(இலங்கையின் வட பகுதியில் தோழர் மு.கார்த்திகேசன் அவர்கள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை 1946இல் முதன்முதலாக ஸ்தாபிப்பதற்கு உதவிய முன்னோடிகளில் ஒருவரான தோழர் எம்.சி.சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு (1917 – 2017) நினைவையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.)
உலகளவில் இடதுசாரி இயக்கங்களின் செயற்பாட்டில் தேக்கம், சோர்வு, பின்னடைவு உள. இலங்கையிலும் அதன் தாக்கம் புலப்படுகிறது. ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ஆகிய பிற்போக்கு சக்திகள் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தைப் பின்னடையச் செய்ய பிரதேச, மத, இன, மொழி உணர்வுகளைத் தூண்டி அதன் வழிப் போராட்டங்களுக்குத் தீனி போட்டு ஊக்குவித்து வருகின்றன.
இலங்கையில் 1971இல் ஜே.வி.பி.இன் எதிர்ப்புரட்சிக் கிளர்ச்சி, தமிழ் தேசிய இயக்கங்களின் ஆயுத நடவடிக்கைகள், இடதுசாரி இயக்கங்களின் தலைமையில் திட்டமில்லாத, கோட்பாடற்ற தேசிய முதலாளித்துவத்துடன் இணைந்த போக்கு என்பன இடதுசாரி இயக்கங்களே இல்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. தேசிய முதலாளித்துவ சக்திகள் அல்லது விதேசிய முதலாளித்துவ சக்திகளே இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்திகள் என்ற மாயையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை, பிரித்தானிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பில் இருந்த காலத்தில் இடதுசாரி இயக்கத்தின் தேவை உணரப்பட்டது. ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், சுதந்திரத்துக்காகவும் போராட இடதுசாரி இயக்கத்தின் தேவை அவசியமென உணரப்பட்டது. இதன் அடிப்படையில் 1935ல் இலங்கை சமசமாசக் கட்சி என்ற இடதுசாரி இயக்கம் உருவாக்கப்பட்டது. அதன் தலைமையில் சிலர் சோவியத்துக்கு எதிரான கோட்பாட்டை எடுத்தனர். இதனை ஏற்காதோர் இணைந்து இலங்கை ஐக்கிய சோசலிசக் கட்சியை உருவாக்கினர். இது பின்னர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியாகிச் செயற்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடு வட இலங்கைக்கும் விரிவாக்கப்பட்டது. வட பிரதேசக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர் “எம்.சி” என அன்பாக அழைக்கப்படும் எம்.சி.சுப்பிரமணியம் ஆவார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து புரட்சிகர உணர்வோடு செயற்பட்டார். வட இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி எழுப்ப முழுநேரமாகப் பாடுபட்டார்.
எம்.சி. அவர்களின் பின்புலம் சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து பாதிக்கப்பட்டமை, ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டமை என்பனவாகும். எம்.சி. அவர்களை, இவற்றில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களை மீட்கும் போராளியாக்கியது. அது அவரைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்தது.
எம்.சி. அவர்கள் 27.09.1917ல் யாழ் நகரில் அவதரித்தார். அவரை எமக்களித்தவர்கள் தந்தை முத்தர் கணபதிப்பிள்ளை, தாயார் கண்ணாத்தாள். மூன்றரை வயதில் தாயாரை இழந்தார். பின் தந்தையின் பராமரிப்பில், சகோதரிகளின் அரவணைப்பில் வளர்ந்தார். வளர்க்கப்பட்டார். குறிப்பாக மூத்த சகோதரியான விசாலாட்சி அவர்களின் குழந்தையாகவும் அருமைச் சகோதரனாகவும் பராமரிக்கப்பட்டு வளர்ந்தார்.
எம்.சி. அவர்களின் இளமைக் காலத்தில் யாழ் குடாநாட்டில் நிலவிய சமூக அமைப்பு, ஆண்டான் – அடிமை அமைப்பு, அடிமை – குடிமை அமைப்பு, நிலமானிய நில உடமைச் சமூக அமைப்பு, தமிழர்களில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாடு என வகுக்கப்பட்டிருந்தது. சாதி ஒடுக்குமுறை கோரத்தாண்டவம் ஆடிய காலம். தீண்டாமை என்னும் சாதி அரக்கனால் தாழ்த்தப்பட்டவர்கள் என்போரின் அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்ட காலம். கொத்தடிமைத்தனம் நிலவிய காலம். குலத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும். மாற்றுத் தொழில் செய்ய மறுக்கப்பட்ட காலம்.
தாழ்ந்த சாதி எனப்பட்டோருக்கு சொந்த நிலமில்லை – உயர்சாதி நிலவுடமையாளரின் காணிகளில் குடியமர்த்தப்பட்டனர். அவர்களுக்காக உழைத்துப் பின்னர் தமக்காக உழைக்க வேண்டும். கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டதால் கல்வி அறிவு இல்லாத கைநாட்டு மக்களாக இருந்தனர். கோயில்களில் உட்சென்று வணங்கும் உரிமை இல்லை. வெளியில் நின்று மட்டும் வணங்க வேண்டும். திருவிழாக் காலங்களில் சுவாமியைக் காவும் உரிமையோ, தேரிழுக்கும் உரிமையோ இல்லை.
உடை உடுத்துவதில் சுதந்திரம் இல்லை. ஆண்கள் வேட்டியை முழங்காலுக்கு மேல் அணிய வேண்டும். பெண்கள் தாவணி போடும் உரிமை மறுக்கப்பட்டது. மேற்சட்டை அணிய முடியாது. மீறி மேற்சட்டை அணிந்து சென்றால் கொக்கைச் சத்தகத்தால் இழுத்துக் கிழிக்கப்பட்ட காலம். திருமணத்தின் போது தாலி கட்டும் உரிமை இல்லை சாதியாசாரப்படி திருமணம் நடைபெற்றது.
உயர்சாதியினர் எனப்படுவோர் வாழும் பகுதிக்குள் வாழும் வாழ்வுரிமை இல்லை. அவர்கள் வாழும் பகுதிக்கூடாக நடமாட முடியாது. அப்படி நடமாட வேண்டுமானால் காவோலையை இழுத்து அடியழித்து விடியுமுன் செல்ல வேண்டும். காலடியில் கூட தீண்டாமையின் வடிவம். கோர பாதம் பட்டால் கூட தீட்டுப்பட்டு விடுமாம். சுடலையிற் கூட சமத்துவமின்மை. உயர் சாதியினர் எப்படுவோரின் பிரேதங்கள் எரிக்கும் இடங்களில் தாழ்த்தப்படுவோரின் பிரேதங்கள் எரிக்கக் கூடாது, உயர்சாதியினரின் பகுதிக்கூடாக பிரேதங்களை எடுத்துச் செல்லத் தடை.
தாழ்த்தப்பட்டோர் எனப்படுவோர் தாம் விரும்பிப் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு தாம் விரும்பிய பெயர் வைக்க முடியாது. தேநீர் கடைகளில் போத்தல்களில் அல்லது புறம்பான பேணிகளில் தேநீர் வழங்கப்பட்டது. சாப்பாட்டுக் கடைகளில் தளபாடமிருக்கும். ஒடுக்கப்பட்டோருக்கு நிலமே ஆசனம். முடி திருத்துவதில் சமத்துவமின்மை, சலவைத்தொழிலில் சமத்துவமின்மை – இவை தீண்டாமைக் கொடுமைகள். இந்தக் கொடுமைகளினால் எம்.சி. அவர்களும் பாதிக்கப்பட்டவர். அதனால் ஒடுக்கப்பட்ட மக்கள் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து விடுபட வேண்டும், விடுவிக்கப்பட வேண்டும் என்ற உணர்வு கொண்ட போராளியாக தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
எம்.சி. அவர்கள் தந்தையின் பராமரிப்பில், சகோதரிகளின் அரவணைப்பில் வளர்ந்து பள்ளிப் பராயத்தை அடைந்தார். ஐந்து வயதாகியது. யாழ் பட்டினத்தில் கூட சைவப் பாடசாலைகளில் படிக்க உரிமை மறுக்கப்பட்ட நிலைமையில், கிறிஸ்தவ மிசனரிமார் உருவாக்கிய பாடசாலைகளில் ஒடுக்கப்பட்டோர் கற்க முடிந்தது. எம்.சி. அவர்கள் யாழ் பெருமாள் கோவிலடிக்கு அருகில் உள்ள மெதடிஸ்ற் கிறிஸ்தவ பாடசாலையில் கல்வி கற்பதற்காகச் சேர்க்கப்பட்டார். அங்கும் சாதி, தீண்டாமைப் பாகுபாடு நிலவியது. உயர்சாதியினர் வாங்கு மேசைகளில் இருந்து படிப்பர். ஒடுக்கப்பட்டோர் நிலத்தில் இருந்து கற்க வேண்டும். எம்.சி. பாடசாலையில் சேர்ந்த அன்று நிலமே ஆசனமாக வழங்கப்பட்டது. இது அவரது பிஞ்சு மனதை ஆழமாகப் பாதித்தது என்று சொல்ல வேண்டும். எனவே அவர் பாடசாலைக்குச் செல்ல மறுதலித்தார். காரணத்தை அறிந்த தந்தையாரும் உறவினர் ஒருவரும் சேர்ந்து தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் வாங்கு மேசைகள் செய்வித்துக் கொடுத்தனர். அதன்பின்னர் அவர் படிக்கச் சென்றார். மரத்தளபாடத்தில் ஒடுக்கப்பட்ட பிள்ளைகள் இருந்து படிக்க அப்பாடசாலையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. எம்.சி. அவர்கள் ஐந்து வயதிலேயே அடிப்படை மனித உரிமை பெறுவதற்கான போராட்ட உணர்வு பெற்றார். சாதிய, தீண்டாமைக் கொடுமைக்கெதிரான போராட்ட உணர்வு பெற்றார் எனலாம்.
ஆரம்பக் கல்வியை முடித்த பின் தந்தையார் தொடர்ந்து படிப்பிக்க விரும்பியதால் இன்னொரு கிறிஸ்தவப் பாடசாலை தேடிச் செல்ல வேண்டி ஏற்பட்டது. யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு மெற்றிக்குலேசன் வரை கற்றார். அங்கு கல்வி கற்கும் காலத்தில் தாம் வாழ்ந்த பகுதியில் வாலிபர்களை ஒன்றிணைத்து ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கினார். அது சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம். இதன் ஊடாக அப்பகுதிச் சிறார்களுக்கு கல்வி கற்பிக்க இரவு நேரத்தைப் பயன்படுத்தினார். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் கொடுமையில் இருந்து விடுபட, போராட கல்வி அறிவு முக்கியம் என உணர்ந்திருக்க வேண்டும். எம்.சி. அவர்கள் பற்றிக்ஸில் கற்ற காலத்தில் ஆசிரியரான பாதிரியார் ஒருவர், “நீ என்ன சாதி?” எனக் கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த எம்.சி. அவர்கள் படிப்பை நிறுத்திவிட்டார். சாதியக் கொடுமை கிறிஸ்துவின் பெயரால் கூடத் துரத்தியது. கல்வி கற்க வேண்டாம் எனத் துரத்தியது. சமுதாயக் கொடுமைகளுக்காகத் துரத்தியது.
லண்டன் மெற்றிகுலேசன் வகுப்பு வரைபடித்த அவர் படிப்பை நிறுத்திய பின், அரசாங்க லிகிதர் சேவையில் சேர்ந்தார். சாதிய ஒடுக்குமுறையின் தாக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஈர்ப்பு என்பன அவரை அரச சேவையில் இருந்து விலகிப் பொதுச் சேவையில் ஈடுபடுத்தியது. இந்திய சுதந்திரப் போராட்டத்தால் கவரப்பட்ட எம்.சி. ஆரம்பத்தில் இந்திய காங்கிரசிலும் இணைந்து செயற்பட்டார். காலப்போக்கில் காங்கிரசாரின் போராட்டம் அரசியல் அதிகாரத்தில் வெள்ளைத் துரைகளுக்குப் பதிலாக கறுப்புத் துரைகளை அமர்த்தும் போராட்டமே என்பதை உணர்த்தியது. அது அடக்கியொடுக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மறுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டமல்ல என்பதை இனங்காட்டியது. அந்த ஈர்ப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.
இந்தக் காலகட்டத்தில் சாதிய, தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிராக கிராமங்கள் தோறும் ஒடுக்கப்பட்ட மக்கள் தாபன வடிவங்களை உருவாக்கிச் செயற்பட்டு வந்தனர். இந்த அமைப்புகளை எல்லாம் ஒன்றிணைத்து அகில இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்கான இயக்கம் அவசியம் என்பதை எம்.சி. அவர்கள் உணர்ந்து அதைச் செயல் வடிவமாக்கினார். 1942இல் “அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை” என அது உருவெடுத்தது. இது தமிழர் மத்தியில் காணப்பட்ட சாதிய, தீண்டாமைக்கெதிரான போராட்ட அமைப்பாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுக்கும் அமைப்பாகவும், ஒடுக்கப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்தி ஒன்றிணைக்கும் அமைப்பாகவும் உருவாகியதால் சாதி வெறியர்களுக்கு சிம்ம சொப்பனமாகக் காணப்பட்டது.
காந்தியக் கோட்பாட்டை நிராகரித்த எம்.சி. அவர்களை பாட்டாளி வர்க்க விடுதலைக்காகவும், சகல வித மனித ஒடுக்குமுறைக்கும் எதிராக போராட்ட மருந்தான மார்க்சிசத்தின் பக்கம் பார்க்க வைத்து, ஏற்க வைத்தது. யாழ் குடாநாட்டில் இயங்கத் தொடங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகால உறுப்புரிமை கொண்ட தொண்டராக்கியது. புரட்சிகர வழியில் இயங்க வைத்தது. எனவே வடபகுதி இடதுசாரி முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.
மகாசபையின் செற்பாடுகள் தீவிரம் அடைய முன் கிராமங்கள் தோறும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கு தமது அடிப்படை மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விடங்களில் சாதி வெறியர்கள் தங்கள் கோரச் செயற்பாடுகளைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். குடியிருப்புகளைக் கொளுத்தினார்கள். வாழ்விடங்களிலிருந்து கலைத்தார்கள். பொதுக் கிணறுகளுக்குள் நஞ்சு ஊற்றித் தடுத்ததார்கள். கொலை கூடச் செய்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் ஆன குடியிருப்புகள் இல்லாமல் குடிசைகளில் சேரி வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
சோல்பரி அரசியல் ஆணைக்குழு இலங்கை நிலைமை பற்றி ஆராய்வதற்கு இலங்கை வந்தது. அது யாழ் மாவட்டத்திற்கும் விஜயம் செய்ய இருந்தது. அப்பொழுது ஜீ.ஜீ.பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர். சோல்பரியின் வருகையின் போது தாழ்த்தப்பட்ட மக்களின் அவல வாழ்வைக் காண்பிக்க எம்.சி. அவர்கள் முயற்சித்தார். பொன்னம்பலம் ‘ஐயா’ அதனைத் தடுத்த போதும் அவர்களின் பிரதிநிதிகள் கரவெட்டி கன்பொல்லைக் கிராமத்துக்கு வந்து அவல வாழ்வைப் பார்வையிட்டார்கள். பின் அக்கிராம மக்கள் தாக்கப்பட்டார்கள். தமிழ்ச் சாதிமான்களின் கொடுமைகளை அடுத்தவர்கள் காணும் சுதந்திரத்தைக் கூட மறுத்தார்கள். இவர்கள்தான் தமிழ்ச் சாதிமான் தலைவர்கள்.
1957இல் எம்.சி. அவர்கள் அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகா சபையின் தலைவராகப் பொறுப்பேற்றார். இக்கால கட்டத்தில் இலங்கை அரசாங்கம் விதேசிய முதலாளித்துவ சக்திகளிடமிருந்து தேசிய முதலாளித்துவ சக்திகளின் கைக்கு மாறியிருந்தது. இக் காலகட்டத்தில் பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் பொன்.கந்தையா பொதுவுடமைக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இவரின் ஆலோசனையுடனும் உதிவியுடனும் மகாசபை தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி சார்ந்த, அரசாங்க தொழில் சார்ந்த, குடிநிலம் சார்ந்த விடயங்களை அரச உதவியுடன் பெறுதற்குக் கோரிக்கைளைச் சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகம் வாழும் கிராமங்களில் அரசாங்க பாடசாலைகள் பல உருவர்கப்பட்டன. அரசாங்க ஆசிரியர் உத்தியோகம் ஒடுக்கப்பட்டவர்களில் கல்வி கற்றவர்களுக்குக் கிட்டியது.
சாதி பார்ப்பது சட்ட விரோதமானது என்ற சட்டம் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. இவை எம்.சி.; தலைமையில் மகாசபை மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்ற அடிப்படை மனித உரிமையாகக் காணப்பட்டது. இவை சாதிமான்களுக்குக் குமைச்சலை ஏற்படுத்தியிருக்கும்.
மகாசபையின் தோற்றமும் இடதுசாரிகளின், குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியினதும் ஆதரவும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்ட உணர்வை வளர்த்தது. யாழ் நகரப் பகுதியில் ஆலயப் பிரவேசம், தேநீர்க்கடைத் திறப்பு என்பன நடைபெற்றன. எம்.சி. தலைமையிலான மகாசபையின் விசேட முயற்சியினால் இவை நடைபெற்றன. இதனால் கிராமங்கள் தோறும் மகாசபையின் கிளைகள் உருவாக்கப்பட்டன. மகாசபையின் வாலிப முன்னணி உருhக்கப்பட்டது. இத்துடன் சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தங்களின் விடுதலைக்கு கம்யூனிஸ்ட் கொள்கை வழிகாட்டும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. இதற்கு எம்சி. சுக்கான் பிடிப்பவராக விளங்கினார்.
இக்காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கு பாதிக்கப்பட்;டாலும் அங்கு எம்.சி. இன் பிரசன்னம் இருக்கும். மக்கள் கஸ்ட நஸ்டங்களிலிருந்து விடுபட வழிகாட்டுபவராக இருப்பார். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த போதும் மக்களின் துன்பங்களை நீக்கப் போராடத் தயங்கமாட்டார். இது அவரின் புரட்சிகர உணர்வார்ந்த செயற்பாடாக, மக்களுக்குத் தொண்டாற்றும் தொண்டராக்கியது. இது வட பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் தலை நிமிர்ந்து வாழும் நிலையை ஏற்படுத்தியது. சாதி வெறியர்களின் அடாவடிகளும் கொடுமைகளும் அடங்க வழிவகுத்தது.
சோவியத் யூனியனில் குருசேவ் ஆட்சி ஏற்ட்டபோது, மார்க்சியத்தைத் திரிபுபடுத்தி புரட்சிகரப் பாதையை மாற்றி, பாராளுமன்றப் பாதை மூலம் சோசலிச அரசை அமைக்கலாம் என்ற மாயை திரிபுவாதத்தால் முன் வைக்கப்பட்டது. இந்த மாயை உலக கம்யூனிஸ்ட் கட்சிகளையும் பாதித்தது. எம்.சி. அவர்கள் இளமையில் காந்தியக் கோட்பாட்டில் இருந்து வந்தபடியாலோ என்னவோ திரிபுவாதச் சகதிக்குள் கால் வைத்தார். இதனால் மகாசபையின் செயற்பாடுகள் வீழ்ச்சியை நோக்கின.
வடபகுதியில் புரட்சிகர கம்யூனிஸ்ட்வாதிகளின் செயற்பாடுகள் மார்க்சியத்தை மக்கள் கற்று செயற்பட வழிநடாத்தியது. இதனால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை இயக்கமாக “சாதி அமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்” என்னும் கோசம் கொண்ட இயக்கமாக தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயற்பாட்டோடும் போராட்டங்களோடும் எம்.சி. அவர்களின் செயற்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டது.
எம்.சி. அவர்கள் கம்யூனிஸ்ட் புரட்சிகர உணர்வோடு செயலாற்றிய காலத்தில் சீவல் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிய தவறணை முறையை ஒழிக்க உழைத்து, மரவரி முறையை ஏற்படுத்த உதவினார். வட இலங்கை கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கி அதன் நிர்வாகச் செயலாளராகவும் சிறப்பாகச் செயலாற்றினார்.
1970இல் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றார். இக் காலகட்டம் அவர் முழுமையாக மக்களுக்கு உழைக்க வழிவிடவில்லை. சுயநலக் கும்பல் அவரைச் சூழ்ந்து வழிநடாத்தியது.
எம்.சி. அவர்களை விமர்சன முறைக்கு உட்படுத்தும்போது, அவரில் இருபக்கம் காணப்படுகின்றது. ஒன்று புரட்சிகரப் பக்கம். மற்றது திரிபுவாதக் கோட்பாட்டுப் பக்கம். புரட்சிகரப் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது அவர் சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடிய, முழுமையாக உழைத்த போராளி. குறிப்பாகச் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக முழுநேரமாகத் தொண்டாற்றிய தொண்டன். வடபகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த கிராமங்களில் அவரது காலடி படாத கிராமம் இல்லை. அவருக்குத் தெரியாத ஒடுக்கப்பட்ட மக்கள் இல்லை. ஓயாத உழைப்பு, வேலை, எந்த நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமை, மக்கள் சேவையே மகேசன் சேவையாகக் கொண்டமை, எல்லோரையும் மதிக்கும் பண்புடமை, கள்ளங்கபடமற்ற வெள்ளையுள்ளம் கொண்டிருந்தமை அவரின் உருவம் எனலாம். குறிப்பாக, மார்க்சிச லெனினிசமே சகல ஒடுக்குமுறைகளுக்கும் அருமருந்து என ஏற்றுக் கொண்டு காணப்பட்ட தோழமை வடிவம். புரட்சிகர வடிவம் அவர்.
(இந்தக் கட்டுரையை எழுதியுள்ள பருத்தித்துறை – வராத்துப்பளை கிராமத்தைச் சேர்ந்த தோழர் வி.சின்னத்தமபி ஓய்வுபெற்ற பாடசாலை அதிபரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உறுதிகுலையாத நீண்டகால செயற்பாட்டாளருமாவார். அவரது இந்தக் கட்டுரை இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் வெளியிட்ட “வடபுலத்து இடதுசாரி இயக்க முன்னோடிகள்” என்ற தொகுப்பிலிருந்து நன்றியுடன் எடுத்துப் பிரசுரிக்கப்படுகிறது)
No comments:
Post a Comment