குட்டக்குட்ட குனிய முடியாது- வானவில் மாசி 2016


கடந்த ஒரு வருட காலத்தில்,  65 வருட பழைமை வாய்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலதுசாரிகளின் பிடியில் முற்று முழுதாக விழுந்து உட்கட்சி ஜனநாயகத்தையும் குழி தோண்டிப் புதைத்து விட்டதால்,  கட்சியில் உடைவு என்பது தவிர்க்க முடியாதாகிவிட்டது.  ஸ்ரீல.சு.கட்சி இரண்டாக பிளவுபடுவதைத் தடுப்பதற்காகவும்,  கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் கட்சிக்குள் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவுமே, கட்சித்தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கையளிப்பதாக
கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்  மஹந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். 
மைத்திரிபால சிறிசேனா ஸ்ரீல.சு.கவின் பொதுச்செயலாளராக இருந்து கொண்டே
குள்ளத்தனமாக ஸ்ரீல.சு.கவின் முன்னாள் தலைவர் சந்திரிகா குமாரதுங்காவின் ஏற்பாட்டில்,  ஐக்கிய தேசியக்கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளாராக ஸ்ரீல.சு.கவின் வேட்பாளர்  மஹpந்த ராஜபக்சவிற்கு
எதிராகப் போட்டியிட்டு வெற்றியீட்டியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



ஸ்ரீல.சு.கவின் தலைமை சிறிசேனாவிடம் கைமாறிய பின்னர் அவர் சந்திரிக்காவுடனும் ஐ.தே.கவுடனும்  சேர்ந்து கொண்டு  கட்சிக்குள் மஹிந்தவின் செல்வாக்கினை குறைப்பதென்ற போர்வையில் கட்சியினை தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு
வருவதிலேயே காய்களை நகர்த்தி வருகிறார்.  கட்சியின் ஒழுக்கவிதிகளை மீறுவதாகக்கூறி
கட்சியின் போக்கினை துணிந்து பகிரங்கமாக விமர்சிக்கும் உறுப்பினர்கள் (இவர்கள் சிறிசேனா -சந்திரிகாவின் பார்வையில்  மஹிந்தாவின்  ஆட்கள்) கட்சியை விட்டு கலைக்கப்படுகின்றனர். இதைவிட விசேட பொலிஸ் பிரிவொன்றினை அமைத்து 
ஸ்ரீல.சு.கவினரும்  மஹிந்த குடும்பத்தினரும் திடீர் திடீரென வேட்டையாடப்பட்டு  வருகின்றனர்.

மஹிந்தாதாவின் ஆட்சிக்காலத்தில் பாரிய ஊழல்கள் நிகழ்ந்ததாக, 'நல்லாட்சி' செய்யப் போவதாகக்கூறி பதவிக்கு வந்தவர்கள் தமது அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டுவதிலேயே முழுக்கவனமும் செலுத்தி வருகிறார்கள். சரியான முறையில் ஊழல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு, இதுவரையில் எவருமே நீதித்துறையின் முன்னே நிறுத்தபப்படவில்லை. சிறிசேனாவிடம் நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதிப்பதவி
இருப்பதினால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் ஸ்ரீல.சு.கவின் அதிருப்தியாளர்கள் உள்ளனர்.

தென்னிலங்கை (பெரும்பான்மையினத்து) மக்களின் செல்வாக்குப் பெற்ற தலைவராக விளங்கும் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் ஒன்று  இம்மாதம் 12ந் திகதி பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நான்கு தினங்களுக்கு முன்னதாக, கூட்டு எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்தில் இணைந்துள்ள ஸ்ரீல.சு.கவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஆரம்பிக்கவுள்ளதாக என்று பரவலாக  கூறப்படும் புதிய கட்சி தொடர்பான  பேச்சுவார்த்தை ஓன்று மஹிந்த
தலைமையில் மிரிஹானவில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றதாக அறியப்படுகின்றது.
அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களித்த 57 இலட்சம் மக்களைக்
காட்டிக்கொடுக்க மாட்டேன் ஸ்ரீல.சு.கவிலிருந்து ஒருபோதுமே விலகப்போவதில்லை என்றே மஹிந்த திரும்பத்திரும்ப கூறிவந்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால்  இம்மாதம் 14ந் திகதி நீர்கொழும்பில் 1500  உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள்  கலந்துகொண்ட ஒன்றுகூடலில் மஹிந்த தனது உரையில் "உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கான கூட்டத்திற்கு உள்ராட்சி மன்றங்களைச் சேர்ந்த
உறுப்பினர்களில் 95 சதவீதத்தினர் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு எதிராகவும்
ஒழுக்காற்று நடவடிக்கை என்று கூறி இவர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றினால்,
இவர்கள் செல்வதற்கு ஓர் இடம் வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.


எவருடைய வழிகாட்டுதல்களும் திட்டமிடல்களும் இன்றி தவிக்கும் ஸ்ரீல.சு.கவின் ஆதரவாளர்களை ஒழுங்கான முறையில் ஒருங்கமைத்து அரசியல் செயற்பாடுகள்
முன்னெடுக்கப்படுவது இன்று உடனடியான அவசியம். 1951இல் ஏகாதிபத்திய விசுவாசக்கட்சி ஐ.தே.விலிருந்து பிரிந்து ஸ்ரீல.சு.கட்சி தோற்றம் பெற என்னென்ன
காரணங்கள் இருந்தனவோää அதே காரணங்கள் இன்றும் உருவாகியுள்ளன. தேசிய அளவில் புதிய கட்சி ஒன்று உடனடியாக முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி மையத்திற்கு நெருங்கக் கூடியளவிற்கு சாத்தியப்பாடுகள் உள்ளனவா என்ற ஐயப்பாடுகள் எழுந்தாலும் இலங்கையில்
தற்போது ஆட்சியிலுள்ளவர்களை தூக்கியெறிந்து நாட்டினை காப்பாற்ற இதைத்தவிர வேறுவழியில்லை.
மூலம்: வானவில் மாசி 2016

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...