Monday, 1 August 2016

‘தோழர்” விக்கிரமபாகுவின் செஞ்சோற்றுக் கடன்! -சுப்பராஜன்


Dr.Wickramabahu Karunaratne
ரு காலத்தில் தன்னைத் தீவிர இடதுசாரிப் புரட்சியாளராகக் காண்பித்த நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணரத்ன, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளராக மாறிவிட்டாரோ என்று சந்தேகப்படும்படி நடந்து வருகிறார். அண்மைக்காலமாக அவர் விடுத்துவரும் அறிக்கைகள் இந்தச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

மத்திய வங்கி ஆளுநராக இருந்த அர்ச்சுனா மகேந்திரன் பிணை முறிகளை வழங்கியதில் முறைகேடாக நடந்ததாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, பதவி நீடிப்பு வழங்கப்படாமல் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்தும் அந்தப் பதவியில் வைத்திருப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது ஐ.தே.கவும் பகீரதப் பிரயத்தனம் செய்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களின் கருத்துக்குச் செவிசாய்த்து அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, புதிய ஆளுநர் ஒருவரை மத்திய வங்கிக்கு நியமித்திருக்கிறார்.

மகேந்திரன் மீதான ஊழல் குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் மட்டும் சுமத்தவில்லை. நாட்டின் பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள், புத்திஜீவிகள், ஏன் மத்திய வங்கியின் சில அதிகாரிகள் கூட சுமத்தினார்கள். சாதாரண பொதுமக்கள் கூட அவர் பதவியில் நீடிப்பதை விரும்பவில்லை. பெரும்பாலான மக்கள் விரும்பாத போதும், அவர் அதற்கு மதிப்பளித்து பதவியில் இருந்து விலகாமல், கடைசிவரை அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டே இருந்தார்.
இந்த நிலைமையில், அவரை பதவி விலகக்கோரி, கூட்டு எதிர்க்கட்சியினர் யூன் 26ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்தனர். அன்றைய தினம் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடாத்திய விக்கிரமபாகு கருணரத்ன, “அர்ச்சுனா மகேந்திரன் குறித்த துறையில் சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர்” எனப் புகழாரம் சூட்டினார். அதுமட்டுமின்றி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றி நீதியான முறையில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க பிரதமர் ரணில் தயாராக இருப்பதாகவும், ரணிலுக்கும் நற்சாட்சிப் பத்திரம் வழங்கினார்.

மக்களுக்காக சோசலிசம் பேசும் ஒருவர், ஊழல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதும், படுபிற்போக்கான ஐ.தே.க. பிரதமருக்கு முண்டு கொடுப்பதும், எந்த வகை சோசலிசத்தில் அடங்குகிறதோ தெரியவில்லை.

அதுமட்டுமின்றி, கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் வெடி விபத்து ஏற்பட்ட பின்னர் விக்கிரமபாகு வெளியிட்ட ஒரு அறிக்கையில், அந்தச் சம்பவம் ஒரு சதி நடவடிக்கையாக இருக்கலாம் எனக் கூறினார். அந்தச் சம்பவத்தையும், எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துக்கு எதிராக நடாத்தி வரும் பிரச்சாரத்தையும் முடிச்சுப்போட்ட அவர், இராணுவத்திற்குள் இருக்கும் சிலர் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். ஐ.தே.க. தலைமையிலான தற்போதைய வலதுசாரி அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக ‘தோழர்’ படும் பாட்டை என்னவென்பது?

விக்கிரமபாகுவின் ஐ.தே.கவுடனான இந்தச் சங்கமிப்பு இன்று நேற்று நடந்ததல்ல. ஆரம்ப காலத்தில் சமசமாஜக் கட்சியிலிருந்து தன்னுடன் பிரிந்து வந்த வாசுதேவநாணயக்காரவின் சற்றுத் தாராளவாதப் போக்கையே விமர்சனம் செய்து, அவரை விட்டு ஒதுங்கி தன்னைத் தீவிர புரட்சியாளராகக் காட்டிக்கொண்ட விக்கிமபாகு, சிறிது காலம் ‘தனித்தவில்’ அடித்துக் களைத்த நிலையில் விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டார்.

சந்திரிக ஜனாதிபதியாக பதவி வகித்த 2002இல், ரணில் தலைமையில் ஐ.தே.க. அரசாங்கம் அமைந்தபோது, சிறீலங்கா சுதந்திரக் கட்சி வெளியிட்டு வந்த ‘தினகர’ என்ற வார ஏட்டில் ஐ.தே.க. அரசை விமர்ச்சித்து வாராவாரம் பத்தியொன்றை விக்கிரமபாகு எழுதி வந்தார். அதன் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஒரு வேட்பானளராகக் களம் இறங்கி, தனது நீண்டநாள் ஆசையான நாடாளுமன்றப் பிரவேசத்துக்கு முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. அதன்பின்னர்தான், அவர் படிப்படியாக ஐ.தே.க. அணியினருடன் சங்கமமாக ஆரம்பித்தார்.

குறிப்பாக, மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் தனது காரியாலயத்தில் வாராவாரம் அரசாங்கத்துக்கு எதிராக நடாத்தி வந்த ஊடகவியலாளர் மாநாடுகளில் விக்கிரமபாகு தவறாமல் பங்குபற்றி மகிந்த அரசை வசைபாடி வந்தார்.

அதன் பிரதிபலனாக, 2015 ஜனவரி 08இல் மைத்திரி ஜனாதிபதியாக வந்து, அதன் பின்னர் ரணில் தலைமையில் அரசாங்கமும் அமைந்ததின் பின்னர், விக்கிரமபாகு தமக்கு செய்து வந்த ‘சேவை’க்கு நன்றிக்கடனாக, 1977 கால ஜே.ஆர். ஆட்சியின் போது அரசியலில் ஈடுபட்டதற்கு பழிவாங்கும் முகமாக பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்த விக்கிரமபாகுவை பதவி நீக்கம் செய்ததினால், அவர் இதுவரை காலமும் இழந்திருந்த பல வருட சம்பளத் தொகையை (இலட்சக்கணக்கில்) அவருக்கு பூரணமாக வழங்குவதற்கு மைத்திரி – ரணில் அரசு ஏற்பாடு செய்தது.

ஆனால், விக்கிரமபாகு இதையும் விட வேறொரு வரப்பிரசாதத்தையும் ஐ.தே.கவிடம் எதிர்பார்த்தார். அதாவது, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஒரு வேட்பாளராகக் களமிறங்கி, தனது நாடாளுமன்ற கதிரை ஆசையையும் பூர்த்தி செய்ய அவாக் கொண்டிருந்தார். ஆனால் இம்முறையும் அவரது ஆசை கைநழுவிப் போய்விட்டது. இருப்பினும், தொடர்ந்தும் ஐ.தே.க. அரசுக்கான தனது சேவையைத் தங்குதடையின்றிச் செய்து வருகிறார்.

முன்பெல்லாம் விக்கிரமபாகு புலிகளின் காலத்தில் அடிக்கடி தமிழர்களின் உரிமை பற்றிப் பேசி வந்தார். புலிகள் அழிந்த பின்னர், ‘இனிப் பேசி லாபமென்ன?’ என்று நினைத்தோ என்னவோ அதையும் நிறுத்திவிட்டார்.

அவரது தமிழ் மக்கள் மீதான கரிசனையை சிலாகிக்கும் சிலரும் உண்டு. ஆனால், சிலர் நினைப்பது போல, அவர் உண்மையில் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்தானா என்பதை உரசிப் பார்ப்பதற்கான இரண்டு விடயங்களை மறந்து விடுகின்றனர்.
ஒன்று, 2000ஆம் ஆண்டில் சந்திரிக தலைமையிலான அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக நல்லதொரு தீர்வுத் திட்டத்தை முன்மொழிந்தது. ஐ.தே.க. அதை எதிர்த்தது மட்டுமின்றி, அதன் நகலைப் பாராளுமன்றத்தில் தீ வைத்தும் எரித்தது. வெளியிலும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்படியான ஒரு எதிர்ப்புக் கூட்டம் கொழும்பு மாநகரசபை மைதானத்தில் நடைபெற்ற போது, ஐ.தே.க, ஜே.வி.பி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஹெல உருமய தலைவர்களுடன் விக்கிரமபாகுவும் பங்குபற்றி அந்தத் தீர்வுத்திட்டத்துக்குத் தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

இன்னொன்று, கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் நவ சமசமாஜயக் கட்சி ஒருமுறை போட்டியிட்ட பொழுது தலைமை வேட்பாளரான விக்கிரமபாகு தோற்றுப்போனார். ஆனால் அவரது கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழர் ஒருவர் வெற்றி பெற்றார். அந்த வெற்றி சிறுபான்மை தமிழினத்துக்கு கிடைத்த பிரதிநிதித்துவமாகும். ஆனால், விக்கிரமபாகு கட்சித் தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த வெற்றி பெற்ற உறுப்பினரைப் பதவி விலக வைத்து, அந்த உறுப்புரிமையைத் தான் எடுத்துக் கொண்டார்.

இந்த இரண்டு செயல்களும், அவரது தமிழ் மக்கள் மீதான கரிசனத்துக்கு எடுத்துக் காட்டுகளாகும். தீவிர சோசலிசம் பேசிய ஒருவர் இப்படி படுபிற்போக்கான வலதுசாரி ஐ.தே.கவுடன் சங்கமமாகிவிட்டாரே எனச் சிலர் அங்கலாய்க்கலாம். தீவிர ரொட்ஸ்கியவாதியான விக்கிரமபாகுவின் செய்கைதான் முதல் சம்பவம் என்றோ, ஆச்சரியகரமானது என்றோ சொல்ல முடியாது. ஏனெனில், இலங்கையில் மார்க்சிய இயக்கத்தின் தந்தை என வர்ணிக்கப்பட்ட, முதலாவது முற்போக்குக் கட்சியான 1935இல் ஸ்தாபிக்கப்பட்;ட லங்கா சமசமாஜக் கட்சியை ரொட்ஸ்க்கியப் பாதையில் இழுத்துச் சென்ற, பிலிப் குணவர்த்தனாவும் தனது இறுதிக் காலத்தில் 1965இல் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க. அரசில் அமைச்சராகியே தனது இறுதி மூச்சை விட்டார்.
இப்பொழுது விக்கிரமபாகு தனது இறுதிக் காலத்தை ஐ.தே.கவின் மடியில் கழிக்கிறார்.

No comments:

Post a Comment

New book tells untold story of Sri Lanka’s 2009 victory at UN Human Rights Council- By P.K.Balachandran

Colombo, September 12: For the first time since Eelam War IV ended nearly eight years ago, a book entitled “Mission Impossible: Gen...