தமிழர்களுக்காக போராடாதவர்கள் முஸ்லிம்களுக்காக மட்டும் போராடுவது நியாயமா ?


கேள்வி :- இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்பாட்டங்களில் பங்கேற்காத தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம்கள் தாக்கப்படும் போது மட்டும் கண்டிப்பது என்ன நியாயம்? என்று பரவலாக கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு உங்கள் விளக்கம் என்ன?
இலங்கையிலே தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட பொழுது அனைத்து இயக்கங்களும் போராடிய பொழுது தமிழ் நாடு தௌஹீத் ஜமா அத் மௌனமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு இஸ்லாமியர்கள் என்றவுடன் போராடுவது சரியா? 
பதில்:- இலங்கைப் பிரச்சனை தொடர்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பட்டங்களின் தவ்ஹீத் ஜமாஅத் பங்கேற்கவில்லை என்பது உண்மைதான். அதற்கான காரணங்களைக் கூறுவதற்கு முன்னால் இப்படி கேள்விகேட்பவர்களை நோக்கி நாமும் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.


இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அனைத்திலும் தவ்ஹீத் ஜமாஅத் தவிர மற்ற எல்லா முஸ்லிம் இயக்கஙகளும் பங்கேற்றனர். மேற்கண்டவாறு கேள்வி எழுப்பும் அனைவரும் இதை அறிவார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத் தவிர எல்லா முஸ்லிம் இயக்கங்களும்  இவர்களுடன் இணைந்து போராடியிருக்கும் போது இப்போது முஸ்லிம்கள் தாக்கப்படும் போது - தமிழ் கூறும் முஸ்லிம்கள் தாக்கப்படும் போது - இவர்கள் ஏன் களமிறங்கி போராடவில்லை?  முஸ்லிம்களுக்கு என்ன கொடுமை நடந்தாலும் முஸ்லிம்கள் தான் அதை எதிர்த்துப் போராட வேண்டும். மற்றவர்களுக்காக முஸ்லிம்கள் என்னதான் ஆதரவு கொடுத்தாலும் முஸ்லிம்கள் பிரச்சனை என்றால்  இவர்கள் ஆத்ரவு கொடுக்கமாட்டார்கள் என்பது என்ன நியாயம்?
முஸ்லிம்கள் அழிக்கப்படுவதில் உள்ளூற சந்தோஷம் காணும் மனப்பான்மை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அனைத்து இயக்கத்தவரிடமும், அறிவுஜீவிகளிடமும் உள்ளது என்பது இப்போது ஐயத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகி விட்டது.
தவ்ஹீத் ஜமாஅத் இவர்களுடன் பங்கேற்கவில்லை என்பதற்காக மற்றவர்கள் இவர்களுடன் இணைந்தும், தனியாகவும் நடத்திய போராட்டங்களுக்கு இவர்கள் செய்த நன்றிக் கடன் என்ன?
நமக்காக முஸ்லிம்களின் இரத்தம் துடித்ததே அதுபோல முஸ்லிம்கள் தாக்கப்படும் போது அதையும் நாம் கண்டிக்க வேண்டும் என்று ஏன் இவர்களால் நினைக்க முடியவில்லை? 
தனியாக போராட்டம் நடத்தும் அளவுக்கு விசாலமான இதயம் இவர்களுக்கு இல்லாவிட்டாலும் இவர்களோடு இணைந்து இவர்களுக்காக போராடிய முஸ்லிம் இயக்கங்கள் நடத்திய போராட்டங்களில் கூட இவர்கள் பங்கேற்கவில்லையே அது ஏன்?
தங்களின் அயோக்கியத்தனத்தை மறைப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத் இவர்களுடன் இணையாததைச் சுட்டிக் காட்டுகின்றனர். முஸ்லிம்கள் தாக்கப்படும் போது அதில் உள்ளூற சந்தோஷப்படுகின்றனர். இவர்களின் இந்தக் கயமத்தனத்தை இவர்களுக்குகாக குரல் கொடுத்த முஸ்லிம் இயக்கங்கள் இப்போதாவது உணர வேண்டும்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தில் நியாயம் இல்லை என்று கூறி மற்ற இயக்கத்தினர் நடத்திய போராட்டங்களையும் கொச்சைப்படுத்தும் அளவுக்கு இவர்களின் தமிழுணர்வு உள்ளது.
இப்படி கேள்வி கேட்டதற்கு முன்னால் இவர்கள் தங்களிடம் மேற்கண்ட கேள்வியைக் கேட்டுக் கொள்ளட்டும்.
இலங்கைத் தமிழர்களின் தாக்கப்படுகிறார்கள் என்பதற்காக நடத்தப்பட்ட சிங்கள வெறியாட்டத்தைக் கண்டித்து நடந்த போராட்டங்களில் தவ்ஹீத் ஜமாஅத் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி கேட்கும் அனைவருக்கும் அதற்கான விடை தெரியும்.
தவ்ஹீத் ஜமாஅத் தக்க காரணங்களை விளக்கிக் கூறியதை இவர்கள் அறிவார்கள். ஆனாலும் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை எதிர்க்கக் கூடாது என்று இவர்களின் மனசாட்சி (?)  இவர்களுக்குக் கட்டளையிடுகிறது. அதை நியாயப்படுத்தவே தவ்ஹீத் ஜமாஅத் கலந்து கொள்ளாத போது நாங்கள் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என்று கேள்வியை முன் வைக்கின்றனர்.
இந்தப் பிரச்சனையில் இவர்களிடம் சேராமல் ஒதுங்கிக்கொண்ட தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கனவே சொன்ன காரணங்களை இதற்கான பதிலாக தருகிறோம்.
பல ஆண்டுகளுக்கு முன்பே  இந்தக் காரணங்களை நாம் உணர்வு இதழிலும் ஆன்லைன்பீஜே இணையதளத்திலும் விளக்கியுள்ளோம். அதை அப்படியே எடுத்துக் காட்டுவதே இதற்கு போதுமான பதிலாகும்.
விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுக்கு பகிரங்க அறைகூவல்!
இலங்கை அதிபர் ராஜபக்சே, பிரபாகரன் மகனான பச்சிளம் சிறுவனுக்கு பிஸ்கட் கொடுத்து, பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனைப் படுகொலை செய்துள்ளார். இந்த சிறுவனைக்கூட விட்டு வைக்காமல் கொலை செய்த ராஜபக்சேவை சர்வேதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகளுக்கு ஆதாரவாக பச்சைத் தமிழர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் குரல் கொடுத்து வருகின்றனர்.
ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது கண்டிக்கத்தக்கதுதான். அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அதைவிட பன்மடங்கு படுகொலைகளை செய்த பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் அறிவிஜீவிகளது கண்களுக்கு கொலைகாரர்களாக ஏன் தெரியவில்லை என்பதுதான் நமது கேள்வி.
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் காத்தான்குடி என்ற ஊரில் தொழுது கொண்டிருக்கும்போது பள்ளிவாசலுக்குள் புகுந்து படுகொலை செய்த விடுதலைப்புலிகளின் தீவிரவாதச் செயல் பச்சைத்தமிழர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா?
இவர்கள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு இழைத்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமா?
யாழ்ப்பாணத்திலிருந்த முஸ்லிம்களை 24மணி நேர கெடு விதித்து, கையில் ஐநூறு ரூபாய் மட்டும் வைத்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்று சொல்லி விரட்டி அடித்தார்களே! இது இந்த அறிவிஜீவிகள் கண்களுக்குத் தெரியவில்லையா?
வாழ்நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துவைத்த சொத்து பத்துக்கள் அனைத்தையும் இழந்துவிட்டு கோடீஸ்வரர்களாக இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீட்டை விட்டு, ஊரைவிட்டு வெளியேறி ஒரே நாளில் ஓட்டாண்டியாக மாறி நடுத்தெருவுக்கு வந்தார்களே! இத்தகைய நிலைக்கு முஸ்லிம்களை ஆளாக்கிய விடுதலைப்புலிகளின் கோர முகம் இந்த மனிதநேயம் பேசும் மகான்(?)களுக்கு விளங்கவில்லையா?
காத்தான்குடியில் பச்சிளம் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் பள்ளிவாசலுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்ற விடுதலைப்புலிகளின் மிருகவெறியாட்டம் யாருக்கும் தெரியவில்லையா?
திரிகோணமலை என்ற மாவட்டத்தில் மூதூர் என்ற பகுதியில் வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் மீது விடுதலைப்புலிகள் கட்டவிழ்த்துவிட்ட கொலை வெறித் தாக்குதல்களால் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கின்னியா, முல்லிப்பட்டிணம், கந்தலாய் போன்ற அகதி முகாம்களில் தஞ்சமடைந்த வரலாறு விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்குத் தெரியாதா?
கடந்த 2003ஆம் ஆண்டு இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்போது ஜப்பான், நார்வே ஆகிய நாடுகளின் தலையீட்டினால் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை ஏற்பாடானது. அந்த சமாதனப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களையும் இணைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தையாக அதை அமைக்க வேண்டும் என்ற முஸ்லிம்களின் குறைந்தபட்ச கோரிக்கையைக்கூட இந்த விடுதலைப்புலிகள் நிராகரித்தார்கள் என்ற வரலாறு இவர்களுக்குத் தெரியாதா?
அதே 2003 ஆம் ஆண்டு இலங்கையில் புலிகளின் தலைமையிடமான கிளிநொச்சியில் பிரபாகரன் மற்றும் ரவூஃப் ஹக்கீமுக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை விரட்டியது தவறு என்று விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டு, முஸ்லிம்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் மீள் குடியமர்த்த வாக்குறுதி அளித்தார்களே!” அவ்வாறு வாக்குறுதியளித்துவிட்டு முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்த விடுதலைப் புலிகளின் துரோக வரலாற்றை மறைக்க முடியுமா? (இது குறித்த தனி பெட்டிச் செய்தியை கீழே காண்க!)
மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கெல்லாம் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.
இது போன்ற கொடுமைகளை இந்தியாவில் நிகழ்த்துபவர்களை இந்து பயங்கரவாதிகள் என்று விமர்சிக்கும் அறிவுஜீவிகள் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தனி அளவுகோல் வைத்திருப்பது ஏன்? என்பதுதான் நமது கேள்வி.
இது குறித்து கடந்த 17 : 27 உணர்வு இதழில், “விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகக் களமிறங்காதது ஏன்?” என்ற தலைப்பில் சகோதரர் பீஜே அவர்கள் அளித்த விளக்கத்தை வெளியிட்டிருந்தோம்.
அந்தச் செய்திக்கு பதில் சொல்ல திராணியில்லாத விடுதலைப்புலி ஆதரவாளர்களும், தங்களை அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் சில அரைவேக்காடுகளும் நம்மை விமர்சித்து பல அவதூறு பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவதூறு பரப்பும் அவதூறு பேர்வழிகளுக்கும், விடுதலைப்புலி ஆதாரவாளர்களுக்கும் நாம் பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம். ராஜபக்சேவை விட மகாக்கொடிய அயோக்கியர்கள்தான் விடுதலைப்புலிகள் என்பதையும், அவர்கள் செய்த அட்டூழியங்களும், படுகொலைகளும் கொஞ்சநஞ்சமல்ல என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க நாம் தயாராக உள்ளோம். இவர்களுக்கு உண்மையிலேயே துணிவும், திராணியும் இருக்குமேயானால் நம்மை விவாதக்களத்தில் நேருக்குநேர் சந்தித்து விடுதலைப்புலிகள் அப்பாவிகள் என்பதை நிரூபிக்கட்டும்.
நம்முடன் அவர்கள் விவாதிக்க வருவார்களேயானால், அவர்களது முகத்திரையைக் கிழித்து இவர்கள் முஸ்லிம்களை எப்படியெல்லாம் கருவறுத்தார்கள் என்பதையும், இவர்களது மிருக வெறியாட்டங்களையும் ஆதாரப்பூர்வமாக தோலுரித்துக்காட்ட நாம் தயாராக உள்ளோம் என்று இவர்களுக்கு பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம். அவர்கள் தாங்கள் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் நம்முடன் பகிரங்க விவாதத்திற்கு வரட்டும்.
இன்னும் சில பெயர்தாங்கி முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் லட்டர்பேடு இயக்கங்களும் ஓட்டுப்பொறுக்க வேண்டும் என்ற ஆசையில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஜால்ரா தட்டிக் கொண்டுள்ளார்கள். அவர்களையும் பகிரங்க விவாதத்திற்கு நாம் அழைக்கின்றோம்.
வாயடைத்துப்போன புலிகளின் ஆதரவாளர் இலங்கை எம்.பி.சிவாஜிலிங்கம் :
இப்போது நாம் வைத்துள்ள இந்த வாதங்களை இதற்கு முன்பாக புலிகளின் ஆதரவாளர் இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் அவர்களிடம் நமது மாநிலத் தலைவர் பீஜே அவர்கள் புள்ளிவிபரங்களுடன் ஏற்கனவே சுட்டிக்காட்டினார்.
திரைப்பட இயக்குநர் அமீர் கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னையில் புலிகளின் ஆதரவாளர் இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் அவர்களை அழைத்துக் கொண்டு பீஜே அவர்களைச் சந்தித்தார்.
அந்த சந்திப்பின்போது, பீஜே அவர்கள் புலிகள் செய்த அட்டூழியங்களையும், அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்த அநீதிகளையும் புள்ளிவிபரங்களுடன் பட்டியலிட்டார்.
"முத்தரப்பு பேச்சுவார்த்தையை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டு, இதற்கான அறிவிப்பை புலிகளின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். இதுதான் வடக்கு-கிழக்கு முஸ்லிம்களுக்கு புலிகள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும்'' என்று பீஜே சொல்ல, புலிகள் செய்த அயோக்கியத்தனங்களுக்கு முட்டுக்கொடுக்க முடியாத சிவாஜிலிங்கம் பீஜே வைத்த வாதங்களுக்கு பதிலளிக்க முடியாமல் அதை ஆமோதித்தார்.
இதனை ஆமோதித்த சிவாஜிலிங்கம், இதைப் பற்றி புலிகளின் தலைமையிடம் தான் வலியுறுத்தப் போவதாகவும், தமிழ் முஸ்லிம் உறவை பலப்படுத்தப்போவதாகவும் உறுதி தந்துவிட்டு சென்றார். 2008ஆம் ஆண்டு சென்றவர்தான் அத்துடன் நமது பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லை எனும்போது இவர்கள் எத்தகையவர்கள் என்பதும், இவர்களது உண்மை முகமும் நமக்கு விளங்குகின்றதா இல்லையா?
இப்படி காரணங்களை விளக்கி கூறித்தான் புலிகளுக்கு ஆதரவான எந்த போராட்டத்தில் இருந்தும் தவ்ஹீத் ஜமாஅத் விலகி நிற்கிறது.
இலங்கையில் நடந்தது அப்பாவி தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் அல்ல ஆயுதம் தாங்கி அரசை எதிர்த்துப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் தான்
பொதுமக்களைக் கேடயமாக புலிகள் பயன்படுத்தியதாலே பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்கள். புலிகள் அழிக்கப்பட்டதில் சிங்கள அரசையும் சிங்கள மக்களை விடவும் புலிகளின் அராஜகக் கொடுமைகளை அணுபவித்த தமிழர்கள் அதிகம் சந்தோசப்பட்டனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் போய் புலிகள் அழிவுக்குப் பின் அவர்கள் சுதந்திரமாக இருக்கின்றார்களா? முன்னர் சுதந்திரமாக இருந்தார்களா? என்று கேட்டுப் பாருங்கள் உண்மை விளங்கும்.
புலிகள் அழிப்பை தமிழர்களில் அழிப்பாகச் சித்தரித்து இங்குள்ள தமிழர்கள் ஏமாற்றப்பட்டனர் என்பதால் தவ்ஹீத் ஜமாஅத் அந்த போராட்டங்களை சரிகாணவில்லை.
ஆயுதம் தாங்கி அரசுக்கு எதிராக யுத்தம் செய்தவர்களூக்கு எதிரான தாக்குதலும் எவ்வித ஆயுதத்தையும் எடுக்காமல் அமைதி வழியில் வாழ்ந்துவரும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலும் ஒருக்காலும் சமமில்லை. 
இதற்காகத்தான் இங்குள்ள தமிழர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து இருக்க வேண்டும்.
புலிகளுக்குத் தான் இந்த மனநிலை என்றால் புலிகள் அழிப்பை தமிழர் அழிப்பாக சித்தரித்து தமிழர்களைத் தூண்டிவிட்ட இங்குள்ள புலிகளின் ஏஜெண்டுகளின் மனநிலையும் இது தான் என்பதை இப்போது முஸ்லிம் சமூகம் தெளிவாக உணர்ந்துகொண்டது.
மூலம்: http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/muslimkalukkaga-poraduvathu-niyayama/#.U7ghmvldVlI

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...