ஆமிக்குக் காணி - 04-வடபுலத்தான்

ஆமிக்குக் காணி - 04
இந்த நாடு எப்பதான் எல்லாத் தரப்பின்ரை உண்மைகளையும் மனசையும் புரிஞ்சு போகுதோ....!
வடபுலத்தான்
"வெளிநாடுகளுக்குப் பெடியளை அனுப்ப வேணும் எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிற தாய் தகப்பன்மாருக்கு எல்லாம் ஆமிக்காரர் இஞ்ச இருக்கவேணும். அவை நாலுபேரையாவது மாதம் ஒருதடவை பிடிக்கோணும். அல்லது சந்தியில மறிச்சு அடிக்கோணும் எண்டு விரும்புகினம்.

ஏனெண்டால், அப்பதான் இலங்கையில பிரச்சினை எண்டு வெளியில பிரச்சாரம் பண்ணலாம். வதிவிட உரிமை கோரலாம். வெளிநாடுகளில தஞ்சம் கோரலாம்"...



ஒரு ரண்டு மாசத்துச்சு முதல், கொழும்பில இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்துSL ARMY in Jaffnaகொண்டிருந்தன்.

அப்ப ரெயினில பயணம் செய்து கொண்டிருந்த ரண்டு ஆமிக்காரரோட கதைச்சுக்கொண்டு வாற சந்தர்ப்பம் வாய்ச்சிது.

அந்த ரண்டு ஆமிக்காரரும் என்ன சொல்லிச்சினம் எண்டு தெரியுமா?

‘சண்டை முடிஞ்சுது. இனி நாங்கள் எங்கட வீட்டுக்குப் போகலாம். வீட்டுக்குப் போய், குடும்பத்தோட இருக்கலாம். பிள்ளைகளோட இனியாவது சந்தோசமாக வாழலாம் எண்டு எண்ணிக்கொண்டிருந்தம். ஆனால், எல்லாமே பிழைச்சிட்டுது. இப்ப யாழ்ப்பாணத்திலயே தொடர்ந்தும் இருக்க வேண்டியிருக்கு. ஊரில இருந்து இப்பிடி யாழ்ப்பாணத்துக்கு வந்து போறதுக்கு பயணச்செலவே அதிகமாக இருக்கு. போர் எல்லாம் முடிஞ்ச பிறகும் இப்படி நாங்க அலையவேண்டியிருக்கு’ எண்டு சொல்லிக் கவலைப்பட்டுக்கொண்டு வந்தார்கள்.

இந்தக் கதையைக் கேட்கும்போது எனக்கு என்ன தோன்றியது எண்டால், அவரவர் கவலை அவரவர்க்கு எண்ட மாதிரி எனக்குப் பட்டுது.

உங்களுக்கு எப்பிடி இது படுகிறதோ தெரியாது. ஆனால், போர் முடிஞ்ச பிறகு வடக்குக் கிழக்குப் பகுதிகளில மட்டுமில்ல, நாடு முழுவதிலும் போர்க்கால நெருக்கடியைப்போல, ரோந்து போறதும், காவல் காக்கிறதும் கூட அவர்களுக்குப் பிடிக்கவில்லை எண்டதை இந்த ரண்டு ஆமிக்காரரோடயும் கதைக்கேக்க தெரிஞ்சுது.

இந்த மாதிரியான விசயங்களை எல்லாம் நாங்கள் கவனிக்கிறதில்லை.

நாங்கள் என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறம் எண்டால், ‘ஏதோ வில்லங்கத்துக்கு ஆமிக்காரர் இஞ்ச நிக்கிறாங்கள். அப்பிடி நிண்டு கொண்டு எங்களோடு வம்பு பண்ணுறாங்கள். இது ஒரு தேவையில்லாத வேலை. சிங்கள மேலாதிக்கத்தை நிலைநாட்டுறதுக்காக இப்பிடியெல்லாம் செய்யிறாங்கள். தமிழர்களை ஒடுக்கிறதில அப்பிடி ஒரு வெறியோடதான் இவங்கள் இஞ்ச குந்தியிருந்து கொண்டு அடாத்துப்பண்ணுகிறாங்கள். அதுக்குத்தான் இப்ப காணியளைப் பறிக்கிறதுக்கும் முயற்சிக்கிறாங்கள்’ எண்டு.

இப்பிடி அவர்களின்ரை மனசில ஒண்டும் எங்கட மனசில இன்னொண்டுமாக ரண்டு ஓட்டங்கள் இருக்கு.

நாங்கள் என்ன நினைக்கிறம் எண்டும் நாங்கள் எதை விரும்புகிறம் எண்டும் அவைக்குத் தெரியாது.

அவை என்ன நினைக்கினம்? அவை எதையெல்லாம் விரும்புகினம் எண்டதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.

இப்பிடியே ஆளாளுக்கு புரிஞ்சு கொள்ளாமல், எதிரும் புதிருமாகச் சந்தேகப்படுகிறதுதான் நடந்து கொண்டிருக்கு.

இப்பிடியே இருந்தால் சந்தேகமும் பகையும் வளருமே தவிர, அன்போ, இரக்கமோ புரிந்துணர்வோ, சமாதானமோ, தீர்வோ கிட்டாது.

இப்பிடி ரண்டு பேருக்கும் விருப்பமில்லாத, சம்மந்தமில்லாத காரியங்கள்தான் நடந்து கொண்டிருக்கு.

மானசீகமாக ரண்டு தரப்புக்கும் சமாதானம் தேவை. அமைதி தேவை.

அலைச்சலும் ஒருதரை ஒருத்தர் வெறுக்கிற நிலைமையும் தேவையில்லை.

ஆனால், நாட்டில என்ன நடந்து கொண்டிருக்கு?

தமிழ்ச் சனங்களைப் புலிகள் எண்டு ஆமியும் அரசாங்கமும் நினைச்சுக் கொண்டிருக்கு. அதால தமிழர்களை நம்பேலாது எண்டு அது பாதுகாப்பு, பந்தோபஸ்து, அது இது எண்டு படைப்பலத்தைப்பயன்படுத்தி வடக்குக் கிழக்குப் பகுதிகளை நிர்வகிக்கப்பார்க்குது.

இதுக்குத் தோதாக தமிழ்ச் சனங்களும் தமிழ் அரசியல் தலைமைகளும் புலிச்சாயத்தைப் பூசிக்கொண்டு தேவையில்லாமல் சிக்கல்லயும் சிரமத்திலயும் அல்லற்படுகிற நிலைமைதான் நீடிக்குது.

இதையெல்லாம் ஆர்தான் எடுத்துச் சொல்லிறது?

ஆருக்குத்தான் இதை விளங்கப்படுத்திறது?

ஆனால். தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புலம்பெயர் தமிழர்களில் ஒருசாராருக்கும் ஆமி ஊருக்குள்ள இருக்கோணும் எண்டு விருப்பம்.

இஞ்ச ஊருக்குள்ள இருக்கிற பேப்பர்காரர் தொடக்கம், அரசியல்வாதிகள், வெளிநாட்டுக்குப் போகிற கனவோட இருக்கிற பெடியள், வெளிநாடுகளுக்குப் பெடியளை அனுப்ப வேணும் எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிற தாய் தகப்பன்மாருக்கு எல்லாம் ஆமிக்காரர் இஞ்ச இருக்கவேணும். அவை நாலுபேரையாவது மாதம் ஒருதடவை பிடிக்கோணும். அல்லது சந்தியில மறிச்சு அடிக்கோணும் எண்டு விரும்புகினம்.

ஏனெண்டால், அப்பதான் இலங்கையில பிரச்சினை எண்டு வெளியில பிரச்சாரம் பண்ணலாம். வதிவிட உரிமை கோரலாம். வெளிநாடுகளில தஞ்சம் கோரலாம்...


இந்த மாதிரித்தனிப்பட்ட சுயநலத்துக்காக ஆமியை மறிச்சு வைக்கிறதில எல்லாருக்கும் பங்குண்டு.

அவரவர் தங்களுடைய நலன்களுக்காக இப்பிடி ஆமியை மறிச்சு வைச்சுக்கொண்டு வெளியில சொல்லுகிறம் “ஆமியே வெளியேறு. உனக்கென்ன வேலை எங்கட மண்ணில“ எண்டு.

அவையுந்தான் கேக்கினம், “ஏன் எங்களை இஞ்ச மறிச்சு வைச்சுக்கொண்டிருக்கிறியள்?“ எண்டு.

“நாங்கள் எங்கட வீட்டுக்குப்போறதுக்கு கொஞ்சம் அனுமதியுங்கோ“ எண்டு.

இதையெல்லாம் எப்பதான் நாங்கள் புரிஞ்சு கொள்ளப்போகிறம்?

இந்த நாடு எப்பதான் இந்த மாதிரி ரண்டு தரப்பின்ரை உண்மைகளையும் மனசையும் புரிஞ்சு கொள்ளப்போகுதோ....!

BY courtesy of Thenee: http://www.thenee.com/html/290714-4.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...