ரணில் – மைத்திரி அதிகாரப் போட்டியை விடுத்து 1978இன் மக்கள் விரோத அரசியலமைப்பை முற்றாக மாற்ற வேண்டும்!


Maithiri & Ranil_CL
லங்கையில் இவ்வருடம் ஜனவரி 8ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நின்று அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடித்தன. தாம் ஓரணியில் திரண்டதிற்கு அவர்கள் சொன்ன காரணங்கள், மகிந்த ராஜபக்ச சர்வாதிகார ஆட்சி நடாத்துகிறார், குடும்ப ஆட்சி நடாத்துகிறார், ஊழல் மோசடித்தனமான ஆட்சி நடாத்துகிறார், இனவாத ஆட்சி (இது தமிழ் – முஸ்லீம் கட்சிகளின் குற்றச்சாட்டு) நடாத்துகிறார் என்பவை ஆகும்.



அவர்கள் அவரை எதிர்ப்பதற்கான ஒரு காரணத்தை மட்டும், அதுவும் மிக முக்கியமான காரணத்தை மட்டும் சொல்லவில்லை. அதாவது தம்மை ஓரணியில் திரள்வதற்கு பின்னணியில் நின்று செயற்பட்ட உலக மற்றும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளுக்கு மகிந்த எதிரானவர் என்றபடியால்தான் தாம் அந்த சக்திகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஒன்றுபட்டு நிற்கிறோம் என்ற விடயத்தை மட்டும் அவர்கள் சொல்லவில்லை.
அந்த விடயத்தை மறைத்துவிட்டு, மகிந்தவை வீழ்த்தி நாட்டில் ‘நல்லாட்சி’ கொண்டுவரப் போகின்றோம் என்று மட்டும் சொன்னார்கள். அந்த நல்லாட்சி என்பது நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறைமையை ஒழித்து பாராளுமன்றத்தை அதிகாரம் மிக்கதாக்குவது, தேர்தல் முறையில் நிலவும் விகிதாசார மற்றும் விருப்பு வாக்கு முறையை ஒழிப்பது, சுதந்திரமான முறையில் நீதித்துறை மற்றும் பொலிஸ் சேவை என்பனவற்றை இயங்க வைப்பது, ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பது இப்படி பலப்பல.
இதிலும் கூட நாட்டின் பல பிரச்சினைகளுக்கு அடிப்படையான, நாட்டை 30 வருடங்களாக உள்நாட்டு போர் என்ற அழிவுக்கு இட்டுச் சென்ற இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது சம்பந்தமாக ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எதிரணி கட்சிகள் எவ்வித திட்டத்தையும் முன்வைத்திருக்கவில்லை. இருந்தும் வழமை போலவே உதைத்த காலை நக்கி பழக்கப்பட்டுப்போன தமிழ் தலைமை (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) எவ்வித நிபந்தனையும் இன்றி எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது.


புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் ஆட்சிக்கு வந்தபின்னர் ~100 நாள் வேலைத்திட்டம்| ஒன்றின் மூலம் முக்கியமான பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தனர். அதில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு முக்கியமானது. ஆனால் நடைமுறையில் 100 நாள் வேலைத்திட்டம் என்பது முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரையும், அவரது ஆட்சியின் ஆதரவாளர்களையும் பழி வாங்குவது என்பது இப்பொழுது கண்கூடாக தெரிய வந்துள்ளது.
225 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் வெறுமனே 49 உறுப்பினர்களை மட்டும் கொண்ட சிறுபான்மை காபந்து அரசாங்கமான ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், முன்னைய ஜனாதிபதி மகிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கொண்டு வந்த மக்கள் நலன்சார் வரவு செலவு திட்டம் இருக்கத்தக்கதாக தமக்கு அடுத்த பொதுத் தேர்தலில் செல்வாக்கு தேடுவதற்காக இன்னொரு மக்களுக்கு சலுகை வழங்கும் வரவு செலவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலையை கணக்கில் எடுக்காது இந்தியாவில் தமிழக அரசுகள் மேற்கொள்ளும் இலவச திட்டங்கள் போல ஐ.தே.க அரசின் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது.

புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதில் இப்பொழுது விருப்பமின்மையும், இழுபறி நிலைமையும் தோன்றியுள்ளதை காண முடிகிறது. அதுமாத்திரமின்றி ‘ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்” என்பது போல ஐ.தே.கவுக்கும் மைத்திரி கோஸ்டிக்குமான ‘தேன்நிலவு” முடிவுக்கு வரும் நிலையும் தோன்றியுள்ளது.
புதிய ஜனாதிபதி மைத்திரி வெற்றி பெற்ற பின் நடைபெற்ற பதவி ஏற்பு வைபவத்தின் போது, தான் இரண்டாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்தார். அதன்மூலம் தற்போதைய பதவிக் காலத்தை முழுமையாக அனுபவிக்கப் போவதை சூசமாக வெளிப்படுத்தினார்.

எதிர்பாராமல் ஜனதிபதியாகி அதன் மூலம் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை தன்வசம் எடுத்துக் கொண்டுள்ள மைத்திரி, தனது கட்சியினரை ஏதோ ஒரு பிரச்சினையில் மிரட்டுவதற்காக ‘நீங்கள் எனது சொல்படி நடக்காவிட்டால், நான் நிறைவேற்று ஜனாதிபதி முறையை வைத்திருக்க வேண்டி வரும்” என்று எச்சரிக்கை செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதற்கிடையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை முன்னிறுத்த வேண்டும் என சுதந்திரக் கட்சிக்குள்ளும் வெளியிலும் உள்ள அவரது ஆதரவாளர்கள் பலமான பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கு கணிசமான மக்கள் ஆதரவும் உள்ளது. இதைப் பார்த்துவிட்டு மைத்திரியுடன் மகிந்த அரசை விட்டு வெளியேறிச் சென்றவரும், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனரத்ன, ‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தால் மைத்திரி வெறும் பொம்மை ஜனாதிபதியாக இருக்க வேண்டி வரும். எனவே மைத்திரியையே பிரதமர் வேட்பாளராக சுதந்திரக் கட்சி நியமிக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.
மறுபக்கத்தில் ஐ.தே.க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை உடனடியாக ஒழித்துக்கட்டிவிட்டு, 100 நாள் முடிந்தவுடன் ஏப்ரல் 23ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தல் நடாத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. அப்படிச் செய்வதன் மூலம் சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரத்தைப் பறிப்பதுடன், அக்கட்சி தன் உட்கட்சிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு அவகாசம் வழங்காது, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பொதுத்தேர்தலின் மூலம் தமது கட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் ஐ.தே.கவின் திட்டம்.
ஆனால் தவிர்க்கவியலாமல் சுதந்திரக் கட்சியின் சார்பாக பாராளுமன்ற எதிர்கட்சித் தலைமையை ஏற்றுள்ள நிமால் சிறிபால டிசில்வா தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ அணியினர் (இவர்கள் பாராளுமன்றத்தில் 132 உறுப்பினர்களுடன் இன்னமும் பெரும்பான்மையிராக உள்ளனர்), நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் உள்ள எல்லா அதிகாரங்களையும் நீக்கக்கூடாது என்றும், அத்துடன் அப்பதவியில் உள்ள சில அதிகாரங்களைக் குறைக்கும் அரசமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ளும் போது, அதற்குச் சமாந்திரமாக தேர்தல் முறையிலும் சீர்திருத்தங்களை மேற்கொண்டால் மட்டுமே தமது கட்சி அதை ஆதரிக்கும் என தெளிவாகக் கூறியுள்ளார்.

இந்தக் கருத்தை அவர் தானாகக் கூறியிருக்க முடியாது. கட்சித் தலைவராகவும், தற்போதைய முறைமையின்படி நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகவும் இருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் ஆசிர்வாதம், விருப்பம் என்பனவற்றின் அடிப்படையிலேயே நிமால் சிறிபால இக்கருத்தை முன்வைத்திருக்கலாம் என எண்ண ஏதுண்டு.
இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையில் இப்படித் தோன்றியுள்ள இழுபறி அதிகாரப் போட்டியின் பாற்பட்டதே. இரு பகுதியினரும் ஒருவரது கழுத்தை ஒருவர் அறுப்பதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருப்பதையும், அதற்காக காய்களை நகர்த்துவதையுமே இவை படம் பிடித்துக் காட்டுகின்றன. இப்படியான நிலைமை ஒருபக்கம் நிலவ, மறுபக்கத்தில் இரு கட்சிகளும் இணைந்து ‘தேசிய அரசாங்கம்” ஒன்றை அமைத்து செயற்படுவது பற்றிய கேலித்தனமான உரையாடல்களும் நிகழ்கின்றன.
உண்மையில் ஒரு நாட்டில் தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவது யுத்தம், இயற்கைப் பேரழிவுகள், அந்நியப் படையெடுப்பு போன்ற தேசிய நெருக்கடிகளின் போதே. அப்படியான ஒரு சூழல் தற்பொழுது இலங்கையில் இல்லை. பிரிவினைவாதப் புலிகளுடனான யுத்தம் நடைபெற்ற காலத்தில் அப்படியொரு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். அப்படி இல்லாமல் ஐ.தே.கவின் ஆதரவுடன் தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதால் அக்கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரி தனது சுதந்திரக் கட்சியை தேசிய அரசாங்கம் என்ற படுகுழியில் தள்ள முயல்வது முற்றிலும் எதிர்க்கப்பட வேண்டியதாகும்.

குதர்க்கம் செய்வதில் இரண்டு பிரதான கட்சிகளும் காலத்தை விரயம் செய்யாமல், புதிய அரசாங்கம் செய்ய வேண்டியது எல்லாம், மக்களுக்கு வர்குறுதி அளித்தபடி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டியதே. அதுமாத்திரமல்லாமல், 1978இல் அப்போதை ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க அரசால் நாட்டு மக்களின் விருப்பத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட எதேச்சாதிகரமான அரசியல் அமைப்பு முறையை முற்றாக மாற்றி எழுத வேண்டும். வழமை போல ஆட்சிக்கு வரும் முன்பாக ஒன்றும், வந்த பின்னர் இன்னொன்றும் கூறி, நிறைவேற்று அதிகாரத்தை ருசி பார்ப்பதற்கு புதிய ஜனாதிபதியும் முயற்சி செய்தால் மக்கள் அதை உறுதியுடன் எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும்.

இது ஏன் அவசியமெனில், உண்மையில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் கடமையும், தேவையும், அருகதையும், கயவர்களான அரசியல்வாதிகளிடம் அல்ல நாட்டு மக்களிடமே இருக்கிறது.

வானவில் இதழ் 51

மார்ச் 18, 2015

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...