Sunday, 7 February 2016

தமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்!

வானவில் இதழ் 61

ஜனவரி 18, 2016
ட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற புதிய தமிழ் அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதின் பின்னர், தமிழ் மக்களுக்கு புதிய மாற்றுத் தலைமைத்துவம் ஒன்று ஏற்பட்டுள்ளதான ஒரு தோற்றப்பாடு சில அரசியல் சக்திகளாலும், ஊடகங்களாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கருத்து சரியானதா என்பதை ஆராய்வதற்கு முன்னர், இப்படியான கருத்து உருவாகியிருப்பது வரலாற்றில் இதுதான் முதல் தடவை அல்ல என்பதைச் சொல்ல வேண்டும்.

தற்போது உருவாகியிருக்கும் நிலைமை, ஏறக்குறைய 1949ஆம் ஆண்டு தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலர் பிரிந்து தமிழரசுக்கட்சியை உருவாக்கிய கால நிலைமையை ஒத்ததாகும்.


அப்பொழுது சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கம் டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வசம் இருந்தது. அவ்வரசாங்கத்தில் அப்பொழுது தமிழர்களின் ஒரே அரசியல் கட்சியாகிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் அங்கம் வகித்ததுடன், பொன்னம்பலம் கட்சி சார்பாக மந்திரிப் பதவியும் பெற்றிருந்தார்.
அந்த அரசாங்கம் அமைவதற்கு முதல் நடந்த பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவழித் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் மலையகப் பகுதிகளில் ஐ.தே.கவுக்கு எதிரான வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றியீட்டினார்கள். அந்த மக்கள் இழப்பதற்கு எதுவும் இல்லாத, இலங்கையின் ஆகக் கடைநிலைத் தொழிலாளர்களாக இருந்ததாலும், அவர்கள் மத்தியில் இடதுசாரிக் கட்சிகள் செல்வாக்குப் பெற்றிருந்ததாலும் தேர்தல் முடிவுகள் பெரு முதலாளிகளினதும், நிலப்பிரபுகளினதும் கட்சியான ஐ.தே.கவுக்குப் பாதகமாக அமைந்துவிட்டது.

அதன் காரணமாக டி.எஸ்.சேனநாயக்க அந்த மக்கள் மீது கடுமையான கோபம் கொண்டிருந்தார். மலையக மக்களுக்கு பிரஜாவுரிமையும், அதன் காரணமாக வாக்குரிமையும் இருந்த காரணத்தால்தான், அவர்கள் தனது கட்சிக்கு எதிராக வாக்களித்துவிட்டார்கள் என்று கருதிய டி.எஸ்., அந்த மக்களது பிரஜாவுரிமையையும், வாக்குரிமையையும் பறிக்கத் தீர்மானித்து, நடைமுறையிலும் செய்தார். அவரது இந்த ஒரு சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையை, அதுவும் தமிழ் சகோதரர்களுக்கு எதிரான பேரினவாத நடவடிக்கையை, அரசில் இணைந்திருந்த தமிழ் காங்கிரஸ் கட்சி எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் அக்கட்சி அப்படிச் செய்யாததுடன், அக்கட்சித் தலைவர் பொன்னம்பலம் இந்நடவடிக்கையை ஆதரித்தும் இருந்தார்.

பொன்னம்பலத்தின் இச்செய்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்குள் முரண்பாட்டைத் தோற்றுவித்தது. அதன் காரணமாக, அக்கட்சியில் இருந்த கு.வன்னியசிங்கம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஈ.எம்.வி.நாகநாதன் போன்றோர் தமிழ் காங்கிரசை விட்டு வெளியேறி, பொன்னம்பலத்தைத் “தமிழினத்தின் துரோகி” எனத் தூற்றிக்கொண்டு, தமிழரசுக்கட்சி என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அமைத்தனர். அக்கட்சி பொன்னம்பலத்தின் கட்சியை விட தீவிரமான தமிழ் தேசியவாதத்தை உயர்த்திப் பிடித்ததுடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு சம அந்தஸ்து என்ற தமிழ் காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்குப் பதிலாக, தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சமஸ்டி அமைப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரியது.

ஆனால், அவர்கள் இரண்டு கட்சிகளானார்களேயொழிய, கொள்கை ஒன்றாகவே – அதாவது தமிழ் இனவாதமாகவே இருந்தது. அதன் காரணமாக, சிங்கள மக்கள் மத்தியில் இந்தத் தமிழ் கட்சிகளைப் போலவே பெரு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகளின் பிரதிநிதியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி டட்லி சேனநாயக்க தலைமையில் 1965இல் ஏழுகட்சி கூட்டரசாங்கம் அமைத்த போது, தீவிர சிங்கள இனவாதிகளான கே.எம்.பி.ராஜரத்ன, ஆர்.ஜி.சேனநாயக்க போன்றவர்களுடன் இவர்களும் அந்த அரசில் சேர்ந்து கொண்டனர். இதன்மூலம் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி என்பன அரசியல் ரீதியாக ஒரே நிலைப்பாட்டை உடையன என்பது நிரூபிக்கப்பட்டது.

தமிழ் மக்களுக்கு இந்த இருகட்சிகளும் செய்த துரோகம் காரணமாக, இந்த இருகட்சிகளினதும் பெரும் தலைவர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், ஈ.எம்.வி.நாகநாதன், மு.ஆலாலசுந்தரம் போன்றொரை 1970ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் மக்கள் தோற்கடித்தனர். தமக்கு நேர்ந்துள்ள அபாயத்தை உணர்ந்த இவ்விரு கட்சிகளினதும் தலைவர்கள், தமக்குள்ளான நாய்ச்சண்டையை நிறுத்தி, தாம் ஒற்றுமைப்பட்டுவிட்டோம் என்ற ஒரு தோற்றப்பாட்டை தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்க புதிய யுக்திகளை வகுத்துச் செயற்பட ஆரம்பித்தனர்.
1976ல் வட்டுக்கோட்டையில் இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு மாநாட்டை நடாத்தி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய அமைப்பை உருவாக்கியதுடன், இனிமேல் தங்களது முடிந்த முடிபு தமிழ் மக்களுக்கு சுதந்திரத் தனித்தமிழ் ஈழம் ஒன்றை அமைப்பதுதான் எனவும் பிரகடனம் செய்தனர்.

ஆளால் இவ்விரு கட்சிகளும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் தமது வங்குரோத்து அரசியலை தமிழ் மக்கள் மத்தியில் ஈடேற்றுவதற்காக வட்டுக்கோட்டை மாநாட்டில் கிளப்பிய ‘தமிழ் ஈழம்’ என்ற கோசம் சுமார் 33 வருடங்களாக தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய பாரிய அழிவு விரைவில் ஈடுசெய்யப்பட முடியாத ஒரு சூழலில், புலிகள் 2009இல் அழிக்கப்பட்ட பின்னர் சர்வதேச ஏகாதிபத்திய சக்திகளினதும், ஐ.தே.கவினதும் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வேலை செய்ய ஆரம்பித்தனர்.

அதன் ஒரு கட்டமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கையில் மகிந்த ராஜபக்ச தலைமையில் இருந்த ஏகாதிபத்திய விரோத அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் பிற்போக்கு சக்திகளுடன் இணைந்து வெற்றி கண்ட பின்னர், பழையபடி டி.எஸ்.சேனநாயக்க காலத்து தமிழ் காங்கிரசின் அரசியல் பாதைக்கும், 1965இல் தமிழரசு கட்சியும், தமிழ் காங்கிரசும் மேற்கொண்ட அரசியல் பாதைக்கும் திரும்ப முற்பட்டதின் விளைவே இப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவுக்குக் காரணம். இது ஒரு வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் வெட்டிய குழியில் தான் விழுந்த கதை என்றும் சொல்லலாம்.
தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளுக்குத் துரோகம் செய்து, தமது அரசியல் சகபாடியான ஐ.தே.க அரசுடன் ஒத்துழைப்பதிலேயே நாட்டமாக இருக்கின்றது. இது அவர்களே உருவாக்கிய தமிழர் தேசியம், தன்னாட்சி என்ற கொள்கைகளுக்கு முரணனானது என்பதில் சந்தேகமில்லை. அவர்களது இந்த நிலைப்பாடு, தமிழ் தேசியத்தை, அதாவது தமிழர்களுக்கென்று தனிநாடு ஒன்று அமைய வேண்டும் என்ற கருத்தில் அழுந்தி நிற்பவர்களுக்கு உடன்பாடானது இல்லை. அத்தகைய சக்திகள் பல அணிகளாக இருக்கின்றனர். புலிகளின் மிச்ச சொச்சங்கள், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி என பல வடிவங்களில் அவை இருக்கின்றன. ஆனால் இவர்களுக்கு மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர் ஒருவரின் தலைமைத்துவம் இதுவரை காலமும் இல்லாமல் இருந்து வந்தது.
மறுபக்கத்தில் வட மாகாணசபைத் தலைவராக இருக்கும் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மாகாணசபைத் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டு, அதன் செல்வாக்கில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆரம்பத்திலிருந்தே கூட்டமைப்புத் தலைமையுடனும், புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுடனும் – குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் முரண்பாடுகளைக் கொண்டிருந்தார்.
அவர் கூட்டமைப்புத் தலைமையை விடத் தான்தான் தமிழ் மக்களின் நலன்களில் கூடுதலான அக்கறை காட்டுபவர் என்ற ஒரு தோற்றப்பாட்டை வட பகுதித் தமிழ் மக்களிடம் உருவாக்கி வந்துள்ளார். அவரது இந்த நிலைப்பாட்டை கூட்டமைப்புத் தலைமை மீது அவநம்பிக்கை கொண்ட அதன் ஆதரவாளர்களும், புலி ஆதரவாளர்களும், புலம்பெயர் நாடுகளில் வசதியாக இருந்து கொண்டு ‘சிங்கள அரசுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும்’ என்று கறுவிக்கொண்டு திரியும் பேர்வழிகளும் ஆதரிக்க ஆரம்பித்தனர்.
போதாக்குறைக்கு கூட்டமைப்புத் தலைமையுடன் நீண்டகாலமாக முரண்பாடு கொண்டிருந்தவரும், கடந்த தேர்தலின் போது தோல்வியடைந்த பின்னர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எதிர்பார்த்து ஏமாந்தவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், மற்றும் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியின் ஏகபோகத் தலைமையை விரும்பாத புளொட் தலைவர் த.சித்தார்த்தன் போன்றோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ‘சர்வாதிகார’ போக்கை எதிர்ப்பதற்காக விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையை ஆதரிக்கும் நிலையை எடுத்தனர்.
தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதோ அல்லது அது ஒரு அரசியல் இயக்கமோ அல்ல என விக்னேஸ்வரன் அறிவித்திருக்கின்ற போதிலும், அது உண்மை அல்ல. அது நிச்சயமாக முழுக்க முழுக்க கூட்டமைப்புக்கு எதிரான ஒரு அரசியல் இயக்கம்தான். அந்த உண்மை இன்னும் சில நாட்களில் நிச்சயமாக வெளிப்படும்.
ஆனால் பலரும் எதிர்பார்ப்பது போல, தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான இயக்கமாக – அதாவது கொள்கை அளவில் –இருக்குமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. ஏனெனில் தமிழ் மக்கள் பேரவையும் முன்னர் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ ஈழ விடுதலைப் புலிகள், தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன பின்பற்றிய அதே தமிழ் தேசியவாத (இனவாத) பாதையிலேயே பயணிக்க முற்படுகிறது. ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றுத் தலைமை என்பது அமைப்பு ரீதியாக மட்டுமின்றி குணாம்ச ரீதியாகவும் மாற்றானதாக இருக்க வேண்டும்.
குணாம்ச வித்தியாசம் என்னும் போது, ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுப்பதும், இலங்கையின் ஏனைய இனங்களுடன் சமாதான சகஜீவனத்துடன் வாழ்வதும், ஜனநாயக விழுமியங்களைப் பேணுவதும் எனச் சுருக்கமாக வரைவிலக்கணப்படுத்தலாம். யுத்தம் ஆரம்பாவதற்கு முன்னர் தமிழ் மக்களுக்கு அவ்வாறான ஒரு தலைமையை உருவாக்க இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி போன்ற இடதுசாரிக் கட்சிகள் முயன்றன. தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பமான பின்னர், சில முற்போக்கான இயக்கங்கள் அந்த முயற்சியில் இறங்கின. அதன்பின்னர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அந்த முயற்சியைக் கையில் எடுத்தது.

ஆனால், காலத்துக்காலம் மாற்றுத் தலைமையை உருவாக்க முற்பட்ட இடதுசாரி – ஜனநாயக சக்திகளை பிற்போக்குத் தமிழ்த் தலைமைகள் முறியடிக்க முயன்றதுடன், யுத்தம் ஆரம்பமான பின்னர் இந்த தமிழ் பிற்போக்கு சக்திகளின் ஏவல் நாயான பாசிசப் புலிகள் மூலம் மாற்று இயக்கங்களை அழித்தொழிப்பதிலும் வெற்றி கண்டன. ஈ.பி.டி.பி கட்சி மட்டும் இந்த அழிப்பு முயற்சிகளுக்கு முகம் கொடுத்து இன்றுவரை தமிழ் பிற்போக்குத் தலைமையின் ஒரு மாற்று சக்தியாக ஓரளவாவது தன்னைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில், பிற்போக்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினராலும், பல்வேறு வகையான புலி ஆதரவுக் குழுக்களாலும், வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களுக்கான ஒரு மாற்றத் தலைமையாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை. எப்படி தமிழ் காங்கிரசை “துரோகி” என்று சொல்லிக்கொண்டு தமிழரசுக்கட்சி தமிழ் தலைமைப் பதவியை எடுத்ததோ, அதேபோல தமிழ் தேசியக் கூட்டமைப்பை (தமிழரசுக்கட்சியை) “துரோகி” என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்கள் பேரவை வளர முற்படலாம். ஆனால் சாராம்சத்தில் இருவரினதும் அரசியல் ஒன்றுதான். ஒரு இருபது வருடம் கழித்து தமிழ் மக்கள் பேரவையைத் “துரோகி” என்று சொல்லிக்கொண்டு இன்னொரு தீவிரமான தமிழ் இனவாத இயக்கம் முன்னுக்கு வரலாம்.
ஆனால், ஒரேயொரு விடயத்தை மட்டும் இங்கு குறிப்பிடலாம். அதாவது, தமிழர் விடுதலைக் கூட்டணி உருவான பின்னர் தமிழர்கள் மத்தியில் ஒரு கட்சி அல்லது ஒரு இயக்கம்தான் இருக்கலாம் என்ற பாசிசக் கொள்கை, புலிகளின் அழிவின் பின்னர் அடிப்படை தகர்ந்து, தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தின் பின்னர் உடைந்தேவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் பேரவையும் ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’தான் என்ற போதிலும், தனியொரு கட்சி என்ற பாசிச நிலையிலிருந்து, இருகட்சி முறைமை என்ற முதலாளித்துவ ஜனநாயக முறைமையை தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் தோற்றுவித்துவிட்டது. இதுதான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழர்கள் மத்தியில் செய்த ஒரே சாதனையாக எதிர்காலத்தில் நினைவுகூரப்படக்கூடும்.

ஆனால் உண்மையில் தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றுத் தலைமை வேண்டும் என்ற வரலாற்றுத் தேவை எழுந்துள்ளது. அந்தத் தலைமை இதுவரை காலமும் பாரம்பரிய அல்லது பாசிச ஆயுதப் போராட்டத் தலைமைகள் பின்பற்றிய வெறுமனே தமிழ் இனவாத அரசியல் பாதையிலிருந்து விடுபட்டு தமிழ் மக்களின் உண்மையான தேசிய ஜனநாயகப் போராட்டத்தை – அதாவது தமிழ் மக்களின் தேசிய உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் –முன்னெடுத்துச் செல்வதாக அமைய வேண்டும்.

அதற்கான கரு தமிழ் மக்கள் மத்தியிலேயே பல தசாப்தங்களாக அடைகாக்கப்பட்டு வருகின்றது. அதாவது, சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை, தமிழ் மக்களில் சுமார் மூன்றிலொரு பகுதியினர் தேர்தல்களில் தமிழ் பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக வாக்களித்து வந்துள்ளனர். ஒரு பரீட்சையில் ஒரு மாணவன் அதிசிறந்த புள்ளிகள் எடுத்துச் சித்தியடையாவிட்டாலும், உச்ச கட்டமான 100 புள்ளிகளில் மூன்றிலொரு (33) புள்ளிகளை எடுத்தாலும் அவன் சித்தியடைந்தவன் என எவ்வாறு கணிக்கப்படுவானோ, அது போன்றதுதான் இதுவும்.

எனவே அந்த அடிப்படைக் கருவைத் தொடர்ந்து பாதுகாத்துக்கொண்டு, அதை வளர்த்தெடுத்தால், நிச்சயமாகத் தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்க முடியும். அதைச் செய்ய வேண்டியவர்கள் தேசிய ரீதியில் இன பேதங்களுக்கு அப்பால் செயற்படும் இடதுசாரிகளும், தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் ஜனநாயக சக்திகளும்தான். அந்தச் சக்திகள் இதைக் கவனத்தில் கொள்ளுவது காலத்தின் தேவையாகும்.
வானவில் இதழ் அறுபத்தினொன்றினை முழுமையாக வாசிப்பதற்கு:
VAANAVIL 61_2015

No comments:

Post a comment

Biden’s Drone Wars BY BRIAN TERRELL

  On Thursday, April 15, the   New York Times   posted an  article   headed, “How the U.S. Plans to Fight From Afar After Troops Exit Afghan...