மனித விரோத வன்முறைகளில் சம்பந்தப்பட்டால் இந்தக் கேள்வி அவ்வாறு செயற்படும் எல்லா மதத்தவருக்கும் பொருத்தமே என்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஆனால் இந்த திரைப்படத்தைப் பார்த்து சாமான்ய சிங்கள பௌத்தர்கள் தங்களை ஒரு சில விநாடியேனும் ஒரு ஆத்ம விசாரணைக்கு தங்களை உட்படுத்தி இருப்பார்கள் . ஆகக் குறைந்தது ஒரு பிரசவ ஞானம் போலவோ அல்லது சுடலை ஞானம் போலவோ அந்த சுய பரிசோதனை இருந்திருக்கலாம்.  ஆனால் புத்தரின் வரலாற்றை அவரின் தம்மபதத்தை துறைபோகக் கற்றவர்கள் எனப்படும் சிங்கள இனவாத பௌத்த தேரர்கள் ஒரு படி கீழே சென்று  மதவாதம் கூடியதுபோல் செயற்படுகிறார்கள் என்பதே ஆச்சரியமாக உள்ளது. இந்த திரைப்படம் பௌத்த தேரர்களுக்கு விசேடமாக காண்பிக்கப்பட்டது. ஒருவேளை இனவாத பௌத்த தேரர்கள்  இந்தப் படத்தைப் பார்க்காமல் விட்டிருக்கலாமோ என்னவோ !, ஞான சேர தேரர் சென்று பார்த்ததாக செய்தியும் வரவில்லைதான் !!

உள்வீட்டு அடிதடிகளும் வெளியாரின் வன்முறைகளும்

முஸ்லிம்கள் அவர்களுக்குள் உள்ள சமய நம்பிக்கை தொடர்பான முரண்பாடுகளால் தங்களுக்குள் தாங்களே அடிபட்டுக் கொள்வது என்பது உலகின் பல இடங்களில் மட்டுமல்ல குறிப்பாக இலங்கையிலும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளது. சியா சுன்னி முரண்பாடுகளும் அத்தகையதே, இலங்கையைப் பொறுத்த வரை இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளில் முரண்படுவோர் சிலரின் மோதல்கள் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கின்றன அதில் ஒரு உச்ச கட்ட நிகழ்வே வேருவளையில் இரண்டு இஸ்லாமிய கொள்கை வழி வேறுபாட்டின் காரணமாக இடம்பெற்ற  24/07/2009 ஆண்டின் வன்முறையாகும் . (இது பற்றிய எனது முன்னைய ஆக்கத்தை இங்கே பார்வையிடலாம் http://www.bazeerlanka.com/2011/10/blog-post_19.html) .


ஷேய்க் பிரபாகரன் “!! 


நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த தீப்பொறி வேருவளை வன்முறையில் வெளிப்பட்டு. வேருவளை காதிரிய்யா பிரிவினரின் பள்ளியான புகாரி பள்ளிவாசல் பிரிவினர் ரகுமான் பள்ளிவாசலில் இரவில் கூடியிருந்த மக்கள் மீதுஅங்கிருந்த மின்சாரத்தை இருளச்செய்து (புலிகள் காத்தான்குடியில் பள்ளிவாசல் கொலைகளில் செய்த பாணியில்) அங்கு சென்று கத்தி வாள் தடி கொண்டு அங்கு கூடியிருந்தோரை தாக்கி அங்கிருந்த சொத்துக்களுக்கும் அழிவு ஏற்படுத்தினர். அந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர் . இலங்கையில் பொலிசாரால் ஒரே சம்பவத்துக்காக அதிக எண்ணிக்கையோரான 131 நபர்கள் தடுத்துவைக்கப்பட்ட நிகழ்வு இதுவென பத்திரிகைகள் குறிப்பிட்டிருந்தன. இந்த தாக்குதலின் சூத்திரதாரராக கருதப்பட்ட மௌலவியை பாதிக்கப்பட்ட தரப்பினர் அவரின் புலிகளை ஒத்த பயங்கரவாத செயலுக்காய் “ஷேய்க் பிரபாகரன் “ என்று கண்டித்திருந்தனர்
இது போன்று பௌத்தர்களுக்குள்ளும் தேர்வேட பௌத்தம்  மகாயான பௌத்தம் என்ற இரு பிரிவினர்களுக்குள்ளும்  அடிதடி வரை செல்லுமளவு வன்முறை அண்மையில் கூட இடம்பெற்றது. முன்னொரு காலத்தில் இலங்கையில் பௌத்தர்களுக்கு சவாலாக இருந்த சமண மதத்தை பௌத்த துறவிகள் தங்களின் அரச செல்வாக்கை பயன்படுத்தி  முற்றுமுழுதாக இல்லாதொழித்தனர் என்பது வரலாறு. அந்த வகையில் வட்டகமணி என அழைக்கப்படும் வாலகம்பாகு எனப்படும் அரசனின்  ( கி .மு 89-77) காலத்தில் திட்டமிட்ட வகையில் அத்தகைய ஒரு சமண மத ஒழிப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
பௌத்த மதம் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டு தேவநம்பிய தீசன் ஆட்சியில் அரச மதமாக நடைமுறைபடுத்தப்பட்டதில் இருந்து தேர்வேட பௌத்த மதத்தின் அதிகாரத்தை நிறுவும் முயற்சி இலங்கையில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. இன்றைய பௌத்த தீவிரவாத தனிமங்கள் யாவும் இஸ்லாமிய ; கிறிஸ்தவ மதப் பரவுதலை மிக முக்கிய காரணியாகவும் , இலங்கையில் தங்களின் பௌத்த மதம் அழிந்து போய் விடும் என்று அச்சம் கொண்டிருப்பவர்களாக தங்களை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.
இப்பொழுது இலங்கையில் பௌத்த பிக்கு கலகொட ஞானசேர தேரரை  "சாது பிரபாகரன் " என்றுதான் அழைக்கத் தோன்றுகிறது. !!

புத்தரும் இலங்கை முஸ்லிம்களும்!

ஆனால் முஸ்லிம்கள் புத்தரை மத நிந்தனை செய்யும் வகையில் கருத்துரைத்ததாக அல்லது புத்த துறவிகளை தாக்கியதாக அல்லது அவர்களை நிந்தனை செய்ததாக வரலாறு இல்லை , ஆனால் ஒரு புத்த துறவியை அண்மையில் அழுத்தகம பகுதியில் தாக்கினார்கள் என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டு , அது தொடர்பில் சட்டம் சந்தேக நபர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தது என்று செய்திகள் கூறின. இப்பொழுது அவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அச் சம்பவத்தை பூதாகரமாக்கி இனவாதத் தீயை எரிய வைத்தவர்கள் முஸ்லிம்களுக் கெதிராக தொடர்ந்து செயற்படும் பௌத்த சிங்கள மதவாத இனவாத இயக்கமான பொது பல சேனாவாகும். பல நாள் காத்திருந்தவர்களுக்கு கிடைத்த ஒரு துரும்பு அது.   
யாழ்ப்பாண வாசிகசாலை இலங்கை அரச படையினரால் எரியூட்டப்பட்ட பொழுது யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிய பேராசிரியர் என்.எம் நுஹுமான் முதன் முதலில் புத்தரை பற்றி சர்ச்சைக்குரிய கவிதை ஒன்றினை எழுதினார். அந்தக் கவிதையில் பின்வரும் பகுதி இக்கட்டுரைக்கு தேவையாக உள்ளது.

புத்தரின் படுகொலை

நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.
( Last night
I dreamt
Lord Buddha was shot dead
by the police,
guardians of the law.
His body drenched in blood
on the steps
of the Jaffna Library.)

அக் கவிதை தமிழ் தேசிய தளத்தில் மிக காத்திரமான கவிதையாக போற்றப்பட்டது. புத்தர் கொல்லப்படவும் , நூலக படிக்கட்டருகில் அவரின் சடலம் குருதியில் கிடக்கவும் , இழுக்கப்படவும் , எரியூட்டப்படவும்  நுஹுமான் கண்ட கனவு அது. இலங்கை அரசின் காவல் துறையின் அடாவடித்தனத்தால் நூலகம் அழிக்கப்பட்டதை நுஹுமான் புத்தரையே அரச படையினர் கொன்றுவிட்டதாக பார்க்கிறார் . அது அவரின் கவிப் பார்வை என்றும் கவிச் சூழமைப்பு பின்னணியில் அக்கவிதை புரிந்து கொள்ளப்படல் வேண்டும் என்றும் ஒரு கருத்து அன்றும் இன்றும் சொல்லப்படலாம்.  கவிஞன் கனவில் தானே புத்தர் கொல்லப்படுவது போல் , அதுவும் , புத்த மதத்தினரே அவரைக் கொல்வதாகவும் கனவு கண்டார். ஆக புத்தரை பேணி புத்தர்கள் நடக்கவில்லை , புத்தர்கள் நூலகத்தை அழித்தது புத்தரை கொன்றதற்கு ஒத்த செயல் என்ற அவரின் கனவு ஏனைய சிங்கள முற்போக்கு , புத்திஜீவி சமூகத்தால் ஒரு தர்மாவேசமான கவிஞனின் வெளிப்பாடு என்ற விதத்தில் புரிந்து கொள்ளப்பட்டது. 


தொடரும்….

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...