கியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது!

ஐ.நாவில் கியூபா வெளிநாட்டமைச்சர்

உரை


ண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் சோசலிச கியூபாவின் (Cuba)  வெளிவிவகார அமைச்சர் Bruno Rodriguez Parrilla  அவர்கள் நிகழ்த்திய உரையின் முக்கியமான பகுதிகள் எமது வாசகர்களுக்காக கீழே தரப்பட்டுள்ளன.
தலைவர் அவர்களே,

கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இங்கு பேசும்போது, தனது நோக்கங்களில் ஒன்று, நாடுகளினதும் தனிநபர்களினதும் செல்வத்தைப் பெருக்குவதே என்று கூறினார். ஆனால் உண்மையான உலகத்தைப் பொறுத்தவரையில்ல், உலகிலுள்ள 3.6 பில்லியன் (Billion)  மக்களிடமுள்ள மொத்த செல்வத்துக்கு நிகரான அளவுக்கான செல்வம் எட்டே எட்டு மனிதர்களிடம் குவிந்து கிடக்கிறது. உண்மையில் மனித குலத்தை வறுமைக்குள் தள்ளியது யார்?

உலகில் பெரும் வருமானத்தைக் கொடுக்கும் 100 நிறுவனங்களில் 69 பல்தேசியக் கம்பனிகளாகும், அரசுகளல்ல. உலகிலுள்ள மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களின் (Corporations)  வருமானம் உலகிலுள்ள 180 நாடுகள் ஈட்டும் மொத்த வருமானத்தை விடக் கூடுதலாகும்.700 மில்லியன் (Million)  மக்கள் மிகவும் மோசமான வறுமையில் வாடுகிறார்கள். 21 மில்லியன் மக்கள் கட்டாய வேலைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2015இல் 5.9 மில்லியன் குழந்தைகள் தமது ஐந்தாவது வயதை அடைவதற்கு முன்பே அவர்களது நோய்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படாது இறந்திருக்கின்றனர். உலகம் முழுவதும் 758 மில்லியன் வயது வந்தவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர்.

815 மில்லியன் மக்கள் மிகமிக மோசமான பட்டினியால் துன்புறுகின்றனர். 2 பில்லியன் மக்கள் போதிய போசாக்கின்றி இருக்கின்றனர். அண்மைய வருடங்களில் சனத்தொகை அதிகரிப்பு குறைவடைந்தாலும் கூட, 653 மில்லியன் பேர் பட்டினியால் வாடுவது 2030 வரை தொடரும். நிலைமை இப்படியே போனால் 2050இல் கூட பட்டினியை ஒழித்துவிட முடியாது.
உலகம் முழுவதும் 22.5 மில்லியன் அகதிகள் இருக்கின்றனர். அநீதியான பொருளாதார மற்றும் அரசியல் முறைமை காரணமாக அகதிகள் பிரச்சினை பெருகி பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அகதிகளினதும் குடியேற்றவாசிகளினதும் அலைகளைத் தடுப்பதற்காக சுவர்களையும் தடையரண்களையும் கட்டுவதும், சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும், குரூரமானதாகவும் பயனற்றதாகவும் இருக்கின்றது. பிற நாட்டவர் மீது காட்டப்படும் வெறுப்புக் கொள்கைகள் (Xenophobic Policies)  இலட்சக்கணக்கான மக்களின் மனித உரிமைகளை மீறுவதுடன், குடியேற்ற மற்றும் அகதிப் பிரச்சினைகளின் தோற்றுவாய்க்கும் காரணமான வளர்ச்சியின்மை, வறுமை, ஆயுத மோதல்கள் என்பனவற்றைத் தடுப்பதிலும் தோல்வி கண்டுள்ளன.
இராணுவச் செலவீனங்கள் 1.7 ட்ரில்லியன்களாக (Trillion)  அதிகரித்துள்ளது. வறுமையை ஒழிப்பதற்குப் போதிய வளங்கள் இல்லையென்பது அல்ல உண்மையான காரணம். இதுதான் உண்மையான காரணம்.

காலனித்துவம், அடிமைத்தனம், நவகாலனித்துவம், ஏகாதிபத்தியம் என்பன ஏற்படுத்திய அழிவுகளை ஒருவர் மறந்துவிட முடியுமா?

பல தசாப்தங்களாக லத்தீன் அமெரிக்காவில் நடைபெற்ற இரத்தம் தோய்ந்த சர்வாதிகாரங்களை முதலாளித்துவத்தின் வெற்றி என உதாரணம் காட்ட முடியுமா?
ஐ.நாவின் உடனடிக் கடமை என்னவெனில், வளரும் நாடுகளின் தேவைகளைக் கவனத்தில் கொண்டு புதிய பங்குபற்றுதலுடன் கூடிய, ஜனநாயக ரீதியிலான, சமத்துவமான பொருளாதாரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதாகும். அதற்குப் போதிய நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது கைத்தொழில் வள்ர்ச்சியடைந்த நாடுகளின் தார்மீகக் கடமையும் வரலாற்றுப் பொறுப்புமாகும்.

வரலாற்றுரீதியாக உலகில் அதிகமான பசுமை வாயுவை (Green Gas)  வெளியேற்றும் நாடான அமெரிக்கா, பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து வெளியேறியதை கியூபா கண்டிக்கிறது. சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பு வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி, முழு மனிதகுலத்தையும் அவலத்திற்குள்ளாக்கும். கியூபா சிறிய தீவு நாடுகளுடன் தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.

நேட்டோ (Nato)  உறுப்பு நாடுகள் சர்வதேச சமாதானம், சர்வதேசச் சட்டங்கள் என்பனவற்றுக்கு எதிராக சுயாதிபத்தியமுள்ள நாடுகளில் இராணுவத் தலையீடுகளை மேற்கொள்கின்றன. ரஸ்யாவின் எல்லைகளில் அதிகரித்து வரும் ‘நேட்டோ’வின் பிரசன்னம் சர்வதேச் சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. ரஸ்யாவுக்கெதிரான நியாயமற்ற தடைகளை நாம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றோம்.

நாம் எல்லாவிதமான பயங்கரவாதத்தையும் கண்டிப்பதுடன், அதை எதிர்த்துப் போராடுவதில் இரட்டை நிலைப்பாட்டையும் நிராகரிக்கின்றோம்.
மத்திய கிழக்குப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் வகையில் 1967இற்கு முன்னைய எல்லைகளின் அடிப்படையில், கிழக்கு ஜெருசலத்தை (East Jerusalam)   தலைநகராகக் கொண்டு சுயநிர்ணய அடிப்படையில் பலஸ்தீன சுதந்திர அரசு அமைக்கப்பட வேண்டும் என நாம் கோருகின்றோம்.

ஐ.நா. தீர்மானங்களின் அடிப்படையில் மேற்கு சகாரா (West Sahara)  மக்கள் சுய நிர்ணய அடிப்படையிலும், சட்டபூர்வமான முறையிலும் தமது பிரதேசத்தில் சமாதானமாக வாழ்வதற்கு உரித்துடையவர்களாகும்.

சிரியாவின் (Syria)  உள்நாட்டுப் போரைப் பொறுத்தவரையில், சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் பாதிக்காத வகையில், வெளியாரின் தலையீடின்றி சமாதானமாகவும் பேச்சுவார்த்தை மூலமாகவும் தீர்வுகாணப்பட வேண்டும். அமெரிக்காவின் புதிய மிரட்டல்கள் லத்தீன் அமெரிக்காவினதும் கரீபியன் நாடுகளினதும் (Latin America and Caribbean) சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை என்பனவற்றுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இது, 1914இல் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் கூடிய லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளின் அரச தலைவர்களின் இரண்டாவது மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட “லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிரதேசம் சமாதான வலயம்” என்ற பிரகடனத்தை அவமதிப்பதாக உள்ளது.

வெனிசூலாவுக்கு (Venezuela)  எதிராக அமெரிக்காவால் விடுக்கப்பட்டு வரும் இராணுவ மிரட்டல்களையும், பொருளாதாரத் தடைகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். வெனிசூலா மக்களுடனும் அந்நாட்டு அரசுடனும் எமது உறுதியான ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிக்கரக்குவா (Nicaragua நாட்டுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளையும், செயல்பாடுகளையும் நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்நாட்டு அரசுடனும் மக்களுடனும் எமது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பிரேசிலின் (Brazil)  தேர்தலில் போட்டியிட முடியாதவாறு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி Luiz Inacio Lula da Silva  அவர்களுக்கும், அவரது தலைமையிலான பொலிவிய தொழிலாளர் கட்சிக்கும், பொலிவிய மக்களுக்கும் எமது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

போட்டோ றிக்கன் (Puerto Rica)  மக்களின் சுதந்திரம் சுயாதிபத்தியத்துக்கான போராட்டத்துக்கு எமது அதரவை எப்பொழுதம் போல வழங்குவோம்.

Malvinas, South Georgia, Sandwich Islands   என்பனவற்றின் மீது சட்டபூர்வமான உரிமையைக் கோரும் ஆர்ஜன்ரீனாவின் (Argentina)  நிலைப்பாட்டை கியூபா எப்பொழுதும் ஆதரிக்கின்றது.
கொலம்பியாவில் (Colombia)  சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கிடையில் நிலையான ஒரு சமாதானத் தீர்வு ஏற்படுவதற்கு கியூபா எப்பொழுதும் தன்னால் சாத்தியமான அனைத்துப் பங்களிப்புகளையும் வழங்கும்.

63 நாடுகளில் வாழும் மக்களின் சௌக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கியூபாவின் 41,652 தொழிலாளர்கள் செயற்படுவது உட்பட அனைத்து நாட்டு மக்களுக்கும் எமது சேவையை வழங்கத் தயாராக இருக்கின்றோம்.

அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் ட்ரம்ப் கியூபாவுடனான புதிய அமெரிக்க கொள்கைகளை அறிவித்திருக்கிறார் அதன் அடிப்படையில் கியூபா மீது புதிய பொருளாதார, வர்த்தக, நிதித் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இது அமெரிக்காவின் முன்னைய அரசாங்கத்தால் கியூபாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை பின்தள்ளும் செயலாகும்.
கியூபா ஒருபோதும் எந்தவிதமான முன்நிபந்தனைகளையும், தடைகளையும் ஏற்றுக்கொள்ளாது என்பதை நாம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்வதுடன், அது தனது கொள்கைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என உறுதி கூறுகின்றோம்.

நன்றி வானவில் நவம்பர் 2017 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...