சேர்.பொன்.இராமநாதனை விமர்ச்சனத்துக்குள்ளாக்கிய பாரதியாரும், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசும்! – சித்தார்த்தன்



JYC-600x450
லங்கையின் தேசியத் தலைவர்களில் ஒருவரான சேர்.பொன்.இராமநாதன் குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு கருத்து, அவர் தனது குருநாதர் ஆறுமுகநாவலர் போல யாழ்.சைவ வேளாள மேட்டுக்குழாமின் பிரதிநிதியாகச் செயற்பட்டவர் என்ற மார்க்சியர்கள் அவர் சம்பந்தமாகக் கொண்டிருக்கும் கருத்து. அதேநேரத்தில், அவர் சைவத்துக்காகவும், தமிழுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் பெரும் பங்களிப்புச் செய்தவர் என்பது இன்னொரு பகுதியினரின் கணிப்பு. இன்று யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதான பிரிவுகள் அமைந்திருக்கும் திருநெல்வேலியிலுள்ள முன்னாள் பரமேஸ்வராக் கல்லூரிக் கட்டிடமும், நுண்கலைப் பிரிவு அமைந்திருக்கும் மருதனார் மடத்திலுள்ள இராமநாதன் கல்லூரியும் அவரது கல்விக்கான கொடைகளாக அடையாளம் காட்டப்படுகின்றன. அன்றைய காலகட்டத்தில் அவர் கல்விக்காக ஆற்றிய சேவை அளப்பரியது என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.


இருப்பினும், அவரது கல்விக் கொள்கை இன்றைய யுகத்தின் சதாரண மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல, அது தனிமனிதனை நெறிப்படுத்தும் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற விமர்சனமும் உண்டு. இதில் மிகவும் முக்கியமான சுவாரசியமான விடயம் என்னவெனில், இந்தியாவின் தேசிய கவிகளில் ஒருவரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் இராமநாதனின் கல்விக் கொள்கையை விமர்ச்சித்திருப்பதுதான். இதுபற்றி “சேர்.பொன்.இராமநானின் கல்விச் சிந்தனையும் கல்விப் பணியும்” என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ள (கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடு) தமிழறிஞர் ஆர்.எஸ்.நடராசா பின்வருமாறு கூறுகிறார்:
“இந்தியாவின் அடிமை நிலையினைப் போக்க தீவிர சுதந்திரப் போராட்டமே ஏற்றது எனக் கருதிய பாரதியார் இராமநாதனின் ஆன்மீக விருத்தி இலக்குள்ள உலகியல் வாழ்வில் அற ஒழுக்கத்தினையும், பண்பாட்டு பாரம்பரிய மறுமலர்ச்சினையும் குறித்த ஒழுக்கத்தினை ஓம்பும் கல்விச் சிந்தனையினைக் காலத்திற்கு ஒவ்வாதது எனக் கூறியது கருத்திற் கொள்ளத்தக்கது. மக்கள் வாழ்வில் புரட்சிகரமான வாழ்வினை ஏற்படுத்த வேண்டும் என்னும் கருத்தில் பல விடயங்களில் பாரதியார் புரட்சிக் கருத்துள்ளவராயிருந்தார். எனவே இராமநாதனின் ஆத்மீக இலக்குள்ள கல்விச் சிந்தனை இளைய தலைமுறையினரைப் “பழமையில் ஆழ்த்தும் நிலையினை உருவாக்கிவிடும்” என அஞ்சினார்.
யாழ்ப்பாணத்தில் இருபதாம் நூற்றாண்டின் முதற் காற்கூறில் முளையிட்டு மலர்ந்த இளைஞர் காங்கிரஸ், “வயோதிபர்கள் போதிய முற்போக்குச் சிந்தனையும் செயற்பாடும் அற்றவராகப்” பழமையில் ஊறிப்போயிருப்பதாகக் குற்றம் சாட்டியது. எனவே இராமநாதனின் கல்விச் சிந்தனை மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்னும் நிலை இருந்தது என்பதனைக் காணலாம்”.
இதிலிருந்து பாரதியார் இந்திய சுதந்திரம், ஜனநாயகம், முற்போக்கு என்ற திசை வழியில் சிந்தித்தது மட்டுமின்றி, இலங்கையில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கிய தலைவர்களின் சிந்தனைப் போக்கு எவ்வாறானதாக இருந்தது என்பதையும் ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார் என்பது புலனாகின்றது.
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களிடத்தில் உள்ளது போன்ற வலதுசாரி தமிழ் தேசியவாதம் காலூன்றாதவாறு ஓரளவு முற்போக்கு சிந்தனை கலந்த தமிழ் தேசியவாதம் நிலைகொண்டு இருப்பதற்கு, இந்திய சுதந்திப் போராட்டத்திலும், தொழிலாளர் இயக்கத்திலும், திராவிட இயக்கத்திலும் பங்காற்றிய பாரதியார், திரு வி.க, சிங்காரவேலர், ப.ஜீவானந்தம், பெரியார் போன்ற தலைவர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பது கவனத்திற்கு உரியது.
இலங்கையிலும் அதே காலகட்டத்தில் ‘யாழ்ப்பாண மாணவர் – வாலிபர் காங்கிரஸ்’ என்ற அமைப்பு அவ்வாறானதொரு முற்போக்கு பாத்திரத்தை வகித்துச் செயற்பட்டது. ஆனால், தமிழ் பிற்போக்கு மேட்டுக்குடி குழாமினர் திட்டமிட்ட வகையில் உருவாக்கிய பிற்போக்குத் தமிழ் தேசியவாதம், வாலிபர் காங்கிரசின் பணியைப் பின்தள்ளி, இறுதியில் அதை அற்றுப்போக வைத்துவிட்டது.
இலங்கையைப் பொறுத்தவரை, அறிவுஜீவிகள் மட்டத்தில் 1950-60-70களில் இருந்த முற்போக்காளர்களை வலதுசாரி தமிழ் தேசியவாதம் ஓரங்கட்டியதும், அதன் விளைவாக புலிகளின் வடிவத்தில் எழுந்த தமிழ் பாசிசமும், தமிழ் சமூகத்தை ஒரு தேக்க நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
இந்தத் தேக்க நிலையிலிருந்து விடுபடுவதானால், ஆறுமுகநாவலர் முதல் இன்றைய தமிழ் தேசிய எழுத்தாளர்கள் வரையிலானவர்களின் எழுத்துக்கள் சம்பந்தமாக வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையிலான விஞ்ஞானபூர்வமான கண்ணோட்டத்தில் ஒரு மறுவாசிப்புத் தேவை. இதைச் செய்வதானால், தற்போது எஞ்சியிருக்கும் ஒருசில முற்போக்குப் புத்திஜீவகளால்தான் முடியும். அதைச் செய்யத் தவறினால், பல தசாப்தங்களுக்கு பிற்போக்கு வலதுசாரிச் சிந்தனையும், அதன் அடிப்படையிலான தலைமையுமே தமிழ் மக்கள் மத்தியில் கோலோச்சும் நிலைமை ஏற்படும்.
போர் முடிவுற்றதன் பின்னான ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி, இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளிலும் உள்ள முற்போக்குத் தமிழ் புத்திஜீவிகள் தமக்குள் தொடர்புகளை ஏற்படுத்துவதுடன், தொடர்பூடகம் ஒன்றை நிறுவி, தமிழ் இளைஞர்கள் மத்தியில் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஹாண்டி பேரின்பநாயகம் போன்ற அன்றைய இளைய தலைமுறையினர்களால் உருவாக்கப்பட்ட ‘யாழ்ப்பாண மாணவர் – வாலிபர் காங்கிரசின்’ முற்போக்கு பாரம்பரியத்தை திரும்பவும் உருவாக்க வேண்டும்.
இதற்கான காலம் கனிந்துள்ளதை முற்போக்காளர்கள் அனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தில் உணர்ந்து செயற்பட வேண்டும்.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...