முகம்திருப்பு /Sugan Paris

 


முகம்திருப்பு /
*********
சில - பலவிடயங்களுக்கு சாட்சியாக இருப்பதல்ல ,காலத்தின் வாழும் சாட்சியாக இருத்தல் மிகவும் துயரமானது ,அது தண்டனையும்கூட .நீத்தார் பெருமை ,துயர் பகிர்தல் சிறப்பான மானிடப் பண்பாகப் பேணப்படும் நம் மரபில் இறந்துபோன ஒருவரின் ஆளுமை இன்னபிற பெருமைகளைப் பேசும் நாட்களில் அவர் விட்டுச்சென்ற தவறான பக்கங்களை நினைவுகூரல் நற் பண்பாக நம்மிடையே கொள்ளப்படுவதில்லை ,ஒருசிலர் மனம் வெதும்பி அல்லலுற்று ஆற்றாமல் அழுத கண்ணீரோடு அவற்றை பேசி பதிந்துவிடுகின்றனர் , சக நண்பர்களுடன் ஆற்றாமல் முறையிடுகின்றனர் .இப்படி நண்பர் சோபா , கி .பி அரவிந்தன் குறித்த இரங்கலுரையில் குறித்தவற்றை சில பக்குவப்பட்ட அவதானிகள் அசூசையுடனும் கண்ணியம் இன்றியதாயும் கருதுகின்றனர் ,அந்தப் பதிவை எடுத்துவிடும்படியும் அவரை கேட்டுக்கொள்கின்றனர் .நானும் இவற்றிற்கு மௌன சாட்சியாயும் உரத்த சாட்சியாயும் இருப்பதன் நிமித்தமாய் இது குறித்து கருத்துக்கூறவேண்டி இருக்கிறது .இது அவர் குறித்த "போஸ்ட்மோர்ட்டம் ரிப்போர்ட்" அல்ல ,அவரை இயங்கச் செய்த பாசிச யுத்த சூழல் அதன் கருத்தமைவுகள் தொடர்பானது .


ராஜினி கொல்லப்பட்ட சூட்டோடு அதைக் கண்டித்து பாரிஸில் நாங்கள் நடாத்திய கண்டனக் கூட்டம் குறித்த துண்டுப்பிரசுரம் விநியோகித்தபோது ஒரு சலூன் கடைக்காரர் மிகப் பொருத்தமாகவே என்னிடம் சொன்னார் " அங்கை செத்தவருக்கு இங்கை போஸ்ட்மோர்ட்டம் "
"இறந்தவன் தன்னுடைய பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்படுகிறான் "என பைபிள் (ரோமர் :6:7)சொல்கிறது .அரவிந்தன் தன் இயக்க சார்பாக கொண்டுவந்த "நட்புறவுப் பாலம்" வழியே எனக்கு எழுத்துவழி அறிமுகமானார் .ஈரோஸ் ஸ்தாபர்களில் ஒருவரான தோழர் அழகிரி எனக்கு அவற்றின் பலபிரதிகளை தந்துதவினார் ,அழகிரியோடு நான் எப்போதும் கருத்து மன வேற்றுமை கொண்டவனில்லை .தன் வாழ்வின் அத்தனை துயர்களையும் இந்த தமிழ் அரசியல் வழி அடைந்தவர் அவர் . நம்மில் அனேகமாக எல்லோருமே இந்த அரசியல் வழியில் துன்பங்களையும் துயரங்களையும் மட்டுமே கண்டுள்ளோம் ,ஒரே ஒருவரைத் தவிர ,அவர் யாரென உங்களுக்கு மிகை விளக்கம் சொல்லி உங்களை சலிப்பூட்ட நான் விரும்பவில்லை ,இந்த அரசியலின் அத்தனை நலன்களையும் அவர் அடைந்தார் ,கலாநிதி ,பென்விருது இப்படி ,இன்னும் அவர் அடையவேண்டிய உச்சங்கள் அநேகம் உண்டு ,வாழ்க ,!அழகிரி அவர்கள் பிரபாகரன்மீது அவர் கொண்டிருந்த ஆழமான வெறுப்பு ,பிரபாகரனின் உளவியல் பற்றிய அவரது அவதானங்கள் அவரை என்னுடன் இணைத்தது .

பிரான்சில் புலிகளின் வன்முறை நடவடிக்கைகளால் பெரிதும் துயருற்றார் ,அவர் செய்துகொண்டிருந்த செய்திச் சேவையின் காரணமாக அவர் குடும்பம் நாள்தொறும் ஆபாசப் பேச்சுக்களையே கேட்டுக்கொண்டிருந்தது ,அவர் மகன்கள் ஈழ நாதனும் வள்ளுவனும் புலிகள் மிரட்டும் ஆபாச தூஷணை வார்த்தைகளைக் கேட்டே தமிழை ஆழமாக உணர்வுபூர்வமாக கற்றவர்கள் ,அவரைச் சென்று தாக்கும்படி புலிகள் அனாமதேய துண்டுப்பிரசுரங்களை கொடுத்தார்கள் ,தனி ஒருவராக தன் குடும்பத்தோடு அவர் புலிகளின் வன்முறையை எதிர்கொண்டார் ,மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது பிரான்ஸ் அதிகூடிய புலிகளின் அதிகூடிய வன்முறை காடாக இருந்தது ,
சபாலிங்கம் கொல்லப்பட்டார் , "சொல்லாயோ வாய்திறந்து வார்த்தையொன்று சொல்லாயோ வாய்திறந்து "என சபாலிங்கம் படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசச்சொல்ல அப்போது எழுதிக்கொண்டிருந்தவர்களை நாம் கெஞ்சினோம் ,சபாலிங்கத்தின் நெருங்கிய நண்பரான அரவிந்தன் அப்படி ஒரு சம்பவமே நடந்ததாக எங்கும் காட்டிக்கொள்ளவில்லை ,சபாலிங்கத்தின் இறுதிகிரியைக்கும் அவர் வரவில்லை ,எழுத்தாளர்களை புலிகளுக்கு ஆட் சேர்க்கும் வேலையில் அவர் முனைப்பாக இருந்தார் .ஈற்றில் "நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்" பிரச்சாரகராகவும் ,தேர்தல் கொமிசனராகவும் இருந்து தன் கனவின் மீதியையும் வாழ்ந்து முடித்தார் .

சில விடயங்களை மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது ,கடவுள் மன்னிக்கலாம் ,நாம் சாதாரண மனிதர் ,அதனால்தான் :"இறந்தவன் தன்னுடைய பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்படுகிறான் "என பைபிள் (ரோமர் :6:7)சொல்கிறது: இத்தகைய கொலைக்கலாசாரத்தை கண்டிக்க மனமின்றி இருந்த அதிலே ஆறுதல் அடைந்த மகிழ்ச்சிப்பட்ட பிரான்சில்தான் பின்னர் அவர்களுக்குள்ளே அடுக்கடுக்காக பல கொலைகள் நடந்தன ,சில நாட்கள் முன்னரும் ஒருவர் தாக்கப்பட்டார் ,கண்டிக்கத்தான் எப்போதும் நாங்கள் இருக்கிறோமே !, கண்டிக்கவும் இறப்புக்கு அஞ்சலி செலுத்தவும் ,மரியாதை செலுத்தவும் ஒருவரே இருந்துவந்த நிலை போய் இப்போது தனி அஞ்சலி செலுத்தும் காலம் கனிந்திருப்பது ஆறுதலளிக்கிறது .

source: Sugan Paris face book

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...