தமிழ் தலைமைகளின் துரோக அரசியல் வரலாறும் மீண்டும் தோன்றியிருக்கும் இணக்க அரசியல் ஞானமும்! -சுப்பராஜன்

மிழ் தேசியக் கூட்டமைப்பில் பெயருக்கு 5 கட்சிகள் இருந்தாலும் அதை வழி நடாத்துபவர்களும், தீர்மானம் எடுப்பவர்களும் ‘மும்மூர்த்திகள்’ தான். அவர்கள் மூவரும் கூட்டமைப்பில் ஆதிக்கம் வகிக்கும் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் இரா.சம்பந்தன். இன்னொருவர் மக்களால் தெரிவு செய்யப்படாத தேசியப் பட்டியல் (பின்கதவு) பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். மூன்றாமவர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.



இந்த அணியில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஏன் விடுபட்டுப்போனார் என்ற கேள்வி பலருக்கு எழலாம். மாவையின் சொல்லையும் செயலையும் பார்ப்பவர்கள் அவர் பெயருக்குத்தான் தலைவராக இருக்கிறார் என்ற கருத்தைக் கொண்டிருப்பதால், அவரை விட்டுவிடுவோம். அதற்கு ஒரு காரணம் மற்றைய மூவருக்கும் இருக்கும் ‘தராதரங்கள்’ மாவைக்கு இல்லை என்பதும் பலரின் கருத்து.
முன்குறிப்பிட்ட மூவரும் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு புதிய வார்த்தையைப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அது வேறொன்றும் இல்லை, ‘இணக்க அரசியல்’ என்ற வார்த்தைதான். இவ்வருடம் ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரம வைரியான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு, எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவாகி, கூட்டமைப்பினருக்கு மிகவும் பிடித்த ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி அமைத்ததும்தான், கூட்டமைப்பினருக்கு இணக்க அரசியல் என்ற வார்த்தை ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது.
இதற்கு முன்பும்கூட, பல வருடங்களாக காலத்துக்காலம் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இணக்க அரசியல் பற்றிப் பேசியும், செய்தும் வந்திருக்கிறார்கள். உதாரணமாக முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் அல்பிரட்
துரையப்பா, நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் சி.அருளம்பலம், வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ஆ.தியாகராசா, பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ஆ.தங்கத்துரை, மட்டக்களப்பு சாம் தம்பிமுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சி யாழ்.மாவட்ட அமைப்பாளர் கு.விநோதன் என அப்பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

ஆனால் அப்பொழுது இணக்க அரசியல் பேசிய இவர்களை எல்லாம் முன்னர் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவும், பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் “துரோகிகள்” என வர்ணித்ததுடன், அவர்களுக்கு இயற்கை மரணம் கிடையாது எனவும் கூறி, தமிழிளைஞர்களுக்கு உசுப்பேத்தி அவர்களில் பலரை புலிகள் கொலை செய்வதற்கு வழிவகுத்தனர்.
இணக்க அரசியல் பேசியவர்களில் ஆகப்பிந்திய தமிழ் அரசியல் தலைவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா. அவரையும் துரோகி என இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வர்ணித்ததுடன், அதன் காரணமாக புலிகள் அவரை சுமார் 9 தடவைகள் கொலை செய்வதற்கும் எத்தனித்தனர். ஆனால் இன்று வடக்கு தமிழ மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கு முன்னைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடனும், அவ்வரசின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் இணைந்து பெரும் பணியாற்றிய பெருமை ஈ.பி.டி.பி கட்சிக்குத்தான் உரியது என்பதை, தலைகீழாக நின்றாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் மறுக்க முடியாது.

சரி இவையெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த மும்மூர்த்திகளுக்குத் தோன்றிய இந்த புதிய ‘இணக்க அரசியல்’ நிரந்தரமாக நின்று பிடித்து, அதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை விளையுமா என்பதையும் பார்த்துவிடுவது நல்லது. ஏனெனில் இன்று இவர்கள் பேச ஆரம்பித்திருக்கும் இணக்க அரசியல் இன்றைய தலைமுறைத் தமிழ் மக்களுக்கு புதுமையாகவும், ஆச்சரியமானதாகவும், சில வேளைகளில் நம்பிக்கை அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். ஆனால்; இவர்களின் முன்னைய தலைமைகளினதும், தற்போதைய தலைமையினதும், அரசியல் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இவர்களின் தற்போதைய இணக்க அரசியல் என்பது ஒரு ‘புரூடா’ என்பது தெளிவாக விளங்கும்.

உண்மையில் தமிழ் முதலாளித்துவத் தலைமைகளின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அவர்கள் எப்பொழுதெல்லாம் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் பதவிக்கு வருகின்றனவோ அப்போதெல்லாம் ஆவேசமாக இன விடுதலைப் போராட்டம் நடாத்துவதும், ஐ.தே.க. அரசாங்கம் பதவிக்கு வந்தால் தமது போராட்டங்களை எல்லாம் கைவிட்டு அந்த அரசுடன் கூடிக்குலாவி இணக்க அரசியல் செய்வதும், ஒரு தொடர்ச்சியான நடைமுறையாக இருந்து வந்துள்ளதைக் காணலாம்.
மற்றவர்களைத் துரோகிகள் என்று குற்றம் சாட்டும் இவர்கள்தான் தமது வரலாறு முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிரான துரோக அரசியல் செய்திருக்கிறார்கள்.
  • சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கம் ஐ.தே.கவின் டி.எஸ்.சேனநாயக்க தலைமையில் அமைந்த போது அதில் அகில தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஒரு அமைச்சரானார். (அப்பொழுது எஸ்.ஜே.வி.செல்வநாயகம், கு.வன்னியசிங்கம், ஈ.எம்.வி.நாகநாதன் எல்லோரும் அக்கட்சியில்தான் இருந்தனர்) அந்த அரசு திட்டமிட்டு தமிழ் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்ததுடன், இந்திய வம்சாவழி தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்தது. இந்த நடவடிக்கையை பொன்னம்பலமும் அவரது கட்சியும் ஆதரித்து வாக்களித்தன.
  • இலங்கையின் சுதந்திர தினத்தையும், அதன் சிங்கக் கொடியையும் புறக்கணிக்கிறோம் என கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லி வந்த தமிழ் தலைமை, அதைக் கைவிட்டு சம்பந்தன் ரணிலுடன் கைகோர்த்து சிங்கக் கொடி பிடிக்கவும், இவ்வருட சுதந்திர தின விழாவில் ஐ.தே.க அரச பிரதிநிதிகளுடன் வீற்றிருக்கவும் வழி வகுத்திருக்கிறது.
  • சமஸ்டி கொள்கையே தமது கொள்கை எனக் கூறிவந்த தமிழரசுக் கட்சி 1965 தேர்தலின் பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நிபந்தனையுடன் ஆதரவளித்து தமிழர் பிரச்சினையில் சிலவற்றைத்தானும் தீர்ப்பதற்கு இருந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டு, கே.எம்.பி.ராஜரத்ன, ஆர்.ஜீ.சேனநாயக்க போன்ற தீவிர சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க அரசில் பங்கேற்று ஒன்றுமில்லாத வெறும் ‘மாவட்ட சபைகள்’ பெறப்போவதாகச் சொல்லி, பின்னர் அதுவுமில்லாமல் ஏமாந்த வரலாறு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
  • 1957இல் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக பண்டாரநாயக்கவும் செல்வநாயகமும் ஒப்பந்தம் செய்தனர். அதை எதிர்த்து ஐ.தே.க ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் ‘கண்டி யாத்திரை’ செய்து ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் சிங்கள இனவாதிகளுக்கு எதிராக பண்டாரநாயக்கவின் கைகளைப் பலப்படுத்த வேண்டிய தமிழரசுக் கட்சி தேவையில்லாமல் சிங்கள சிறீ எதிர்ப்புப் போராட்டத்தை நடாத்தி இனவாதிகளுக்குத் தீனி போட்டது.
  • 1976இல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி ‘தனித் தமிழ் ஈழம் ஒன்றே இனித் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு’ என்று அறிவித்துவிட்டு, பின்னர் 1977இல் ஜே.ஆர்.தலைமையில் ஐ.தே.க அரசு அமைந்த போது அதனுடன் கூடிக்குலாவி அதிகாரமற்ற ‘மாவட்ட அபிவிருத்தி சபைகள்’ என்ற ஏமாற்றுக்குச் சம்மதித்து இறுதியில் அதுவும் இல்லாமல் போன வரலாறும் இதே தமிழ் தலைமைக்கு உண்டு.
  • புலிகளுடனான இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை அரச படைகள் ‘இனப்படுகொலை’ செய்ததாகக் குற்றஞ்சாட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அதற்கான முழுப்பழியையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது சுமத்திவிட்டு, 2010 ஜனாதிபதித் தேர்தலின் போது அந்த யுத்தம் முழுவதையும் களத்தில் நின்று வழிநடாத்திய முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகவை வெளிப்படையாக ஆதரித்தது.
  • அதேபோல மகிந்த அரசில் 10 வருடங்களாக முக்கிய அமைச்சராகவும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலராகவும், இறுதி யுத்த நேரத்தில் மகிந்த நாட்டில் இல்லாத நேரத்தில் 2 வாரங்கள் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேனவை இவ்வருடம் ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு ஆதரித்தது.
இவ்வாறாக தமது வரலாறு முழுவதும் மற்றைய தமிழ் அரசியல்வாதிகள் அல்ல, இந்தப் பிற்போக்குத் தமிழ் தலைமைகளே தமிழ் மக்களுக்கு எதிராகத் துரோகம் செய்து வந்திருக்கிறார்கள். இவர்கள் உண்மையான தமிழ் தேசியவாதிகள் அல்லர்.; இவர்கள் ஏகாதிபத்திய சக்திகளின் சிங்களப் பிரதிநிதிகளாக ஐ.தே.க இருப்பது போல, இவர்கள்; அதே ஏகாதிபத்திய சக்திகளின் தமிழ் பிரதிநிதிகள் என்பதே உண்மை. அதனால்தான் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் பதவிக்கு வந்தால் எதிர்ப்பு அரசியல் நடாத்துவதும், ஏகாதிபத்திய சார்பு ஐ.தே.க அரசு பதவிக்கு வந்தால் அதனுடன் கூடிக்குலாவி இணக்க அரசியல் நடாத்துவதுமாக இருக்கிறார்கள்.

தற்போது இவர்கள் பேசத் தொடங்கி இருக்கும் இணக்க அரசியலும் இந்த வகையானதுதான். ஏனெனில் இவர்களது வர்க்க சகபாடியான ஐ.தே.க இப்பொழுது ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. தற்செயலாக அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்று (அதற்கான சாத்தியம் நிறைய இருக்கின்றது) ஆட்சி அமைத்தால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் எதிர்ப்பு அரசியல் செய்ய ஆரம்பிப்பதை நிச்சயமாகக் காண முடியும்.
அதனால்தான் தமது இணக்க அரசியல் பற்றி அண்மையில் கருத்துத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “நாம் சொல்லும் இணக்க அரசியல் மற்றவர்களுடையது போன்றது அல்ல” எனப் பொடி வைத்துப் பேசியிருக்கிறார்.

மார்ச் 18, 2015
இதழ் 51, வானவில் 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...