முஸ்லிம்களுக்கெதிரான பெளத்த மேலாதிக்கம் இணக்க அரசியலை கேள்விக்குள்ளாக்குகிறதா?


- மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்
பாகம் 1
 கடந்த சில வருடங்களாக  தென்னிலங்கையில் பரப்பப்பட்டுவரும் முஸ்லிம்களுக்கெதிரான பெளத்த  மேலாதிக்க சிந்தனைகள் இப்போது வன்முறைகளாக வெளிப்பட தொடங்கியுள்ளன.அதன்  உச்சமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அளுத்கம வன்முறைகளை  அடையாளம் காணலாம். இந்த வன்முறை சூழல் கருக்கொண்ட கடந்த சில வருட  காலங்களிலிருந்து அளுத்கம வன்முறைகள் வரைக்கும் முஸ்லிம் மக்களை  பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்தே  வருகின்றன. பிரதான கட்சியான முஸ்லிம் காங்கிரஸ்(ரஹுப் ஹக்கீம்) தேசிய  காங்கிரஸ் (அதாவுல்லா) அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (ரிச்ஹாத்  பதியுதீன்)போன்ற கட்சிகள் சார்ந்த பலர் மத்தியிலும்  மாகாணங்களிலும் இலங்கையில் அதிகாரம் செலுத்தும் பொதுசன ஐக்கிய முன்னணி  சார்ந்து அமைச்சர்களாக இருக்கின்றனர். இதனடிப்படையில் இது ஒரு முழுமையான  அரசுசார் இணக்க அரசியலாக பார்க்கப்படுகின்றது.


 முஸ்லிம்கள் அரசுடன் கைகோர்த்து ஆட்சியதிகாரங்களில் பங்கெடுத்து வருகின்ற  இன்றைய நிலைப்பாடு இப்போது மட்டுமன்றி பெரும்பாலான சந்தர்ப்பங்களுக்கு  முஸ்லிம்களிடத்தில் பொதுவானதொரு போக்காகவே காணப்பட்டு வந்திருக்கின்றது.  இந்த நிலைமைகள் எப்படி உருவாக்கி வளர்ந்து வந்துள்ளன. அவற்றுக்கான வரலாற்று  காரணங்கள் என்ன? என்பது பற்றிய மீளாய்வுகள் இன்றி அளுத்கம சம்பவங்களின்  பின்னர் தமிழ் தேசிய ஊடகங்கள் பக்கம்பக்கமாக முஸ்லிம்களை நோக்கி எழுதி  தள்ளுகின்றன.ஒருபுறம்" முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த போது  வாளாதிருந்தவர்கள் முஸ்லிம்கள்",  "எங்களை காட்டிகொடுத்தவர்கள்,  முஸ்லிம்கள்",  "எங்கள் போராட்டத்தில் குளிர் காய்ந்தவர்கள் முஸ்லிம்கள்",  "இப்போது புரிகிறதா சிங்களவர்களை பற்றி?" என்று பழிக்குபழி மனப்பான்மையுடன்  குரோதங்களின் வெளிப்பாடுகளாக தமிழ் தேசிய குஞ்சு குரல்கள் எல்லாம்  முஸ்லிம்களை நோக்கி ஏவம் கேட்கின்ற அவலங்கள் அரங்கேறுகின்றன..
மறுபுறம்  "பெருந்தன்மை நிறைந்த தமிழ் தேசிய தலைவர்களோ "ஆடுனைகிறதே என்று ஓநாய்கள்  அழுகிற லட்சணத்தில் தமிழ் தேசியத்துடன் கைகோர்க்குமாறு முஸ்லிம்களை  நோக்கி பாசக்கயிறுகளை சரமாரியாக வீசிவருகின்றனர்.. இதில் பெரிய வேடிக்கை  என்னவென்றால் இந்த தமிழ் தேசிய தலைவர்கள் தமது வழிகாட்டலில் இலங்கைவாழ்  முஸ்லிம்களை தவிர தமிழ் மக்கள் அனைவரையும் சுவனத்தின் வாசலில்  கொண்டுபோய் நிறுத்திவிட்டு வந்திருப்பதான இறுமாப்புடன் கதையளப்பதுதான்.
 எனவே இந்த அட்டைக்கத்தி வீரர்களை விடுத்து அளுத்கம முஸ்லிம்களுக்கெதிரான  பெளத்த மேலாதிக்கம் இணக்க அரசியலை கேள்விக்குள்ளாக்குகிறதா? என்பது  குறித்த சில சிந்தனைகளை இக்கட்டுரை ஆராய முனைகின்றது.
முஸ்லிம்களது தமிழ் தலைமைகள் மீதான அச்சத்தின் தொடக்கம் எது?
 1915ம் ஆண்டு இடம்பெற்ற  சிங்கள-முஸ்லிம் கலவரங்களின் பின்னர் அன்றைய பொன் இராமநாதன் போன்ற தமிழ்  தலைவர்கள் எடுத்த முஸ்லிம்களுக்கு எதிரான காட்டிகொடுக்கும் போக்குகளே  இத்தகைய சிங்கள கட்சிகள் சார்ந்த அரசியலுக்கு முஸ்லிம்களை  தள்ளியது. இந்தகலவரத்தின் சூத்திரதாரிகளான இனவாத தலைவர்களைக் பிருத்தானிய  அரசு கைது செய்தது. பொன். இராமநாதன் இங்கிலாந்து சென்று அச்சிங்களத்  தலைவர்களை விடுவித்தார். அதுமட்டுமன்றி இந்தகலவரத்தின் காரணமாக இடம்பெற்ற  அழிவுகளுக்கு சட்டசபையில் முஸ்லிம் தலைமைகள் நட்ட ஈடு கோரியபோது அதைமறுத்த  தமிழ் தலைவரான இராமநாதன் பொன்னம்பலம் "இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவில்  இருந்து குடியேறிய கீழ் சாதியினரே என்று கேவலப்படுத்தினார்.அதுவே நீண்ட  காலத்துக்கு தமிழ் தலைமைகளுடன் இணைந்த அரசியல் பயணத்தின் மீது  முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்க அடிப்படை காரணமாயிற்று.
 மொழியுணர்வும் அதுசார்ந்த தமிழ்-முஸ்லிம் ஒருமித்த அரசியல் போக்கும்
 அதன்பின்னர் 1956 ஆண்டு அமுலுக்கு வந்த மொழிச்சட்டம் சிங்களத்துக்கு  மட்டும் அரச கரும மொழி அந்தஸ்து கொடுத்தமைக்கு எதிராக  எஸ்.ஜே.வி.செல்வநாயகம் முன்வைத்த "தமிழ் பேசும் மக்கள்" என்னும்  கோட்பாடு1915ல் இருந்து முஸ்லிம்கள் கடைப்பிடித்து வந்த அரசியல்  போக்கில் ஒருபெரும் மாற்றத்தை உருவாகியது.தமிழர்களுடன் இணைந்து  செயல்படும் புதிய போக்கு ஒன்று முஸ்லிம்களிடத்தில் உருவானது.தமிழரசு  கட்சியின் ஆதரவுத்தளம் முஸ்லிம்களிடத்திலும் வியாபித்தது. சிறிஎதிர்ப்பு  போராட்ட சத்தியாகிரக நிகழ்வுகளில் தமிழர்களுடன் இணைந்து முஸ்லிம்கள்  வகித்த பங்கு குறைத்து மதிப்பிடகூடியதோன்றல்ல.தமிழரசு கட்சியின் பிரச்சார  பீரங்கிகளாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மொழியுரிமை போரில் சிறை  மீண்ட செம்மல்களாகவும் பல முஸ்லிம்களின் பெயர்களை 5060 மற்றும் 70களின்  களின் வரலாறு பொறித்து விட்டுசென்றிருக்கின்றது.
 இந்த காலகட்டத்தின் தொடர்ச்சி எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் இளமைகாலம் வரை  தொடர்ந்தது.தமிழரசு கட்சியானது தமிழர் விடுதலை கூட்டணியாக பரிணமித்த  1975ம் ஆண்டு காலப்பகுதியிலும் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி  தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளுடன் இணைந்தே பயணித்தது தமிழீழமே தீர்வு  என்று தீர்மானமெடுத்த வட்டுகோட்டை மாநாட்டிலும் எம்.எச்.எம்.அஸ்ரப்  கலந்துகொண்டார் என்பது புலிப்பால் குடித்துவளர்ந்த இன்றைய பல இளைஞர்கள்  அறியாத செய்தி.அதுமட்டுமன்றி தமிழீழத்துக்கான அங்கீகாரம் கோரி தமிழர்  விடுதலை கூட்டணி பங்கெடுத்த 1977ம் ஆண்டு தேர்தலில் முஸ்லிம் ஐக்கிய  விடுதலை முன்னணியானது தமிழர் விடுதலைகூட்டணியுடன் இணைந்து உதயசூரியன்  சின்னத்தில் முஸ்லிம் பிரதேசங்களை மையமாக கொண்டு போட்டியிட்டது.அண்ணன்  அமிர்தலிங்கம் தமிழீழம் எடுக்க தவறினாலும் தம்பி அஸ்ரப் தமிழீழம் எடுத்து  தருவேன் என்று தமிழர் விடுதலை கூட்டணி மேடைகளில் முழங்கியவர் அஸ்ரப்  ஆகும்.ஆனால் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மறைவுக்கு பின்னர் தமிழர் விடுதலை  கூட்டணியில் அதிகாரம்செலுத்திய யாழ்ப்பாண ஆதிக்க மனோநிலை இந்த  ஒருங்கிணைந்த போக்குக்கு ஆப்புவைத்தது.முஸ்லிம்களை தமது தேவைகளுக்கு  மட்டும் கறி வேப்பிலைகளாக பாவிக்கும் ஆதிக்க மனோபாவம் 1981ம் ஆண்டு  மாவட்டசபை தேர்தலில் அம்பலமானது.முஸ்லிம்கள் அதிகமாக வாழும் அம்பாறை  மாவட்ட வேட்பாளர் நியமனத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்  மறுக்கப்பட்டது. இந்நிகழ்வு தமிழ் தலைமைகள் மீதான பெரும் சந்தேகத்தை  முஸ்லிம்களிடத்தில் தோற்றுவித்தது. 1920களில் மேல்மாகாண சட்டசபை  நியமனங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டது என கூறி பொன்னம்பலம்  சகோதரர்கள் எப்படி இலங்கை தேசிய காங்கிரசில் நம்பிக்கை இழந்து தமிழர்  மகாசபையை நிறுவ முன்வந்தனரோ அதனையொத்த ஏமாற்றமே முஸ்லிம்களுக்கு 1981ம்  ஆண்டு மாவட்டசபை தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணியிடமிருந்து கிடைத்தது.  இது முஸ்லிம்கள் தமது தனிவழி அரசியல் பாதைகுறித்த சிந்தனைக்கு  வழிசமைத்தது.அதே ஆண்டில்  எம்.எச்.எம்.அஸ்ரப் "தமிழீழ"அரசியல் பாதையில் இருந்து விலகி "முஸ்லிம்  காங்கிரஸ்" என்னும் புதியதொரு சகாப்த்தத்தை ஆரம்பித்து வைத்தார்.
 ஆனாலும் அதுவரைகாலமும் முஸ்லிம்களிடத்தில் பரப்பப்பட்ட தமிழீழ  விடுதலைபற்றிய உணர்வலைகள் அவ்வளவு இலகுவாக மறைந்துவிடவில்லை. எனவே  1980களில் இருந்து வேகம்பெற்ற தமிழீழ விடுதலைக்கான ஆயுத போராட்ட  அமைப்புகளில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்களவு  இருந்தது.அந்த காலத்தில் கோலோச்சிய ஐந்து விடுதலை இயக்கங்களிலும் பல  கெரில்லா பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் இருந்தனர்.இன்றைய அமைச்சர்  பசீர் சேகுதாஹுத் கூட ஒரு முன்னாள் ஈழவிடுதலை போராளிதான்.ஆனாலும் இந்த  விடுதலை இயக்கங்களும் முஸ்லிம்களின் நம்பிக்கைகளை சிதறடிக்கவே  செய்தன.முஸ்லிம்களை "முழு தமிழர்களாக"ஏற்றுகொள்ள மறுத்த சைவ வேளாள  மனோநிலைகளின் ஆதிக்கம் மேலோங்கியது.முஸ்லிம்களை இரண்டாம் பட்சமாக  நடத்துவது முஸ்லிம் இளைஞர்களின் விசுவாசத்தினை சந்தேகிப்பது என்று  தொடங்கிய சம்பவங்கள் அவர்களை எதிரிகளாக துரத்துவதுவரை சென்றது.மறுபுறம்  1987ம் ஆண்டு உருவான இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்திய "வடக்கு-  கிழக்கு மாகாணங்களின் இணைப்பு கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் சமூக  பலத்தினை சிதைத்துவிடும் அபாயத்தினை கொண்டது".அதாவது "இணைந்த வடக்கு  கிழக்கில் முஸ்லிம்கள் மிக குறைந்த சிறுபான்மையாகின்ற அபாயம் உண்டு". எனவே  "முஸ்லிம்களின் தனித்துவகுரல்களும் கோரிக்கைகளும் அவற்றை  பிரதிநிதித்துவம் செய்ய எமக்கான அரசியல் கட்சியும் தேவை"என்று முஸ்லிம்  காங்கிரஸ் குரல் கொடுத்தது.அதனடிப்படையில் 1988ம் ஆண்டு இடம்பெற்ற  முதலாவது வடகிழக்கு மாகாணத்துக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் முதன்  முதலாகவும் தமிழர் தரப்புக்கு போட்டியாகவும் களமிறங்கியது. இந்த  தேர்தலுக்கு பின்னர் முஸ்லிம் மக்களிடத்தில் வேகமாக பலம்பெற்ற முஸ்லிம்  காங்கிரஸ் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் சார்ந்தும் ஆட்சியில்  பங்கெடுத்தும் தனது இணக்க அரசியலை தொடங்கியது.அதேவேளை தமிழீழ  விடுதலைப்புலிகள் எடுத்த முஸ்லிம் விரோத நிலைப்பாடுகள் 1990ம் ஆண்டு  நடாத்திய பள்ளிவாசல் படுகொலைகள் வடமாகாண முஸ்லிம்கள் மீதான இன  சுத்திகரிப்புக்கள் என்பன முஸ்லிம்களை நிரந்தரமாகவே இலங்கை ஆட்சியாளர்கள்  சார்ந்து வாழவும் செயல்படவும் அரசியல் செய்யவும் வழிசமைத்தன.
 தொடரும்
மூலம் : http://www.thenee.com/html/020714-1.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...