“மக்கள் சீனத்தை பிரமாண்டமான அதிநவீனமான சோசலிச நாடாக மாற்றுவோம்!”

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின்

19ஆவது மாநாட்டில் சூளுரை!!

2050ஆம் ஆண்டிற்குள் மக்கள் சீனத்தை “உலகிலேயே மிகப்பிரம்மாண்டமான, அதிநவீனமான சோசலிச நாடாக” மாற்றுவோம் என சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மாநாடு சூளுரைத்துள்ளது.
சீன்கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மாநாடு பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமன்றத்தில் அக்டோபர் 18 புதனன்று துவங்கியது. மாநாட்டின் துவக்க நிகழ்வுகளுக்கு பிரதமரும் கட்சியின் அரசியல் நிலைக்குழு உறுப்பினருமான லீ கே கியாங் தலைமை வகித்து உரையாற்றினார்.

மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதியுமான ஜீ ஜின்பிங் (Xi Jinping) உரையாற்றினார். பிரதிநிதிகள் அமர்வில் ஜீ ஜின்பிங் தாக்கல் செய்த பொதுச் செயலாளர் அறிக்கையில், மக்கள் சீனத்தின் புதிய சகாப்தத்திற்கான புதியசிந்தனைகளை முன்வைத்தார். இந்த அறிக்கை மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. “சீன மண்ணுக்கு ஏற்ற சோசலிசம் என்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாதை, ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைந்திருக்கிறது. எதிர்வரும் காலத்தில் கட்சி அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு நீண்டகால வழிகாட்டுதலாக புதிய சகாப்தத்திற்கான சீன குணாம்சத்துடன் கூடிய சோசலிச சிந்தனை அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


அப்படிப்பட்ட சிந்தனையானது, மார்க்சிய – லெனினியத்தை மேலும் செறிவூட்டுவதாக அமைந்திடும்; மாவோவின் சிந்தனைகள், டெங் சியோ பிங்கின் சிந்தனைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய, முற்றிலும் விஞ்ஞானப்பூர்வமான கண்ணோட்டத்துடன் கூடிய கோட்பாடுகளாக புதிய சகாப்தத்திற்கான சிந்தனை இருக்கும்;. சீன மண்ணுக்கேற்ற விதத்தில் மார்க்சியத்தை அமலாக்குவதற்கான சிந்தனையாக அது முன்னெடுத்துச் செல்லப்படும்” என்று ஜீ ஜின்பிங் தனது துவக்க உரையில் குறிப்பிட்டார். உலகிலேயே மிகவும் வளர்ச்சிபெற்ற, மிகப்பிரம்மாண்டமான – அதிநவீனமான சோசலிசநாடாக 21ஆம் நூற்றாண்டின் சரிபாதியைக் கடப்பதற்குள் சீனாவை நாம் வளர்த்தெடுப்போம் எனவும் அவர் சூளுரைத்தார். இதற்காக இரண்டு கட்ட வளர்ச்சித்திட்டத்தையும் அவர் தனது அறிக்கையில் முன்வைத்தார்.

முதல்கட்டமாக 2020 முதல் 2035 வரை 15 ஆண்டுகாலம் சீனாவின் மக்கள் சமூகத்தை ஒரு நவீனமான, வளமான சமூகமாக மாற்றுவதற்கான அடித்தளத்தை உருவாக்கிட சீன கம்யூனிஸ்ட் கட்சி முழுமூச்சாக பாடுபடுவது. இரண்டாம் கட்டமாக 2035 முதல் 2050 வரை 15 ஆண்டுகாலம் ஒட்டுமொத்த நாட்டையும் முழுமையாக நவீனமயமாக்குவது – முற்றிலும் வளர்ச்சிபெற்ற ஒரு மாபெரும் அதிநவீன சோசலிச நாடாக – வளம்பொருந்திய, பலம் பொருந்திய, ஜனநாயகம் மிகுந்த, கலாச்சார ரீதியாக மிகவும் முன்னேறிய, மக்கள் சமூகங்களிடையே நல்லிணக்கம் பூத்துக்குலுங்குகிற – உலகிலேயே ஒரு அழகான நாடாக மாற்றுவதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒட்டுமொத்த சக்தியும் முழு மூச்சாக பாடுபடுவது என்று ஜீ ஜின்பிங் தனது அறிக்கையில் முன்வைத்தார். இந்த இலக்கை எட்டுவதற்கான தேவை மற்றும் வாய்ப்புகள் குறித்து விரிவான முறையில் தனது அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டினார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாத அரங்குகளுக்கு தலைமையேற்று வழிகாட்டிய தலைவர்கள், பொதுச் செயலாளர் ஜீ ஜின்பிங்கின் புதிய சகாப்தத்திற்கான சிந்தனைகள் குறித்தும், சீன கம்யூனிஸ்ட் கட்சி அடுத்த 30 ஆண்டுகாலத்தில் நிர்வாக ரீதியாகவும், ஸ்தாபனரீதியாகவும் மாபெரும் வளர்ச்சியை எட்டும் விதத்திலும் இந்த மாநாடு திட்டமிடும் என்றும் கூறினர். கட்சியின் அரசியல் தலைமைக்குழுவின் நிலைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான ஜாங் தேஜியாங் கூறுகையில், “19வது மாநாட்டில் பொதுச் செயலாளர் ஜின்பிங் முன்வைத்துள்ள சிந்தனை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பாக இருக்கும். சீன குணாம்சத்திற்கு ஏற்றவாறு மார்க்சியத்தை பொருத்துவதில் இது ஒரு சாதனை மைல்கல் என்று குறிப்பிட முடியும்;.”

“சீன குணாம்சத்திற்கு ஏற்றவாறு மார்க்சியத்தை பொருத்துவது என்ற கோட்பாடும் நடைமுறையும் சீனாவை அதன் தன்மைக்கு ஏற்ற விதத்தில் சோசலிசத்தை நோக்கி முன்னேற்றிச் செல்கிற அடிப்படை யான அம்சமாகும்” என்று அரசியல் தலைமைக்குழுவின் மற்றொரு நிலைக்குழு உறுப்பினரான யூ ஜெங்ஸெங் குறிப்பிட்டார். “மார்க்சிய – லெனினியத்தை உயர்த்திப்பிடித்து மாவோ மற்றும் டெங் ஆகிய தலைவர்களின் சிந்தனைகளை உள்வாங்கி 19வது மாநாடு உருவாக்குகிற புதிய சகாப்தத்திற்கான சிந்தனையானது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல், தத்துவார்த்த மற்றும் நடைமுறை செயலாக்க முக்கியத்துவத்தை உணர்த்துகிற ஒரு வழி காட்டும் கோட்பாடாக மலர்ந்திருக்கிறது. கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இந்த கோட்பாட்டை அதன் வரலாற்று பின்னணியோடு, விஞ்ஞானப்பூர்வ புரிதலோடு, நடைமுறைப்படுத்தும் உத்வேகத்தோடு கற்றிட வேண்டும்; செயலாற்றிட வேண்டும்” என்று அரசியல் தலைமைக்குழுவின் மற்றொரு நிலைக்குழு உறுப்பினரான லியூ யுன்ஷான் குறிப்பிட்டார்.

ஜின்பிங் முன்வைத்த புதிய சகாப்தத்திற்கான கோட்பாட்டில் 14 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவின் கட்சிப் பள்ளி தலைவரான பேராசிரியர் சென் சுங்யுவாங், “மக்கள் சீனம் புதிய சகாப்தத்திற்குள் நுழைந்திருக்கிறது. 21ஆம் நூற்றாண்டில் மார்க்சியத்தை ஒரு விரிவடைந்த பார்வையோடு அமலாக்குவதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் துவங்கியிருக்கிறது” என்று குறிப்பிட்டார்

– சின்குவா (Xinhua) செய்தி ஸ்தாபனம்

மூலம்: வானவில் நவம்பர் 2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...