தூண்டலும் தொக்கிய விளைவுகளும் ! (4)

தூண்டலும் தொக்கிய  விளைவுகளும் ! (4)
எஸ்.எம்.எம்.பஷீர்

யாழ் நூலகத்தை சிங்கள காடையர்களோ அல்லது இலங்கை இராணுவமோ தீக்கிரையாக்கியது என்பதற்காக புத்தரையே சிங்களவர்கள் கொன்றுவிட்டதாக நுஹுமான் கண்ட கனவு ஒரு  " கெட்ட கனவு " தான் !.  புத்தரை சுட்டுக் கொன்று, அவரின்  குருதி தோய்ந்த உடலத்தை இழுத்துச் சென்று அவரின்  தர்மங்களைப் போதிக்கும் புத்தகங்களையும், சுவடிகளையும் சேர்த்து புத்தகச் சிதையில் அவரை எரித்தது  என்பது பௌத்த சிங்கள முற்போக்கு சமூகத்துள் ஓரளவு மன உறுத்தலை ஏற்படுத்திய கவிதை என்ற வகையில் மட்டும் ஆதரவை பெற்று , மத நிந்தனைபௌத்த பேரதிர்ப்பு போன்ற பிரச்சினைகளுக்குள்  சிக்குவதில் இருந்து தப்பிக் கொண்டது. இலங்கையின் பெரும்பான்மை மக்களின் , அதுவும் ஆட்சி அனுசரணை அளிக்கும் வகையில் அரசியல் அமைப்பில் முதன்மை ஸ்திதி கொண்ட பௌத்த மதத்தின் ஸ்தாபகரான புத்தர் கொடூரமாக கொல்லப்படுவதாக , எரியூட்டப்படுவதாக கனவு காண்பது என்பது ஒரு கவிஞனின் உரிமப் பிரயோகம் எனக் கொள்ளப்படுகிறது. இன்றுவரை அக்கவிதை பற்றிப் பேசப்படுகிறது. !   புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
*சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
*தம்ம பதமும்தான் சாம்பரானது

“They heaped the books
ninety thousand in all,
and lit the pyre
with the Cikalokavadda Sutta.
Thus the remains
of the Compassionate One
were burned to ashes
along with the Dhammapada

என்.எம் நுஹுமானின் "புத்தரின் படுகொலை" எனும் கவிதை ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது . "புத்தரின் படுகொலை" ஏற்படுத்திய எதிர்வினைகள்  பற்றி நுஹுமானே அவரின் ஒரு ஆங்கிலக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்.  அக்கட்டுரையில் , அவரின் கவிதை கொழும்பு பல்கலைக்கழக விளம்பரப் பலகையில் ( நோட்டீஸ் போட்டில்  ஒட்டப்பட்ட பொழுது அங்கு சில சிங்கள மாணவர்கள் நோட்டீஸ் போர்டை தாங்கியிருக்கும் கிராதியை  அடித்து உடைத்ததாகவும் , அதன் பின்னர் அக்கவிதை விளம்பரப் பலகையிலிருந்து  நீக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார், மேலும்  சில சிங்கள தீவிரவாத சக்திகள் அக்கவிதை மத நிந்தைகுரியது என்று ஒரு பிரச்சினையை  நாடாளுமன்றத்தில் எழுப்பவிருப்பதாக  நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றும் தனது நண்பர் ஒருவர் தன்னை எச்சரித்ததாகவும் , ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காக அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும், ஒரு இளம் பிக்கு ஒருவரும் அக்கவிதையினை சிங்களத்தில் மொழி பெயர்த்ததாகவும் நுஹுமான் குறிப்பிட்டு இருந்தார்.  ஆங்கிலப் பேராசிரியர்  குணதிலக தொகுத்து வெளியிட்ட  "இலங்கையில் நவீன எழுத்துக்கள்"  என்ற நூல் திரட்டில்  நுஹுமான் இன நெருக்கடி பற்றி சிந்திப்பதாகவும் மற்றும் வன்முறையில்  எப்படி மதம் காயமுறுகிறது  என்று தனது கவிதையில் குறிப்பிடுவதாகவும்   நுஹுமான் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய கால கட்டங்களில் இன்று இருப்பதுபோல் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஹெல உறுமய என்ற சிங்கள பௌத்த அரசியல் கட்சி ஆட்சியில் இருக்கவில்லை , ஞான சேர தேரர் போன்ற சிங்கள பௌத்த தீவிரவாத முஸ்லிம்களுக்கு  எதிராக இனவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் , இனப் பகைமைக்கு செயலுருக் கொடுக்கும் பௌத்த தீவிரவாத தனிமங்கள் அன்று இருக்கவில்லை. அந்த வகையில் நுஹுமானின் கவிதை பலத்த எதிர்ப்பும் , கிளர்ச்சியும் இன்றி தப்பி விட்டது . எல்லாவற்றையும் விட இலங்கையில் வாழ்ந்த தமிழ் கவிஞர்கள் யாரும் புத்தனைக் கொன்று , (யார் கொல்கிறார்கள் என்பதற்கு அப்பால்) அவரின் குருதி தோய்ந்த  உடலத்தை எரிப்பதாக கவிதைக் கனவு கண்டிருப்பார்களா என்று ஒரு கேள்வி எழுப்பினால் , அதற்கு பதில் எதிர்மறையாகத்தான் இருக்கும். அந்த வகையில் தமிழரின் , மொத்தத்தில் இலங்கையின் கல்வி கலாச்சாரம் பாரம்பரிய அடையாளத்தின் சின்னங்களில் ஒன்று என்று சொல்லப்பட்ட யாழ் நூலகம் எரிக்கப்பட்டதை பற்றி புத்தனை  பௌத்தர்கள் கொன்றழித்து எரிக்கும் கனவு கண்டவர் ஒரு முஸ்லிம் கவிஞர் என்பது அன்று மெதுவாக புத்தரின் அஸ்திபோல் மறைந்து போய்விட்டது.!   

(தமிழர்கள்தான் புலிகள் = புலிகள்தான் தமிழர்கள் ) என்று  புலிப் பயங்கரவாதிகள் வடக்கிலே கோலோட்சிய  கால கட்டத்தில் , 1990ல்  வடபுல முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடி , நிலங்களை கபளீகரம் செய்து , அவர்களில் சில இளைஞர்களை கடத்திவைத்துக் கொண்டு , ஆயிரக் கணக்கில் அவர்களை விரட்டி அடித்த பொழுது நுஹுமானும் வெளியேற்றப்பட்டார். தமிழர்களின் இனப் பிரச்சினை தொடர்பில் அவர் கொண்டிருந்த சிந்தனைக்காக , தங்களைப் பௌத்த அரசு என சுய பிரகடனப் படுத்திக் கொண்ட  இலங்கை அரசின் இராணுவம் மேற்கொண்ட நூலெரிப்பு சம்பவம் மனித பெறுமதிகளுக்கும் நாகரீகத்துக்கும் எதிரானது என்று நுஹுமான் தான் அந்த கவிதை எழுதியமைக்கு காரணம் சொன்னார். ( It was a crime committed against human values and civilization by the armed forces of a self-proclaimed Buddhist state. ) யாழ் நூலகம் எரிக்கப்பட்டு , அந்த மனித குல   குற்றத்துக்கு எதிரான செயலுக்காய் புத்தர் தனது கனவில் கொல்லப்படுவதாக நுஹுமான் கனவு கண்டு சுமார் சுமார் ஒன்பது வருடங்களின்(1990)  பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம் மக்கள் மீது மனித பெறுமதிகளுக்கும் மனித நாகாரீகத்தும் எதிரானது மட்டுமல்ல சர்வதேச குற்றங்களாக வகுக்கப்பட்ட இனப்படுகொலை , இனச் சுத்திகரிப்பு குற்றங்களை  புலிகள் இழைத்தனர்.

புலிகளின் அரசியல் "தத்துவாசிரியர்" எனப் புகழ்ந்து தள்ளப்பட்ட  மறைந்த அன்டன் பாலசிங்கத்தை  "சென்டர் பாயிண்ட்"  (Centre Point -November/ December 1993) எனப்படும் ஆங்கில இதழ் நேர்கண்ட பொழுது வட மாகாண முஸ்லிம்களை வெளியேற்றியது குறித்து  அவரிடம் கேள்வி எழுப்பியது.  அந்த கேள்வித் தொடரில் ஒரு கேள்வியாக யாழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பித்த பேராசிரியர் நுஹுமானை புலிகள் ஏன் வெளியேற்றினார்கள் என்பதாகும்.

பதினான்கு வருடங்களாக யாழ்ப்பான பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பித்த நுஹுமான் போன்றவர்களை வெளியேற்றியது பற்றி ....,, தெற்கிலே உள்ள சிங்கள  பேரினவாதிகள் செய்தது போலவே இல்லையா? மேலும் கொழும்பிலே இப்போது தமிழர்களைக் கைது செய்வதற்கும் தொந்தரவு செய்வதற்கும் அடிப்படையான  தர்கத்தை ஒத்ததாகாதா? CP: You are right! What About people like Professor Nuhman who taught Tamil at Jaffna University for 14 years... isn’t this exactly what the chauvinist Sinhalese in the South did? Also, isn’t this similar to the logic under lying the arrest and harassment of Tamils in Colombo now?

என்ற கேள்விக்கு அன்டன் பாலசிங்கம் கிழக்கு மாகாணத்தில்  அரச ஆதரவு முஸ்லிம்  ஆயுததாரிகளால் தமிழர்கள் கொடுமையாக நடத்தப்பட்டார்கள் , அழிக்கப்பட்டார்கள் என்பதாகவும் , அவர்களின் துயரத்தை நீங்கள் பார்க்கத் தவறுகிறீர்கள் என்று பதில் அளித்தார்.  

சென்ட் பாயிண்ட் தனது வாதத்தை மிக காத்திரமாக முன்வைத்து எப்படி முஸ்லிம் என்ற அடிப்படையில் மாத்திரமே புலிகள் முழு முஸ்லிம்களையும் வடக்கில் இருந்து வெளியேற்றினார்கள் . அந்த வகையில் நுஹுமான் முஸ்லிம் என்ற அடையாளத்தின் காரணமாகவே வெளியேற்றப்பட்டார் என்பதை உறுதி செய்தது . அதுபற்றிய தர்க்கங்களை கொண்ட நேர்காணலின் முழுமையான பகுதிகளை இங்கு பார்க்கவும். (http://www.bazeerlanka.com/2011/04/bala-voice-of-tamilnation-and-ears-of.html)

நுஹுமான்  இனப் பிரச்சினை தொடர்பில் கொண்டிருந்த சிந்தனைக்காக அக்கவிதையினை எழுதி இருக்கிறார் என்று பேராசிரியர் குணதிலக சொன்னாலும் நுஹுமான் மனித பெறுமதிகளுக்கும் நாகரீகத்துக்கும் எதிரான செயல் குறித்தே தான் அக்கவிதையை எழுதியதாக குறிப்பிட்டுள்ளார். எது எப்படியோ , நுஹுமான் புலிகளின்  மனித பெறுமதிகளுக்கும் நாகரீகத்தும் எதிரான இனச் சுத்திகரிப்பு (இது ஒரு சர்வதேச குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் ) குற்றத்தில் பலியாகிப்போன ஒருவர் என்பதும் , அவருடன் சேர்த்து ஆயிரக் கணக்கில் ஒரு சமூகமே இன மத அடிப்படையில் சுத்திகரிப்பு செய்யப்பட்டபொழுது , நுஹுமான் என்ன கவிதைக் கனவு கண்டார் என்ற கேள்வி எழுந்த பொழுது எனக்கு தெரிந்த சில எழுத்தாளர்களை தொடர்பு கொண்டேன் , நுஹுமானுக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பி அவர் புலிகளின் கிழக்கு படுகொலைகள் (நுஹுமானின் பிறப்பிடம் ) வட மாகான முஸ்லிம் வெளியேற்றம் ( நுஹுமானின் இன சுத்திகரிப்பின் வாழிடம்) பற்றி ஏதேனும் கவிதைகள் எழுதி இருக்கிறாரா என்று வினாவினேன். ஆனால் இக்கட்டுரை எழுதப்படும்வரை பதில் கிடைக்கவில்லை. ஆனால் இலங்கையின் பிரபல எழுத்தாளர் , கவிஞர் , ஒலிபரப்பாளர் , இதழியலாளர் என்ற பல முகம் கொண்ட   ஒரு முஸ்லிம் எழுத்தாளரை தொடர்பு கொண்ட பொழுது அவரும் தான் அறிந்த வரையில் அப்படி எதுவும் நுஹுமான் எழுதவில்லை என்று குறிப்பிட்டார்.  ஆனாலும் , அவர் நூஹுமானின்   2000ல்  பிரசுரமான அவர்களும் நீயும் என்ற கவிதை ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார்.

ஜீப் வண்டியில் வந்தனர்
 உன் வீட்டுக் கதவைத் தட்டினர்
விசாரணைக்காக உன்னை அழுத்துச் சென்றனர்
உன் தாய் அழுதாள் கதறினாள், மன்றாடினாள்
அவர்களின் முகாமுக்குச் சென்று விசாரித்போது இல்லை,
 நாங்கள் கூட்டிவரவில்லை என்று மறுத்தார்கள்
உன் தலை பிய்ந்து எலும்புகள் நொறுங்கி
உன் இரத்தம் மண்ணில் கலந்தது

அந்தக் கவிதை இலங்கையில் வெளியாகும் "யாத்ரா"  ( முதலாவது ஆண்டுமலர் 2000 ) எனும் இதழில் பிரசுரமான நுஹுமானின் கவிதையாகும். அக்கவிதை 2000ம் ஆண்டில் எழுதப்பட்டிருந்தால் தமிழ் இளைஞர்கள் விசாரணைக்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டு காணாமல் போவதை ( கொல்லப்படுவதை ) அடிப்படையாகக் கொண்டே  நுஹுமான் அக்கவிதையை எழுதி இருக்கலாம் . ஆனாலும்  இந்தக் கவிதையில் அவர் இலங்கையில் பொலிசாரின் விசாரணைக் கைதுகளையும் , கைதானவர்கள் காணாமல் போவது பற்றியும் எழுதிய கவிதை என்ற வகையில் அந்தக் கவிதை சிங்கள ஜே வீ பீ கிளர்ச்சிக் காலத்தில் இளைஞர்களை விசாரனைகென பொலிசார் அழைத்தச் சென்றதையும் கூட ஞாபக மூட்டினாலும்அந்தக் கவிதையை எழுதிய வருடமும் பிரசுரிக்கப்பட்ட வருடமும் ஒன்றேயானால்  அக்கவிதை தமிழ் இளைஞர்களையே கவிதைப் பேசுபொருளாக கொண்டிருக்க வேண்டும். அந்த கவிதையில் நுஹுமான் ., கைதுகளிலும் காணாமல் போவதிலும் தன்னையும் ஆட்படுத்தி உள்ளார்  ஆனாலும்  முஸ்லிம்கள் மீதான புலிகளின் மிகவும் வெளிப்படையான வரலாற்று அக்கிரமங்கள் குறித்து ஏதேனும் கவிதைக் கனவினை நுஹுமான் கண்டிருந்தாரா ? . ஆகக் குறைந்தது தானும் யாழில் இருந்து ஒரு முஸ்லிம்  என்பதற்காக வெளியேற்றப்பட்டவர் என்ற வகையில் அவர் கண்ட கனவு என்னவென்று தெரியவில்லை.!

நுஹுமானுக்கு பிறகு புத்தரை கவிதைக் கரம் கொண்டு தொட்டவர் எம்.எச் எம் அஸ்ரப் . இவர்கள் இருவரும் பிரபலமானவர்கள். கிழக்கைச் சேர்ந்தவர்கள் , ஆச்சரியமாக ஒரே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் , முன்னையவர் ஒரு பேராசிரியர் . அதுவும் ஏதோ ஒரு விதத்தில் தனது தொழில் நிமித்தம் வடக்கில் பல காலம் வாழ நேரிட்டவர் பின்னையவர் ஒரு பிரபல அரசியல் வாதி , முஸ்லிம் கட்சி ஒன்றின் ஸ்தாபகத் தலைவர். இருவரும் கவிஞர்கள் , இவர்கள் இருவரும்  இன பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்ட விதத்திலேயே  பௌத்தர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து புத்தரை தமது கவிதைகளில் பேசு  பொருளாக்கியவர்கள்,


இன்னும் வரும்

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...