68வது (சு)தந்திர தினம்.

68வது (சு)தந்திர தினம்.

எஸ்.எம்.எம்.பஷீர்

“அன்று வியாபாரம்
செய்ய வந்தவர்கள்
அரசியல் நடத்தினார்கள்

இன்று

அரசியல் நடத்த வந்தவர்கள்
வியாபாரம் செய்கிறார்கள்”

( கவிஞர் வைரமுத்து) 

இலங்கையின் 68 வது சுதந்திர தினம் வழக்கம் போலவே  இம்முறையும் கொண்டாடப்படவிருக்கிறது. ஆனால் இம்முறை கொண்டாடப்படப் போகும் சுதந்திரதினம் பற்றி பட்டி தொட்டி எங்கும்  பேசப்படுகிறது. இம்முறைதான்  சுதந்திர தின விழாவே இலங்கையில் முதன் முறையாக கொண்டாடப்படப்போவதுபோல ஒரு பிரமையையை ஏற்படுத்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பிரமையைக் கட்டமைக்க இலங்கையில் உள்ள இன்றைய ஆட்சியுடன் கைகோர்த்துள்ள  அரசியல் கட்சிகளில் , குறிப்பாக தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தத்தமது இயலுமைக்கேற்ப பங்களிப்பு  செய்து வருகிறார்கள்.



படம் : இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் அவரின் உதவியாளரும் இலங்கையின் 68வது  சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்கள்



அந்த வகையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் நாடளாவிய ரீதியில் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களைப் பொருத்தவரை அவர்களின் மக்கள் பிரதிநிதிகள் சொல்வதை சிரமேற்கொண்டு செய்ய மக்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் தமிழர்களைப்  பொருத்தவரை, அதிலும் குறிப்பாக வட மாகாண தமிழ் மக்களைப் பொருத்தவரை சில சங்கடங்களை தமிழ் அரசியல் தலைமைகள் எதிர்கொள்ளவே செய்கின்றன. கிழக்கில் தமிழர்கள் ஒப்பீட்டளவில் பெரிதாக அலட்டிக் கொள்ளப்போவதில்லை , என்றாலும் தமிழ் சிவில் சமூகம் சற்று தலைக் காட்டி தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும். 

தமிழ் ஈழத்துக்கான ஆயதப் போரைத் தொடக்கி தமிழ் இளைஞர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி ,ஆயுத மேந்த வைத்து , அவர்களையும் மக்களையும் சேர்த்து அழிக்கப்பன்னிய பின்னர் , தங்களையும் மீறி , வளர்த்த கடாய் மார்பில் பாய்ந்த கதையாய்,    தங்களையே பலிகொண்ட பிரபாகரனும் புலிகளும் அழிந்து போயினர்.

அதன் பின்னர் ,  முதன் முதலில் தமிழர்களில் உணர்வுகளை நாடிபிடித்துப் பார்க்க விரும்பிய சம்பந்தன் வகையறாக்கள் 2012 ஆம் ஆண்டு மேதின விழாவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன்  இணைந்து மேதினப் பேரணி நடத்திய பொழுது முதன் முதலில் சிங்கக் கொடியைப் பிடித்தார் சம்பந்தன். சர்ச்சைகள் எழுந்தன. யுத்தத்தால் சோர்வுற்றிருந்த மக்கள் ஆட்ர்ப்பாட்டம் பண்ணவில்லை , ஆனாலும் சம்பந்தன் தமிழ் மக்களில் மனவோட்டங்களை பதிவு செய்து கொண்டார். பழுத்த அரசியல் அனுபவம் கொண்டவர் என்பதால் அந்த யுக்தியை அவர் கையாண்டார் . பின்னால் வரப்போகும் மாற்றங்களுக்கு அவர் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். துரோகியாக்கப்பட்டார் , ஆனாலும் 2013 ஆம் ஆண்டு வட மாகாண சபைத் தேர்தலிலும் பின்னரான நாடாளுமன்றத் தேர்தலிலும் , அமோக வெற்றி .    

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிங்கக்கொடியை ஏந்தியதற்காக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுமென்றே சிங்கக்கொடியைக் கையில் ஏந்தவில்லை, என்றும் அவரது கையில் சிங்கக்கொடி திட்டமிட்டுத் திணிக்கப்பட்டதாகவும் மாவை சேனாதிராசா குறிப்பிட்ட்டார். மக்கள் அதை ஏற்றுக் கொண்டார்களோ என்னவோ , அப்பொழுது தமிழ் மக்கள் பேரவை ஒன்று இருக்கவில்லை. ஆகக் குறைந்த பகிரங்க சவாலாவது சம்பந்தனுக்கு இருக்கவில்லை.

"நாம் தமிழ் உணர்வாளர்கள், தேசியத்தின் மீது பற்றுக்கொண்டவர்கள், தமிழர்களுடைய தேசத்தை கேட்கும் இனத்தைச் சேர்ந்தவர்கள். இலங்கைத் தேசியக்கொடியை ஒரு காலமும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை" என்று மாவை சேனாதிராஜா அழுத்தம் திருத்தமாக தமது கட்சியின் கொள்கைப்  பிரகடனத்தை அந்த வேளையிலும் வலியுறுத்தி இருந்தார். 

ஆனால் தேசிய கீதமும் இலங்கைக்கான தேசிய கீதம் , இலங்கையின் சுதந்திர தினங்கள் வந்த பொழுதெல்லாம் வடக்கு கிழக்கில் அந்த கொண்டாட்டங்களை பகிஸ்கரிக்க பாடம் எடுத்தவர்கள் , பயிற்சி அளித்தவர்கள் தமிழ் அரசுக் கட்சியினர், தமிழர் விடுதலைகே கூட்டணியினர் . பிற்காலத்தில் அவர்களிடம் பயிற்சி பெற்ற இளைஞர்கள் நடத்தியஆயுத இயக்கங்கள். மொத்தத்தில் இலங்கையின் சுதந்திர தினம் இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் ஒரு கரி நாளாக , தமிழர்களின் சுதந்திரத்தைப் பறித்த நாளாகவே நினைவு கூறப்பட்டது. 

கடந்த வருடம் ஜனவரி எட்டாம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நடைபெற்றிருந்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அந்தக் கொண்டாட்டங்கள் அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டன.  ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன கலந்து கொண்ட அந்த பிரதான சுதந்திர சதுக்க கொண்டாட்ட நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படும் என்று ஆரூடம் கூறப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் நடை பெறவில்லை. இம்முறை தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அதிலும் மிக முக்கியமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும்   பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

முன்னதாக சிக்கக் கொடி பிடித்தமை , பின்னர் சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொண்டமை , இப்பொழுது தமிழில் தேசிய கீதம் பாடப்படும் நிகழவில் கலந்து கொள்வது - இப்படியான முன்னேற்றங்கள் ஏன் நிகழ்த்தப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது

"நாமிருக்கும் நாடுநமது என்ப தறிந்தோம்-இதுநமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்" (பாரதி ) என்ற உணர்வுடன் சம்பந்தன் கலந்து கொள்கிறாரா , அல்லது அவர் கலந்து கொள்ள வேண்டும் எனும் பணிப்புரை வேறு எங்கிருந்தும் வந்ததா என்ற கேள்வி எழுகிறது.

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை புறக்கணித்து, வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கரிநாளாக’ அனுஸ்டிக்குமாறு  ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும்’ சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக ஒரு சிறு சல சலப்பு மிக முக்கிய பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திடமிருந்து எழுந்துள்ளது.

சுதந்திரன் பத்திரிக்கை நடத்தி தமிழ் மக்களுக்கு சுதந்திரமான சுயாட்சி வேண்டும்  என்று புறப்பட்டவர்கள் உள்ளேயும் வெளியும் புகுந்து ஆலோசனையும் ஆதரவும் பெற்ற இடம் பிரித்தானியாவின் இலங்கைத் தூதராலயம். இலங்கையின்  இறைமைக்கு சங்கடங்களைக் கொடுக்க சுதந்திரத்தினை வழங்கிய பிரித்தானியாவின் சகுனி விளையாட்டிற்கு துணை போனவர்கள் தமிழ்த் தலைமைகள் .  சுதந்திரம் பெற்றபின்னர் திருகோணமலை துறைமுகத்தில் பிரித்தானிய   கடற்படை நிலைகொள்ள அரும்பாடுபட்டவர்கள் தமிழ்  தலைவர்கள். சுதந்திர தின நாளை கரி நாளாக்கியவர்கள் தமிழ் தேசியவாத தலைவர்கள் , இன வெறி ஊட்டியவர்கள் , இளைஞர்களை ( சாக்கிரடீஸ் போலல்லாது) அறிவைக் கொண்டு அவர்களை சிந்திக்க சொல்லாமல்  ஆயுதத்தைக் கொண்டு அழியச் சொன்னவர்கள் இனவாத தமிழ்த் தலைமைகள். இன்று அன்னியர் ஆதிக்கம் அழுத்தமாகவே எங்கும் எதிலும் செல்வாக்கு செலுத்துகிறது

இன்று அன்னியர் ஆதிக்கம் அழுத்தமாகவே எங்கும் எதிலும் செல்வாக்கு செலுத்துகிறது . தமிழர் தலைமைகளை ஆட்டுவிப்பவர்கள் யார் , கடவுள்தான்  தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஆயுதத்தை ஏந்தி போராட வழி காட்டி தமிழ் இளைஞர்களை   அழிவுக்குத் தள்ளிய , தமிழ் மக்களின் அழிவுக்குக் காரணமான தமிழ்த் தலைவர்கள்தான் இன்று சிங்கக் கொடி தூக்கி ,  சுதந்திர கீதமும் இசைக்கப் போகிறார்கள். தமிழ் சமூகத்தின் அழிவுக்குக் காரணமான   பிதா செல்வாவிற்கு தண்டனை வழங்க முடியாது, ஆனால் அன்றிருந்த இன்றைய தமிழ் தலைமைகள் நிச்சயமாக பின்னர் நடந்த சகல அழிவுகளுக்கும் காரணமானவர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆகவே அவர்கள் யாவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே !.   

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...