த.ஜெயபாலனின் “வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” நூல் பற்றிய விமர்சனம்


எஸ்.எம்.எம்.பஷீர்

"ஆயுதம் ஏந்தாத புலிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுக் கொடுக்க வில்லை. அவர்களிடம் ஆயுதம் இல்லாதபடியால் அவர்கள் பாரிய அழிவு எதனையும் நேரடியாக ஏற்படுத்தி இருக்கவில்லை. ஆனால் ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு தீர்வு எதனையும் பெற்றுக் கொடுக்காதது மட்டுமல்ல அவர்களை மிகவும் பலவீனமாக்கி நிர்க்கதியான நிலைககுத் தள்ளி உள்ளனர் ; அவர்களிடம் ஆயுதமும இருநத்ததால் அவர்கள் ஏற்படுத்திய அழிவு மிகக் கொடுமையானதாகவும் ஈடுசெய்ய முடியாததாகவும் உள்ளது."             தம்பிராஜா ஜெயபாலன்
                                                      (“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” )



ஜூலை மாதம் 23 ஆம் திகதி இலண்டனில் தம்பிராஜா ஜெயபாலனின் “வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” என்ற நூல்  தேசம் குழுவினரால் வெளியிட்டு வைக்கப்பட்டது.  குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்த காலத்திலும் , யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான உடனடிக் காலப் பகுதியிலும் யுத்த பிரதேசங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளையும் , அதன் எதிர்வினையாக தமிழர்கள் பெருமளவில் புலம்பெயர்ந்த  தேசங்களில் இடம்பெற்ற பிரதான நிகழ்வுகளையும்  "தேசம்" இதழியல் , " இலண்டன் குரல்" பத்திரிகை என்பவற்றின் பிரதான ஆசிரியரான  ஜெயபாலன் தொடர்ந்தேர்ச்சியாக கட்டுரையாக்கம் செய்து வந்துள்ளார்.  அக் கட்டுரைத் தொடர்களே “வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” என்ற பெயரில் நூலுருவாக்கம்  பெற்றுள்ளது.

ஜெயபாலன் ஒரு புலனாய்வு இதழியலாளர் என்ற வகையிலும் பிரபலமானவர். குறிப்பாக இலண்டனில் புலம் பெயர் தமிழ் சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மறைக்கப்பட்ட பல சங்கதிகளை வெளிக் கொணர்ந்தவர்.  அதன் மூலம் பல சவால்களுக்கு துணிச்சலாக முகங் கொடுத்தவர். ஆனால் இந்நூல்  இறுதி யுத்தத்தின் பொழுது  சொல்லொணாத துயரங்களை  அனுபவித்த தமிழ் மக்களின் மீதான அவரின் அக்கறையினை வரலாற்றாக்கியிருக்கும்  ஒரு நூல். 

 “வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” என்ற இந்தநூல் இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் அந்த மிக முக்கியமான காலகட்டத்தை பதிவு செய்கின்றது." என்று ஜெயபாலன் தனது முன்னுரையிலேயே தமிழ் மக்களின் வரலாற்றில் இனப்பிரச்சினைக்கான தீர்வு "தமிழ் ஈழமே" என்று தீர்மானம் மேற்கொண்ட வட்டுக்கோட்டையினை ஒரு ஆரம்ப  புள்ளியாகக் கொண்டு , அவ்விலக்கினை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட  ஆயுதப் போராட்டம் தோல்வியற்ற இடமான முள்ளிவாய்க்காலை  ஒரு முடிவுப் புள்ளியாகக் கொண்டு “வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” என்று தனது நூலுக்கு பெயரிட்டிருந்தாலும் தனி நாட்டுக்கான தீர்மான மேற்கொள்ளப்பட்ட எல்லையாக நிர்ணயித்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் (14 மே 1976 ) ஒரு காலக் குறியீடாக இந்நூலில் குறிப்பிட ப்பட்டுள்ளதேயொழிய இந்நூல் 27 நவம்பர் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 18 பெப்ரவரி 2010 வரையான காலப்பகுதிகளில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் பற்றியே,  குறிப்பாக வன்னியையும் முள்ளிவாய்க்காலையும் பற்றியே விரிவாகவே பேசுகின்ற நூலாகும். ஜெயபாலன் இறுதி யுத்த நேரத்தில் எழுதிய கட்டுரைகளை கனதியானவை , நேரடி வர்ணனையை போல , ஒரு யுத்த கள செய்தி போல உடனுக்குடன் மிகவும் விரைவாகவும் தொடராகவும் கால வரிசைப்படி எழுதப்பட்டவை.


வட்டுக்கோட்டை பிரகடனம் 1976 இல் மேற்கொள்ளப்பட்டு , ஆயுதப்பரிமாணம் பெற்று , அதன் அந்திமத்தை முள்ளிவாய்க்காலில் 2009 இல் சந்தித்த கால கட்டம் 33 மூன்று வருடங்களாகும். 1976 இல் தான் புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் வட்டுக்கோட்டை தீர்மானமும் புலிகள் இயக்கமும் கொண்ட இலக்கான "தமிழீழ அரசு"  33 வருடத்தில் முடிவுக்கு வந்தது. அது பற்றிய இன்னுமொரு செய்தி ஒன்று இங்கு முரண் நகையாக எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.  எனக்கு நன்கு அறிமுகமான கொழும்பில்  உள்ள  ஒரு பிரபல ஊடகவியலாளர்  ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் (புலிகள் பலமாக இருந்த காலத்தில்)  ஒருதடவை புலிகளின் பிரமுகர் ஒருவரை யாழில் சந்திக்க நேரிட்ட பொழுது புலிகளின் கொடியில்  பொறிக்கப்பட்டுள்ள இரண்டு துப்பாக்கிகளுக்கும்  இடையில் 11 , 11, 11 ஆக  பிரிக்கப்பட்டுள்ள  33 தோட்டாக்களும் எதனை குறிக்கின்றன என்று கேட்டதாகவும் ,  அதற்கு அந்த புலி முக்கியஸ்தர் , புலிகளின் தாகமான "தமிழ் ஈழத்தை"  33 வருடத்துக்குள் அடைந்து விட வேண்டும் எனும் தங்களின் இலக்கையே அவை குறிக்கின்றன என்று  தன்னிடம் கூறியதாகவும் என்னுடன் குறிப்பிட்டார். 33 வருடங்கள் முடிந்த பொழுது புலிகளும் முடிவுக்கு வந்தனர் , தமிழ் ஈழமும் முடிவுக்கு வந்தது.! 



இங்கு "கோடாஸ் வார் " (Gota’s war கோத்தாவின் யுத்தம் ) எனும்  சி.ஏ . சந்திரபிரேமாவின் நூல் தவிர்க்கவொண்ணாமல் ஞாபகத்துக்கு வருகிறது. இலங்கையின் இராணுவ தரப்பினரின் உள்நாட்டு அரசியல் யுத்தங்கள் பற்றி பேசுகின்ற நூலாக , குறிப்பாக கோத்தாபாய ராஜபக்சவின் இராணுவ வகிபாகத்தை இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் ஊடாக முன்னிலைப்படுத்தும் நூலாக "கோடாஸ் வார் "  எழுதப்பட்டுள்ளது. ஆனாலும்  இராணுவ ரீதியில் மக்கள் விடுதலை முன்னணியின் இரு வேறுபட்ட கால ஆயுதக் கிளர்ச்சிகளைத் தோற்கடித்ததையும் , புலிகளைத் தோற்கடித்ததையும் இலங்கை இராணுவ தரப்பில் பேசுகின்ற நூலான "கோடாஸ் வார்"  ,  தமிழரின் பிரிவினைவாத அரசியல் செயற்பாட்டின் தோற்றப்புள்ளிகளை  தமிழரசுக் கட்சி இஸ்தாபித்தத்துடன் அடையாளம் காட்டிக் கொண்டு இறுதி யுத்தம் வரையான வரலாற்றை இராணுவ நடவடிக்கைளை முதன்மைப்படுத்தி பேசுகிறது.

ஒரு வகையில் தமிழ் இராச்சிய கோரிக்கைக்கான  வட்டுக்கோட்டைக்கு முந்தியவை என்பது உண்மையே . ஆனாலும் ஒப்பீட்டு ரீதியில் ஆயுதப் பரிமாணத்திற்கான விதையிடப்பட்ட வட்டுக்கோட்டையின் எதிர்வினைகளை மனதில் கொண்டே  ஜெயபாலன் வட்டுக்கோட்டைத் தீர்மான காலத்தை தொடக்க புள்ளியாக தேர்ந்துள்ளார். யதார்த்தத்தில் தனிநாட்டுக்கான வட்டுக்கோட்டை தீர்மானமே  ஆயுத போராட்டத்துக்கு தமிழ் இளைஞர்களை  உந்தித் தள்ளியது என்பதில் சர்ச்சைக்கு இடமில்லை. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகவே வட்டுக்கோட்டையும் (தனி நாட்டு அரசியல் தீர்மானம்)  , முள்ளிவாய்க்காளும்  ( அந்த தீர்மானத்தினை ஆயுதப் போராட்ட மூலம் பெறுவதில் ஏற்பட்ட தோல்வி) இவ்விரு கால கட்டங்களும் அமைந்து விடுகின்றது.

ஜெயபாலனின் கட்டுரைக்கான தலைப்புக்கள் சில  மேற்கோள்களாகவும்  "புதிய செய்திகள் " போலவும் நீண்டவைகளாக  இருக்கின்றன. கட்டுரைகள் பேசும் யுத்ததத்திற்கு உடனடியாக முந்திய பிந்திய  கட்டங்களில் வெளிவந்த கூற்றுக்களையே   தலைப்புக்களாக்கி  உள்ளடக்கம் பற்றிய அனுமானங்களை  ஏற்படுத்தி  விடுகிறார். இந்நூலை தனது தந்தைக்கும் , தனது தமிழர் போராட்ட இயக்கமொன்றுடன் இணைத்துக்கொண்டு , மறைந்துபோன தனது மூத்த சகோதரன் தனபாலனுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

இந்நூலின் எழுத்துக்களுக்கு உயிரோட்டமாக இருந்த வன்னி யுத்தத்தினுள் வாழ்ந்து உயிர் தப்பிய தனது  நேரடிக் குடும்பத்தினர் பலரை நன்றியுடன் நினைவு கூறுகிறார் ஜெயபாலன். அதன் மூலம் இந்த யுத்தத்தின் வெறும் பார்வையையாளனாக அல்லாது  தானும் அந்த சூழலுக்குள் வாழுகின்ற உணர்வோடு அவரின் எழுத்துக்கள் வெளிப்படுகின்றன. மிக முக்கியமாக தனது மனைவி குழந்தைகளுடன் கழிக்க வேண்டிய தனது பொழுதை , அல்லது அவர்களுக்குரிய பொழுதை தான் கபளீகரம் செய்தே இவ் எழுத்துக்களை  ஆக்க முடிந்தது என்றதற்காக கழிவிரக்கத்துடன் அவர்களுக்கு நன்றி கூறுகிறார். பல பத்திரிகை எழுத்தாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இந்த அனுபவம் உண்டு.


ஜெயபாலன் தனது "என்னுரையில்" தன்னைப் பற்றி ஒரு சுய அறிமுகத்தை செய்கிறார். அவரின் முன்னுரையே நூலுக்கு அறிமுகவுரையாக அமைந்துள்ளது. ஜெயபாலன்  தான் பிறந்து வளர்ந்த இலங்கையின் கலாச்சாரத் தலை நகரமான அநுராதபுரத்தைவிட்டு , 1977இல் ஏற்பட்ட இனக் கலவரத்தில் அகதி ஆக்கப்பட்டு தமிழர்களின் தலைநகரமான யாழ்ப்பாணத்துக்கு புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டதை கவலையுடன் நினைவு கூறுகிறார்.   அனுராதபுரத்தில் வேலி போட்டு மறைக்காத மூவின மக்களும் பரஸ்பரம் நட்புடனும் நம்பிக்கையுடனும் வாழ்ந்தனர் என்பதையும் எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் வயதுக்கு மதிப்பளித்து உறவைச் சொல்லியே அழைத்துப் பழக்கம் என்றும் யாழில் ஒடுக்கப்பட்ட சாதியினர் ;வயது வேறுபாடின்றி  ஒருமையிலேயே அழைக்கப்பட்டனர் என்றும் , ; அனுராதபுரத்தில் 1977ல் ஏற்பட்ட இனமுரண்பாட்டிற்கும்  பின்னர் யாழ்ப்பாணத்திற்கு குடியேறி பொழுது தான் கண்ட சாதீய முரண்பாடடிற்கு மிடையே வேறுபாடு  இல்லை என்றும்  தனது அவதானத்தை மிக ஆணித்தரமாகவே தனது முகவுரையில் குறிப்பிடுகிறார் ஜெயபாலன் . இரண்டு கலாச்சார நகரங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை (1977 க்கு முன்னர் நிலவிய "இரு தேச" வேறுபாட்டை ) இதைவிட சிறப்பாக யாரும் சொன்னதில்லை.  ஒரு சிறுவனாக தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவ வேறுபாட்டை ஒரு "கலாச்சார அதிர்ச்சி " (Cultural Shock) என்று குறிப்பிடலாம் 


புலிகளின் பொது மக்கள் மீதான நெருக்குவாரங்கள் , தாக்குதல்கள் இலங்கை இராணுவ நெருக்குவாரங்களுக்கும் தாக்குதல்களுக்கும் இடையே  வேறுபாடில்லை  என்பதையும், மக்களை பாதுகாக்க தமிழர் கட்சிகள்  இயக்கங்கள் , சர்வதேச தொண்டர் நிறுவனங்கள், சர்வதேச சமூகம்  , இலங்கையின் மக்கள் அரசு  அக்கறை காட்டவில்லை என்பதையம் ஒரு மக்கள் நேய எழுத்தாளனின் தார்மீக உணர்வுடன்  கடிந்து கொள்கிறார் ஜெயபாலன் . வடக்கில் வன்னியில் முனைப்புக் கொண்ட யுத்தத்தின் தொடக்கத்தோடு சேர்ந்து பயணிக்கும் ஜெயபாலன் எப்படி முடியும் இந்த யுத்தம் சென்று அங்கலாக்கிறார். மக்களை பற்றி அக்கறை கொள்ளாத புலம்பெயர் தமிழர்களின் "வீரப்பரம்பரை"  புலம்பலை கண்டு , மனம் வெதும்புகிறார். அவ்வப்பொழுது காணப்படும் சூழமைவு குறித்து விவரிக்க தமிழ் முதுமொழிகளை அங்கதமாக பயன்படுத்தி உள்ளார். உதாரணத்துக்கு "அரசன் அன்று கொல்வான் , இந்தியா நின்று கொல்லும்  " என்பதை இங்கு சுட்டிக் காட்டலாம்.    

மக்களின் பக்கம் நின்று பேசுகின்ற நூல் ஒரு சாமான்ய மகனாக , பக்கம் சாராத அரசியல் நிலைப்பாட்டை வரிந்து கொண்டு , புலிகளின் அழிவுப் புள்ளியான , ஆயுதப் போராட்டத்தின் அந்திமப் புள்ளியான முள்ளிவாய்க்கால் கால மக்களின் அவலங்களை , பாதிக்கப்பட்ட மக்கள் சிலருடன் நேரடித் தொடர்புகளை  ஏற்படுத்தியதன் மூலமும் , தொடர்ந்தேர்ச்சியாக  ஊடகங்கள் , தொண்டர் நிறுவனங்கள் , புலம்பெயர் தமிழ் மக்களின் போராட்டங்கள், அரசியல் நடவடிக்கைகள் என்பவற்றின் மீதான தொடர்பாடல்கள் காரணமாகவும்   அந்தந்த காலகட்டங்களில் நடைபெற்ற சம்பவங்களை காலவரிசைப்படி  கட்டுரைவடிவில் தனது கருத்துக்களுடன் தொகுத்துள்ளார்.

இந்நூல் ஒரு முழுமையான ஆய்வு நூலோ , அல்லது வெறும் கட்டுரைத் தொகுப்போ அல்ல . மாறாக , மக்களின் பக்கம் நின்று தனது எழுத்துக்களை  பதிவு செய்யும் ஒரு மனிதாபிமானம் மிக்க எழுத்தாளவின் ஆதங்கமும் , அக்கறைகளுமாகும்.  ஜெயபாலன் ஒரு தமிழர் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் , அவரின் சகோதரர் ஒருவர் அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பலியானவர். என்றாலும் எந்த இயக்கமும் சாராது , காய்தல் உவத்தல் இன்றி தனது கருத்துக்களை கவனமாக பதிவு செய்துள்ளார் ஜெயபாலன். புலிகளை  இறுதி யுத்த மக்களின் அழிவுக்கு காரணமான ஒரு தரப்பினராக மிக தெளிவாகவே அடையாளம் காணும் ஜெயபாலன் மாற்று இயக்கங்களை , அரசியல் சக்திகளை இல்லாதொழிக்க முயன்ற , மக்கள் விரோத நடவடிக்கைகளை இறுதி  யுத்தத்தின் பொழுது கட்டவிழ்த்துவிட்ட புலிகளை போராளிகளாகவே அவ்வப்பொழுது சுட்டிக் காட்டுவது என்பது சற்று விகற்பமாகவே  தோன்றுகிறது.

இந்நூலில் இறுதிப் போர் உச்சத்திலிருந்ததிலிருந்து முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைந்த வரையான காலப்பகுதியில் (27 நவம்பர் 2008 - 17 ஜுன் 2009 ) முப்பது பதிவுகளை  அத்தியாயம் ஒன்றில் உள்ளடக்கி உள்ளார். 16 ஜூலை 2009 தொடக்கம் 18 பெப்ரவரி 2010 வரையான காலப்பகுதியில் பத்து பதிவுகளை அத்தியாயம்  இரண்டிலும் உள்ளடக்கி உள்ளார்.

25 பெப்ரவரி 2009 இல் எழுதிய "வன்னியில் தமிழ்மக்கள் கொல்லப்படுவதை இனப்படுகொலையென வரையறுகக் முடியாது. எல்ரிரிஈ யும் தமிழ் மக்களைக் கொல்கின்றனர். காயபப்படுத்துகின்றனர் " - மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு; 24 ஏப்ரல் 2009 இல் எழுதிய "மெல்ல வெளிவரும் நிஜங்கள்-- வெளியேறி வருவோரின் வாக்கு மூலங்கள் " ஆகிய கட்டுரைகள்  மூலம் இராணுவம் மற்றும் புலிகளினால் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறைகளை சர்தேச மனித உரிமை நிறுவனங்களின்  , சர்வதேச  ஊடகங்களின்  அவதானங்களைக் கொண்டு மட்டுமல்ல , தானே  மக்களை நேரடியாக தொடர்பு கொண்டு , அவர்களின் வாக்கு மூலங்களின்  ஊடாக முன் வைத்துள்ளார். அந்த கால கட்டத்தில் பெறப்பட்ட யுத்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியேறும் அல்லது தப்பியோடும் மக்களின் விரக்தியை , விசாரங்களை  பற்றிய ஜெயபாலனின் பதிவுகள் கூட்டல் குறைத்தல் அற்றவையாக , மனித உணர்வுகளை , அவலங்களை அச்சொட்டாக பிரதிபலிப்பதாக இருக்கின்றன. அவை கலப்படமற்ற வாக்குமூலங்களாக  பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு புலனாய்வு பத்திரிகையாளன் என்ற வகையில் , ஜெயபாலனுக்கு  மிகப் பரிச்சயமான , ஒரு நேர்மையான பதிவாகவே அந்த வாக்குமூலங்களை அணுக வேண்டி உள்ளது.

புலிகளின் தப்புக்கு கணக்குகள் பற்றி பட்டியலிடும் ஜெயபாலன் இறுதியில் 2005 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடந்தது பற்றி குறிப்பிடுகையில் "புலிகள் போட்ட கணக்கின்படி 2005 தேர்தலில் மகிந்த ராஜபகச் ஜனாதிபதியானார்  “மூன்றாம் தரப்பு அவசியமில்லை , நாங்கள் இருவரும் பேசுவோம்” என்று மகிந்த ராஜபக்ச கணக்குப்போட்டு ஒரு அழைப்பை விடுத்தார். ஆனால் புலிகள் போட்ட கணக்கு மகிந்த ராஜபக்ச யுத்தத்தைத் தொடங்குவார். இனவாதக் கட்சிகளுடன் உள்ள அவருக்கு சர்வதேச ஆதரவு இருக்காது. ஆகையால் வே. பிரபாகரன் ஈஸியாக கோல் அடிப்பார் என்று எதிர்பார்த்தனர் ; இறுதியில் பொல்லுக் கொடுத்து அடிவாங்கியதாகி விட்டது நிலைமை"

வட மாகாண பிரதேசங்களான  வட்டுக்கோட்டைக்கும் (1976 ) முல்லைத்தீவுக்கு (2009) இடையில் சிக்கிய முஸ்லிம்கள் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக தமிழ் ஈழ யுத்தத்திற்காய் பலியிடப்பட்ட முஸ்லிம்கள் பற்றி ஜெயபாலன் கவனத்தில் கொண்டுள்ளார்.   

முல்லைத்தீவு  மன்னார்  வவுனியா ஆகிய மாவட்டங்களில் , முஸ்லிம்கள் தங்களின் பூர்வீக மண்ணில் இருந்து 72,000 பேர் , அவர்களது சூறையாடப்படடு; துரத்தப்பட்டனர்  என்று குறிப்பிடும் ஜெயபாலன்  தமிழ் தேசியத்தின் உள்ளார்ந்த முஸ்லீம் இனவாதத்தை மிக வெளிப்படையாக பின்வருமாறு பதிவு செய்துள்ளார் .

"முஸ்லிம்களுக்கு  எதிரான உணர்வுகளை தமிழ் தேசியம் எப்போதும் தன்னுள்ளே கொண்டிருந்தது. போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே சிறு மற்றும் நடமாடும் வியாபாரங்களை நடத்தும் முஸ்லிம்கள் அனைவருமே சந்தேகக் கண்ணோடு பார்க்கப்  பட்டனர். அந்த சந்தேகம் மட்டுமே அவர்களுக்கு மரண தணட்னை வழங்குவதற்கு போதுமானதாக இருந்தது"


இறுதி யுத்தத்தை "தக்கன பிழைக்கும்" எனும் டார்வின்  கூர்ப்பு விதியுடன் சிங்கமும் புலியும் வன்னி மக்களின் மத்தியில் வைத்து பரீட்சித்துப் பார்க்க முனைந்துள்ளன  என்று உயிரியல் விஞ்ஞான கோட்பாட்டு அணுகுமுறையை கையாளும் ஜெயபாலன் மறு  புறத்தில்  மகாபாரத இதிகாசத்துக்கு தாவுகிறார். " ஆபத்தில் கைகொடுக்க கிருஷ்ண பரமாத்மாவும் இல்லை. இரு பக்கத்திலும் நிற்பது சாத்தான்கள் மட்டுமே." என்று அங்கலாய்க்கிறார். சாத்தான்களைச் சாட்டுவதன் மூலம் "சாத்தான்களை" பற்றிப் பேசும் மதக் கருத்துக்களுக்குள்ளும்  தன்னை நுழைத்துக் கொள்கிறார், அல்லது அவ்வாறான குறியீட்டுப் பிரயோகத்தை சரியென்று கருதி உள்ளார்.

கிருஷ்ண பரமாத்மா யுத்தம் புரிபவர்களுக்கே (பாண்டவர்களுக்கே) கைகொடுத்தார், மக்களுக்கு கைகொடுத்ததாக  மகாபாரதத்தில் இல்லை. மக்களுக்கு கைகொடுப்பது யார் என்ற கேள்விக்கு பதில்  தேடுவதில் குழப்பமடைந்திருக்கிறார்.  இதற்கான காரணத்தை அவரின் இன்னுமொரு பதிவு மூலம் ஈடு செய்கிறார். "தமிழ் தேசியத்தின் பலம் இலங்கை அரசின் நேரடியான ஒடுக்குமுறையை வைத்தே கட்டமைக்கப்பட்டது. தமிழ் தேசியம் பலம்பெறுவதற்கு தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட வேண்டும் ; தமிழ் பெண்கள் நூற்றுக் கணக்கில்  பாலியல் வலலுறவுக்கு உட்படுத்தப்பட வேண்டும் ; இரதத்மும் சதையும் இல்லாமல் தமிழ் தேசியத்தால் நின்று பிடிக்க இயலாது. " என்று புலிகளுக்கும் வெளியே உள்ள தமிழ் விலங்குகளையும் , மூன்றாவது சாத்தான்களையும் தமிழ் தேசியக் குறியீட்டின்  மூலம் அடையாளப்படுத்துகிறார்.


இந்நூலில்  2005 டிசம்பரில் இரண்டாவது தடவையாக மகிந்த ராஜபக்ச அரசு ஆட்சிக்கு வந்த போது புலிகளை துடைத்தழிக்க  ப்ராஜெக்ட் பீக்கண் (Project Beacon) என்று ஒரு விரிவான திட்டம் உருவாக்கப்பட்டது என்றும் அது பற்றிய தனது கட்டுரையில் மேலதிகமாக ஒரு விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் ஒரு வேண்டுகோளை விடுக்கிறார். இத்திட்டம் பற்றிய அவரின் தேடல்களின் பின்னர்  கலாநிதி தியாகராசா என்பாரின் கட்டுரையொன்றினையம் அடையாளம் கண்டு பின்னர் அது பற்றிய தேடலில் தனது கட்டுரையையை விரிவாக்குகிறார். ஆனால் உண்மையில் அது பற்றி பின்னர் புலிகள் அறிந்திருந்ததாகவும் அது தொடர்புகள் யோகி குறிப்பிடும் விடயங்களையும் வேறு பல சந்தர்ப்பங்களையம்  அடையாளம் கண்டு தனது "ப்ராஜெக்ட் பீக்கன்"  திட்டம் பற்றிய ஊகங்களை முன் வைக்கிறார் ஜெயபாலன் .

அந்த வகையில் எனக்குத் தெரிந்த வகையில் ஒரு குறிப்பிட்ட திட்டம் பற்றி ஐ. நா . வின் பேச்சாளராக கொழுப்பில் பணியாற்றிய கோர்டன் வெய்ஸ் (Gorden Weiss) தனது யுத்த கால அவதானங்களை மிக விரிவாக எழுதிய  "தி கேஜ்" (The Cage) எனப்படும் நூலில்  குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கு இந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை. அவர் தனது நூலில் இலங்கை இராணுவம் 37 மாதங்களாக மிக கவனமாக திட்டமிட்டே மிகப் பெரிய சிங்கள இராணுவத்தினரின் இழப்புடன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைக் கைப்பற்றி பிரபாகரனை முடக்கியதாக சொல்கிறார் . ஜெயபாலனோ ப்ராஜெக்ட் பீக்கான் திட்டம் "புலிகளை துடைத்தழிபதற்கு உருவாக்கப்பட்ட  யுத்தத் திட்டம்; மிக நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்ட திட்டம். புலிகளை கால அட்டவணை போட்டு அந்த அந்தக் காலத்திற்குள் அந்த அந்தப் பகுதிகளில் இருந்து துரத்தி முள்ளிவாய்க்கால் என்ற மூலைக்குள் முடக்கினர்." என்கிறார். இந்த திட்டத்திற்கு அனைத்து தலைமை நாடுகளும் அனுமதி வழங்கியிருந்த என்பது அவரின் வாதம். ஏன் இணைத்தலைமை நாடுகள் மக்களை பாதுகாக்க காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பதே அவரின் அடிநாதமாக தொக்கி நிற்கும் கவலை.

இந்த நூலில் சர்வதேச இனப்  போராட்டங்களை இலங்கையில் தமிழ் இன போராட்டங்களோடு ஒப்பீடு செய்கின்ற ஒரு முயற்சியிலும் ஜெயபாலன்  அக்கறை கட்டி உள்ளார். அந்த வகையில் குர்தீஸ் , சீக்கியர்கள் ,பாலஸ்தீனியர்கள் பற்றி குறிப்பிடுகிறார். அவரின் ஒப்பீடுகள் சில சர்ச்சைக்குகுரியவை , மேலதிக விவாதங்களுக்கும் உரியவை என்பதை இங்கு சுட்டிக் காட்டியே ஆக வேண்டும்.எவ்வாறெனினும் அந்த ஒப்பீடுகளைப்   பொறுத்தவரை , எதிர்வினைகளை பொறுத்தவரை,  சமரசம்  செய்யக்கூடிய   ஒரு  புள்ளியாகத் திகழ்வது  ஆதிக்க சக்திகளின் மக்களின் மீதான அடக்குமுறைகளும் , அதன் விளைவாய் ஏற்படும்  துயரங்களுமாகும்.

18 பெப்ரவரி 2010 திகதியிடப்பட்ட "வாழ்வின் கொடுமையும்,  கனவுகளின் வறுமையும்,  சிறுவர் இல்லங்களில் சில மணி நேரம்" என்ற தலைப்பிலான கட்டுரை இந்நூலின் இறுதிக்கு கட்டுரை , இதுவே இந்நூலாசிரியர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அநாதரவான  சிறார்களின் நலன்களில் அக்கறையுடன் செயற்படுபவர் என்பதற்கு சான்று பகரும் , இந்நூலுக்கு முத்திரை பதிக்கும் கட்டுரையாகும். 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...