மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் செய்த் ரஅத் அல் ஹுசைனின் விஜயமும் இலங்கையின் இறையாண்மை எதிர்கொண்டுள்ள சவால்களும்


எஸ்.எம்.எம்.பஷீர் 
"வேண்டுமென்றே மவுனமாக்கப்பட்டவர்கள் அல்லது கேட்கப்பட முன்னுரிமை அளிக்கப்படாதவர்கள் தவிர குரல் அற்றவர்கள் என்று யாரும் இல்லை."  இந்திய நாவலாசிரியர்” -  அருந்ததி ராய்   ( Arundhati Roy)
மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் செய்த் ரஅத் அல் ஹுசைன் சென்ற கிழமை இலங்கை விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அவரின் விஜயத்தின் பொழுது , ஆங்காங்கே அவர் தெரிவித்த கருத்துக்கள் குறித்தும் , அவரின் விஜயத்தின் பொழுது பேசுபொருளான சங்கதிகள் குறித்தும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அவருக்கும் இலங்கையின் ஜனாதிபதி , பிரதமர் ஆகியோருக்கிடையிலான சம்பாசனைகளில்  , யுத்தம் தொடர்பான விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்குதல் , "அரசியல் கைதிகள் " விடுதலை போன்ற விவகாரங்கள் முக்கியத்துவம் பெற்றன. குறிப்பாக யுத்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள்  தொடர்பில் செய்த் ரஅத் அல் ஹுசைன் , பிரதமர் , ஜனாதிபதி ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பல சர்ச்சைகளைக் கிளம்பி உள்ளன. 

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் செய்த் ரஅத் அல் ஹுசைன் இலங்கைக்கு வரு முன்னரே இலங்கையில் இடம்பெற்ற 68வது சுதந்திர தினத்தில்  இதுகாலவரை தனி நாடு கோரிப் போராடிய   (வட்டுக் கோட்டை தீர்மானத்தின் மூலம் ) தமிழர்களின் பிரதான தமிழ் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சி இலங்கையின் சுதந்திர தின விழாவில் இரண்டாவது தடவையாக கலந்து கொண்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தின விழாவில் இரண்டாவது தடவையாக தமிழில் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது / பாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இலங்கையின்   அமுலில் உள்ள அரசியல் சட்டம் தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கவில்லை என்றாலும் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட கால அனுமதியுடன் தமிழில் சுதந்திர கீதம் இசைக்கப்பட்டது. சம்பந்தன் ஆனந்த கண்ணீர் மல்கினார்  என்று செய்திகள் கூறின. இலங்கையின் தேசியக் கீதத்தை பாடக் கூடாது என்றும் தேசியக் கொடியை எரிக்க வேண்டும் என்று போரிட்ட,  போராட ஆணையிட்ட சம்பந்தன் மனம் மாறி உள்ளார் , ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காண விரும்புகிறார் என்ற செய்தியை அவர் வெளிப்படுத்தி இருந்தார் என்று சொல்லப்பட்டது.


முஸ்லிம்களும் இலங்கை எங்கும் குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழில் சுதந்திர கீதத்தை பாடி மகிழ்ந்துள்ளனர்.
" நமதுதி ஏல் தாயே
நம தலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே-நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே”
(அ(ப்)பஹ(ட்)ட செ(ப்)ப சிரி செ(த்)த சதனா- ஜீவனயே மா(த்)தா
பிழிகனு மென அ(ப்)ப பக்(த்)தீ பூஜா
நமோ நமோ மா(த்)தா “ ( Lanka! we worship Thee”. )  
தேசிய கீதத்தை  தமிழ்ப் பிரதேசங்களில் தமிழில் நன்கு விளங்கி பாட முஸ்லிம் மக்களுக்கு இம்முறை நல்ல அவகாசம் கிடைத்துள்ளது. தமது தேச விசுவாசத்தை மிகுந்த உற்சாகத்துடன் வெளிப்படுத்தி உள்ளார்கள்.   தமிழ் பிரதேசங்களில் ஆங்காங்கே இடம்பெற்ற சலசலப்பு ஏதுமின்றி முஸ்லிம் மக்கள் தேசிய கீதத்தின் அர்த்தங்களை புரிந்து கொண்டு தமது தலைகளை "தாயின்" (நாடு) மண்டியிடுகிறோம்- வணங்குகிறோம் -( Lanka! we worship Thee”. )   என்று வார்த்தைகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் உணர்ந்தும் உச்சரித்தும் பாடி மகிழ்ந்துள்ளார்கள். கண்டியில் பள்ளிவாயல் ஒன்றிலும் இந்த வகையான "வணங்குதல்"  இடம் பெற்றுள்ளது.


செய்த் ரஅத் அல் ஹுசைன் வருவதற்கு முன்னர் பல சமிக்ஞைகளை அரசு வெளிப்படுத்தி இருந்தது. இந்த முன் நிகழ்வுகளை அவதானித்த பின்னர்தான்   செய்த் ரஅத் அல் ஹுசைன் இலங்கைக்கு வந்தார்.  நல்லூர் கோவிலுக்கு சென்றார் பூஜைகளில் கலந்து கொண்டார் , தலதா மாளிகாவிற்கும் சென்று அங்குள்ள பௌத்த மத குருவை சந்தித்தார். எல்லாமே நன்கு திட்டமிட்டபடி நடந்தன. இம்முறை இலங்கை அரசாங்கம் அவரை நன்கு கவனித்துக் கொண்டது, ஐ. நா தீர்மானத்தின் பங்குதாரர்கள் என்ற வகையில் , செய்த் ரஅத் அல் ஹுசைனுக்கு அதிக உரிமை வழக்கத்துக்கு மாறாக வழங்கப்பட்டது. முன்னர் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர்கள்   லூயிஸ் ஆர்பர் , நவநீதம்பிள்ளை ஆகியோர் வந்த பொழுது  இல்லாத உபசாரம் இவருக்கு கிடைத்தது. ஒப்பீட்டளவில் முன்பெல்லாம் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர்கள்  வரும்பொழுது ஆர்ப்பாட்டம் செய்து அமர்க்களப்படுத்தும் ஜே வீ பீயும் , ஹெல உறுமயவும் இப்பொழுது அமைதியாகிவிட்டார்கள் . 

ஆகவே பாரிய எதிர்ப்பினை   செய்த் ரஅத் அல் ஹுசைன் எதிர் கொள்ளவில்லை. விமல் வீரவன்சவும் அவரின் கட்சியினரும் வழக்கம்போலவே தங்களின் எதிர்ப்பினை ஆர்ப்பாட்டம் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். முன்னர் போல ஒரு பலமான எதிர்க்கட்சி என்று ஒன்றிருக்கவில்லை.  கூட்டரசாங்கம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சி என்று சொல்லப்படும் கட்சியின் நிகழச்சி நிரலும் ஆளும் கட்சியின் நிகழச்சி நிரலும் ஒன்றாகவே அமைந்திருந்தன. யதார்த்தத்தில் இலங்கையில் எதிர்க்கட்சி ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. இந்த நிகழ்வுகளின் பின் விளைவாக ஒரு பலமான எதிரான கட்சியின் தேவை இப்பொழுது நன்கு உணரப்பட்டுள்ளது. 


செய்த் ரஅத் அல் ஹுசைனின் யாழ் விஜயமும் முஸ்லிம்களும்  
முஸ்லிம்களின் சிவில் சமூகங்கள் செய்த் ரஅத் அல் ஹுசைனைச் சந்தித்து கடந்த மூன்று தசாப்பதங்களாக புலிகளின் பல்வேறு வித மனித உரிமை மீறல்களுக்கு தாங்கள் உட்பட்டிருந்ததை எடுத்து சொல்ல , பாதிக்கப்பட்ட  முஸ்லிம் மக்களின் அப்பிப்பிராயங்களை நேரடியாக , தகுந்த முறையில் கேட்டறிய எவ்வித ஒழுங்கும் செய்யப்படவில்லை , அத்தகைய நிகழச்சி நிரல் ஒன்று இருந்திருக்கவில்லை என்று ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது. ஆயினும் ஐந்தாறு வடக்கு வாழ் முஸ்லிம்கள்  நல்லூர் கோவில் முன்பாக செய்த் ரஅத் அல் ஹுசைனிதற்கு "தரிசனம் "  கொடுத்து தங்களின் மகஜர்களை கையளித்துள்ளனர். "சிவ பூஜையில் கரடி புகுந்ததுபோல" இந்த முஸ்லிம்கள் இங்கு எப்படி வந்தார்கள் என்றவாறான ஒரு அதிருப்தியும் அங்கு தமிழர்கள் தரப்பில் காணப்பட்டது என்று சொல்லப்படுகிறது.  வட மாகாண முஸ்லிம்களை மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் செய்த் ரஅத் அல் ஹுசைன் சந்திப்பதனை  தவிர்க்கும் வகையில் நிகழ்ச்சி நிரல்கள் அமைந்திருந்தனவா என்ற கேள்வி எழுகிறது. 

இருபத்தி ஐந்து வருடங்களாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட 75,000 மேற்பட்ட முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்த எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் அங்கு காணப்படவில்லை , ஐந்து ஆறு முஸ்லிம்  நபர்களே 75,000 மக்களையும் இருபத்தி ஐந்து வருடத்துக்கு பின்னர் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளனர். 

செய்த் ரஅத் அல் ஹுசைனைனுடனான  சந்திப்பின் பொழுது தமிழ் கைதிகள் தொடர்பாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசரும் , வட மாகாண  சபை முதலமைச்சருமான விக்னேஸ்வரன் "அரசியல் கைதிகள்" விவகாரம் குறித்து செய்த் ரஅத் அல் ஹுசைனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். ஒரு நாட்டின் உச்ச நீதிபதியாக இருந்தவர்  ஒரு இறைமையுள்ள நாட்டின் நீதித்துறையானது சுதந்திரமானது என்பதையும் புறக்கணித்து , அவரே ஒரு நீதிமானாக இருந்து இலங்கை நீதிமன்றங்களில் நீதி வழங்கியவர் என்பதையும் மலினப்படுத்தும் வகையில் , பயங்கரவாத அமைப்பான புலிகளின் சந்தேக நபர்களை , அல்லது புலிகளுக்கு உதவிய அனுதாபிகளை "அரசியல் கைதிகள் " என்ற வகையில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட  வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். 

அந்த வகையில் செய்த் ரஅத் அல் ஹுசைன் "அரசியல் கைதிகள் விடயத்தில் பொதுமன்னிப்பை விட அவர்களின் வழக்கு விசாரணை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு விடுதலை செய்யப்படுதல் தான் சரியானதாக அமையும்" என்று முன்னாள் உச்ச நீதியரசருக்கு சுட்டிக் காட்டியதாக செய்திகள் வந்தன . ஆனால் பின்னர் வந்த செய்திகள் ஊடகங்கள் தனது கருத்தை திரிவு படுத்தி விட்டன என்று செய்த் ரஅத் அல் ஹுசைன் கூறினார்.  (He said he was misquoted in the media during his visit where he was reported to have said that the political detainees must go through courts to be freed.)
இலங்கையில் நீதித்துறை பாரபட்சமானது என்று கூறும் செய்த் ரஅத் அல் ஹுசைன் உலகில் முஸ்லிம் தீவிரவாதத்துக்கு எதிராக பயங்கரமான சட்டங்களை அமெரிக்காவும் ,பிரித்தானிய உட்பட்ட நேச நாடுகளும் கடைபிடிக்கும் வேளையில் , புலி சந்தேக நபர்கள் குறித்து ஒரு அவதானமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார் என்றே முதலில் எண்ணத் தோன்றியது , ஆனால் அந்த ஊகத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார் செய்த் ரஅத் அல் ஹுசைன். கைதிகளை துரித கெதியில் விடுதலை செய்ய  ஒரு விதிமுறையை கண்டு கொள்ளுமாறும் அவர் பணித்துள்ளார்.(  The Government must quickly find a formula to charge or release the remaining security-related detainees. ).  இங்கு இலங்கையின் உடன்பாட்டுடன் ஐ.நா தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதை நினைவு கொள்ள வேண்டும். மேலும் பிரதமருக்கு யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைகள் நம்பகத்தன்மையுடனும் சுயாதீனமாகவும் இடம்பெற்றால் வெளிநாட்டு  நீதிபதிகள் தேவைப்படாமல் போகலாம் , அதனை நிரூபிப்பது அரசாங்கத்தின் கடமை என்று எச்சரிக்கையை விடுத்த பின்னரே செய்த் ரஅத் அல் ஹுசைன் இலங்கையை விட்டுச் சென்றுள்ளார். 

ஆக மொத்தத்தில்  இலங்கையின் நீதித்துறையின் நம்பகத்தன்மை நேர்மை குறித்து தனது கேள்விகளை எழுப்பி இலங்கை நாட்டின் இறைமையை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளார் செய்த் ரஅத் அல் ஹுசைன்.

 படம்: முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி .ஜி .ஜெயலத் அவர்கள் .

எனது பதிவுகளில் இருந்து சில விடயங்களை இந்தப் பொழுதில் நினைவு கூர வேண்டியுள்ளது. 1980 களின் பிற்பகுதியில் ஆரம்பித்த ஜே வீ பீ சந்தேக நபர்களின் வகை தொகையற்ற கைதுகள் நடை பெற்ற  காலங்களில் சிறைக் கைதிகளில் விசாரணை இன்றி தடுத்து வைக்கப்படுவதனை விடுதலை செய்வது அல்லது அவர்களை புனர்வாழ்வு அளிப்பது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க  ஒரு ஆணைக்குழுவை முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி டி .ஜி .ஜெயலத் தலைமையில்  அன்றைய  அரசு உருவாக்கியது. அதில் கலந்து கொண்டு ஜே வீ பீ உறுப்பினர்கள் எனப்பட்ட சந்தேக நபர்களை பிரதிநிதித்துவப்படுத்த எங்களின் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான அமைப்பு செயற்பட்டது. (Lawyers for Human Rights and Development) .  

ஜெயலத் ஆணைக்குழுவின் முன்னரான  பல விசாரணைகளில் ஜே வீ பீ சந்தேக நபர்களையும் சரணடைந்தவர்களையும்  பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களின் விடுதலையை அல்லது புனர்வாழ்வை பெற பங்களித்துள்ளோம் , பல சட்டத்தரணிகள் அந்த ஆணைக்குழுவின் முன் ஆஜராக முன்வராத பொழுது அமரசேன எனப்படும் சட்டத்தரணியும், நானும் அந்த விடயத்தில் சில காலம் ஒன்றாக செயற்பட்டோம். அந்த ஆணைக்குழு போன்ற ஒன்று இப்பொழுது தமிழர் கைதிகள் தொடர்பில் அவசியமாகிறது. ஆனால் அரசு இதுவரை அதனையொத்த ஒரு ஆணைக் குழுவொன்றினை இதுவரை நியமிக்கவில்லை . செய்த் ரஅத் அல் ஹுசைனின் கருத்துக்களில் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பாக ஒரு பொறிமுறையை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
   
இவ்வாறான ஒரு ஆணைக்குழு ஒன்றை இப்பொழுது சிறையில் உள்ள தமிழ் கைதிகள் தொடர்பில் உருவாக்குவது சிறந்தது   குற்றவாளிகளின் வழக்குகள்  துரிதமாக விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிககளின் குற்றங்கள் நிரூபிக்கப்படாதவிடத்து அவர்கள் மிகத் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும்.  குற்றங்கள் நிரூபிக்கப்படும் பொழுது தண்டிக்கப்படல் வேண்டும். கைதிகள் தொடர்பில் இலங்கை அரசு தனது தாமதத்தின் மூலம் நீதி மறுக்கப்படுவதை செய்து வருகிறது என்பது கைதிகளின் தொடர்பில் ஒரு மனித உரிமை மீறலாகும். !.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...