இலங்கைக்கு உதவுவதற்கு இன்று இரண்டு தரப்புக்கள் இரண்டு வ
ிதமாகப்
போட்டிபோட்டுக்கொண்டு நிற்கின்றன. ஒருபுறம் சீனா இலங்கையின் அபிவிருத்தித்
திட்டங்களுக்கு உதவுவதற்கு தயார் என பெருந்தொகை நிதியுடன் கைகொடுக்கக்
காத்திருக்கிறது. மறுபுறம் மேற்குலகம், மனித உரிமைகள், நல்லாட்சி ஆகிய
விடயங்களில் இலங்கைக்கு பாடம் எடுக்கப்போகிறோம் என்று கங்கணம்
கட்டிக்கொண்டு நிற்கின்றது.

நாட்டின்
அபிவிருத்திக்கான முதலீடுகளா அல்லது ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி
தொடர்பான (அவர்களது?)பாடங்களைக் கற்பதா என்பதை தீர்மானிக்கவேண்டிய நிலையில்
தற்போது இலங்கையர்கள் இருக்கிறார்கள்.
இலங்கையின்
அபிவிருத்திக்கு கைகொடுக்கும் சீனாவின் பெருந்தொகை முதலீடுகளை மேற்குலகம்
விருப்பத்தோடு பார்க்கவில்லை. பெருமளவு முன்னேற்றம் கண்டு முதலாம் உலக
நாடுகளாக இருக்கும் மேற்குலகம், அபிவிருத்தியில் பின்தங்கியிருக்கின்ற
இலங்கைக்கு முதலில் ஜனநாயக பாடம் எடுக்கப்படவேண்டும் என்று
அடம்பிடிக்கிறது. ஆனால், பசித்திருப்பவனுக்கு பாடமெடுப்பதில் பயனென்ன
என்பதுபோல், முதலில் தன்னை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தவேண்டிய
நிலையிலேயே இலங்கை இருக்கிறது.
உட்கட்டுமான வசதிகளை பெருக்கிய சீனாவின் 5.4 பில்லியன் டொலர்கள்!
இன்றைய
நிலையில் இலங்கையின் வெளிநாட்டு முதலீடுகளில் மிகப்பெருமளவு வீதாசாரத்தை
வழங்கும் நாடாக சீனாதான் இருக்கிறது. அது வழங்கும் மொத்தக் கடன்தொகை 5.4
பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில், 34 சதவிகிதம் இலங்கையின் வீதி
அபிவிருத்திக்கெனவும், 26 சதவிகிதம் துறைமுக அபிவிருத்திக்கெனவும், 30
சதவிகிதம் சக்தி வலு விருத்திக்கெனவும் வழங்கப்பட்டவையாகும். இந்த மூன்றுமே
மிக நீண்டகாலமாக போதிய முதலீடுகள் இல்லாமல் பின்னடைவைச் சந்தித்து வந்தவை
என்ற வகையில், 30 வருட போர் அழிவுகளுக்குப் பிந்திய இலங்கையின்
அபிவிருத்திக்கு இவை மிக மிக அவசியமானவையாக உள்ளன.
1948ம்
ஆண்டு முதல் இதுவரையில் அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியிருக்கும்
கடன்தொகையான 3.6 பில்லியன் டொலரோடு ஒப்பிடுகையில், சீனா இலங்கைக்கு
வழங்கியிருக்கும் 5.6 பில்லியன் டொலர் மிகப்பெரிய தொகையாகும். அதிலும்,
சீனா வழங்கிய கடனில் மிகப்பெரும் பகுதி வீதி, துறைமுகம், மின்சக்தி மற்றும்
வலு அதிகரிப்பு என, இலங்கையை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவதற்கானதாக
இருக்க, அமெரிக்கா வழங்கிய 3.6 பில்லியனின் மூன்றில் இரண்டு பகுதி
உணவுக்கானதாகவே(இலங்கையை தொடர்ந்தும் தங்கி வாழும் நிலையில் வைக்கும்?)
இருந்தது என்று கொழும்பு ஆய்வாளர் ரங்கா ஜயசூரிய டெய்லி மிறர்
பத்திரிகையில் அண்மையில் எழுதிய ஆக்கமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில்
மட்டுமன்றி, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும்கூட மேற்குலக
நாடுகளைவிடவும் சீனாதான் இப்போது அதிகளவு கடன்களை வழங்கும் நாடாக
முன்னணியில் நிற்கிறது. மேற்குலகின் பரந்த பிரதேசமான ஐரோப்பாவில்கூட
இப்போது அதிகளவு முதலீடுகளை மேற்கொண்டு பெருமளவானோருக்கு வேலைவாய்ப்புக்களை
வழங்குவதில் சீனாவே முன்னணி வகிக்கிறது. ஒரு காலத்தில் அமெரிக்காவின்
நிதிச்சந்தையில் முதலீடுகளைச் செய்துவந்த சீனா, இப்போது தனது முதலீடுகளை பல
மட்டங்களுக்கும் விரிவாக்கியிருக்கிறது.
இவ்வாறு,
மேற்குலக நாடுகளே சீனாவின் முதலீடுகளால் நன்மையடைந்துக்கொண்டிருக்கிறது
என்றால், இலங்கையைப் போன்றதொரு மூன்றாம் உலக நாட்டுக்கு சீன முதலீடு
எந்தளவு முக்கியமானது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
தேர்தல் வாக்குறுதிகளால் திண்டாடும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம்!
இவ்வாறு,
இன்றைய நிலையில் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் சீனாவின்
முதலீடுகள் தொடர்பான தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு பெரும் குழப்பம்
நிறைந்ததாகவே இருக்கிறது. இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் முதலீடாக
அமைந்துள்ள சீனாவின் 1.34 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொழும்பு
துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தை நிறுத்திவிடப்போவதாக தற்போதைய பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கா கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளிப்படையாகத்
தெரிவித்திருந்தார்.
ஆட்சிக்கு
வந்ததும், இந்தத் திட்டம் சூழலியல் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்று
காரணம் சொல்லி அதற்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. ஆனால், இதற்கென
நியமிக்கப்பட்ட விசேட குழுவினர் அத்தகைய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று
அறிக்கை தந்துவிட்டதாக பின்னர் அமைச்சவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன
அறிவித்தார்.
அதன்பின்,
இந்தத் திட்டம் உரிய முறையில் அனுமதி பெறப்பட்டு ஆரம்பிக்கப்படவில்லை
என்றும், அமைச்சரவைக்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்றும்
புதிய பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, மார்ச் 5ம் திகதி துறைமுக
நகரத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த அறிவிப்பையும்
அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவே விடுத்திருந்தார் என்பது
வேடிக்கையான விடயம்.
அரசியல் காரணங்களுக்காக அபிவிருத்திக்கு ஆப்படிப்பு?
கொழும்பு
துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துவதற்கான முயற்சிகள் உண்மையில் அது
ஏற்படுத்தக்கூடிய சூழலியல் பாதிப்புக்கள் அல்லது அந்தத் திட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்ட முறையில் உள்ள குறைபாடுகள் என்பவற்றைவிடவும் அதிகம்
அரசியல் காரணங்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கொழும்பு
ஆய்வாளர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எதிர்வரும்
ஏப்ரல் மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும்
சூழ்நிலையில், தேர்தலை இலக்கு வைத்த காய்நகர்த்தலாகவே இந்த நடவடிக்கைகள்
அமைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு
அரசியல் ரீதியான காரணங்களுக்காக அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையில்
தடைப்பட்டது இதுவே முதற்தடவையல்ல என்று சுட்டிக்காட்டுகிறார் கொழும்பு
ஆய்வாளர் ரங்கா ஜயசூரிய. 1980ம் ஆண்டு திருகோணமலை அனல் மின்நிலையத் திட்டம்
மற்றும் ராகம தனியார் மருத்துவக் கல்லூரி திட்டம், 1990ம் ஆண்டு கந்தளம
ஹொட்டேல் திட்டம் மற்றும் உணவற்றுன கேபிள் கார் திட்டம் என்பனவும்
இதேபோன்று அரசியல் காரணங்களுக்காகத் தடைப்பட்டிருப்பதை தனது டெய்லி மிறர்
கட்டுரையொன்றில் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதுபோன்று,
அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள், ஆர்ப்பாட்டங்களால்
அபிவிருத்தி நடவடிக்கைகள் பின்தள்ளப்பட்டதற்கான விலையை நாடும் மக்களும் பல
தடவைகள் தாங்கவேண்டியிருந்தது என்பதையும் அவர் நினைவுபடுத்துகிறார்.
சீனாவின் பட்டுப்பாதைத் திட்டமும் இலங்கையின் பொருளாதார பாதையும்
21ம்
நூற்றாண்டின் பட்டுப்பாதைத் திட்டம் என்று சீனா அறிவித்திருக்கும் புதிய
திட்டம், கடல் பாதையூடாக பல நாடுகளை இணைத்து, அந்த நாடுகளின் துறைமுகங்களை
அபிவிருத்தி செய்து, அந்த நாடுகளுக்கும், சீனாவுக்கும், அந்தந்த
நாடுகளுக்கிடையிலும் தொழிற்துறை உற்பத்தி விருத்தி மற்றும் ஏற்றுமதி,
இறக்குமதியை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் இலங்கை உட்பட பல நாடுகளிலும் சீனா பெருந்தொகை
பணத்தை முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
இந்த
முதலீடு அந்தந்த நாடுகளின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை
வழங்குவதாகவும், வேறெந்த உலக நாட்டினாலும் இன்றைய நிலையில் வழங்கப்பட
முடியாதளவு உதவியாகவும் இருக்கும் நிலையில், எந்தவொரு நாடும் கிடைக்கும்
உதவியை கைவிட நினைக்காது.
இந்தப்
பட்டுப்பாதைத் திட்டத்தின் மிக முக்கிய மையத்தில் அமைந்திருக்கும்
இலங்கைக்கு இந்தத் திட்டத்தின் மூலம் அதிகளவு பயன் கிடைக்கவிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் தந்திரோபாய ரீதியாக இலங்கை தன்னை சரியான இடத்தில்
நிலைநிறுத்திக்கொள்வதன் மூலம் மொத்த இலங்கையின் பொருளாதார வளர்ச்சியிலும்
மிகப்பெரிய ஒரு அடைவை எட்ட முடியும். அதைவிடுத்து, சர்வதேச ஒழுங்கில்
கோலோச்சும் மேற்குலகுடன் சமரசம் செய்துகொள்ளவேண்டும் என்பதற்காக, அதனைத்
திருப்திப்படுத்தும் வகையில் சீன முதலீடுகளை உதாசீனம் செய்ய முற்பட்டால்,
அது அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு இலங்கைக்கு மிகப்பெரும் பாதிப்பாகவே
அமையும் என்று பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கையை விரித்து விட்டது சர்வதேச நாணய நிதியம்
சரி,
இப்போ சீனா இலங்கையில் முதலீடு செய்யவில்லையாயின், அதற்குப் பதிலாக இலங்கை
யாரை நாடலாம்? ஜனவரி 8ம் திகதி தேர்தலின் பின்னர் புதிய ஆட்சியை
அமைத்திருக்கும் அரசாங்கத் தரப்பினர் சீன முதலீட்டுக்கான மாற்றீடாக சர்வதேச
நாணய நிதியத்தையே முன்னிறுத்தினர். வெளிநாட்டு பயணம் ஒன்றை முடித்துவிட்டு
நாடு திரும்பிய இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயகா, சர்வதேச நாணய
நிதியமும், உலக வங்கியும் இலங்கைக்கு பெருமளவு நிதியை வழங்கத் தயாராக
இருப்பதாக மிகவும் உற்சாகமாக அறிவித்திருந்தார்.
ஆனால்,
சில நாட்களில் இலங்கை வந்த சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் இலங்கைக்கு
இப்போது நிதியுதவி வழங்கவேண்டிய எந்தத் தேவையும் கிடையாது என்று கையை
விரித்துவிட்டனர்.
அப்படியே
சர்வதேச நாணய நிதியமோ, உலக வங்கியோ இலங்கைக்கு கடன் வழங்க முன்வந்தாலும்,
அவை நிபந்தனையுடன் கூடிய கடன்களாகவே இருக்கும். ஏனைய நாடுகளின்
உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கும்
சீனாவைப்போல் நிபந்தனையற்ற கடன்களை வழங்க அவை ஒருபோதும் முன்வரப்போவதில்லை.
இன்னும் நூறு வருடங்களுக்கு இப்படி ஒரு முதலீடு கிடையாது!
இவ்வாறானதொரு முதலீட்டைச் செய்ய முன்வந்தமைக்காக சீனாவுக்கு நன்றியாக இருக்கவேண்டிய இலங்கை, மாறாக, சீனாவை ஒரு குற்றவாளிபோல் நடத்த முற்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
சீனாவின் இத்தகைய பொருளாதார நன்மைகளை அனுபவிக்கும் விடயத்தில் பல மேற்குலக நாடுகளே முற்போக்கான முடிவுகளை எடுத்திருப்பதை ஆய்வாளர் ரங்கா ஜயசூரிய சுட்டிக்காட்டுகிறார்.
சீனாவைப் புறந்தள்ளும் விதத்தில் ஜப்பானின் ஆலோசனைப்படி அமைக்கப்பட்டிருந்த ஜப்பான், இந்தோனேஷியா, இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கூட்டில் அங்கம் வகித்து வந்த அவுஸ்ரேலியா, முன்னாள் பிரதமர் கெவின் ரூட் காலத்தில் சீனாவின் உதவிகளைப் பெறவேண்டும் என்பதற்காக அதிலிருந்து விலகும் முடிவை எடுத்திருந்ததை ரங்கா ஜயசூரிய இங்கு உதாரணம் காட்டுகிறார்.
பொருளாதார ரீதியாக ஆசிய வல்லரசாக எழுந்து நிற்கும் சீனாவைப் புறந்தள்ளிவிட்டு வேறெந்த நாடுகளையும் சுற்றி வலம் வருவதால் இலங்கை தன்னை பொருளாதார ரீதியாக வளர்த்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகமே. 30 வருடங்களுக்கு மேற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக பொருளாதார அபிவிருத்தியில் பெருமளவு பின்தங்கியிருக்கும் இலங்கை, சமகால உலகப் போக்குக்கு ஈடாக இலங்கையைத் தூக்கி நிறுத்துவதற்கு சீனாவைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே, தற்போதைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர் பலத்தைக் கொண்டிருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் முதற்கொண்டு பலரது விருப்பமாகவும் இருக்கிறது.
அது அந்தவிதமாக நடந்தேறுமா என்பதுதான் இப்போதிருக்கும் 1.34 பில்லியன் டொலர் கேள்வி.
Source: http://www.thenee.com/html/200315.html
No comments:
Post a Comment