காஸ்மீரில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம்!-- -விவேக்


காலஞ்சென்ற பிரபல இந்திய எழுத்தாளர் கே.ஏ.அப்பாஸ் எழுதிய சிறுகதைகள் சில "குங்குமப்பூ ’என்ற சிறுகதைத் தொகுதியாக வெளிவந்துள்ளன. அந்தத் தொகுதியில் உள்ள "குங்குமப்பூ ’என்ற சிறுகதையில் இந்தியாவின் காஸ்மீர் பள்ளத்தாக்கு ஒன்றில் சிவப்பு நிறத்தில் குங்குமப்பூக்கள் நிறையப் பூத்திருக்கின்றன. அந்தப் பூக்கள் ஏன் சிவப்பாக இருக்கின்றன என ஒரு வயோதிப மாதுவிடம் ஒருவர் கேட்கிறார். அதற்கு அந்த மாது பதிலளிக்கையில், முன்னொரு காலத்தில் காஸ்மீர் விடுதலைக்காகப் போராடிய மக்கள் அந்த நிலத்தில் சிந்திய பெருந்தொகையான இரத்தம் காரணமாக அந்த இடத்தில் பூக்கும் பூக்கள் இரத்தச்சிவப்பில் இருப்பதாக அவள் கூறுகிறாள்.

இந்தக் கதை ஒரு கற்பனைப் படைப்புத்தான். ஆனால் காஸ்மீர் மக்களின் சுதந்திர வேட்கையையும், அதில் அவர்களுக்கு உள்ள விடாப்பிடியான உறுதியையும் அந்தக் கதை எடுத்து இயம்புகிறது. ஆம், அந்த போராட்ட உணர்வு இன்னமும் காஸ்மீர் மக்களிடம்
கொழுந்துவிட்டு எரிந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை யூலை மாத முற்பகுதியில் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது. இந்திய–பாகிஸ்தான் பிரிவினையின் போது, இரண்டு நாடுகளுக்கிடையிலும் இருந்த காஸ்மீரும் இரண்டாகப்
பிரிக்கப்பட்டது. ஒரு பகுதி ஜம்மு காஸ்மீர் என்ற பெயரில் இந்தியாவுக்குள்ளும், இன்னொரு பகுதி ஆசாத் காஸ்மீர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள்ளும் பிரிக்கப்பட்டன.

ஆனால், காஸ்மீர் மக்களோ தமது பிரதேசம் இந்த இரண்டு நாடுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, தமக்கென ஒரு சுதந்திரத் தனிநாடு அமைக்கப்பட வேண்டும் எனக்கோரிப் போராட ஆரம்பித்தனர். அதற்காக பல விடுதலை இயக்கங்களும் உருவாகின. 1948இல் இந்தப் பிரச்சினையில் தலையிட்ட ஐ.நா. சபை, காஸ்மீர் மக்களிடையே கருத்துக் கணிப்பு நடாத்தி இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் இன்று வரை அது நடைமுறைப்படுத்தப்படவே இல்லை. இந்தியா இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு உபாயமாக, நேருவின் காலத்தில் காஸ்மீருக்கு விசேட மாநில அந்தஸ்து வழங்கியது. ஆனால் காஸ்மீர் மக்கள் அதை ஏற்கவில்லை. இந்திய அரசியல் சாசனப்படி அங்கு அமைந்த மாநில அரசுகள் எல்லாமே பெயரளவிலான பொம்மை அரசுகளாகவே இருந்து வந்துள்ளன.

இந்த நிலைமையில், காஸ்மீர் சுதந்திரத்துக்காகப் போராடும் பல ஆயுதுப் போராட்ட இயக்கங்கள் உருவாகி, இந்திய ஆக்கிரமிப்பில் இருக்கும் காஸ்மீரை விடுவிக்கும் போராட்டத்தை நடாத்தி வருகின்றன. அந்தப் போராட்டத்துக்கு பாகிஸ்தான் பல்வேறு வழிகளில் உதவி வருகிறது. இந்திய மத்திய அரசு ஒரு பக்கத்தில் அரசியல் சாசன அடிப்படையில் காஸ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிப்பதாகக் காட்டிக்கொண்டு,
மறுபக்கத்தில் அங்கு 7 இலட்சம் இராணுவ வீரர்களை நிறுத்தி வைத்து, காஸ்மீர் மக்களை வேட்டையாடி வருகின்றது. இந்திய இராணுவத்தின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட இதுவரை பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இறந்துள்ளனர். பல பெண்கள் இந்திய இராணுவத்தின் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் சித்திரவதை முகாம்களில் அவலப்படுகின்றனர்.


இந்த நிலைமையில், இம்மாதம் (யூலை) 8ஆம் திகதி மிஸ்புல் முஜாஹிதீன்  என்ற தீவிரவாத அமைப்பொன்றின் தளபதியான முஸ்ஸாபார் வணி  என்பவரை இந்திய இராணுவப் படைகள் சுட்டுக் கொன்றன. அதைத்தொடர்ந்து காஸ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டங்களும், பாதுகாப்புப் படைகளுடன் மோதல்களும் ஆரம்பாகின. இந்த நிகழ்வுகளின் போது சுமார் 30 மக்கள் படைகளால்
கொல்லப்பட்டுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட போராட்டத் தளபதியின் மரணச் சடங்கில் சுமார் 2 இலட்சம் மக்கள் வரையில் கலந்து கொண்டுள்ளனர். இது ஒன்றே, காஸ்மீர் மக்கள் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டப் போதுமானது.
காஸ்மீர் மக்களின் தொடரும் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதானால், முதலில் இந்திய அரசு தனது கொலைகார இராணுவத்தை அங்கிருந்து விலக்கி, அங்கு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை நிறுத்த வேண்டும். அடுத்ததாக, காஸ்மீர் மக்கள் தமது தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் வகையில், ஐ.h. தீர்மானப்படி அங்கு சர்வதேச மேற்பார்வையில் கருத்துக் கணிப்பு நடாத்த வேண்டும். இதைத்தவிர வேறு வழி ஏதும் இல்லை.

பாகிஸ்தானைப் பலவீனப்படுத்துவதற்காக கிழக்குப் பாகிஸ்தானில் மேற்குப் பாகிஸ்தான் இனப் படுகொலை நிகழ்த்துவதாகக் கூறி, 1971இல் அந்நாட்டில் இராணுவத் தலையீடு செய்து, பங்களாதேஸ் என்ற புதிய நாட்டை உருவாக்கிய இந்திய அரசு, காஸ்மீரிலும், இந்தியாவின் ஏனைய வட கிழக்கு மாநிலங்களிலும் மேற்கொண்டு வரும் இனப் படுகொலை மற்றும் ஜனநாயக மீறல்களுக்கு என்ன நியாயம் சொல்லப் போகின்றது?
மூலம்: வானவில்
-

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...