பயிரை மேய்ந்த வேலிகள் –(12)-(13) -: ராஜ் செல்வபதி


(காடுகளில் தஞ்சமடைபவர்களுக்கு காத்திருந்த ஆபத்து)

வன்னியில் இரவுப்பொழுதுகள் அச்சமூட்டுபவையாக மாறிபோய்விட்ட சூழலில் காடுகளில் தஞ்சமடைந்த இளம் ஆண்களும் பெண்களும் வெயில் மழை,குளிர்,காற்று, நோய்,பாம்புகள் என பல்வேறு கஸ்டமான நிலைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். வீடுகளில் இருந்து புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்படுவதை விட இவ்வாறான துன்பங்களுக்கு தமது பிள்ளைகள் முகம்கொடுப்பது எவ்வளவோ மேலானது என அவர்களின் பெற்றோரும் நினைக்க தொடங்கியிருந்தனர்.

கிளிநொச்சி- முல்லைத்தீவு நகரங்களை அண்டிய கிராமங்களில் உள்ள இளைஞர்கள் காடுகளில் தஞ்சமடையும் போது ஒரு விதமான பிரச்சினைக்கு முகம் கொடுத்தார்கள் என்றால் காடுகளை எல்லையாக கொண்ட கிராமங்களில் இருந்தவர்கள் வேறு விதமான ஆபத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.


இப்போது காடுகளுக்குள் ஆபத்தான விலங்குகளுடன் மிக அபாயமான மனிதர்களும் அங்கு இருந்தனர். இராணுவத்தினரின் ஆழ ஊடுறுவும் படையினர், புலிகளின் அதிசிறப்பு தாக்குதல் படையினர் போன்றோர் காடுகளுக்குள் இரவு பகலாக அலைந்து திரிந்தனர். காடுகளுக்குள் வேட்டைக்கு செல்வோரின் தலைகளே கொய்யப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் புலிகளுக்கு பயந்து இளம் ஆண்களும், பெண்களும் காடுகளில் தஞ்சமடைய வேடியிருந்தது.
காட்டுக்குள் தென்படும் இரண்டாவது மனிதனை தங்களது எதிரியாகவே கருதி இராணுவத்தினரும், புலிகளும் வேட்டையாடிய அந்த அதி பயங்கர சூழலில் இந்த அப்பாவி இளைஞர்கள் அங்கே தமது பொழுதை கழிக்க தொடங்கியிருந்தனர். கிட்டத்தட்ட காட்டுப்பகுதிகள் அனைத்தும் ஆழ ஊடுருவும் படைகளின் கட்டுப்பாட்டினுள் வந்த்திருந்த சூழலில் முறிகண்டி-ஜெயபுரம் வீதியும் மிக அபாயமான ஒன்றாகவே மாறி இருந்தது.
காட்டு ஓரங்கள் என்பதையும் தாண்டி ஆழ ஊடுருவும் படையின் செயற்பாடுகள் கிளிநொச்சி நகர் வரை விரிவடைந்திருந்த நிலையில் புலிகளின் வாகனங்களின் நடமாட்டங்கள் மட்டுமல்லாது அவர்களில் வாகனங்கள் போன்று பச்சை நிறத்தில் உள்ள பொது மக்களின் வாகனங்களும் கிளைமோர் தாக்குதல்களுக்கு தப்பி பிழைக்க வேண்டியும் இருந்தது.
இவ்வாறான ஒரு கிளைமோர் தாக்குதலானது பிரபலமான முறிகண்டி பிள்ளையார் கோயிலில் இருந்து ஜெயபுரம் செல்லும் வீதியில் இரண்டு மைல் தொலைவில் நடந்தது. சம்பவத்தின் பின்னர் அந்த காட்டுப்பகுதியில் தேடுதல் நடத்திய புலிகள் அந்த பகுதியில் கட்டாய ஆட்கடத்தலுக்கு பயந்து ஒழிந்திருந்த கிளிநொச்சி பொன்நகரை சேர்ந்த 24வயது இளைஞனை ஆழ ஊடுருவும் படையியினர் என்றுகருதி சுட்டுக்கொன்றுவிட்டனர். அவ்விளைஞனுக்கு உணவு கொண்டுவந்திருந்த அவனது தந்தையையும் ஆழ ஊடுருவும படைக்கு உணவளிப்பதாக நினைத்து பிடித்து சென்றுவிட்டிருந்தனர். பின் அந்த தந்தைக்கோ அல்லது அந்த குடும்பத்துக்கோ என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாமலேயே இருந்தது.

 
Fence 12

சில இளைஞர்கள் ஆழ ஊடுருவும் படையினர், புலிகளில் விசேட தாக்குதல் படையணிகள் என்பவற்றை தாண்டி காடுகளுக்குள்ளாகவே தப்பி வவுனியாவுக்கு சென்றும் இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் தப்பிப்பதற்கு சில நேரங்களில் ஆழ ஊடுறுவும் படையினரும், புலிகளின் விசேட படையினை சேர்ந்தவர்களுமே மனம் இரங்கி உதவிய சம்பவங்களும் நடந்துள்ளன. தங்களது எதிகாலம்தான் கேள்விக்குறியாகியுள்ளதே இவர்களாவது தப்பி பிழைத்து வாழட்டும் என்று அவர்கள் நினைத்திருக்கவும் கூடும்.

காடுகளுக்குள் இரவு நேரங்களில் தப்பிச்செல்லும் போது பிடிபட்டு புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு போர்களங்களங்களுக்கு அனுப்பபட்டவர்களும் உண்டு.கிளிநொச்சி வட்டக்கச்சியில் இருந்து ஒரு குடும்பம் தங்களது இரட்டை பிள்ளைகளை பாதுகாப்பதற்காக காடுகளுக்குளாக வவுனியாவுக்கு தப்பிசெல்லும் போது புலிகளில் சிறுத்தை படையினரிடம் பிடிபட்டுவிட்டனர். அந்த இரட்டை சகோதரகள் இருவருமே கட்டாய ஆட்சேர்ப்புக்கு உட்படுத்தப்பட்டு போர்க்களத்துக்கு அனுப்பபட்டிருந்தனர். பெற்றோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டதுடன் அவர்களின் தந்தை ”பங்கர்” வெட்டுவதற்காக ஆனையிரவு பகுதிக்கு நிரந்தரமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

கடுமையான இரவு பொழுதுகளை காடுகளில் கழித்த இளம் ஆண்களும் பெண்களும் அவர்களின் பெற்றோரும் தங்கள் வாழ்வில் விடிவு வராதா என கடவுள்களிடம் மன்றாட தொடங்கியிருந்தனர். அப்போது வைத்த நேர்த்திக்கடன்களுக்காக இன்றுவரை, கௌரிவிரதம், கந்தசஷ்டிவிரதம், கோயில்களின் திருவிழாக்களின் போது காவடி எடுத்தல் என்று தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அனேகமாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்ந்த இளம் ஆண்களினதும் பெண்களினதும் கைகளில் கௌரிகாப்பு நூல் கட்டப்பட்டிருப்பதை இன்றும் கூட காணமுடியும்.

பயிரை மேய்ந்த வேலிகள்–(13)
*********************************************
(அலுமாரியில் ஒழிந்து இடம்பெயர்ந்த இளைஞன்.)
FEnce13இராணுவத்தினரின் தொடர்ச்சியான முன்னேற்றங்களினால் மக்களை விரைவாக மேலும் தமது கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி இடம்பெயருமாறு புலிகள் நிர்பந்திக்க தொடங்கியிருந்தனர். இடம்பெயர்வுகளின் போது அதுவரை புலிகளிடம் மாட்டிக்கொள்ளாமல் மறைந்திருந்த இளம் ஆண்களும் பெண்களும் இப்போது தமது குடும்பங்களுடன் சேர்ந்து இடம் பெயர வேண்டி இருந்தது. வெளியே வந்தவர்களை வேட்டையாடுவதில் புலிகள் மிகுந்த உட்சாகத்துடன் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கியிருந்தனர். புலிகளின் வேட்டையும் எதிபார்த்தைவிட அதிகமாகவே இருந்தது.
அந்த மக்களுக்கு வீட்டை இழப்பதே மோசமானதாக இருந்தது. அத்துடன் தங்கள் சொந்த இளம் மகனையோ மகளையோ இழப்பது இன்னும் மோசமாகவே இருந்தது. பொறுக்க முடியாதாகவும் இருந்தது. வீட்டை விட்டு வெளியேறி வெட்ட வெளிகளிலும், மரங்களுக்கு கீழும், வீதியோரங்களிலும் தஞ்சமடைந்த நிலையில் தங்கள் பிள்ளைகளையும் புலிகளிடம் பறிகொடுத்து விட்டு அவர்கள் எங்கு இருக்கின்றனர் எனபது கூட தெரியாமல் ஏக்கதுடன் ஒவ்வொரு நாளும் இடப் பெயர்வை சந்தித்த மக்களின் உணர்வுகளையும் வாழ்க்கையையும் விபரிக்க வார்த்தைகளே இல்லை. அதை அனுபவித்தவர்களால் மாத்திரமே அந்த வலியை இந்த தொடரை வாசிப்பதன் மூலம் உணர முடியும்.

வீடுகளை விட்டு இடம்பெயரும் போது பிடிக்கப்பட்ட அந்த இளம் ஆண்களினதும் பெண்களினதும் நிலைமை மிக மோசமாகவே இருந்தது. புலிகளிடம் பிடிபடும் ஒவ்வொரு இளைஞனும் யுவதியும் எப்படியாவது தப்பித்து மீண்டும் தங்கள் பெற்றோரிடமே சேர்ந்துவிட நினைத்தார்கள். ஆனால் அவ்வாறு அவர்கள் தப்பி வந்த போது அவர்களது குடும்பத்தினரை அவர்கள் பிடிபட்ட இடங்களில் காணவும் முடியாமல் இருந்தது. ஒன்று அங்கிருந்து அவர்களின் குடும்பத்தினர் இடம்பெயர்ந்து வேறு ஒரு இடத்துக்கு சென்றிருப்பார்கள் அல்லது அங்கு இல்லாமல் இருப்பார்கள். தப்பி வந்த அவர்களால் அருகில் இருப்பவரிடம் விசாரிக்கவும் இயலாமல் இருந்தது.

ஒருவரை பிடித்த உடனேயே புலிகள் செய்யும் முதல் வேலை தலைமயிரை கத்தரித்து விடுவது அல்லது மொட்டை அடித்து விடுவதுதான். அப்போதுதான் தப்பி சென்றவர்களை இலகுவாக அடையாளம் கண்டு மீளவும் பிடிக்க முடியும் அல்லது தங்கள் விசுவாசிகளால் காட்டிக் கொடுக்க வசதியாக இருக்கும் என்று எண்ணினார்கள்.

நறுக்கப்பட்ட தலைமயிருடன் தங்கள் பெற்றோரை தேடுவது பிடிபட்டு தப்பிவரும் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் மிக சவாலான ஒன்றாகவே இருந்தது. அவர்கள் மீளவும் பிடித்து செல்லப்படுவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகமாகிக்கொண்டிருந்த. இப்படி இரண்டாம் முறை பிடிபடுபவர்களுக்கு மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகி இருந்தது.
தப்பி ஓடிவருபவர்களின் நிலை இதுவென்றால் பிடிபட்டு பத்து பதினைந்து நாட்களில் இறந்து போகும் பிள்ளைகளின் உடல்களை அவர்களின் பெற்றோரை தேடி கண்டுபிடித்து கொடுப்பதும் புலிகளுக்கும் கடினமானதாகவே இருந்தது. இவர்கள் இன்றும் காணாமல் போனவர்களாகவே ஆகி விட்டனர்.

காட்டினுள் தஞ்சமடைந்து பலமாதங்களாக மறைந்திருந்த அக்கராயன் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞன் அவர்களது ஊரைவிட்டு இடம்பெயர வேண்டியிருந்தது. புலிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு அந்த இளைஞனை உடைகள் வைக்கும் அலுமாரிக்குள் வைத்து அவர்களது பெற்றோர் பாதுகாப்பாக இடம் பெயர்ந்து அழைத்துச்சென்றனர். கடைசிவரை 14 மாதங்களாக அந்த இளைஞன் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள அந்த அலுமாரியினுள்ளேயே வாழ வேண்டியிருந்தது.

இறுதியாக 2009 ஏப்பிரல் 11 பொழுது விடிந்தது. அந்த இளைஞனுக்கும் அது விடுதலையை அளித்த பொழுதாக இருந்தது. அலுமாரியைவிட்டு வெளியேறி புதுமாத்தளன் பிரதேசத்துக்குள் நுழைந்த இராணுவத்திடம் ஓடிச்சென்று தப்பித்திருந்தான்.
அந்த இளைஞன் விபரிக்க முடியாத சிரமங்களை அனுபவித்தாலும் அதிஸ்டசாலியாகவே இருந்தான். அதனால்தான் அவன் கடைசிவரை புலிகளிடம் அகப்படாமல் தப்பிக்கொண்டான். தனது அண்ணனை எப்படி பாதுகாத்தோம் என்று அவனின் சகோதரி கூறும்போது..

”இப்படியொரு சூழலில் நான் திருமணம் முடித்துவிட்டேன். அவர்களின் பிள்ளை பிடி தொடங்கும் போது நான் கர்ப்பினியாக இருந்தேன். அவர்கள் என்னுடைய அண்ணாவை குறிவைத்து விட்டார்கள். அவரை கொண்டுவந்து தங்களிடம் ஒப்படைக்கும் படி எங்களை கட்டாயப்படுத்த தொடங்கினார்கள். நாங்களோ அண்ணாவை காட்டுக்குள் ஒழித்து வத்திருந்தோம்.

2006 அக்டோபரில் இருந்து இரண்டு வருடங்களாக அவர் ஒழிந்தே இருந்தார். என்னுடைய இன்னும் ஒரு மூத்த அண்ணா கடவுளை கும்பிட்டு விட்டு மூன்று நேர சாப்பாட்டையும் பின்னேரத்தில் கொண்டு சென்று கொடுத்துவிட்டு வந்து விடுவார். தலைமயிர் வெட்டியதே கிடையாது. புலிகளும் அவரை பிடிப்பதற்கு எல்லாவகையிலும் முயன்றனர்.
2007டிசம்பர் மாதமும் பிறந்துவிட்டது. எனக்கும் பெண் குழந்தை பிறந்து ஐந்து நாட்களாகியிருந்தது. அண்ணாவை பிடிக்க முடியாமல் ஏமாற்றமடைந்த புலிகள் அன்று இரவு 12.00 மணிக்கு எமது வீட்டை சுற்றி வளைத்து விட்டனர். வீட்டினுள் புகுந்த என்னுடைய கணவரை பிடித்து இழுத்துக்கொண்டு போய் வாகனத்தில் ஏற்றிவிட்டிருந்தார்கள். நான் ஐந்து நாள் குழந்தையை கொண்டு சென்று வாகனத்தின் முன் போட்டு கத்தி குளறி கெஞ்சி மன்றாடிக் கொண்டிருந்தேன், நீண்ட நேர இழுபறியின் பின் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை என்னுடடைய கணவரை விட்டுச்சென்றனர். அவர்கள் எங்கள் வீட்டை விட்டு அகலும் போது நேரம் அதிகாலை 2.00 மணியாகியிருந்தது.

பல மாதங்களாக காட்டில் இருந்த அண்ணாவை கூட்டிக்கொண்டு நாங்கள் இடபெயர வேண்டியிருந்தது. உடைகள் வைக்கும் அலுமாரியில் வைத்து அவரை நாங்கள் காப்பாற்றி அழைத்துச் சென்றோம், எங்களிடம் சொந்தமாக உழவு இயந்திரம் (ட்ரெகடர்) இருந்ததால் அண்ணாவை கடைசிவரை காப்பாற்ற அது உதவியது. இல்லாவிட்டால் பொருட்களை ஏற்ற வரும் ட்ரெக்டர்காரன் புலிகளுக்கு காட்டிக்கொடுத்திருப்பான்.”

தொடர்ந்து கூறுவதை நிறுத்திவிட்டு அந்த பெண் அழத்தொடங்கிவிட்டார்.
மக்கள் தங்கள் பிள்ளைகளை காப்பாற்றிக் கொள்ள புதிய வழிகளை கண்டிபிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள் இப்போது புலிகளும் ஆட்கடத்தலில் மேலும் மேலும் பல தந்திரங்களை கடைப் பிடிப்பதில் இறங்கியிருந்தனர்.

மக்களுக்கு இரவுகள் மட்டுமல்ல பகல் பொழுதுகளும் கூட பயங்கரமாக மாறத்தொடங்கியது.


தொடரும்..
‪#‎பயிரை_மேய்ந்த_வேலிகள்
====================================================
இந்த சம்பவத்தை எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு நிமிடம் பிடிபட்ட ஒரு இளைஞனின் நிலையில் இருந்து நான் எழுதவேண்டியதை கற்பனை செய்து பார்தேன் கண்ணீர் வழிந்து ஓடியது. என்னால் தொடர்ந்து எழுதவே முடியவில்லை. இந்த நிமிடம் வரை மனசுக்குள் வலிக்கின்றது. பொதுவாக இலகுவில் உணர்சிவசமாகத நான் இதை எழுத தொடங்கியபோது பாதிக்கப்பட்டவரின் நிலையில் இருந்து யோசித்ததில் இருந்து மனச் சோர்வுடன் இதுவரை இருக்கின்றேன்.

No comments:

Post a Comment

Modi government seeking to tighten India's repressive film censorship regime- By Yuan Darwin

 India’s Hindu supremacist Bharatiya Janata Party (BJP) government is seeking to tighten the country’s already intrusive and pervasive film ...