நல்லாட்சி' அரசாங்கம் சிங்கத்தின் வாலை மட்டுமல்ல, புலியின் வாலையும் பிடித்துள்ளது! -சொல்வேந்தன்


-   
தற்போதைய மேற்கத்தைய சார்பு இலங்கை அரசாங்கம் தன்னைப் பதவிக்குக் கொண்டு வந்தவர்களுக்காக மிகவும் வேகமாகச் செயற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதன் காரணமாக இந்த அரசாங்கம் உண்மையான ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் தரும் என எதிர்பார்த்து அதற்காக வேலை செய்தவர்கள், வக்காலத்து வாங்கியவர்கள் எல்லோரும் வாயடைத்துப்போய் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். ஏனெனில் இந்த அரசாங்கம்தான் இலங்கையிலிருந்த அரசாங்கங்களிலேயே மிகவும் மோசமான சர்வாதிகாரத்தனமான அரசாங்கம் எனப் பெயர் எடுக்கக்கூடிய வகையில் காரியங்கள் ஒப்பேறி வருகின்றன.

முன்னைய காலங்களில் அரசியலை வைத்தே எதிரணியினரை ஓரம்கட்டும் ஒரு ஜனநாயக வேலைப்பாணி இருந்தது. ஆனால் இம்முறை முன்னைய ஆட்சியின் முக்கியஸ்தர்களையும், அந்த அரசில் சேவகம் செய்த பணியாளர்களையும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்க வைத்து, அவர்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தி, அவர்களது எதிர்காலத்தை ஒழித்துக்கட்டும் ஒரு குள்ளத்தனமான, எதேச்சாதிகார வேலைப்பாணி முன்னெடுக்கப்படுகிறது. இது வெளிநாட்டு சக்திகளால் நன்கு திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்படுவதாகத் தெரிகிறது.

முதலில் தற்போதைய அரசுக்கு எதிர்ப்பு எழுவதைத் தடுப்பதற்காக புதியதொரு உத்தி வகுக்கப்பட்டது. அதன்படி எதிர்க்கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அரசாங்கத்துக்கு ஆதரவான, தற்போதைய அரசைப் பதவிக்குக் கொண்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி ஆக்கப்பட்டது. அதன்மூலம் அரசாங்கத்துக்கு எதிரான அணி உருவாவதைத் தடுப்பதற்குத் திட்டமிடப்பட்டது.

ஆனால், அரசாங்கம் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரே அரசாங்கத்துக்கு எதிராக மாறியதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த இடதுசாரி மற்றும் தேசியவாதக் கட்சிகளும் அரசுக்கு எதிராக மாறிக் கொண்டனர். அவர்களே கூட்டு எதிரணி என்ற பெயரில் பாராளுமன்றத்தில் செயற்படுகின்றனர். இவர்களில் ஏறத்தாழ 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களை விலைக்கு வாங்கவும் அரசாங்கம் எவ்வளவோ தந்திரோபாயங்களைக் கையாண்டும் முடியாமல் போய்விட்டது.

இந்த எதிரணிக்குப் பின்னால் ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சாவுக்கு வாக்களித்த, பாராளுமன்றத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு வாக்களித்த ஏறத்தாழ 58 இலட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். அரசாங்கம் தனது எதிராளிகள் மீது எடுத்து வருகின்ற திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகள் காரணமாக எதிரணியை ஆதரிக்கும் மக்களின் தொகை அண்மைக் காலங்களில் மேலும் அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இதனால் உள்ளு+ராட்சி தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் அரசு கலங்கிப்போய் இருக்கிறது.

அரசுக்கு எதிரான மக்கள் உணர்வின் பிம்பமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த இருக்கின்றார்.  என்னதான் மகிந்த குடும்பம் கடந்த காலத்தில் பல தவறுகளை இழைத்திருந்தாலும், அவர் நாட்டின் - குறிப்பாக சிங்கள மக்களின் பேரபாயமாக இருந்த புலிகளை ஒழித்துக் கட்டியதில் வகித்த பிரதான பாத்திரத்தை மக்கள் இன்னும் ஒரு நூறு வருடங்களுக்கு மறந்துவிட மாட்டார்கள்.

இன்னொரு செல்வாக்கும் அவருக்கு மக்கள் மத்தியில் இருக்கிறது. அதாவது சிங்கள மக்களுக்கு உலகில் உள்ள ஒரேயொரு நாடு இலங்கை மட்டுமே என்ற வகையில், அவர்கள் இந்த நாட்டை உயிரைக் கொடுத்தாவது பாதுகாக்கத்தான் முயல்வார்கள். அப்படிப் பார்க்கையில் இலங்கை 1948இல் சுதந்திரம் அடைவதற்கு முன்னர், ஆரம்ப காலங்களில் தென்னிந்திய மன்னர்களின் படையெடுப்புக்கு ஆளாகி வந்துள்ளது. பின்னர் மேற்கத்தையர்களான போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆகியோரின் ஆதிகத்துக்கு உள்ளாகி இருந்துள்ளது. இந்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை இலங்கை மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை.

இப்பொழுதும் இந்த இந்தியர்களதும், மேற்கத்தைய சக்திகளினதும் ஆதிக்கத்துக்கு எதிரான மக்களின் தலைவராக மகிந்த ராஜபக்சாவையே இலங்கை மக்கள் நோக்குகின்றனர். எனவே, அந்த அந்நிய சக்திகளால் கொண்டு வரப்பட்ட இன்றைய அரசாங்கத்தை எதிர்க்கக்கூடிய வல்லமை மகிந்தாவுக்கே இருக்கிறது என மக்கள் நம்புகின்றனர். இந்த நிலைமை இன்றைய ஆட்சியாளர்களுக்கும், அவர்களை ஆட்சிக்குக் கொண்டு வந்த வெளிநாட்டு சக்திகளுக்கும் ஒரு பெரும் சவாலாகவும், தீர்க்க முடியாத பிரச்சினையாகவும் இருக்கப்போவது திண்ணம்.

அதனால்தான், இன்றைய ஆட்சியாளர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரன் பின்பற்றிய ஒரு வழிமுறையைப் பின்பற்ற எத்தனிக்கின்றனர். பிரபாகரன் ஒருமுறை இவ்வாறு சொன்னதாகக் கூறுவார்கள்:

“ஒவ்வொரு சுவிச்சாக நிற்பாட்டுவதைவிட, மெயின் சுவிட்சை  நிற்பாட்டிவிட்டால் முழு லைற்றும் அணைந்துவிடும். பிறகு பிரச்சினையே இல்லை”.

அரசாங்கமும் இப்பொழுது அதைத்தான் செய்ய முயல்கிறது. அதாவது மகிந்த ராஜபக்சவை ஒழித்துக்கட்டிவிட்டால், எதிர்ப்பியக்கம் தானாகவே அணைந்துவிடும் என அரசு எண்ணுகிறது. ஆனால் அவர் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையிலும், ஒரு தனிநபர் என்று பார்க்கையில் இலங்கையில் ஆகக்கூடியமக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவராக மகிந்தாதான் இருக்கிறார். இப்படியான ஒரு செல்வாக்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திபாலா சிறிசேனாவுக்கோ, ரணில் விக்கிரமசிங்காவுக்கோ, சந்திரிக்காவுக்கோ இல்லை.

அதனால் மகிந்தா மீது எடுத்த எடுப்பிலேயே கைவைத்தால் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டுவிடுமோ என அரசு பயப்படுகின்றது. அதனால் சுற்றிவளைத்து மகிந்தாவின் சகோதரர்கள், மனைவி, மகன் என்று வலை விரிக்கப்படுகிறது. இறுதி இலக்கு மகிந்தா தான். அதற்கு முன்னதாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் மகிந்தாவையும் அவரது குடும்பத்தையும் ஊழல்வாதிகளாக, மோசடிக்காரர்களாக, அதிகார வெறியர்களாக காட்டி, மக்கள் மத்தியில் அவர்களது செல்வாக்கை மழுங்கடிக்க அரசு பிரயத்தனப்படுகிறது. ஆனால் இந்த அரசாங்கம் ஏவும் பிசாசு திரும்பி வந்து அவர்களையே பதம் பார்க்கும் கதைதான் நடக்கப்போகிறது.

இப்பொழுது இந்த நாடகத்தின் ஒரு கட்டமாக புலிகளின் முக்கியஸ்தரான எமில் காந்தன் என்பவரை இலங்கைக்கு அழைத்து வந்து ஒரு காட்சியை அரங்கேற்றுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. தனக்கு எதிரான எதிர்ப்பை முறியடிப்பதற்கு புலிகளைக்கூட பயன்படுத்த வேண்டிய பலவீனமான நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது.

மகிந்தாவின் புதல்வர் யோசிதாவை பழிவாங்கும் எண்ணத்துடன் கைது செய்ததைப் பொறுக்காத அவரது இளைய சகோதரர், ‘அரசு சிங்கத்தின் வாலைப் பிடித்திருக்கிறது’ எனத் தன முகநூலில் ஆக்ரோசமாகக் குறிப்பிட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் அரசாங்கம் சிங்கத்தின் வாலை மட்டுமல்ல, புலியின் வாலையும் பிடித்துள்ளது என்பதையே எமில் காந்தனின் விவகாரம் காட்டுகிறது. அதைப்பற்றி இன்னொரு பத்தியில் பார்ப்போம்.
Source: Thenee (05/02/2016)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...