‘றோ’ பற்றிய ஜே.வி.பியின் இரட்டை நிலைப்பாடு! -இந்திரஜித்


Anura
சீனாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் பங்குபற்றிவிட்டு வந்த கையோடு இந்தியாவின் ‘றோ’ (RAW – Research and Analysis Wing) உளவு அமைப்பு மீது குற்றச்சாட்டொன்றைத் தூக்கி வீசியிருக்கிறார் ஜே.வி.பியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க.

அதாவது, யாழ்ப்பாணத்தில் றோ பல துறைகளிலும் ஊடுருவி, அங்கு அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். திசாநாயக்க என்ன ஆதாரங்களை வைத்துக்கொண்டு இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் என்ற விபரங்கள் வெளிவராத போதிலும், இந்திய அரசாங்கம் போர் முடிவுற்ற பின்னர் யாழ்ப்பாணத்தில் தனது துணைத் தூதரகம் ஒன்றைத் திறந்து செயல்படுவதும், இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்தில் அதனுடனும், றோவுடனும் இணைந்து வேலை செய்த சிலரின் நடமாட்டம் யாழ்ப்பாணத்தில் காணப்படுவதும்தான் அவரது குற்றச்சாட்டுக்கு அடிப்படை என ஜே.வி.பி. வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.


திசாநாயக்க றோ பற்றிய தனது குற்றச்சாட்டை முன்வைத்த சந்தர்ப்பத்தில், இன்னொரு விடயத்தையும் அவர் கூறியிருக்கிறார். அதாவது, இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவையோ, ஐ.நாவையோ நம்பியிருப்பதில் பிரயோசனம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். ஜே.வி.பி. தலைவரின் இந்தக் கூற்று ஓரளவு சரியானது என்ற போதிலும், கடந்த காலத்தில் இலங்கையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக முயற்சிகள் எடுக்கப்பட்ட போதேல்லாம் ஜே.வி.பி., ஐ.தே.க, ஹெல உறுமய போன்ற சிங்களப் பேரினவாத சக்திகளுடன் இணைந்து அவற்றைக் குழப்பியது பற்றி என்ன சொல்லப் போகிறார்? அதுவுமல்லாமல், இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமது திட்டம் என்ன என்பதை ஏன் இன்றுவரை ஜே.வி.பி. வெளியிடாமல் இருக்கின்றது?

றோ அமைப்பைப் பற்றி ஜே.வி.பி. தலைவர் கூறியிருப்பது ஒன்றும் ஆச்சரியகரமான விடயம் அல்ல. இந்தியா 1947இல் பிரித்தானிய காலனித்துவவாதிகளிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவை ஆட்சி புரிந்த பெருமுதலாளி வர்க்கம் நடைமுறைப்படுத்திய தேச விஸ்தரிப்புவாதக் கொள்கைக்கு சேவகம் செய்யவே றோ உளவு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்கு எண்ணற்ற உதாரணங்கள் வரலாறு முழுவதும் உள்ளன.

இலங்கையிலும் றோ மிக நீண்டகாலமாக செயற்பட்டு வருகிறது. 1977இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஐ.தே.க. ஆட்சி இனப்பிரச்சினையை இராணுவ ரீதியாகக் கையாள முற்பட்டவுடன், றோவும் தனது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தது. இலங்கை அரசை எதிர்த்துப் போராடப் புறப்பட்ட தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சி வழங்கியதில் றோவுக்கும் முக்கியமான பங்கு இருந்ததென்பது இரகசியமான விடயமல்ல.

1971இல் கிழக்குப் பாகிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து பிரித்து, பங்களாதேஸ் என்ற தனிநாட்டை உருவாக்கியதில் றோ முக்கிய பங்கு வகித்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அந்த நேரத்தில் பங்களாதேசின் உதயம் தமிழ் ஈழத் தனிநாட்டை உருவாக்குவதற்கான போராட்டத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்த தமிழ் தேசியவாதிகளுக்கும் கூட பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது. அதனால்தான், தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தை அதுவரை காலமும் “ஈழத்துக் காந்தி” என்று வர்ணித்து வந்த தமிழரசுக் கட்சியினர், பங்களாதேஸ் உதயத்தின் பின்னர் யாழ்.முற்றவெளி மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்தி, செல்வநாயகத்தை “ஈழத்து முஜிபுர் ரஹ்மான்” (பங்களாதேசின் விடுதலையை வென்றெடுத்த அந்நாட்டின் தேசபிதா) எனக் குறிப்பிட்டு அவருக்கு மலர்க்கிரீடம் சூட்டி மகிழ்ந்தனர்.
அதுமட்டுமின்றி, இந்தியாவின் உதவியுடன் தாமும் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழருக்கென தனிநாடு ஒன்றை உருவாக்கப் போவதாக தமிழரசுக்கட்சித் தலைவர்கள் பகிரங்கமாகவே பேசியும் வந்தனர். பின்னர் அதுபோலவே தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் நிகழ ஆரம்பித்ததும், றோவும் தனது மூக்கை அதில் நுழைத்துக் கொண்டது.
இவைகள் எல்லாம் வரலாற்றின் பழைய பக்கங்களாகி விட்டன. ஆனால் மிக அண்மையில், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2015 ஜனவரி 8இல் நிகழ்ந்தபோது றோ என்ன செய்தது?

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் வேலை பார்த்த ஒரு றோ அதிகாரி, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்காக வேலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். அதுமாத்திரமல்ல, தனது தேர்தல் தோல்விக்கு மேற்கத்தைய சக்திகளை குற்றஞ்சாட்டிய மகிந்த ராஜபக்ச, றோ அமைப்பையும் அதனுடன் சேர்த்துப் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார்.
இதில் ஒரு முக்கியமான விடயம் என்னவெனில், இப்பொழுது யாழ்ப்பாணத்தில் றோவின் நடவடிக்கைகளைக் குற்றஞ்சாட்டும் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் ஜே.வி.பியினர் றோவால் ஆதரிக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவைத்தானே தாமும் ஆதரித்தார்கள். மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தையும், இந்திய றோவையும் எதிர்ப்பதாக நீண்ட காலமாகச் சொல்லி வரும் ஜே.வி.பி., எதற்காக அந்தச் சக்திகளால் களமிறக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்தது? மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க விரும்பாவிட்டாலும், ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம்தானே?

மைத்திரி – ரணில் கூட்டணி மக்கள் விரோதப் பிற்போக்குக் கூட்டணி என்று தெரிந்து கொண்டு அந்த அரசைப் பதவிக்குக் கொண்டு வந்துவிட்டு, அந்த அரசின் ஓராண்டு பூர்த்தியின் போது இந்த அரசு மக்களுக்கு எதிராகச் செயற்படுகிறது என்று ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம் செய்வது, ‘நம்பி ஏமாந்துவிட்டோம்’ என்று காட்டுவதற்காகவா அல்லது மக்களை ஏமாற்றுவதற்காகவா?

யாழ்ப்பாணத்தில் றோ அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்குகிறது என்றால், அது ஒரு பாரிய தேசியப் பிரச்சினை. அந்த விடயத்தை அரசாங்கத்தினதும், நாட்டு நலனில் அக்கறையுள்ள சக்திகளினதும் கவனத்துக்குக் கொண்டுவந்து உரிய நடவடிக்கை எடுக்க வைப்பது ஜே.வி.பியின் கடமையல்லவா? ஜே.வி.பி. அதைச் செய்திருக்கிறதா?
இந்த விவகாரத்தில் வெறும் பூச்சாண்டி காட்டாமல், பொதுமக்களுக்கு றோ என்ன வகையாக யாழ்ப்பாணத்தில் செயல்படுகிறது என்று தெளிவாக்க வேண்டிய கடப்பாடு ஜே.வி.பிக்கு முன்னால் உள்ளது. அதை அவர்கள் தட்டிக்கழித்துவிட முடியாது.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...