புதிய அரசியலமைப்பு: மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதை!



லங்கையின் இன்றைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் விரைவில் ஒரு புதிய அரசியல் அமைப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.

இதிலுள்ள முதலாவது பிரச்சினை என்னவென்றால், வரப்போவது முற்றிலும் ஒரு புதிய அரசியல் அமைப்பா அல்லது தற்போதைய அரசியல் அமைப்புக்குத் திருத்தங்களா என்பது அநேகருக்குத் தெளிவில்லாமல் உள்ளது. அரசாங்கமோ அல்லது இதைத் தயாரிக்கவுள்ள அரசியல் சாசன நிபுணர்களோ இது எந்த வகையானது என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் ஒரு வசதிக்காக வரப்போவது புதிய அரசியல் சாசனம் என்றே வைத்துக் கொண்டு மேலே செல்வோம்.
அடுத்ததாக, இந்த புதிய அரசியல் அமைப்பு என்ன நோக்கத்துக்காகக் கொண்டு வரப்படுகிறது என்பது குறித்தும் தெளிவில்லாமல் இருக்கின்றது. தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்காக முதலில் அகிம்சை வழியில் போராடி அது தோற்றுப்போகப் பின்னர் ஆயுதம் தாங்கிப் போராடி அதிலும் பெரும் இழப்புகளையும் தோல்விகளையும் கண்ட சூழ்நிலையில், தற்போதைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, நாட்டில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவே புதிய அரசியல் சாசனம் கொண்டு வரப்படுகிறது என அரசாங்கமும், தமழர்களின் பிரதான அரசியல் அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒருபக்கத்தில் பிரச்சாரம் செய்கின்றன.




அவர்கள் அப்படிச் சொன்னாலும், உண்மை அதுவல்ல, தற்போதைய அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்த மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளின் தேவைகளையும், இந்த வலதுசாரி அரசின் தேவைகளையும் பூர்த்தி செய்யவுமே இந்த புதிய அரசியல் சாசனம் கொண்டு வரப்படுகிறது என நாட்டின் இடதுசாரி மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் வாதிடுகின்றன. இங்கும் நாம் அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சொல்வதையே ஒரு வாதத்துக்காக ஏற்றுக்கொண்டு மேலே செல்வோம்.

இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்தே தமிழர் தரப்பின் கோரிக்கை தம்மைத்தாமே ஆளும் அதிகாரம் வேண்டும் என்பதுதான். ஆனால் அது ஆரம்பத்தில் தனிநாட்டுக் கோரிக்கையாக எழுப்பப்படவில்லை. ஆரம்பத்தில் தமிழ் காங்கிரஸ் தலைமையில் முன்பக்கத் தொடர்ச்சி…
இருந்த ஒன்றுபட்ட தமிழ்த் தலைமை ஐம்பதுக்கு ஐம்பது என்ற கோரிக்கையை முன்வைத்தது. பின்னர் தமிழரசுக் கட்சி (வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த) சமஸ்டி என்ற கோரிக்கையை முன்வைத்தது. பின்னர் இரண்டு கட்சிகளும் இணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாடு கோரிக்கையை முன்வைத்தது.

தனிநாடு என்பது பேச்சுவார்த்தை மூலம் பெற முடியாதது என்பதால், தமிழ் இளைஞர்கள் தனிநாடு இலட்சியத்துக்காக ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்தனர். அந்தப் போராட்டம் 30 வருடங்கள் நடைபெற்று தமிழ் மக்களுக்குக் குறிப்பாகவும், நாட்டுக்குப் பொதுவாகவும் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய பின்னர் 2009 மே 18ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் தமிழ்த் தலைமை விரும்பியோ விரும்பாமலோh, இலங்கை ஒரே நாடு என்ற அதன் ஒருமைப்பாட்டை ஏற்றுக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் தற்போதைய தமிழ் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை போர் முடிவடைந்த பின்னர் அப்போது அதிகாரத்தில் இருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திடம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஸ்டி அமைப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தது.

மாகாணசபைகள் அமைப்பதற்கு வழிவகுத்த 13ஆவது திருத்தச் சட்டத்துக்கும் அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக மகிந்த அரசு முன்வைத்த யோசனையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரித்ததுடன், விடாப்பிடியாக சமஸ்டி அமைப்பையே வலியுறுத்தி நின்றது.

தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு மகிந்த அரசு தீர்வு காணவில்லை என்ற ஒரு சாக்குப்போக்கைச் சொன்ன தமிழ் கூட்டமைப்பு, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அணியை ஆதரித்து அந்த அணி வெற்றிபெற உதவியது. அதற்குப் பிரதி உபகாரமாக 52 உறுப்பினர்கள் கொண்ட உண்மையான எதிரணி இருக்க, 16 பேர் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து மைத்திரி – ரணில் அரசால் வழங்கப்பட்டது.

இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் தமக்கு வேண்டியதை அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். இதற்குப் பிரதி உபகாரமாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கத்தின் பேச்சாளர் போலவே செயற்படுவதைக் காண முடிகிறது. ஆனால் இவர்களை நம்பி இவர்களுக்குக் காலம் காலமாக வாக்களித்து வரும் தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்தது?

முதலில் ஐம்பதுக்கு ஐம்பது என்றார்கள். பின்னர் சமஸ்டி என்றார்கள். பின்னர் தனிநாடு என்றார்கள். எல்லாவற்றையும் தமிழ்ப் பொதுசனம் மறு பேச்சில்லாமல் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இதில் எதையும் இந்தத் தமிழ் தலைமைகளால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. சில சந்தர்ப்பங்களில் அரச தலைமைகள் நிர்ப்பந்தம் காரணமாக சில தீர்வுகளை முன்வைத்தபோது அவைகளையும் தமது அரசியல் இருப்புக்காக குழப்பியடித்தார்கள்.
நடைமுறைப்படுத்த முடியாத அதியுச்ச கோரிக்கைகளை முன்வைத்த தமிழ்த் தலைமைகள் உண்மையில் நடைமுறையில் செய்ததென்ன? சமஸ்டி பேசியவர்கள் 1965இல் ஐ.தே.க. அரசில் இணைந்து மந்திரிப் பதவி பெற்றதுடன், அதிகாரம் எதுவுமற்ற மாவட்ட சபையையும் ஏற்றுக் கொண்டனர். 1976இல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி தனிநாடு தீர்மானம் நிறைவேற்றியவர்கள், அதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடித்து எதிர்க்கட்சிப் பதவியையும் பெற்றவர்கள், இறுதியில் 1981இல் ஜே.ஆர் கொண்டுவந்த அதிகாரம் ஏதுமற்ற மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்றுக் கொண்டனர்.

2015இல் மகிந்த தமிழ் மக்களின் பிரச்சினை எதனையும் தீர்க்கமாட்டார் எனப் போர்க்கொடி தூக்கி, மைத்திரியையும் ரணிலையும் ஆதரித்து ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் ஆக்கியவர்கள் இப்பொழுது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எந்தவிதமான தீர்வையும் வழங்காத புதிய அரசியல் அமைப்புக்கு ஆதரவளிக்கின்றனர்.

புதிய அரசியல் அமைப்பு அடிப்படையில் தற்போதுள்ள அமைப்பையே ஒத்திருக்கப் போகின்றது. அதாவது, ஒற்றையாட்சி அப்படியே பேணப்படப் போகின்றது. பௌத்தத்திற்கு முன்னுரிமை அப்படியேதான் இருக்கப் போகின்றது. வடக்கு கிழக்கு இணைப்போ, சமஸ்டி அமைப்பு வழங்குதலோ நடைபெறப் போவதில்லை. ஏற்கெனவே உள்ள மாகாண சபை முறைதான் தொடரப் போகின்றது. அதிலும் உள்ள அதிகாரங்கள் மேலும் குறைக்கப்படப் போகின்றன.

இதை அரசுக்கு முண்டு கொடுத்து வரும் ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரிஸ்வின் சில்வாவே பகிரங்கமாகக் கூறுகிறார். அண்மையில் புதிய அரசியல் அமைப்புப் பற்றிக் கருத்துத் தெரிவித்த அவர், தற்போது இருக்கின்ற மாகாண சபை முறை பிரிவினைத் தன்மை வாய்ந்தது என்றும், புதிய அரசியல் அமைப்பு அவ்வாறானது அல்ல என்றும், எனவே புதிய அரசியல் அமைப்பை எதிர்ப்பவர்கள் பழைய பிரிவினைவாத மாகாணசபை முறையை நடைமுறைப்படுத்துவதையா விரும்புகிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். எப்பொழுதும் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை எதிர்த்து வரும் ஜே.வி.பி. இவ்வாறு கூறுவதிலிருந்தே வரப்போகும் புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களைப் பொறுத்தவரை உப்புச்சப்பில்லாதது என்பது தெட்டத் தெளிவாகிறது.

1987இல் இந்தியாவின் முயற்சியால் அப்போதைய ஜே.ஆரின் சிங்களப் பேரினவாத அரசை அடிபணிய வைத்து கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறையை எதிர்த்து இந்தியாவுடன் யுத்தம் செய்த புலிகளும், அதை ஆதரித்து நின்ற தமிழ்த் தலைமையும், இன்று மாகண சபை முறையை, அதிலும் அதன் உண்மையான சாரத்தை நீக்கிய ஒன்றை ஏற்பதானால், இது போன்ற வரலாற்றுத் துரோகம் வேறு எதுவுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மாகாண சபை முறைமையை ஒரு தொடக்கப் புள்ளியாக ஏற்றுக் கொண்டு தொடர்ந்து கூடுதலான அதிகாரப் பகிர்வுக்காகப் போராடும்படி, இடதுசாரி, ஜனநாயக சக்திகள் கூறிய ஆலோசனையை முற்றிலும் நிராகரித்த புலிகள் உள்ளிட்ட தமிழ்த் தலைமை, இப்பொழுது அதையே அரைகுறையாக ஏற்பதானால், 1987இல் இருந்து 2009 வரை இத்தனை வருடங்கள் அநியாயமாக பலியிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களுக்கும், கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்தழிவுக்கும் யார் பொறுப்பு?

இந்தியா மட்டுமல்ல, பின்னர் சந்திரிக ஜனாதிபதியாக இருந்து நீட்டிய நேசக்கரத்திலும் காறிப் துப்பியதுடன், பின்னர் மகிந்த நீட்டிய நேசக் கரத்தையும் தட்டிவிட்ட தமிழ்த்தலைமை இன்று வழமைபோல எதுவுமற்ற புதிய அரசியல் அமைப்பை ஏற்று நிற்கிறது.
தமிழ்த் தலைமையின் இந்தத் துரோகம் இதுதான் முதற் தடவை அல்ல. இது பத்தோடு பதினொன்றாவது. அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றும் நோக்குடன் இது திட்டமிட்டுச் செய்யப்பட்டும் வருகின்றது. பிச்சைக்காரனுக்கு காலில் புண் இருப்பது அவனது தொழிலுக்கு அவசியம் என்பது போல, தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பது பிற்போக்குத் தமிழ்த் தலைமையின் அரசியல் இருப்புக்கு மிகவும் அவசியம் என்பதே அதற்கான காரணமாகும்.

இதில் அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அது அவர்களது பாரம்பரிய பரம்பரைத் தொழில். சிந்திக்க வேண்டியவர்கள் தமிழ்ப் பொதுமக்கள்தான். அப்படியில்லை, தொடர்ந்தும் தாம் ஏமாறத் தயார் எனத் தமிழ் மக்கள் கருதுவார்களாக இருந்தால், அவர்களை தமிழரசுக் கட்சித் தலைவர் முன்பொரு முறை தனது அரசியல் கையறு நிலைக்கு வந்தபோது சொன்ன கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

Source: வானவில் இதழ் 82  நவம்பர் 4, 2017


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...