ஆலம்பனாவின் அலம்பல்கள் !


எஸ்.எம்.எம்.பஷீர்

"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
          வஞ்சனை சொல்வாரடீ - கிளியே
          வாய்ச் சொல்லில் வீரரடீ."
                                             
                            சுப்ரமணிய பாரதி


ஐ.நா .மனித உரிமை ஆணையகம் இலங்கையில் 2002 தொடக்கம் 2011 வரை , சுமார் ஒன்பது ஆண்டுகளில் இலங்கையில்  நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் , குறிப்பாக 2009 ஆம் ஆண்டு  நடைபெற்ற பயங்கரவாத ஒழிப்பு யுத்தத்தின் பொழுது நடைபெற்றதாக சொல்லப்படும் யுத்தக் குற்றங்கள்,  தொடர்பில் இலங்கை அரசின் உடன்பாட்டுடன் ஒரு உள்நாட்டு விசாரணையை நடத்த தீர்மானம் மேற் கொண்டுள்ளது. வரைவுத் தீர்மானத்தில் சொல்லப்பட்ட  "கலப்பு" என்ற சொல்லை "கலைத்து" விட்டேன், தீர்மானத்தை வென்று விட்டோம் , இனி எப்படி விசாரணை நடத்துவது என்பது எமது உள்நாட்டு விவகாரம்  என்று ஜனாதிபதி உள்நாட்டுப் பொறிமுறைக்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டதாக பெருமிதம் கொள்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்பதை வரும் நாட்கள் சொல்லப் போகின்றன!

" கலப்பு "என்ற சொல்லைத்தான் தவிர்த்திருக்கிறார்கள் , ஆனால் விசாரணை  வெளிநாட்டு ( "சர்வதேசம்  என்பதிற்கு பதிலாக)   நீதிபதிகள் , வழக்கு தொடுனர்கள் , தொழில் நுட்ப  நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக நடைபெறும் என்று இலங்கை அரசு ஐ.நா தீர்மானத்தை வெகுவாக வரவேற்றிருக்கிறது. இலங்கையின்  ஐ. நா வுக்கான நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தனது வழக்கமான நிலைப்பாட்டில் இருந்து மாறி இன்றைய அரசின் ஆதரவு நிலைப்பாட்டை பிரதிபலித்துள்ளார்;  ஒரு முழு குத்துக்கரணம் அடித்துள்ளார். இவர் சென்ற வருடம் மார்ச் மாதம்  ஐ.நா மனித உரிமைப் பேரவை முன்வைத்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தின் பொழுது அப்படியான சர்வதேச விசாரணை  குறித்த தீர்மானம் "சர்வதேச சட்டத்தினை கடுமையாக மீறும் ஒரு செயலாக மட்டுமல்ல இறைமையுள்ள நாடுகளின் மீதான ஒரு முன்மாதிரியாகவும் அமையும் என்று வாதிட்டவர். அது மாத்திரமல்ல அன்றைய ஐ.நா வின் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தை மிக காட்டமாக எதிர்த்தவர்.   " "The resolution will not only constitute a serious breach of international law but also sets a precedence on the sovereignty of nations," . இன்று சர்வதேச விசாரணைக்கு மாற்றாக வெளிநாட்டு நீதிபதிகள் , வழக்கு தொடுனர்கள் நிபுணர்களின் உதவியுன் " உள்நாட்டு" விசாரணைக்கு உடன்பட்டுள்ளார்கள்! இதனை புலிகளின்  ஆதரவாளர்களாக செயற்பட்ட  தந்தை இம்மானுவேல் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன ஆதரித்துள்ளன. இது இலங்கை அரசுக்கு கிடைத்த வெற்றி  என்று அரசும் , மேற்குலகில் கலாநிதி பட்டங்களை இலவசமாகப் பெற்ற பல புத்தி ஜீவிகள் , சர்வதேச உதவியால் தங்களின் வாழ்க்கையை நடத்தும் பல சிவில் அமைப்புக்கள்  , மற்றும் தன்னார்வ தொண்டர் நிறுவனங்கள் என்பன இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ளன !


ஐ .நாவின் மனித உரிமைப் பேரவை இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை செய்யப்பட  பட  என ஒரு இணக்கத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. அதுவும் இலங்கை அரசின் அனுசரணையுடன் அங்கீகாரத்துடன் அத்  தீர்மானத்தை வாக்கெடுப்பு நடத்தும் அவசியமின்றி  கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளது. இத்தீர்மானம் சொல்லுகின்ற விசாரணை அமைப்புக் குறித்த சர்ச்சைகளை ஒருபுறம் வைத்துவிட்டு இன்று இலங்கை தமிழ் முஸ்லிம்  மக்களின் அரசியல் பிரதிநிகளாக விளங்கும் கட்சிகளின் தீர்மானம் தொடர்பான நிலைப்பாடுகளில் , அதிலும் குறிப்பாக முஸ்லிம் கட்சிகளின் நபுஞ்சகத் தன்மை விசனத்தை அளிக்கிறது.

தீர்மானம் வந்த கையேடு முஸ்லிம்  காங்கிரசின் சார்பில் ஹசன் அலி போன்றோர் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேவளை முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்கள்  ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் பௌத்த பேரினவாதிகள் தெற்கிலே முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட , குறிப்பாக அளுத்கம போன்ற சம்பவங்களை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் சுட்டிக் காட்டி உள்ளார். அதற்குக் காரணம் முஸ்லிம்  காங்கிரசின் தலைவர் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்து அளவில் இலங்கை வருகை தந்த ஐ.நா.ம .உரிமைப் பேரவையின்  முன்னாள் ஆணையாளர் நவநீதம்  பிள்ளையிடம்  வழங்கிய 50 பக்க அறிக்கையாகும் என்று முஸ்லிம் காங்கிரசார் பெருமிதம் கொண்டுள்ளனர்.

ஆனால் குறிப்பாக அளுத்கம சம்பவம் மட்டுமல்ல முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்களை அவ்வப்பொழுது இலங்கையின் சிவில் அமைப்புக்கள் , மற்றும் சில தனி நபர்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு  தெரிவித்திருந்தனர். அந்த  வகையில் இன்று வேறு ஒரு சமூகப் பிரச்சினைக்குள் அகப்பட்டுள்ள ஆசாத் சாலியும் கூட  அவ்வாறான  முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்களை பற்றிய தகவல்களை ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு வழங்கி இருந்தார். மேலும் பல சர்வதேச ஊடகங்களுக்கும் அதிகளவில் வழங்கி இருந்தார்.

ஆனால் அவர் இப்பொழுது முகம் கொடுத்துள்ள சமூகப் பிரச்சினை காரணமாக ஐ.நா தீர்மானத்தில் முஸ்லிம்கள் பற்றி ஐ.நா ம. உ. ஆணையாளர் குறிப்பிட்டமைக்கு தானே காரணம் என்று வாய் சவடால் விட ஆளையே காணோம். ! முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் அந்த இடை வெளியை நிரப்பிக் கொண்டுள்ளனர். இன்னுமொரு புறத்தில் நிசாம் காரியப்பர்  தனது பங்கிற்கு அவர் இந்த வருடம் மார்ச் மாதத்தில் ஐ.நா மனித உரிமைப் பேரவை பக்க அமர்வில் கலந்து கொண்ட பொழுது அளுத்கம உள்ளிட்ட பல பௌத்த பேரினவாத சக்திகளின் சம்பவங்களை நடத்த மறைமுக அனுசரணை வழங்கியது மகிந்த அரசென்றும் அவரின் கருத்துக்களையே ஐ.நா ம. உ. ஆணையாளர் சைட் ஹுசைன்  பிரதிபலித்தார் என்றும் அவரின் சார்பில் உரிமை கோரி உள்ளனர்.

தெற்கில் நடந்த முஸ்லிம்கள் மீதான குறிப்பிடத்தக்க பேரினவாத அடக்குமுறை அத்துமீறல் சம்பவங்கள் யாவும் மிகக் குறுகிய  காலத்துள் , அதுவும் ஐ.நா . மனித உரிமை ஆணைகுழு விதித்திருந்த  2002-2011 வரையான காலப்பகுதியில் நடைபெற்றிருக்கவில்லை என்பதும் மாறாக முஸ்லிம் காங்கிரசின்  அரசியல் அடித்தளமான ,இன்றுவரை முஸ்லிம் காங்கிரசை நிலைகொள்ளச் செய்திருக்கும் கிழக்கு மாகாணத்தில் புலிகள்  முஸ்லிம்கள் மீது வாழைச்சேனையிலும் , மூதூரிலும் நடத்திய தாக்குதல்களை , உயிர் உடமை பொருளாதார இழப்புக்களை முஸ்லிம் காங்கிரஸ் ஐ.நா மனித உரிமை ஆணையகத்துக்கு வழங்கவில்லை என்பதும் அது பற்றி ஆறு பக்க அறிக்கை தன்னும் வெளியிடவில்லை என்பதும் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஏனெனில் ஐ.நா ம. உ. ஆணையாளர் சைட் ஹுசைன்  குறிப்பாக முஸ்லிம்களுக்கு புலிகள் குறிப்பிட்ட காலப் பகுதில் இழைத்த  அநீதிகள் பற்றி சிலாகிக்கவில்லை, மாறாக மூதூரை புலிகள் சுற்றி வளைத்து பற்றி மட்டும் குறிப்பிட்டுள்ளார். மற்றைய மூன்று தசாப்த வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அடிமை வாழ்வு எல்லாம் வெறும் "முன்னொரு காலத்தில் " கதையாகி விட்டது. இதையே  மறந்துவிட்ட முஸ்லிம்  தலைவர்கள் , அதெல்லாம் எங்கே ஞாபகம்  வைத்திருக்கப் போகிறார்கள் .  இன்றைய தீர்மானத்தை வரவேற்று ,  ரணிலின் காலத்தில்  வந்த வெளிநாட்டு சமாதான   தலையீடு , ஒப்பந்தம் என்பன  தவற  விடப்பட்ட சந்தர்ப்பங்களாக அடையாளம் காணும் ஹசன் அலி ரணில் வாழைச்சேனையிலும் , மூதூரிலும்  முஸ்லிம்களை  புலிகள் கொன்ற பொழுது அவர்களின் பொருளாதாரங்களை அழித்த பொழுது அவரின் தலைவர் அப்துல் ரவூப்   அடங்கிப்போனதை மறைக்கப் பார்க்கிறார். மக்களும் மறந்து போனதால்தான்   தங்களின் அரசியல் வேர்களை அங்கெல்லாம் ஆழமாக ஊன்றி இருக்கிறார்கள்.  
 

சுவாரசியமாக  இலங்கை அரசின் சார்பில்  2013 வரை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் சுமார் மூன்று முறை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கலந்து கொண்டுள்ளார். அதிலும் இறுதியாக அவர் 2013இல் கலந்து கொண்ட பொழுது தன்னுடைய உதவியாளராக ஒரு 34 வயது மதிக்கத்தக்க பெண்  உதவியாளரையும் தன்னுடன் ஜெனீவாவுக்கு அழைத்து வந்திருந்தார். அரசாங்கம் அவரின் பயண தங்குமிட வசதிகளை ஒழுங்கு செய்திருந்தது. அவருக்கு கைச் செலவுக்கு சுமார் $3200 அமெரிக்க டாலர்களையும் ஒவ்வொரு பயணத்தின் பொழுதும்  அரசு  வழங்கி இருந்தது. அப்பயணங்களின் பொழுது சில நாட்கள் அவர்  ஜெனீவாவில் தங்கி இருந்திருக்கிறார். புலிகளும் ஏனைய தமிழ் தரப்பு அங்கத்தவர்களும் இலங்கை அரசுக்கு எதிராக  தீவிர பிரச்சாரங்களை முடுக்கி விட்டிருந்தனர்.  
பெரும்பான்மை புலிகளின் ஆதரவாளர்களும்  ஏனைய புலம் பெயர் தமிழர்களும் , அன்றைய மனித உரிமை பேரவைகளின் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்கள். அப் பொழுதெல்லாம் ரிசாத் பதியுதீனும்  கலந்து கொண்டிருந்தார்.

ஆனால் அவர்கள் யாரும் அறிக்கை எதுவும்  தாயரிக்கவில்லை , ஐ.நா.ம.உ பேரவை  ஆணையாளருக்கு வழங்கவுமில்லை என்றாலும் அரசாங்கத்துக்கு ஆதரவாக "கூலிக்கு மாரடித்தார்கள்" என்றே சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக  50 பக்கம் சிங்கள பேரினவாதிகளின் அடாவடித்தனங்கள் பற்றி தயாரித்த  அறிக்கையில் குறிப்பிடப்படும் காலப் பகுதிக்குள்ளும் இவர்கள் ஜெனீவாவில் அரசாங்கத்தின் சார்பில் கலந்து  கொண்டார்கள்  சொகுசான ஹோட்டல் , பயணங்கள், செலவுக்கான பணத் தொகை , உதவியாளர்களை தங்களுடன்  கூடவே அழைத்துச் செல்லும்   வசதி என்பவற்றை பெற்றிருந்தார்கள் . ஆனால் அப்பொழுது தெற்கிலே மஹிந்த அனுசரணையுடனே சிங்கள பௌத்த பேரினவாதிகள் செயற்படுகிறார்கள் என்றோ அல்லது சிங்கள பேரினவாதிகள் அனுராதபுரம் மற்றும் தம்புள்ளையில் நடத்திய தாக்குதல்கள் பற்றி வாயே திறக்கவில்லை !

எல்லாவற்றையும் விட தமிழர் தரப்பில் தமிழர்களின் அரசியல் தலைவர்கள் சிவில் சமூகங்கள் ,  புலிகளின் புலம் பெயர் செயற்பாட்டாளர்கள் ,  மஹிந்த எதிர்ப்பாளர்கள்  என்று ஒரு பேரணி ஜெனீவாவிலே திரண்டு நின்ற பொழுது நாங்கள் 50 பக்க  அறிக்கையை கையளித்துவிட்டோம் என்று முஸ்லிம்  தலைவர்கள் வாளாவிருந்து விட்டார்கள். சென்ற அமர்வுகளில் வஞ்சகமாகப் பெற்ற அனுபவங்களைத் தன்னும் இம்முறை பயன்படுத்த கிடைத்த சந்தர்ப்பத்தை  விட்டு விட்டு , முறையானதும்  முழுமையானதுமான  முறைப்பாடுகளை செய்யாது விட்டுவிட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க ஹசன் அலி கோரிக்கை விட்டிருக்கிறார். 

தொடரும்

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...