இதிகாசத்தை நிஜமாக்கும் நீண்ட துயரங்கள் - தொடரும் வட மாகாண முஸ்லிம்களின் போராட்டங்கள் !

எஸ்.எம்.எம்.பஷீர்

உடங்கமிழ்தங் கொண்டா னொருவன் பலரும்
விடங்கண்டு நன்றிதுவே என்றால்-- மடங்கொண்டு
பல்லவர் கண்டது நன்றென் றமிழ்தொழிய 
நல்லவனும் உண்ணுமோ நஞ்சு.                                                                                                               
அறநெறிச்சாரம்

படம்: புத்தளத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையினரை சந்திக்கும் புலிகளால் கடத்தப்பட்டோரின்  குடும்பத்தினர்.(பெண்கள்)மே மாதம் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வட மாகாணத்தில்  உள்ள சகல மாவட்டங்களிலும் வீட்டுத் திட்டங்களை அமைத்து , வீடில்லாத மக்களுக்கு  உதவ இந்திய அரசு முன்வந்தது.  ஆயினும் இத்திட்டம் தொடர்பில் முல்லைதீவிவிலும்    கிளிநொச்சியியிலும் ,  வவுனியாவிலும் பல கோரிக்கைகளை வைத்து அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவது வழக்கமான நிகழ்வாகவே நடைபெற்று வருகின்றது.

ஆனால்,  சில  தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண நகரின் மேற்குப் பகுதியில்  மீள் குடியேறி வாழ்ந்த வறிய முஸ்லிம் மக்கள் ஒரு தெருப் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.  இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதில் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகக் கூறி அம்மக்கள் அபோராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். தங்களுக்கு கிடைக்கவேண்டிய வீடுகளை தருவதில் பிரதேச செயலாளர் தடையாக உள்ளதாகவும் , அரச அதிகாரிகள் உடனடியாக தலையீட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிகை விடுத்துள்ளதாகவும் செய்திகள் கூறின.

வடக்கில் இருந்து முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் மக்கள் இரண்டு தசாப்தங்களாக அனுபவித்து வரும் நீட்சியான துயரங்கள் , புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னரும்,  சமாதானம் வந்த பின்னரும் , இன சவ்ஜன்யத்தை கட்டி எழுப்ப ஆட்சி மாற்றம் வென்டும் என்று அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய பின்னரும் ,  வடக்கில் நிகழ்ந்த வரலாற்று மாற்றம்என்னவெனில்  வட மாகாண சபையில் தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்டதாக சொல்லப்படும் "இனப்படுகொலை" குறித்து தீர்மானம் கொண்டு வந்ததுதான். அதுவும் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பு பற்றி அல்லது  இனச்சுத்திகரிப்பு பண்ணிய குற்றவாளிகளை பற்றி எவ்வித சிலிர்ப்பும் சிலாகிப்பும் இன்றி தீர்மானம் கொண்டு வந்ததுதான் வரலாற்றுத் தவறாகும் . அது ஒரு புறமிருக்கயாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியேறி வாழும் முஸ்லிம்கள் சிலர்  பெரும்பான்மை தமிழ் ஆட்சி அதிகாரத்தினால் தங்களுக்கு இழைக்கப்படும்  அநீதிக் கெதிராக நடத்திய ஆர்ப்பாட்டம் , வெறுமனே தங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்பதை மட்டுமல்ல , அதற்கும் மேலாக தங்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளுக்கும் நியாயம் கோரி நடத்திய போராட்டமுமாகும். வழக்கம்போலவே இப்போராட்டத்திற்கு பரவலான ஊடக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதில் எந்த அரசியல் கட்சியின் பின்னணிப் பலமுமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் தாங்களாகவே முன் வந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னேடுத்துள்ளனர் என்றே தோன்றுகிறது. இவர்களின் கோரிக்கைகள் குறித்து இதுவரை வழக்கம்போலவே எந்த அரசியல்வாதிகளும் குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் கண்டு கொள்ளவில்லை.!

ஆனால்,  வடக்கில் மீண்டும் எண்ணிக்கையில் மிக மிகக் குறைந்தோராய் மீளக் குடியேறி வாழும் ஏழை முஸ்லிம்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வீடுகளை கிடைக்காமல் பண்ணுவோர் யார் என்ற கேள்விக்கு முஸ்லிம்கள் தரப்பில் மிக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்படும் ஒருவர் பிரதேச சபைச் செயலாளர் சுகுணரதி தெய்வேந்திரத்தின் என்பர் என்று சொல்லப்படுகிறது. அவருக் கெதிராக முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடும்பாவி எரிக்க முற்பட்டுள்ளனர் . ஆனால் சமூக சேவகர்கள்  சொல்லிகொண்ட சிலர் அங்கு உட்புகுந்து கொடும்பாவி எரிப்பதை தடுத்துள்ளனர்.  ஆனால் இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய விஷயம்  என்னவெனில் சென்ற வாரம் தமிழனத் துரோகி என்று தமிழ் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனுக்கும் , சுமந்திரனுக்கும் எதிராக கொடும்பாவி யாழிலே எரிக்கப்பட்டுள்ளது. கொடும்பாவி எரிப்புக் கலாச்சாரம் தனிநபருக் கெதிரான ஒரு உச்சக்கட்ட எதிர்ப்பினைக் காட்ட செய்யப்படும்  ஒரு உலகாளாவிய அரசியல் குறியீடாக மாறியுள்ள  நிலையில் ,  கொடும்பாவி எரித்து தங்களின் எதிர்ப்பினைக் காட்டும் உரிமை கூட முஸ்லிம்களுக்கு   மறுக்கப்பட்டுள்ளது
சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் நோர்வேயின் சமாதான காலத்தில் புலிகள் அனுசரணையுடன் சர்வதேசத்துக்கு படம் காட்டுவதற்கு முஸ்லிம் மக்களின் செயலகம் என்று ஒன்றை மவ்லவி சகீல் என்பவரைக் கொண்டு உருவாக்கினர். அதன் மூலம் வட மாகாண முஸ்லிம்களின் சார்பில் புலிகளின் பேச்சாளராக மவ்லவி சகீல் செயற்பட்டார். அவர் மே மாதம் 2006 ஆம்  ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் , தெற்கிலே உள்ள நாசாகார சக்திகள் புலிகள் மீள் குடியேற்றத்துக்கு தடை செய்கிறார்கள்  என்று  ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை  பரப்பி வருகிறார்கள் ;  தமிழ்  விடுதலைப் புலிகள்  இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதில் முழு அதரவு வழங்குகிறார்கள் என்றும்,சுயநலம் கொண்ட முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் தமிழ்   சமூகங்களுக்கிடையே பிளவினை ஏற்படுத்துகிறார்கள் என்று புலிகளின் "நல்லெண்ணம் " குறித்தும் அதற்குத் தடையான சிங்கள முஸ்லிம் அரசியல் குறித்தும் கருத்துரைத்தார். அது மாத்திரமல்ல பிறிதொரு சந்தர்ப்பத்தில் " யு.என்.எச் சீ.ஆர் , யு நீ.செப்  உட்பட்ட  மனித உரிமை நிறுவனங்கள்  வட கிழக்கில் தமிழ்  பெண்களும் குழந்தைகளும் தினமும்  கொல்லப்படும் பொழுது மவுனம் காக்கிறார்கள்" என்று கூட பத்திரிகை அறிக்கை இட்டார். ஆனால் பின்னாளில் இவர் காணாமல் போய்விட்டார். இவர் எப்படி காணமல் போனார் என்று இதுவரை தெரியவில்லை.! 
அண்மையில் வேருவளையில் , மற்றும்  தெற்கின் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு சிங்கள  தீவிரவாத இனவாத சக்திகளால் அநீதி இழைக்கப்படுவதாக  கூறி  யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக கூக்குரலிட்டவர்கள்  ;  இந்திய வீட்டமைப்பு திட்டத்தில் தமிழ் அதிகாரிகளால் இழைக்கப்படும் அநீதிகள் குறித்து  கிஞ்சித்தும் குரல் எழுப்பியதாக தெரியவில்லை. தமிழர்களுக்கு குரல் கொடுத்த மவ்லவி சகீல் , அஸ்மின் போன்ற ஒருவரைதானும்  இந்தப் போராட்டத்தில்தமிழர் தரப்பில் காண முடியவில்லை.!  

 மகாபாரத்தில் பதினான்கு வருட வனவாசத்தின் பின்னர் துரியோதனனிடம் பாண்டவருக்காய் தூது சென்ற கண்ணன்.  தர்மனின் வேண்டுதலின்படி விடுத்த ஐந்து கோரிக்கைகளில்  இறுதியான இரண்டு கோரிக்கைகளான ஐந்து  ஊரோ அல்லது  ஐந்து வீடோ தருமாறு கேட்ட இதிகாச வரலாறு ;,  ஏதோ ஒரு விதத்தில் இருபத்தி ஐந்து வருடங்கள் சென்ற பின்னர் விரட்டப்பட்ட முஸ்லிம்கள்  மீண்டும் திரும்பி தமது கிராமங்களில் சிலதை பெறமுடியா நிலையில் ,  (மகா)பாரத தேசம் வழங்கும் வீட்டில் சிலதைக்  கொடுக்க மறுப்பது , இதிகாசம் வரலாறாக   மாறியுள்ளதைக் காட்டுகிறது. !  

இந்திய வீட்டுத்திட்டமைப்பில் தமக்குரிய வீட்டுப் பங்கீடு  கிடைக்கவில்லை என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட  ஆர்ப்பாட்டக்கார்களின் கோரிக்கைகளில் சில 1990இல் வட மாகாணத்தில் இருந்து   பலவந்தமாக வெளியேற்றப்பட்ட  முஸ்லிம்களுக்கு தனியான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்கக் கோரும் கோரிக்கை:  வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை அவர்களுக்கு மீள ஒப்படைக்குபடியான கோரிக்கை: 1990-1997 வரையான காலப் பகுதியில் காணாமல் போன முஸ்லிம்களுக்கு என்ன நடந்தது என்று அங்கலாய்க்கும் கோரிக்கை என்பன ஒரு வரலாற்றுப் பின்னணியுடன் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பரிகாராம் தேடும் கோரிக்கைகளாகும்


இந்த கோரிக்கைகளுடன் தொடர்புட்ட விவகாரங்களில் பல மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன  என்றே தோன்றுகிறது. பாதிக்கப்பட்ட சமூகத்தின் குரலாக தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட மண்ணில் இந்தக் குரல்கள் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன .  ஆனாலும் இந்தக் குரல்களும் காணாமல் போன வட முஸ்லிம்களை புலிகள்தான் கடத்தினார்கள் என்பதையும் பலவந்தமாக முஸ்லிம்களை புலிகள்தான் வெளியேற்றினார்கள் என்பதை ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களின் சுலோக அட்டைகளில் குறிப்பிடாமல் இருப்பதில் கவனமாக இருந்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது. குற்றவாளிகளை அடையாளப்படுத்துவதில் அவர்கள் காட்டிய தயக்கம் அவசியமற்றது. நபுஞ்சகமானது.!

வட மாகாணத்தில் கடத்தப்பட்ட(காணமல்போன)  நபர்களின் குடும்பத்தினரை சர்வதேச மன்னிப்பு  சபை  புத்தளம் அகதி முகாங்களுக்கு நேரடியாக சென்று சந்தித்த பொழுது  1989 -1991.வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் , வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் 32 முஸ்லிம்கள் புலிகளால் கடத்தப்பட்டதாக முறையிட்டிருந்தனர் (இங்கு கவனிக்க வேண்டியது அவர்கள் யாரும் "காணாமல் " போன உறவுகள் என்று சால்ஜாப்புடன் குறிப்பிடவில்லை,  மாறாக கடத்தப்பட்டதை  ஆதாரங்களுடன் கூறினர் . ஆனால் இப்பொழுது ஆர்ப்பாட்டக்காரர்கள் 37 பேரைக் "காணவில்லை" என்று  குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் சர்வதேச மன்னிப்பு சபை 1996 ஆம் ஆண்டு  அவர்களின் அறிக்கையில் 32 பேரையே கடத்தப்பட்டவர்களாக வெளியிட்டுள்ளனர். பின்வருவோரே கடத்தப்பட்டவர்களாக சர்வதேச அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

1.நைனா முஹம்மத் ரொஷான் (3/2/1990)
2.கமால் அஜ்மயீன் (2/5/1991)
3.சமீன் நியாஸ் (2/7/1990)
4.அப்துல் வஹாப் அஜ்வர்ட் (3/8/1990)
5 அப்துல் கபூர்  நகீப் (28/05/1991)
6.ஜமால்டீன் பாரூக்  (28/051990)
7.அப்துல் மஜீத் ஜலீஸ் (25/09/1990)
8. மொஹிடீன் அப்துல் காதர் (17/02/1990)
9.அப்துல் ஜபார் சுபைர் (28/05/1991)
10. மொஹிதீன் தம்பி சபருல்லாஹ் (28/05/1991)
11.ஹம்சா நவாஸ் (20/07/1990)
12.இஸ்மாயில் ரமீஸ் (01/01/1990)
13.பதுர்தீன் சிராஜ் (01/01/1990)
14..பதுர்தீன் ஜலீல் (01/01/1990)
15.அப்துல் ஜபார் பைரூஸ் (17/02/1990)
16. அப்துல் லத்தீப் மொஹமட்  றமீஸ் (26/01/1990)
 17.அப்துல் மஜீட்  நஜீப் (28/05/1990)
18.அப்துல் லத்தீப் ராஜாப் (21/09/1990)
19.சீனி அலியார் இனுடீன் (25/10/1991)
20.சீனி அலியார் ரலீஸ்கான் (27/01/1990)
21. சாகுல் ஹமீத் தன்சில் (20/04/1990)
22. அப்துல் ரஹீம் ஜப்ரீன் (15/02/1990)
23. நீரான் மொஹிடீன் நஜீப் (10/12/1989)
24. பதுறுசமான்  ரம்சீன்  (10/03/1989)
25.ஜமால் மொஹமட் றபீக் (24/02/191)
26.அப்துல் ஜப்பார் சுந்தூஸ் (19/07/1990)
27.அசன்கணி மொஹமட்  நிலான் (19/07/1990)
28.முஹம்மத் ஹம்சா (25/07/1990)
29.செய்னுலாப்தீன் பிர்தவுஸ் (24/01/1990)
30.வபுஷா மொஹமட் பாரூக் (25/10/1990)
31. காதர் மொஹிதீன் சுபைர் (08/10/1989)
32.சரீப்டீன் பசீர் (28/05/1991)

இதுபற்றி இக்கட்டுரையாளர் முன்னர்  எழுதிய ஆங்கிலக் கட்டுரையை இங்கு  பார்வையிடலாம்: http://www.bazeerlanka.com/2011/03/will-imam-be-imam-to-jaffna-muslims.html) . இன்றும்   அப்படிக் காணாமல்  போனவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. என்ன நடந்திருக்கும் என்பது புலிகளின் சித்திரவதை  முகாம்களில் (சிறைகளில் ) நடந்தது பற்றி புலிகளின் சிறைகளில் துன்புறுத்தப்பட்டு  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மணியம் என்பவர்  "தேனீ "எனும் இணையத்தில் எழுதும் தொடர் கட்டுரைகளில் இருந்து முடிவுக்கு வரலாம். நோர்வே அனுசரணையுடனான சமாதான காலத்திலும் முல்லைத்தீவுக்கு மீண்டும் தங்களின் விவசாயக் காணிகளில் விவசாயம் புரியச் சென்ற முஸ்லிம்களைக் கடத்தினார்கள் என்பதையும் இங்கு கணக்கில் கொண்டால் இன்றைய மொத்த எண்ணிக்கை 37 ஆக இருக்க வேண்டும் !.

எது எப்படியோ யாழ் மண்ணில் முஸ்லிம் மக்கள் அந்த "மண் சுமந்த மேனியர்களாய்" தங்களின் உரிமைக்காக , தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக ஒரு வெகுஜன போராட்டத்தை தாங்களாகவே முன்னெடுத்திருக்கிறார்கள். இந்தப் போராட்டம் வட மாகாண சபை மேற்கொண்ட இனப்படுகொலைத் தீர்மானத்தின் பின்னால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் புலிகளால் முஸ்லிம்களுக்கு இழக்கப்பட்ட இனச் சுத்திகரிப்பை வெளிக்கொணர முயன்ற சிலரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டியதே!   ஆனாலும் அவர்களின் நீதிக்கான போராட்டம்  வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது ! 
01/03/2015
bazeerlanka.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...