ஜனாதிபதித் தேர்தலும் சில பிரதிபலிப்புக்களும்! -ஆனந்ததேவன்


which path_bw
“ஆட்டுவித்தால் யாரொருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு – என் நிழலிற்கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே – ஆனால்
நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே.”



ஒருவேளை மஹிந்த ராஜபக்ஷா தமிழராய்ப்பிறந்து, தமிழ்ச்;சினிமாவின் ரசிகராகவிருந்து, சாய்மனைக் கதிரையில் அமர்ந்தபடி ஒரு கணம் தோல்வியை எடை போட்டிருப்பாராயின் இந்தப்பாடலைத் தவிர்த்து வேறெந்தப் பாடலைத்தான் பாடியிருப்பார்? சிலவேளை ‘நாலுபேரு நடுவிலே நூலு ஒருத்தன் கையிலே´ என்றும் பாடியிருப்பாரோ? யாருக்குத் தெரியும்?.
எது எவ்வாறிருப்பினும் ராஜபக்ஷாவின் தோல்விக்கு கட்சி உடைக்கப்பட்டமையும், அணியில் அங்கம் வகித்த கட்சிகள் பிரிந்து சென்றமையும், அவரது உள்நாட்டு அரசியல் அணுகுமுறையுமே காரணங்களாகும். சிறுபான்மை இனங்களின் மதவுரிமைகளைப் பாது காக்காமையும் (பள்ளிவாசல்கள், தேவாலயங்களைத் தாக்கியவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தாமை) இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்குச் சார்பாக ஜால்ரா போடாமையும், அல்லது அவர்களின் தாளத்திற்கு ஆட்டம் பிசகியமையும் காரணங்களாகக் கூறலாம். பலம் வாய்ந்த வெளிநாடுகள் உலகின் எந்த திட்டுக்களிலும், மூலை முடுக்குகளிலும் உள்ள சிறிய, பெரிய நாடுகள் தமக்குச் சார்பாக வரும்வரை, தமக்குச் சார்பான பொம்மையரசுகளை உருவாக்கும்வரை இமைப்பொழுதும் சோராமல் இருப்பார்களென அரசியல் விமர்சகர்கள் கூறுவது இலங்கைக்கும் பொருந்திவிட்டதோ தெரியவில்லை.
இனியும், தமிழ்மக்களின் வாக்குகள் ராஜபக்ஷாவிற்குக் கிடைக்குமென்று சொல்வதற்கில்லை. மேட்டுக்குடித் தமிழ்த்தலைமைகளான கூட்டமைப்பும், புலம்பெயர் முன்னணி அமைப்புக்களும் அதற்கு இடம் கொடுக்கப் போவதில்லை. ராஜபக்ஷவிற்கெதிராக, இராணுவத் தளபதியாகவிருந்த சரத்பொன்சேகாவோ, அல்லது பௌத்தவாத வெறிபிடித்த பொதுபலசேனாவிலிருந்து ஒரு மதகுரு நிறுத்தப்பட்டிருந்தாலும், தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டுமென அவர்களையே தெரிவு செய்வார்கள். ஏன் மைத்திரி சிறிசேனகூட யுத்தத்தின் இறுதி இரண்டு வாரங்களுக்கு பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த சமயத்திலேயே கொத்துக் குண்டுகள் போடப்பட்டதாகவும், இவர் புலிகளின் தாக்குதல் முயற்சிகள் பலவற்றிலிருந்து தப்பிப்பழைத்தவராகவும் கூறப்படுகிறது. சரத்பொன்சேகா போல.

மனித உயிர்களின் அழிவுகள்பற்றி அக்கறைப்படாத, தனிநபர் பயங்கரவாதத்தையும், சுத்தராணுவக் கண்ணோட்டத்தையும், சாரமாகக் கொண்டதே புலித்தலைமையின் போராட்டம். சாத்தியமற்ற இலக்கையடைவதற்காக, சதா சாவையே வாழ்வாகக் கொண்ட யுத்தத்தை நடாத்திய புலித்தலைமையைத் தோற்கடித்த ஆளுமை ராஜபக்ஷாவையே சாரும். இதன்மூலம் நீண்டகால நோக்கில் இலங்கை என்ற நாட்டை மட்டுமல்லாது அந்தப் பிராந்தியத்திற்கான (ஆசியா) பிரிவினைவாத ஊற்றுமூலத்தை அழித்த ஆளுமை ராஜபக்ஷாவிற்கு உரியது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும்படி கூட்டமைப்பு ஒருபோதும் புலித்தலைமையை வற்புறுத்தியது கிடையாது. வற்புறுத்தாத இந்தத் தமிழ்த் தலைமை யுத்தத்தில் வெற்றிகொண்;ட ராஜபக்ஷாவை ஒரு போதும் ஆதரிக்கமாட்டாது. யுத்தத்தின் வடுக்கள், வலிகள், அழிவுகள் போன்றவற்றிற்கு, 1995இல் யாழ்ப்பாணத்திலிருந்து மக்களை மந்தைகள் போன்று பலாத்காரமாக அழைத்துவந்து கேடயமாகப் பயன்படுத்திய புலித்தலைமையும் காரணமென்று ஒரு போதும் தமிழ்மக்களுக்குச் சொல்லப் போவதில்லை. சுயவிமர்சனம் செய்யப் போவதுமில்லை. அவர்கள் உள்நாட்டிலுள்ள தமிழ்மக்களின் நலன்களைவிட புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள முன்னணி அமைப்புக்களினதும், வெளிநாட்டரசுகளினதும் நலன்களைப் பிரதிபலித்து தமது பாராளுமன்ற இருக்கைகளைத் தக்க வைத்துக்கொண்டு வலம் வருவார்கள் என்பதையே வரலாறு எமக்குப் போதிக்கிறது.
அரசியற் தீர்வு கிடைக்கின்றதோ இல்லையோ ராஜபக்ஷாவைப் பழிவாங்கி, அவருக்குத் தக்க பாடம் புகட்டிவிட்N;டாமென தமிழ்மக்களின் பெரும்பான்மைப் பிரிவு கருதுகிறது. இதேவேளை புலம்பெயர் முன்னணி அமைப்புக்கள் சில, வெளிநாட்டரசுகள் மைத்திரியுடன் கைகோர்த்துவிட்டால் தமது அரசியல் வியாபாரம் பட்டுப்போகுமென்றும், சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளைக் கிடப்பில்ப்போட்டு தம்மைக் கைவிட்டு விடுமென்றும் அஞ்சுகின்றனர். ராஜபக்ஷ தொடர்ந்து பதவியிலிருந்;திருந்தால், பெரியதொரு ராஜதந்திரப் போரையே நடாத்தி முடித்திருப்போம் என மார்தட்டுகின்றனர். மெல்லுவதற்கு அவலில்லையே என ஏங்குகின்றனர். அவர்களின் வர்க்க நலன்கள், அவர்களின் சொகுசு தேசியவாதம் அவர்களை அவ்வாறு பேச வைக்கிறது என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

ராஜபக்ஷா, பாடசாலைகள், மருத்துவமனைகள், வீதிப்போக்குவரத்து போன்ற உட்கட்டுமான அபிவிருத்தி வேலைகளைப் பாரியஅளவில் நிறைவேற்றியிருந்தாலும், தனது காலத்திலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றியமைக்காது, தனது அதிகாரத்தைத் தொடர்ந்து தக்கவைக்கும் நோக்கில் 18ஆவது திருத்தச் சட்டத்தைத் கொண்டுவந்தமை ஜனநாயக விரோதமே. தனது காலத்திலேயே, 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு இணங்க தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமையும் அவர் சார்ந்த தவறுகளே. எது எவ்வாறிருந்த போதிலும், அரசியல் விமர்சகர் தயான் ஜெயதிலக கூறியதுபோலவே ராஜபக்ஷாவின் தோல்வி ஒரு சுழற்சியின் முடிவே. யுத்தத்திற்கு முந்திய காலத்திற்குக் கூடத் திரும்புவதாகவும் இருக்கலாம். ஆம், இந்த மாற்றம் எண்ணைச் சட்டியிலிருந்து நெருப்பினுள் விழுவதாகக்கூட இருக்கலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 மார்ச் 18, 2015

வானவில் இதழ் 51

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...