காணாமல் போன புலிகளும் ஆடுகளும்; அரசியல் ஆடுகளமும்!

எஸ்.எம்.எம்.பஷீர்

மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
                                                                        லூக்கா  15 அதிகாரம்


பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்கள் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடத்தி ; வடக்கு மாகாண முதமைச்சர் சீ . விக்னேஸ்வரனைச் சந்தித்து தமது கோரிக்கைகளை  முன்வைத்த போது , காணாமல் போனவர்களைப் பற்றி ஒரு புதிய சங்கதியையும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். அது என்னவெனில்  “வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் அடையாளம் தெரியாதவர்களினால்  கடத்தப்பட்டு காணாமல்போனவர்கள் பலர் இலங்கையின் பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இரகசிய தடுப்பு முகாம்களில்   வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எமக்கு இரகசிய தகவல்கள்  கிடைத்துள்ளன” என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறி உள்ளார்.

 

காணாமல் போனோரின் உறவினர்கள் " பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள் என்று " முறையிட  முதலமைச்சரோ "அடையாளம் தெரியாதவர்களினால்  கடத்தப்பட்டு காணாமல்போனவர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். புலிகள் செய்த கொலைகளையும் , கடத்தல்களையும் "இனந்தெரியாத நபர்கள் " செய்தனர் என்று தீவிர தமிழ்த் தேசியவாதிகள் பாதுகாத்தது எல்லோரும் அறிந்த சங்கதிதான் , ஆனாலும்  காணாமல் போனவர்களின் உறவினர்கள் திட்டவட்டமாக பாதுகாப்புப் படையினரைக்  குற்றம் சாட்ட முன்னாள் நீதியரசர் "இனந்தெரியாத நபர்கள் " கடத்தியதாக சிலாகித்ததன் பின்னணி என்ன.

மேலும் கடத்தப்பட்டவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் அவர்கள் என்ன செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார்கள் என்பதையும் பற்றி இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டவர்கள் " இலங்கையின் பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இரகசிய தடுப்பு முகாம்களில்   வைக்கப்பட்டுள்ளமை எமக்கு தெரிய வந்துள்ளது" என்றும்  "  குறிப்பாக மஹரகம, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை போன்ற இடங்களில் இரகசிய முகாம்கள் உள்ளதாகவும் அவற்றில் காணாமல் போனவர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் எமக்கு சில இரகசிய தகவல்கள்  கிடைத்துள்ளன.இந்த இரகசிய முகாம்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தி உள்ளோம்." என்றும்  முதலமைச்சர் திரு. சீ  விக்னேஸ்வரன் பூடகமாக முன்னைய பாதுகாப்பு  செயலாளரை குறிப்பீட்டு சொல்லிய செய்தின் பின்னால் ஒளிந்துள்ள சங்கதிகள் என்ன ?.

கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்கள்  பலர் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள் , எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று முதலமைச்சருக்கு இரகசிய தகவல் கிடைத்ததன்  அடிப்படையில் அவர் கருத்துரைத்துள்ளார் என்று வைத்துக் கொண்டால்,  அந்த தகவல்கள் அவருக்கு அண்மையில்தான் கிடைத்திருக்க வேண்டும். முன்னர் எப்பொழுதும் இப்பொழுதுபோல் அவர் எதுபற்றியும் பேசவில்லை , மீண்டும் அதுபற்றி ஒரு மாகாண சபைத் தீர்மானத்தையும் கொண்டுவரப் போவதாக வேறு உறுதி அளித்துள்ளார். எனினும் அந்த செய்தியின் நம்பகு தன்மை " மைத்ரீயின் நல்லாட்சி "  நடவடிக்கைகளின்  மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டால் மாத்திரமே உறுதியாகும்.  

ஆனால் காணாமல்போனோரை "இனந்த தெரியாத நபர்கள்" கடத்தி உள்ளார்கள் என்பதன் மூலம் முதலமைச்சர் திரு. சீ  விக்னேஸ்வரன் ஒரு முக்கிய சங்கதியை மறைக்க முற்பட்டுள்ளார். அதாவது யுத்தம் முடிந்த பின்னர் கைதான  முக்கியமான புலிகளில் சிலர் இராணுவ தகவலாளர்களாக செயற்பட்டு வருகிறார்கள் என்பதையும் , அவர்களின் உதவியுடன் ஒளித்திருந்த முன்னாள் புலிகள் பலர் , அல்லது புலிகளுக்கு அனுசரணை வழங்கியோர் எனப்படுவோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதையும், அவர்கள் மூலமாகவே  விமான நிலையத்தினூடாக  உள்வரும் வெளிச் செல்லும் பயணிகள் சிலர் கைது செய்யப்படுவதும் நடைபெற்று வருகிறது என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில்தான் அண்மையில் பிரான்சில் இருந்து சென்ற பகீரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகவே "இனந் தெரியாத நபர்கள் " என்று மீண்டும் "எப்பொழுதோ செய்த பாவத்திற்காய்" புலிகளை மீண்டும்  முரண்நகையாக அவர் பாதுகாக்க முற்பட்டுள்ளார். இந்த "இனந் தெரியாத நபர்கள் " என்பவர்களில் கிழக்கில் இருந்து விலகிய முன்னாள் புலிகளும் உள்ளடங்கலாம் !

சரணடைந்த புலிகளை நூற்றுக் கணக்கில் மறுவாழ்வு அளித்து விடுதலை செய்த பின்னர் , இன்னமும் யார் யார் விடுதலை செய்யப்படாது இருக்கிறார்கள் , அவர்கள் எங்கிருக்கிறார்கள் , என்ன செய்கிறார்கள் (இராணுவத்திற்கு சப்பாத்து துடைக்கிறார்கள் ) என்பது பற்றி புதிய ஜனாதிபதி மைத்ரீக்கு  தெரியாததா என்ன ? ஆனால் முதமைச்சர் ஒரு பிற நாட்டு  ஜனாதிபதிக்கு தனது மாகாண சபை "உளவுப்  பிரிவு " தகவல் மூலம் பெறப்பட்ட தகவல்ககளைப்  போல கைதானவர்கள் இரகசிய முகாங்களில் "படையினரின் சப்பாத்துக்களை துடைப்பதற்கும், மற்றும் சில இதர வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் " தான் அறிந்திருப்பதாக கூறி உள்ளார். முதலமைச்சரின் புலனாய்வு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய தேவை இலங்கையின் அரச புலனாய்வுத் துறைக்கு இனிமேல் ஏற்படலாம் !

ஒருபுறம் கைது செய்யப்பட்டு காணாமல் போனோர்  ஆர்ப்பாட்டங்கள் நடைபெற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கடற்படைத்  தலைவி என கருதப்படும் முருகேசு பகீரதி , குறுகிய விடுமுறையில் தனது சுகையீனத் தாயை இலங்கை வந்து சந்தித்து விட்டு , மீண்டும் பிரான்ஸ் நோக்கிச் செல்ல விமான நிலையம் நுழைந்த போது தனது எட்டு வயது மகளுடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, இப்பொழுது கொழும்பு நீதவான் நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. சட்டம் தனது கடைமையை செய்துள்ளது.

2005-ம் ஆண்டில் பிரான்ஸ் சென்றிருந்த பகீரதி போன்ற புலி ஒருவரை இக்கட்டுரையாளர் பிரான்சில் சென்ற வருடம் சந்திக்க நேரிட்டது. அவர் கடல் புலி உறுப்பினர் என்பதும் , இறுதிப் போரில் வன்னியில் இருந்து தப்பி இந்தியா சென்று அங்கிருந்து பிரான்ஸ் வந்தவர். மிகத் திடகாத்திரமான உடலும் , இயக்கத்தில் அவர் பெற்ற பயிற்சியும் , வாகன திருத்துதல் அனுபவமும்  அவரின் அடையாளத்தை நிரூபித்தன. அவரை பொருத்தவரை அவர் பாதுகாப்புப்  படையினராலோ அல்லது "இனந்தெரியாத " நபர்களாலோ கைது செய்யப்படாமல் , இலங்கையில் இருந்து தப்பி  பிறநாட்டில் வாழ்பவர் . இறுதி யுத்த படுகொலைகளில் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் அல்லது அறிக்கை இடப்பட்ட பொது மகனில் இவரின் பெயரும்  " கொல்லப்பட்டோராக " அல்லது "காணமல்போனோராக" உள்ள ஒருவரில் இருக்கலாம். இவர் பதிவுகளில் "கொல்லப்பட்ட பொதுமகன் என்றால் யுத்தக் குற்ற விசாரணையில் " இவரின் "மறைவு " இலங்கை அரசுக் கெதிரான நல்ல சான்று!. புலிகளின் தலைவர்கள் சமாதான காலத்தில் பிரான்சில்  நடத்திய இரகசிய கூட்டங்களில் கலந்து கொண்ட சிலரின் புகைப்படங்களில் காணப்படும் சிலர் இலங்கையில் காணாமல் போனோராகவும் இருக்கலாம் !  

இது போன்ற பலர் காணாமல் போயிருக்க வேண்டும் , இறுதி யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் இலங்கையை விட்டு, இலங்கையில் உள்ள குடிவரவு குடியகல்வு ஊழல் காரணமாக கையூட்டு வழங்கி தப்பி ஓடியவர்கள் பலர், குறிப்பாக யுத்தம் முடிந்தபின்னர் முகாங்களில் இருந்து நாட்டை விட்டு வெளியேறியவர்கள் பலர். அதிலும்   தங்களின் சொந்த அடையாளத்தை (பெயர் இன பிறப்பு) புகலிடம் பெரும் காரணங்களுக்காய் புனைந்து மாற்றி வாழ்பர்கள் பலர், தாங்கள் புகுந்த நாட்டின் கடவுச் சீட்டின் மூலம் இலங்கைக்கு செல்லும் பொழுது அவர்களும் எந்த இனத்தை சேர்ந்தவராயினும் காணமல் போனோர் ஆகவே கருத்தப்படுவார்கள் !.  புகலிடம் கோரி கப்பல்களில் கனடா   சென்றடைந்தவர்கள்  , வழியிலே பல நாடுகளில் அகப்பட்டுக் கொண்டு தங்கள் விரும்பும் மேற்கு நாடுகளுக்கு செல்ல , அங்கு புகலிடம் கோர காத்திருப்பவர்கள் என்பவர்களில் பலரும் இறுதி யுத்தத்தில் "கொல்லப்பட்டவர்களில்"   உள்ளனரா என்பதுவும்  இதுவரை மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. 

இந்த பின்னணியில் இலங்கையிலிருந்து  இன்னமும் தமிழர்கள் மட்டுமல்ல , சிங்களவர்கள் முஸ்லிம்கள் என "இன ஐக்கியத்துடன்" உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு படகுச் சவாரி செய்து அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரி செல்லும் நிலையில், சம்பந்தன் தங்களின் அரசியல் பலத்தைக் கூட்ட , அதிலும் குறிப்பாக எதிர்காலத்தில் தேர்தல்கள் தொகுதி வாரி அடிப்படையிலும் விகிதாசார அடிப்படையிலும் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் , இழக்க நேரிடும் எனக் கருதப்படும் அங்கத்துவர் எண்ணிக்கையை ஈடுசெய்ய அல்லது அதிகரிக்க , தமிழகத்திலும் ஏனைய நாடுகளிலும் வாழும் தமிழர்களை நாடு திரும்ப அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் சம்பந்தனுடன் கூட்டு  வைத்துள்ள ஈ.பீ .ஆர் .எல்.எப் சுரேஷ் பிரேமச்சந்திரன்  இலங்கை திரும்பும் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் ; நாடு திரும்பிய பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள், என்றும்;. எனவே  புலம் பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் பிற நாடுகளில் பல தசாப்தங்களாக வாழும் தமிழர்கள் அல்லது அவர்களின் சந்ததிகளில் பெரும்பாலானோர்  நாடு திரும்பும் நிலையில் இல்லை , ஆனாலும் புலம்பெயர் தமிழ் தேசியவாத சக்திகளுக்கு , தங்களின் பிரிவினைக் கோட்பாட்டிற்கு சுருதி சேர்க்கும் , இலங்கை அரசுக் கெதிரான ஆர்ப்பாட்டங்ககளை, அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க புலம்பெயர் தமிழர்களின் பலம் தேவைப்படுகிறது.!
இன்னொருபுறத்தில் இலங்கையில் சாதாரண தமிழர்களைக் கைது செய்வது என்பது இல்லை என்றோ  அல்லது கைது செய்யப்பட்டாலும் சட்ட ரீதியில்  கைதுகள் விசாரணைகள் , பிணை என்பன வழங்கப்படுகின்றன என்பதை மறைத்துவிட்டு புகலிடம் கோரும் தமிழருக்கு ஆதரவாக செயற்படுவதில் புலம்பெயர் புலி ஆதரவு சக்திகள் அங்கு நடைபெறும் கைதுகள் குறித்து தங்களின் வழக்கமான பிரச்சாரங்களை  முடிக்கிவிட்டுள்ளன.


இலங்கையில் அரசு மாற்றம் என்பது இலங்கையின் புலனாய்வு பயங்கரவாத நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது. அந்த வகையில் இலங்கை தனது பாதுகாப்புக் குறித்து , சட்டத்திற்குட்பட்டு எடுக்கும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படலாம் , அதேவேளை சட்டத்தை மீறிச் செய்யப்படும் செய்கைகள் கூட அவ்வப்பொழுது மறைக்கப்படலாம்!
14/03/2015

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...