"மீண்டும் வந்து எம்மை மீட்பாய்" -.ரகு கதிரவேலு


மீண்டும் நீ வரவேண்டும்
மேய்ப்பன் இல்லா ஆடுகள் நாங்கள்.
மேன்மை தங்கிய தலைவனே!
மேதகு தேவனே!
மீண்டும் வந்து எம்மை மீட்பாய்.
தலைவா நீ காணாமல் போன நாளிலிருந்து
எம்மைத் துன்பம் ஆட்கொண்டுள்ளது
விமானக் குண்டு வீச்சுகளும் எறிகணை வீச்சுகளும்
மீண்டும் எம்மைத் தொடர்கின்றன.
மீண்டும் பதுங்கு குழிகளில் நாங்கள்.
நாளுக்கு நாள் தெருவுக்குத் தெரு பிணங்கள்.
வெளியே நடமாட முடியவில்லை.


வெடிகுண்டுச் சத்தங்கள் காதைப் பிளக்கின்றன.
எரித்திரியாவில் நீ இருந்தாயானால் எகிறிக் குதித்து வா.
2009 நீ மறைந்த நாளிலிருந்து
மீண்டும் முழத்துக்தொரு சோதனைச் சாவடிகள்.
தெருவில் செல்ல பிள்ளைகள் அஞ்சுகிறார்கள்.
பாஸ் வேண்டுமாம்.
சுற்றி வளைப்புகள் ,கைதுகள்.
கொழும்பு போனால் கொட்டியா என்று உள்ளே தள்ளுகிறான்.
வத்திக்கானில் இருந்தால் விரைந்தோடி வா.
காங்கேசன்துறை வந்த யாழ்தேவி
நீ போன நாளிலிருந்து வவுனியாவோடு நின்றுவிட்டது.
கொழும்பு செல்ல 24 மணித்தியாலங்கள்.
தண்டவாளங்களை மாடுகள் தின்றுவிட்டன.
நீ போட்ட ஏ 9 காப்பற் வீதி கல்லும் குழியுமாய் ஆகிவிட்டது.
நீ போட்ட பூனகரிப் பாலம் புரண்டு விட்டது.
நீ போட்ட கல்லடிப் பாலம் கவிழ்ந்து விட்டது.
நீ கட்டிக் கொடுத்த குளங்களின் அணைகளெல்லாம்
குண்டுகளால் தகர்ந்துவிட்டன.
உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு,
எரிபொருள் தட்டுப்பாடு,
ஓடிக்கொலோன் தடவி ஸ்ராட் பண்னி
மண்ணெண்ணையில் வண்டிகள் ஓட்டுகிறோம்,
மின்சாரம் இல்லை.
பட்டரிகள் இல்லை.
பவுடர் பேணிக்குள் பட்டரிகள் கடத்துகிறோம்.
வானொலி கேட்க வழியில்லை.
சைக்கிள் டைனமோவைச் சுற்றி பாடல் கேட்கிறோம்.
சவர்க்காரம் இல்லை.
பனம்பழத்தில் உடுப்புத் தோய்த்து
சாம்பலால் உடல் தேய்த்துக் குளிக்கிறோம்.
நீ உயிருடன் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
நீ இமய மலையில் இருந்தால் எழுந்தோடி வா.
பாடசாலைகள் இல்லை,
பல்கலைக்கழகம் இல்லை.
பேராசிரியன் நீ!
பட்டங்கள் கொடுப்பாய்.
மாவீரன், மாமனிதன், நாட்டுப்பற்றாளன், தேசத்தின் குரல்.
எங்கள் பிள்ளைகளின் நெஞ்சில் வெடிகுண்டு கட்டி,
வாழ்த்தி விடைகொடுத்து வழியனுப்பி,
வெடித்த அவர்கள் உடலுக்கு புலிக்கொடி போர்த்தி,
லெப்டினண்ட் கேர்ணல் பட்டங்கள் கொடுப்பாய்.
பல்கலைக்கழகப் பட்டங்கள் அதற்கு நிகராகுமா?
பெற்றோர் எங்களுக்கு!
பாலூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த
எங்கள் பிள்ளைகளின் உயிருக்குச் சமனாய்
அரிசியும் பருப்பும் தருவாய்.
நீ வத்திக்கானில் இருந்தாலும் விழுந்தோடி வா.

No comments:

Post a Comment

Soaring food prices drive hunger around the world-by John Malvar

The 2021 Global Hunger Index (GHI), published on Thursday, revealed soaring levels of hunger among the poor and working populations around t...