பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா! 10 மானத் தமிழர்கள்? -வீ. சுந்தரராஜன்


இராணுவ அதிகாரியொருவருக்கு உலகத்தரத்தில் வழங்கப்படும் அதியுயர் பதவியானFonseka1 பீல்ட் மார்ஷல் பதவி, இலங்கையில் முதன்முறையாக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கான இந்தப் பதவி உயர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருக்கிறார். ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இது நடந்திருக்கிறது. 

இது படைத்துறையில் அளிக்கப்பட்ட மிக உயர்வான மரியாதை. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பெரும் சாதனை புரிந்தால் மட்டுமே இந்த மாதிரியான பதவியை படைத்தளபதிகளுக்கு வழங்கும் நடைமுறை உள்ளது என்று வேறு சொல்லப்படுகிறது. தென்னாசியாவில் இந்த மதிப்புயர்ந்த பதவியை இதுவரையில் மூன்று பேர் மட்டுமே பெற்றிருக்கிறார்கள். இப்பொழுது பெற்றிருப்பவர் சரத் பொன்சேகா.

ஆகவே மிகப் பெரியதொரு சாதனையை ஜெனரல் சரத்பொன்சேகா செய்திருந்ததற்காகவே இந்த பதவி உயர்வை அரசாங்கம் வழங்கியிருக்கிறது.

அப்படி என்ன பெரிய சாதனையைச் சரத்பொன்சேகா செய்தார்?

விடுதலைப் புலிகளை அழித்தது ஒருபெரும் சாதனை என்றா? அல்லது, முள்ளிவாய்க்காலின் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் படுகொலைக்காகவா? அல்லது வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளின் முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்ததாகக் கூறப்படும் நடவடிக்கையின் இராணுவத்தளபதி என்பதற்காகவா? அல்லது சரணடைந்த புலிகள் உறுப்பினர்களைப் பற்றிய தகவலே தெரியாமல் செய்யப்பட்டார் என்பதற்காகவா? அல்லது, இவை எல்லாம் இணைந்த காரணங்களுக்காகவா?

ஏனென்றால் பீல்ட் மார்ஷல் என்ற இந்த உயர்ந்த பதிவி யுத்தத்தில் நிகழ்த்திய பெரும் சாதனைக்காகவே வழங்கப்படுவதாகும். இலங்கை அரசு யாருடன் போர் செய்தது? எந்த நாட்டுடன் யுத்தம் புரிந்தது? சரத் பொன்சேகா எந்த யுத்தத்துக்குத் தலைமை தாங்கினார்? யாருடனான யுத்தத்துக்குத் தலைமை தாங்கினார்?

இந்தக் கேள்விகளை இன்று தமிழர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால், இதே சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்குவதற்காக 2010 இல் அதிகப்படியான  தமிழர்கள் வாக்களித்தார்கள்.

ஆனால், அப்பொழுது சரத் பொன்சேகா வெற்றியடையவில்லை.

தமிழர்கள் விடவேயில்லை. ஐந்து ஆண்டுகள் காத்திருந்து, இப்பொழுது மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து, சரத் பொன்சேகவை பீல்ட் மார்ஷல் ஆக்கியிருக்கிறார்கள்.

அதாவது, தங்களைக் கொன்றமைக்காக – தங்களை சிறைகளில் அடைத்தமைக்காக, தங்களின் உறவினர்களைப் பற்றிய தகவல்களைத் தெரியாமலே வைத்திருந்தமைக்காக, தங்களுடைய அடிப்படை மனித உரிமைகளை மறுத்தமைக்காக அவர்கள் மிகப் பெரிய பரிசொன்றை அளித்திருக்கிறார்கள்.

என்னமாதிரியான மகத்தான சாதனை இது.

இந்தச் சாதனையைத் தமிழ் மக்கள் செய்வதற்கு வழிகாட்டிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் அதனுடைய தலைமைக்கும் தமிழ்மக்கள் தங்கள் வரலாறு முழுவதும் பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்க வேண்டும்.

உண்மையான அர்த்தத்தில் இந்தப் பதவி உயர்வையும் மாண்பையும் இலங்கை அரசு சரத் பொன்சேகாவுக்கு வழங்கவில்லை. தமிழர்களே வழங்கியிருக்கிறார்கள். தமிழர்களின் ஆதரவின் மூலமாக அமைக்கப்பட்ட அரசினால்தான் இந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

இவர் பீல்ட் மார்ஷல் ஆவதற்கு ஒரு விடுதலைப்போரும் லட்சக்கணக்கில் மக்களும் பலியாகினர். ராஜபக்ஷ யுத்தத்தை வெல்லவில்லை. அந்த ராணுவவெற்றியில் சரத்திற்கே பெரிய பங்கு இருக்கிறது என்பதை இந்த பதவியுயர்வு தெளிவாகவே இயம்புகிறது. ஆகவே இப்பொழுது யுத்தக் குற்றத்திலிருந்து மகிந்தவை விடுவிக்க முயற்சித்திருக்கிறது புதிய அரசு. ஆனால், எப்படியோ எந்த அரசு வந்தாலும் நிச்சயம் தமிழர்களை சங்கடத்தில் உட்படுத்தும் வேலைகளை செய்துவிடும் என்பதை மறுபடியும் நிரூபிக்கிறது இந்தப் பதவியுயர்வு. தமிழர்களின் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியே தமிழர்களை கொன்றவர்களுக்கு பதவி உயர்வையும் மதிப்பளிப்பையும் வழங்கியிருக்கிறார்.

ஆனால், சரத்பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் கிடைத்தது பற்றி தமிழர்களிடம் எதிர்ப்பையே காணவில்லை. ஆகவே இதை அவர்கள் இரகசியமாக ஆதரிக்கிறார்களா? ஏனென்றால் மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியல்லவா!

கடந்த தடவை தமிழர்கள் இவரை ஜனாதிபதியாக்குவதற்காக முக்கிய முத்தாக்கள். இப்பொழுது பீல்ட் மார்ஷல் ஆக்குவதற்காகவும் முக்கி உழைத்திருக்கிறார்கள்.
தமிழர்கள் எப்பொழுதும் இப்படித்தான் மற்றவர்களுக்குப் பரிசை அளித்து விட்டுத் தங்கள் மூக்கை உடைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் தமிழர்கள்தான் மாதன முத்தாக்கள் போலும்.

ஆகவே, இதற்கேற்றமாதிரித்தான் தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ்ப் புத்திஜீவிகளும் சிந்திக்கிறார்கள்ளூ முடிவுகளை எடுக்கிறார்கள்.

இதற்கு என்ன காரணம் என்றால், இவர்கள் எப்பொழுதும் இனமானமாக எதையும் சிந்திப்பதுதான். இனமானம் அறிவை மறைத்து விடும். அறிவு மறைந்து போனால் நிதானம் இருக்காது. நிதானமில்லாதவர்கள், சரியாகச் சிந்திக்க முடியாது. அதனால்தான் உணர்ச்சி வசப்படுகிறார்கள். உணர்ச்சி வசப்பட்டுச் சிந்திக்கும்போது, அறிவை மறந்து சிந்திக்கும்போது தவறுகள் நிகழ்கின்றன.

இந்தக் குணம்தான் - இந்த இயல்புதான் தமிழ் மக்களின் பின்னடைவுக்குக் காரணமாகும்.

சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வும் மதிப்பளிப்பும் வழங்கப்பட்டமையானது தமிழ் அரசியல் முறைமைக்கு விழுந்துள்ள மிகக் பெரிய அடியும் மானக்கேடுமாகும்.

முள்ளிவாய்க்கால் அவலத்தையும் வெள்ளைக்கொடி விவகாரத்தையும் இறுதிப்போரையும் சரணடைந்த போராளிகளின் தகவலற்ற நிலையையும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று தமிழ்த் தேசியவாதிகள் சொல்லி வரும் நிலையில், அந்த மனித உரிமை மீறல்களைச் செய்தவருக்கு, அவை நிகழ்வதற்கான காரணகர்த்தருக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கப்பட்டமை எப்படியானது?

ஒரு சாதாரண சமாதான நீதவானுக்கான பதவிக்கே ஒரு சிறு குற்றச்சாட்டு இருந்தாலே பிரச்சினையாக இருக்கும்.
இது எப்பேர்ப்பட்ட உயர்ந்தபதவி?

போர் என்பது கொலைகளுடன் சம்மந்தப்பட்டது. ஆகவே எத்தனை கொலைகள் நடந்தாலும் பரவாயில்லை. போரின் வெற்றிதான் முக்கியமானது. அந்த வெற்றிக்கே மதிப்பு. அந்த வெற்றியைப் பெற்றுக்கொடுத்தவருக்கே மதிப்பும் மதிப்பளிப்பும். அத்தகைய வெற்றியைப் பெற்றுக்கொடுத்தவர் சரத் பொன்சேகா.
ஆகவே, அவருக்கு இந்த மதிப்பளிப்புச் செய்யப்பட்டது சரியானது என்று எந்தத் தமிழ்த் தேசியத் தமிழராவது சொல்லத் தயாரா?

உண்மையில் சரத் பொன்சேகாவுக்கு இந்த உயர் பதவியை வழங்கியிருப்பதன் மூலமாக தமிழ் மக்களை அவமதித்திருக்கிறது அரசாங்கம்.

ஆனால், இதைக் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாய் திறக்கவில்லை. அவர்கள் கள்ள மெனளம் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் வாய் திறந்து, மனந்திறந்து ஒரு வார்த்தை பேச முடியாது.

காரணம், இது அவர்கள் செய்த முட்டாள்தனமாகும். ஆகவே இதை எதிர்ப்பது தமது தவறைத் தாமே அம்பலப்படுத்துவதாகும்.

அதாவது, முள்ளிவாய்க்கால் இரத்தம் காய முன், சரத் பொன்சேகாவுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டவர்கள், யுத்தக் குற்றத்துக்கான தண்டனை வழங்கப்பட முன்பு, அந்த யுத்தத்தில் பங்கெடுத்தவருக்காகப் பரிந்து பேசியவர்கள், எப்படி இந்தப் பீல்ட் மார்ஷல் விடயத்தில் வாய்திறக்க முடியும்? என்று சொல்லிச் சிரிக்கிறார்கள் பலர்.
இது இன்றைய அவலம் மட்டுமல்ல. தொடர் அவலமாகும்.  

Source:  http://www.thenee.com/html/290315.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...