சாத்தான் வேதம் ஓதுது

-  வடபுலத்தான்
அன்பான வாக்காளப்பெருமக்களே! தமிழ்த்தேசியவாதிகளே!TNA in election

என்ன திடீரெண்டு இருந்தாப்போல இப்பிடிச் சொல்லுறன் எண்டு யோசிக்கிறியளோ...

இன்னும் கொஞ்ச நாளில எலெக்ஸன் வரப்போதுதெல்லோ... அதுதான்... அநேகமாக ஒரு ஏழெட்டு மாசத்தில பாராளுமன்றத் தேர்தல் நெருங்கப்போகுதெண்டு கதைக்கினம்....

அதுதான்... மெல்ல மெல்ல நாங்களும் அதுக்கேத்தமாதிரி எதையாவது செய்யோணுமெல்லோ... ஹி...ஹி....

எதுக்கும் நாங்கள் கொஞ்சம் முன்னேற்பாடாக உஷாரா இருக்கிறது நல்லதுதானே!

இந்த ஐ.நாவோ, அமெரிக்காவோ இந்தியாவோ மோடியோ தமிழ் நாட்டு லேடியோ... சொன்னமாதிரி ஒண்டையும் செய்யிறதாக் காணேல்ல. இதையெல்லாம் எனியும் நாங்கள் நம்பிக்கொண்டிருக்கேலாது...

சும்மா கீரைக்குப் புளி விடுகிறதைப்போல ஒரு 'இதுக்கு' வைச்சுக்கொள்ளலாம்.

மற்றப்படி அடுத்த தேர்தலுக்கு நாங்கள் எதையாவது ஒண்டைக்கண்டு பிடிக்கத்தானே வேணும்...

எதுக்கும் இந்தத் தமிழ், தமிழர், தேசியம், தமிழ்த்தேசியம், தமிழற்றை ஒற்றுமை  எண்ட கொஞ்சச் சரக்குகளிருக்கு. அதுகளைத்தான் எப்பவும் கவனமாகப் பழுதுபடாமல் வைச்சிருக்கோணும். இதுகள்தான் எப்பவும் கைகுடுக்கிற சமான்கள்..... அதால இதுகளை அடிக்கடி எடுத்துத் தூசி தட்டித் துடைச்சுப் பளபளப்பாக வைச்சிருக்க வேணும்.

அதாலதான் சொல்லிறன்... நாங்கள் தமிழர் எண்டு. தமிழரெண்டால்....

தமிழரெண்டால்.....!?

தமிழரெண்டால்.... தமிழர்தான்.

ஆ... நினைவுக்கு வந்திட்டுது... பழந்தமிழர். பண்பாடுடைய தமிழர். ஈழத்தமிழர். புலம்பெயர் தமிழர். அகதித்தமிழர். பாதிக்கப்பட்ட தமிழர். வீரத்தமிழர். மறத்தமிழர். புலித்தமிழர். கிலித்தமிழர்.... கனேடியத்தமிழர், லண்டன் தமிழர்... உலகத் தமிழர்....

சரி, என்னமாதிரியெண்டாலும் வைச்சுக்கொள்ளுங்கோ. ஆனால் நாங்கள் தமிழரெண்டதை மட்டும் மறந்திடாதேயுங்கோ...

தமிழரெண்டால்... அவர்க்கொரு தனிக்குணமுண்டெண்டு சொல்லிறவை.

அந்தக் குணம் என்னெண்டு எனக்குச் சரியா விளங்கேல்ல. சரி, இப்ப அதை விளங்கித்தான் என்ன விளங்காமல் விட்டுத்தானென்ன? ஏதோ ஒரு சரக்கெண்டு வைச்சுக்கொள்ளுங்கோ.... இப்ப அதைப்பற்றி இதுக்கு மேல கதைக்கப்போய்.... ஏன் தேவையில்லாமல் வம்பில மாட்டிக்கொள்ளுவான்...?

இதைப் பற்றித் தேவையில்லாமல் கதைச்சால்... பிறகு, அவனவன் எழும்பி நிண்டு ஆளாளுக்கு இதுதான் சரி, அதுதான் சரி எண்டு கூத்தாடத்தொடங்கீடுவான்...

போதாக்குறைக்கு இணையத்தில வந்து கோவணத்தையே பதம்பார்த்திடுவான்கள்.

அதால, இதையெல்லாம் விட்டுப்போட்டு, இப்ப நாங்கள் இந்தத் தமிழையும் தமிழர் எண்டதையும் தமிழ்த்தேசியம் எண்டதையும் வைச்சுக்கொள்ளுவம்.

இதுகள்தான் எப்பவும்  எங்களுக்குச் சோறுபோடுறதுளூ சுகந்தாறது. வற்றாத அமுதசுரபியளாக... எண்டைக்கும் எங்கட தலைமுறை தலைமுறையாக வளந்தாறதாக இருக்கு.

அதால, 'நாங்கள் தமிழர்' எண்டு ஒரு தேவாரத்தை அடிச்சு எல்லாருக்கும் தரப்போறம்...

அப்பிடியே 'தமிழ்த்தேசியம்' எண்ட வாய்பாட்டையும் தரப்போறம்...

இந்தத் தேவாரத்தோடயும் வாய்பாட்டையும் கொண்டு இப்ப மெல்ல மெல்ல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்ரை எம்.பி மார் ஊர் ஊராக வரத்தொடங்கீட்டினம்.

அவை உங்களிட்ட வரேக்க, 'நாங்கள் தமிழர்' எண்டு மட்டும் நினைச்சுக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு, முந்தி வாக்குப்போடேக்க ஒண்டையும் யோசிக்காமல் புள்ளடியைக் கீறினமாதிரி இந்தத் தடவையும் ஒருக்கால்.....

தயவு செய்து கோவப்படாதையுங்கோ... 'நாங்கள் தமி;ழரெல்லோ..' எண்டதை ஒருக்கால் நினையுங்கோ...

ஏனெண்டால்... நாம் தமிழரெல்லோ....

ஆ... நினைவுக்கு வந்திட்டுது... 'தமிழரெண்டால்... அவர்க்கொரு தனிக்குணமுண்டெண்டு' சொன்னன் எல்லோ...

அது என்ன குணமெண்டு தெரியுமோ..?

'தமிழரெண்டால் தவறியும் சிந்தியாதோர்.. தங்கள் துயர்களைய ஒருபோதும் நினையாதோர்...'

இல்லையில்லை..... மாறிச் சொல்லிப்போட்டன். வாய் தடுமாறி இதைச்சொல்லிப்போட்டன்...

'தமிழரெண்டால்.... தமிழரெண்டால்... தலைவர்களிடம் எதையும் கேளாதோர்.... தமிழுக்காகத் தமிழ்த்தேசியத்துக்காக எதையும் செய்யா...தோ...ர்....'

சீச்சீ... பிறகும் ஏதோ குழம்புது...

எல்லாத்தையும் விடுங்கோ... நாங்கள் தமிழர் எண்டதை மட்டும் நினைவில.... நெஞ்சில வைச்சிருக்கோ...

ஏனெண்டால் இவ்வளவு காலமும் இப்பிடிச்சொல்லியே பழகீட்டம்... வேற தொழிலொண்டயும் பழகேல்ல... வேற வழியும் எங்களுக்குத் தெரியாது...

ஹி...ஹி....

நன்றி : தேனீ 01/07/2014

No comments:

Post a Comment

UK Health Secretary “wilfully negligent” for ignoring warnings that pandemic is overwhelming National Health Service- by Tony Robson

In his Downing Street press briefing Wednesday, Conservative Health Secretary Sajid Javid dismissed warnings made by health professionals th...