யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் இனவாதக் கொத்தளமாகிறதா? -கிருஸ்ணா


fight-racism
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாறு ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ கதையாக மீண்டும் ஒருமுறை நடந்து முடிந்திருக்கிறது.
இவ்வருட விஞ்ஞானபீட புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது அங்கு கல்வி பயிலும் தமிழ் – சிங்கள மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம், இன ஐக்கியத்தையும், நாட்டின் கல்வி முன்னேற்றத்தையும் அவாவி நிற்கும் அனைத்து சக்திகளையும் பெரும் விசனத்தில் ஆழ்த்தியுள்ளது.இம்மோதலின் போது, சில மாணவர்கள் காயமடைந்தமையும், விஞ்ஞானபீட கட்டிடத்துக்கு சேதம் ஏற்பட்டமையும், சம்பவத்தின் பாரதூரத்தன்மையை எடுத்துக் காட்டுகிறது.
முன்னைய காலங்களில் பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை ‘பகிடிவதை’ என்ற செயலின் மூலம் வரவேற்பது ஒரு வழமையாக இருந்தது. அந்த வழமை கட்டுமீறி வன்முறையாக மாறி, சில மாணவர்களின் உயிரையே பறிக்கும் அளவுக்கு கோர வடிவம் எடுத்த பின்னர், அரசாங்கமும் பல்கலைக்கழக நிர்வாகங்களும் பகிடிவதைக்கு கடுமையான தடை விதித்தன. அதன் பின்னர், பகிடி வதைக்குப் பதிலாக புதிய மாணவர்களை அன்புடனும் நாகரீகமாகவும் வரவேற்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், இப்பொழுது அந்த வகையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வில் நடைமுறைப்படுத்தப்பட்ட இனக் கலாச்சார வேறுபாட்டு நடவடிக்கை காரணமாக, பகிடிவதையை விட மோசமான இன முரண்பாடு மாணவர்களிடையே தலைதூக்கியுள்ளது. இது ஒரு பாரதூரமான நிலைமை.

புதிய மாணவர்களை தமிழர்களின் பாரம்பரிய இசைகளான நாதஸ்வரம், தவில் என்பனவற்றுடன் வரவேற்பதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்துள்ளது. இந்த இடத்தில்தான் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் பெரும் தவறு இழைத்துள்ளது. அதாவது யாழ்.பல்கலைக்கழகம் என்பது தமிழ், சிங்கள, முஸ்லீம் என மூவின மாணவர்களும் கல்வி கற்கும் ஒரு உயர்கல்வி நிறுவனமாகும். பொதுவாக இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அவ்வாறுதான் மூவின மாணவர்களும் கல்வி கற்கின்றனர். தென்னிலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெரும்பான்மை சிங்கள மாணவர்களே கூடுதலாகக் கல்வி கற்கின்ற போதிலும், அங்கு பயிலும் தமிழ் – முஸ்லீம் மாணவர்களின் கலாச்சார நடவடிக்கைகளுக்கு அங்குள்ள மாணவர்களோ அல்லது நிர்வாகமோ இடையூறு விளைவிப்பதில்லை.

இம்முறை யாழ்.பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் வரபேற்பு நிகழ்வில் சிங்கள மாணவர்கள் தமது பாரம்பரிய கலாச்சார நிகழ்வான கண்டிய நடனத்தையும் நிகழ்த்த முற்பட்டபோதே, தமிழ் – சிங்கள மாணவர்களுக்கிடையே மோதல் நிகழ்ந்துள்ளது. இப்படியான ஒரு நிலைமை உருவாகாமல் முன்கூட்டியே தவிர்ப்பதற்கு சமயோசிதமாக எல்லா இன மக்களினதும் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெரும்பான்மையான யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்கள், நிர்வாகிகள் என்போரும் இன்னமும் தமிழ் இனவாத சிந்தனையிலிருந்து மீளாததின் வெளிப்பாடே இந்த மோதல் நிகழ்வாகும். பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது தமிழர்களின் தனிச்சொத்து என்ற சிந்தனையிலேயே இன்னமும் மூழ்கி இருக்கின்றனர்.

இந்த விடயத்தில் இன்றைய தமிழ் மாணவர்களை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. ஏனெனில் அவர்கள் வளர்க்கப்பட்ட விதம் அப்படி. வடக்கிற்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கை 1950களிலேயே தமிழ் கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அதில்கூட அவர்கள் ஒற்றுமையாகச் செயல்படவில்லை. எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சி வடக்கில் அமைவது ‘தமிழ் பல்கலைக்கழக’மாக இருக்க வேண்டும் என வலியுறுத்த, ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் கட்சி அது ‘இந்துப் பல்கலைக்கழக’மாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியது. இவர்களுடைய மோதலைப் பயன்படுத்திய அரசாங்கங்கள் வடக்கில் பல்கலைக்கழகம் அமைப்பதைத் தட்டிக்கழித்து வந்தன.

இறுதியாக, 1970இல் அமைந்த திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியினதும், லங்கா சமசமாஜக் கட்சியினதும் முயற்சிகளால் 1974இல் யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் ஸ்தாபித்தது. அதன் பின்னா கிழக்கில் இரண்டு பல்கலைக்கழகங்களும், வடக்கு கிழக்கில் சில பல்கலைக்கழக கல்லூரிகளும் உருவாகின.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறப்பு விழாவின் போது எதிர்ப்புக் ஹர்த்தாலை நடாத்திய தமிழரசுக் கட்சி, பின்னரும் யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளைச் சீர்குலைப்பதற்கு பல தடவைகள் முயன்று வந்துள்ளது. தமிழரசுக் கட்சியின் சீர்குலைவு நடவடிக்கையைப் பின்னர் புலிகள் தொடர்ந்தனர். இந்த நடவடிக்கைகளால், யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, அது தனித்தமிழ்ப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டதுடன், அங்கு கல்வி கற்ற தமிழ் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் கூட அடிக்கடி புலிகளால் இடையூறுக்கு உள்ப்படுத்தப்பட்டன.

2009இல் யுத்தம் முடிவடைந்த பின்னரே யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின. இருந்த போதிலும், புலிகளின் மிச்சசொச்சங்களால், மாவீரர் தினம், கரும்புலிகள் தினம், திலீபன் நினைவு தினம், முள்ளிவாய்க்கால் படுகொலை தினம், பொங்குதமிழ்த் தினம் என காலத்துக்காலம் சில நிகழ்ச்சிகள் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்டு, அங்கு ஒரு இனவாத மனோபாவம் பேணப்பட்டு வந்துள்ளது. அதன் வெளிப்பாடே தற்போதைய தமிழ் – சிங்கள மாணவர்கள் மோதலுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையிலேயே, புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் தனியே தமிழ் – இந்து கலாச்சார நிகழ்ச்சிகள் மட்டும்தான் நிகழ்த்தப்பட வேண்டும் என்ற ஒற்றைப்பரிமாண சிந்தனை தமிழ் மாணவர்கள் மத்தியில் கோலோச்ச முயன்றுள்ளது. அதாவது, செல்வநாயகமும் பொன்னம்பலமும் வலியுறுத்திய தமிழ் – இந்து பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இருக்க வேண்டும் என்ற கருத்து அங்கு தலைதூக்கியுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான நிலை அல்ல. இப்படியானவர்கள் வடக்கு கிழக்கை விட கூடுதலான தமிழ் மக்கள் தென்னிலங்கையில் வாழ்வதையும், ஏராளமான தமிழ் மாணவர்கள் தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில கல்வி கற்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதோ, கிணற்றுத் தவளைகளாக வாழ்வதோ, மூடிய சிந்தனைக்குள் உழல்வதோ தமிழ் மாணவர்களின் வருங்கால வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவப் போவதில்லை. உலகம் ஒரு கிராமம் என்ற அளவுக்கு சுருங்கிவிட்ட இன்றைய காலகட்டத்தில், யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒரு சிறு வட்டம் கீறி அதற்குள் தம்மைத் தனிமைப்படுத்தவும், ஒடுக்கிக்கொள்ள முனைவதும், தற்கொலைக்கு ஒப்பாதே தவிர வேறு ஒன்றுமல்ல.
 Source: vaanavil இதழ் 67, கட்டுரை 3 ஜூலை 25, 2016

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...