“உலகம் பழித்தது ஒழிக்க" யார் முன் வருவர் ?



உலகம் பழித்தது ஒழிக்க" யார் முன் வருவர் ?

எஸ்.எம்.எம்.பஷீர்

எனது மகள் பாத்திமா திருடினாலும் அவளின் கரங்களை துண்டிப்பேன்'”

                                                                                  -முஹம்மது நபி (ஸல்)



கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளதாக வந்த செய்தியை தொடர்ந்து அந்த முறைப்பாட்டைச்  செய்தவர் ஊடகமொன்றுக்கு  பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் ரிஷாத்தோ அவரின் குடும்பத்தினரோ சுமார் பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு மோட்டார் சைக்கிள் தானும் சொந்தமாக வைத்திருக்கவில்லை”  என்றும் , ஆனால் இப்பொழுது அவர் திருட்டுத்தனமாக  சொத்துக்கள் சேர்த்திருப்பதாகவும் , அவர் ஒரு மில்லியனராக உள்ளார் என்றும் திருட்டை  ஒழிப்பதாக கூறிய புதிய அரசாங்கம் "ரிஷாத்தைப் போன்ற திருடர்களை "  உள்வாங்கி அவருக்கு அமைச்சுப் பதவியும் , நிறைவேற்று சபையிலும் அங்கத்துவம் அளித்திருப்பதாகவும் குறை கூறி உள்ளார்.



முறையிட்டவரின்  புகாரில் உண்மை உள்ளதா இல்லையா என்பதை இலஞ்ச ஆணைக்குழு விசாரித்து முடிவுக்கு வர வேண்டும்.  ரிஷாத்தும் தன மீது சுமத்தப்படும் குற்றங்கள் , ஊழல்கள் பொய்யானவை என்றும் இலஞ்ச ஆணைக்குழு விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எப்படியோ நிரூபிக்கப்படும் வரை ரிஷாத் குற்றவாளி இல்லை என்பது குற்றவியல் சட்ட அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஊகமாகும் ! . 

படம் : வேல சுதா , சுராஸ் அஹமட்

புதிய அரசாங்கம் ஏற்றதன் பின்னர் சுமார் 61 அரசியல்வாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஆணைகுழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம் நாடாளுமன்ற அங்கத்தவர்களைப் பொருத்தவரை எத்தனை பேர் மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் அல்லது முறைகேடாக சொத்துச் சேர்த்தமை பற்றி முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது பற்றி  இதுவரை அறிய முடியவில்லை. ஆனாலும் முஸ்லிம்  நாடாளுமன்ற பிரதிநிதிகள் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி , தண்டனை பெற்றார்களா என்று பின்னோக்கிப்  பார்த்தால் கிழக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு முஸ்லிம்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்ச ஆணைக்குழுவில் விசாரிக்கப்பட்டு தமது நாடாளுமன்றப் பதவிகளை இழந்துள்ளார்கள். முதன் முதலில் கல்முனைத் தொகுதி எம்.பீ ஆகவிருந்த எம்.எஸ். முதலியார் காரியப்பர் முஸ்லிம்களின்   அரசியலில் களங்கத்தை ஏற்படுத்தியவர். 1960ஆம் ஆண்டு இவரை இலஞ்ச ஆணைக்குழு குற்றவாளியாகக் கண்டதால்  எம்.எஸ். முதலியார் காரியப்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் வழி தொடர்ந்தவர் பின்னர் பொத்துவில் எம்.பீ யாகவிருந்த எம்.எஸ்.ஜலால்தீன் இலஞ்ச குற்றச்சாட்டின் அடிப்படையில் 25 மாசி மாதம் 1983 ஆம்  ஆண்டு நாடாளுமன்ற அங்கத்தவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரின் குடியுரிமையும் பறிக்கப்பட்டது.

புதிய அரசாங்கம்  ஆட்சிக்கு வந்த கையோடு பரபரப்பாக பேசப்பட்ட பல செய்திகள் இப்பொழுது  வலுவிழந்து போய் விட்டன; என்றாலும் பல முறைப்பாடுகள்   விசாரணையில்  உள்ளன;  புதிது புதிதாக முறைப்பாடுகள் முளைவிடுகின்றனதனிப்பட்ட  வகையில் அரசியல் வலுப்படுத்தலுக்காக  ஜே .வீ .பீ  எவ்வித அதிகாரமும் இன்றி ,   பொது மக்களிடம்  முறைப்பாடுகளைப் பெற்று இலஞ்ச ஆணையகத்துக்கு கையளித்து  அரசியல் இலாபம் தேட முயற்சிக்கிறார்கள். எனினும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால்  மகிழ்ச்சிக்குரியதே!. முறைப்பாடுகளின் முடிவுகள் வரும் வரை  முறைப்பாடுகள் பற்றிய தீர்ப்புக்களை  முன்கூட்டியே பலர்  முடிவு கட்டிவிட்டார்கள் போல தோன்றுகிறது.!

இந்த புதிய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தென் ஆசியாவில் மிகப்பெரும் வரி மோசடி செய்த முஸ்லிம் வியாபாரிகள் இருவர் தண்டிக்கப்பட்டுள்ளார்கள் . இலங்கையில் வட் எனப்படும் (VAT-பெறுமதி கூட்டி ய வரி) ஏய்ப்பு செய்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த ரஷீத் மொஹமட்  முர்ஷீத்  , மற்றும்  நாகூர் அடுமை முஹம்மத் நஜ்மி , ஆகிய இரண்டு முஸ்லிம் வர்த்தகர்கள் , மலேசியாவில் ஒளிந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு முறையே 280,உம் , 100 வருட  வருட சிறைவாசமும் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.


பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வெல  சுதா எனும் போதை வஸ்து கேடி மூலம் போதை வஸ்து போன்ற பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட முஸ்லிம்கள் சிலர் கூட  கைதாகி உள்ளார்கள் , விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .

கடந்த காலங்களில் போதை வஸ்து கடத்தல் வியாபாரம் செய்தல் போன்ற மிக பாரிய குற்றச் செயல்களில் சில "பிரபல" முஸ்லிம் நபர்களும் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.  பாகிஸ்தானில் உள்ள போதை வஸ்து  வியாபாரிகள்   மிக நீண்ட காலமாகவே இலங்கைக்கு போதை வஸ்துக்களை கடத்துவதையும் , இலங்கையில் உள்ள போதை வஸ்து வஸ்து வியாபாரிகளுடன் "ட்ராக்  கார்டல்" (Drug Cartel) எனப்படும் நிறுவனமயப்படுத்தப்பட்ட வகையில் பரஸ்பரமாக செயற்பட்டு வந்தமையும் ஒரு புதிய செய்தியே அல்ல.  அண்மையில் கைதுகளில் சுராஸ் முஹம்மத் போன்றோரின் கைதுகள்  இதை மேலும் உறுதி செய்கின்றன.

அது போலவே கடந்த அரசின் காலத்தில் "குடு நவ்பர் " போன்ற முஸ்லிம்  போதை வஸ்து வியாபாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் , சிலர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதும், இன்னும் சிலர் என் கவுண்டர் (Encounter) எனப்படும் பொலிசாரின் திடீர் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டதும் கூட செய்திகள் தான். ஆனால்  வெல சுதாவின் கைது மூலம் இலங்கையில் பல இரகசியங்கள் வெளி  வந்தன , அதன் விளைவாய் , நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கைது செய்யப்பட்டார். மேலும்  பலர் தேடப்பட்டு  .வருகிறார்கள் . அண்மையில் கைது செய்யப்பட்ட தெஹிவல எனும் இடத்தை சேர்ந்த சுராஸ் அஹமது என்ற "பிரபல" (தகாவழிப் பேர்போன) போதை வஸ்து  வியாபாரி ஹபரணையில் வைத்து ஒரு 15 வயது சிறுமியுடன் கைதாகி உள்ளார் , அதுவும்  , அந்த சிறுமியுடன் தொடர்ச்சியாக வன்புணர்வு செய்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. வெல சுதாவின் மிக நெருங்கிய சகாவான முஹம்மத் மக்கீம் முஹம்மத் சித்தீக் இன்னமும் தேடப்பட்டு வருகிறார்.

இது போன்ற செய்திகள்   என்பது சட்டம் தனது கடமையை நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் செய்ய வேண்டும் என்ற எதிபார்ப்பிற்கு  என்ன செய்தியைச் சொல்லப் போகிறது !. போதை வஸ்து குற்றவாளிகளுடன் மிகக் கடினமாக நடந்துகொண்ட துணிச்சலும் நேர்மையும் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியவை போதைவஸ்துகாரர்கள்  சுட்டுக் கொன்றார்கள். ஆகவே நீதி இம்முறையும் வெல்லுமா அல்லது மரிக்குமா என்ற கேள்வி நியாயமாகவே எழுகின்றது. ஏனெனில்  முஹம்மத் முன்னர் கொழும்பு போதைவஸ்து வழக்கில் ஆதாரமின்றி (சட்ட வாதங்களுடன்  ?) தப்பிச் சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இக் கட்டுரையாளர் அறிந்தவரையில் உள்ள செய்தி என்னவென்றால் "குடு நவ்பர்" எனப்படும் நபர் கொழும்பு வாழைத்  தோட்டத்தில் கைது செய்யப்பட்டதும்  இலண்டனில் உள்ள  அவரின் பிரதேசத்தைச் சேர்ந்த, குடு நவ்பருடன் அறிமுகமான , ஒருவர் "கொழும்பில் ஒரு தொழிற்சங்கவாதி" கைது  செய்யப்பட்டுள்ளார்  என்று  ஒரு சில தமிழ் ஊடகங்களில் குடு நவ்பரின் அடை மொழிகளை  நீக்கி பூடகமாக ஒரு செய்தியினை வெளியிட்டார். அதன் நோக்கம் அன்றைய அரசுக்கு எதிராக அவர் ஒரு பத்திரிக்கையாளராக புகலிடம்  கோரி , புகலிடம் பெற்றிருந்தார். தனது தொடர்புகள் மூலம் அப்படியான செய்தியினை வெளியிட்டு அன்றைய அரசுக்கு எதிராக ஒரு குற்றவாளியின் கைதையும் புலம் பெயர் அரச எதிப்பு சூழலைப் பயன்படுத்தி அவர் திரிவுபடுத்தியிருந்தார். 

அரசியல்வாதிகளை மட்டுமல்ல நமது அன்றாட வாழ்வில் சாதாரண கிராம சேவகர் தொடக்கம் பாடசாலை அனுமதிக்காக கையூட்டு வாங்கும் அதிபர்கள், இலட்சக் கணக்கில் சொத்துக்களை முறைகேடாக சேர்த்துக் குபேரர்களாக  வாழும்  சுங்க, காவல்துறை , குடிவரவு , குடியகல்வு , ஆட்பதிவுத் திணைக்கள , மோட்டார் திணைக்கள உத்தியோகத்தர்கள் , உயர் அதிகாரிகள் யாவர் மீதும்  முறைப்பாடுகள் செய்யப்படுவதை  ஊக்குவிக்க வேண்டும் !. அரசியல்வாதிகளில் பலர் அரசியலுக்கு வர முன்னர் இருந்த வறிய நிலையில் இன்று இல்லை .மிகப் பெரும் பணக்காரர்களாக மாறி உள்ளார்கள் என்பதால் , தேர்தலில் போட்டியிடுபவர் சமர்ப்பிக்கும் வெறும் சடங்கு பத்திரத்தில் வெளிப்படுத்தும் சொத்துக்கள்  உண்மைச் சொத்துக்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டு வேறுபாடு காணப்படுமிடத்து , விசாரணைகள் முடுக்கிவிடப்படல் வேண்டும். ஒரு  சமூகம் குற்றவாளி  "நமது சமூகத்தைச் சேர்ந்தவர் " என்பதை முற்றிலும் உதறித் தள்ளி  நீதியை நிலைநாட்ட  திட சங்கற்பம் பூண வேண்டும்.!   இலங்கையில் எதிர்பார்க்கும் மாற்றம் வருமா ? அல்லது எதிபார்ப்புக்கள் வெறும் வாயலம்பல்தானா ?


08/03/2015

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...