ஆலம்பனாவின் அலம்பல்கள் (2)


எஸ்.எம்.எம்.பஷீர் 

 கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ
        சுப்ரமணிய பாரதியார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம்  காங்கிரஸ் கட்சியினர் ஐ. நாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கு வழங்கிய 50 பக்க அறிக்கையில்  ஒரே ஒரு வருடத்தில் , அதாவது 2013 ஜனவரி மாதம் தொடக்கம் 2013 டிசம்பர் மாதம் வரையான காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கும்  கிறிஸ்தவர்களுக்கும்   எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட  241 தாக்குதல்  சம்பவங்களை பதிவில் இட்டிருந்தனர். 


இலங்கையில் குறிப்பாக பெரும்பான்மை வடக்கு கிழக்கு முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும்  கட்சி என்ற கோதாவில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் ஏன் கிறிஸ்தவர்களுக்கு எதிராக , அதிலும் குறிப்பாக தெற்கில் வாழும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கு எதிராக பௌத்த பேரினவாத தனிமங்கள் மேற்கொண்ட  தாக்குதல்களை பட்டியல் இட வேண்டும். கிறிஸ்தவர்கள் மீது பௌத்த தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் யாவும் ஏற்கனவே கிறிஸ்த்தவர்கள் என்ற வகையில் மேற்குலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும்,  குறிப்பாக வத்திக்கான் வரை சொல்லப்பட்ட சங்கதிகளை,  தங்களின் அறிக்கையில் உள்வாங்கியதன் நோக்கம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அந்த அறிக்கையில் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை சொல்லியது என்பது மனிதாபிமானமிக்க செயல்தான் என்றாலும் அதுவரை காலமும் முஸ்லிம்களுக்கு பௌத்த பேரினவாதிகளாலும் , புலிகளாலும் இழைக்கப்பட்ட அநீதிகளை , அதிலும் வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் மீது  புலிகள் இழைத்த அநீதிகளை  அறிக்கையிடாமல் தவறவிட்டதன் நோக்கம் என்ன ?

 
திடீரென்று 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர்  , முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கு பௌத்த பேரினவாதிகள்  கிறிஸ்த்தவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்றும் அத்தாக்குதல்கள் பற்றி அறிக்கையயை , முஸ்லிம்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுடன் சேர்த்து ஐ.நா.மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் எப்படி தோன்றியது. இந்தக் கேள்விக்கு பின்னால் உள்ள மர்மங்கள் என்ன ! இந்த அறிக்கைய தயாரிக்க மேற்குலக மனித உரிமை இயக்கங்கள் நிதி பங்களிப்பு அளித்தனவா ? மேற்குலக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலே இந்த அறிக்கை தாயாரிக்கப்பட்டதா? .
மிக நீண்ட காலமாகவே பௌத்தர்கள் கிறிஸ்தவர்களாக  மத மாற்றம் செய்யப்படுகிறார்கள் என்றும் , எனவே , மத மாற்றத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய குரல் கொடுத்து வந்தது. பல சிங்கள கிராமங்களில் முளைத்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் , மதம் மாறியவர்கள் மீதும் பௌத்த தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதும் உலகறிந்த செய்திகளாகும். அப்பொழுதெல்லாம் முஸ்லிம்  காங்கிரஸ் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களின் உரிமைகளுக்காக அலட்டிக் கொள்ளவில்லை , 2013 இல் மாத்திரம்  திடுதிப்பென்று "சிங்கள கிறித்தவர்கள் மீது"  "வாஞ்சை" கொண்டது எப்படி ? புலிகளின் தலைவர் என்னுடன் வாஞ்சையுடன் பழகினார் , வாஞ்சையுடன் கதைத்தார் என்று பிரபாகரனுடன் ஒப்பந்தம் பண்ணி மகிழ்ந்த ஹக்கீம்  , ஒப்பந்தம் செய்து ஓரிரு மாதங்களின் பின்னர் நடத்திய வாழைச்சேனை மூதூர் முஸ்லிம்கள்  மீதான கொலை வெறியாட்டத்தை  ஹக்கீம் "சாணக்கியமாக " மறைத்து ஏன் ?  

இங்குதான்  அந்நிய ஆதிக்க நலன்களை முன்னிறுத்திய  இலங்கை மீதான  தலையீடுகளைக் எதிர்த்து 2012 ஆம்  ஆண்டில் கத்தோலிக்க மத தலைமைத்துவம் எடுத்த நிலைப்பாடு சிங்கள கத்தோலிக்கர்களைப் பொருத்தவரை மிக முக்கியமான தேசாபிமான நிலைப்பாடாகும்!  
தெற்கில் வாழ்ந்த கத்தோலிக்க சிங்கள மக்களின் மேற்குலக எதிர்ப்பும் , இலங்கையின் உள்நாட்டு விவகாரங்கள் மீது வெளிநாட்டு -வெளியார்- தலையீட்டை  எதிர்க்கும் நிலைப்பாடும் கத்தோலிக்க சமூகத் தலைவரின் நிலைப்பாட்டில் பிரதிபலித்தது. இலங்கையில் நடைபெற்றதாக சொல்லப்படும் யுத்தக் குற்றங்கள் , பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படல் வேண்டும் என்று மேற்குலக நாடுகள் தங்களின் நிகழ்ச்சி நிரலை ஐ நா மனித உரிமைப் பேரவையில் 2012 ஆம் ஆண்டு முன்னெடுத்துச் சென்ற பொழுது, இலங்கையின் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகத்தின் மதத் தலைவரான கார்டினல் மால்கம் ரஞ்சித்  மேற்குலக நாடுகள்,  இலங்கையின் இறைமையில் தலையீடு செய்யும் வண்ணம் ,  ஐ நா மனித உரிமைப் பேரவையில் தீர்மானத்தை கொண்டுவர முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்தார். அவர் உள்நாட்டு விவகாரங்களை இலங்கையே கையாள வேண்டும் என்பதில் அக்கறை காட்டினார்.

அதற்கு மாறாக கத்தோலிக்க தமிழ் பிரதேச தலைவர்களான தமிழ் தேசிய உணர்வாளர்களான மன்னார் கதோலிக் பிஷப் ராயப்பு ஜோசெப்பும் அவருடன் சேர்ந்து வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கத்தோலிக்க மத குருக்கள் 30 பேரும்  ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்கை  மீது விசாரணை நடத்த தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று எழுத்தில் வேண்டுகோள் விடுத்தனர். இலங்கைக்கான மொத்த கத்தோலிக்க மக்களின் சமய தலைவரான மல்கொல்ம் ரஞ்சித்தின் அறிக்கைக்கு எதிராக  கத்தோலிக்க தமிழ் இன மத குருக்கள் அந்நிய நாட்டு ஆதிக்க சக்திகளை , இலங்கையின் இறைமையில் தலையிட  அழைப்பு விடுத்தனர்.

இந்நிலைப்பாடு ஒரு முரண்பாட்டை தோற்றுவித்தது. புலிகளின் காலத்தில் புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கு மௌனத்தின் மூலம் அனுசரணை  வழங்கிய கத்தோலிக்க தமிழ் இன மத குருக்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் மற்றும் பல சர்வதேச மனித உரிமை நிறுவனக்களின் மனித உரிமை மீறல் விசாரணைக் குழுக்கள் இலங்கைக்கு வந்த பொழுதெல்லாம் புலிகளின் மனித உரிமை மீறல்கள் , ஆகக் குறைந்தது முஸ்லிம்களை  வடக்கிலிருந்து வெளியேற்றியது தொடர்பாகத் தன்னும் வாயே திறக்கவில்லை.   மன்னார் கதோலிக் பிஷப் ராயப்பு ஜோசெப்பு  தலைமையில் மதக் குருமாரின் அறிக்கை வெளியானதும். இன்றைய ஆட்சியில் போதி மரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற்றவர்கள் போல நடந்து கொள்ள எத்தனிக்கும் ஜாதிக ஹெல உறுமய அன்று  மன்னார் கதோலிக் பிஷப் ராயப்பு ஜோசெப் மீது வழக்கு தொடரப்படல் வேண்டும் என்று உறுமினார்கள்  என்பதும் மீள் நினைவூட்டப்படல் வேண்டும்.

இந்தப் பின்னணியில் சிங்கள கிறித்தவர்கள் (கத்தோலிக்கராயினும் அல்லது ஏனைய பெண்டகொஸ்து , யஹோவா விட்னஸ் ஆகியோராயினும்  )  மீது  மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்தும்  இலங்கை ஆட்சியில் பங்காளியான கட்சி மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அறியப்பட்ட  முஸ்லிம்  காங்கிரஸ் மூலம் கொண்டுவர வேண்டிய தேவை மேற்குலகுக்கு இருந்தது. ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் முக்கியமாக தெற்கிலே  உள்ள கத்தோலிக்கர்களை  மட்டுமே கார்டினல் மல்கம்  ரஞ்சித் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்ற நிலையை ராயப்பு ஜோசெப்பும் அவரின் முப்பது குருமாரின் மூலமும் ஏற்பட்டது.  ஏற்பட்டது என்பதைவிட ஏற்படுத்தப்பட்டது என்று சொல்லலாம். அதன் பின்னர்  வேறு அரசியல் சக்திகள் , தெற்கிலே கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த பௌத்த பேரினவாத அத்துமீறல்களை இலங்கை மீது தீர்மானம் நிறைவேற்றி உட்புகக் காத்திருக்கும் , ஆட்சி மாற்றம் வேண்டி நின்ற சக்திகளுக்கு தெற்கு சிங்கள கிறித்தவர்கள் மீதான் தாக்குதல்கள் பற்றி முஸ்லிம் காங்கிரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. அதிலும் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகளும் உள்ளனர் என்ற சங்கதியை மிக  நாசூக்காக சர்வதேச சபையில் சாட்சிப்படுத்தப்பட வேண்டிய தேவையும் இருந்தது. முஸ்லிம் காங்கிரசின் "சாணக்கியர்கள்" இந்த வலையில் சிக்கினார்கள்.   

அவர்களின் அறிக்கையில் 2013 ஆம் ஆண்டு மார்கழி மாதம்  29 ஆம் திகதி பொத்துவிலில் உள்ள சுபி பிரிவினருக்கு சொந்தமான தர்க்கா ஒன்றை  இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாக்கினர் என்று  ( 29 December – Batticaloa: A Muslim shrine in Pottuvil belonging to the Sufi Sect was attacked by a fundamentalist Islamic group.) குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் அறிக்கை 2013 வருடத்துக்கு மட்டும் உரியது என்பதால் இவர்கள் குறிப்படும் "இஸ்லாமிய  அடிப்படைவாதிகளின் " தாக்குதல் பற்றிய  பல சம்பவங்களை குறிப்பிட்டிருக்க முடியவில்லை என்பதும் , இவர்கள் சொல்லும் "இஸ்லாமிய அடிப்படைவாதிகள்தான் " எங்களுக்கும் எதிரானவர்கள் என்று சொல்லும் பௌத்த தீவிரவாத சக்திகளான பொது பல சேனா , சிங்கள ராவய என்ற அமைப்புக்களின் கருத்துக்களுடன் ஒரே நேர் கூட்டில் எதோ ஒரு புள்ளியில் முஸ்லிம் காங்கிரஸ் சங்கமிப்பது போலவே தோன்றுகிறது. !  ஏனெனில் அதே அறிக்கையில் 21 ஆம் திகதி மாசி மாதம்  மக்காவில் இருந்து ஹஜ் அல்லது உம்ரா கடமைகளை நிறைவேற்றிவிட்டு நாடுதிரும்பும் முஸ்லிம்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஸ்ரீ லங்காவில் பரப்புகிறார்கள் என்று பொது பலசேனா முறைப்பாடு செய்கிறது என்று முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளார்கள் ! ( 21 February – Nationwide: The BBS complains that Muslims who return from Mecca after Umrah or Hajj are spreading Islamic fundamentalism in Sri Lanka.)

இவை எல்லாவற்றையும் விட முஸ்லிம் காங்கிரஸின் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வரிசைப்படுத்திய சம்பவங்களின் சிலவற்றில் முஸ்லிம்கள் மீது ஜாதிக ஹெல உறுமய மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகள் பற்றிக் (தாக்குதல்கள் ) பற்றிக் கூறப்பட்டுள்ளது.
அவற்றில் 22 ஆம் திகதி ஜனவரி மாதம் 2013 இல் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க முஸ்லிம்கள் உண்ணும் உணவுக்கு மாத்திரமே ஹலால் சான்றுப் பத்திரம் அவசியம் என்று குறிப்பிட்டமை ( 22 January – Nationwide: Minister Patali Champika Ranawake says the halal certificate is necessary only for goods produced for consumption by Muslims and not good to be consumed by others.)

5 ஆம் திகதி மார்ச் மாதம் ஜாதிக ஹெல உறுமய ஹலால் கருத்தியலை விமர்சிக்கும்  ஹலாலின்  உண்மையும் பொய்களும்  என்ற தலைப்பில் சிங்கள மொழியில்  நூல் வெளியிட்டமை , (5 March – Nationwide: The JHU publishes a book titled Halal Facts and Lies in Sinhala criticizing the Halal concept.)
15 ஆம் திகதி மார்ச் மாதம்  அமைச்சர் சம்பிக ரணவக்க இஸ்லாமிய அடிப்படைவாதம் ; நேற்று இன்று ,நாளை என்ற தலைப்பிலும் அழ ஜிஹாத்தும் அல்கைதாவும் என்ற தலைப்பிலும் இரண்டு நூல்களை வெளியிட்டு வைத்தமை   (15 March – Nationwide: Minister Champika Ranawake launches two books; Islamic Fundamentalism, Past, Present and Future and Al Jihad and Al Qaida. )
18 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் வரையில் நடைபெற்ற இரு சம்பவங்களில் சம்பிக்க ரணவக்க ஹலால் பொறிமுறையை தீவிரமாக எதிர்க்கிறார் என்றும் ,  ஜாதிக ஹெல  உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் ஓமல்பே சோபித தேரர் "ஹலால் தேவையென்றால்  என்றால் அல்லாஹ்வின் நாட்டுக்கு போங்கள் " என்றும் (18 March – 1 April – Nationwide: Minister Champika Ranawake strictly opposes the halal mechanism, which was proposed by the Muslim ministers.onwide: JHU Parliamentarian Ven. Omalpe Sobhitha Thera says 'Go to Allah's country if you need halal'.)

12 ஆம் திகதி ஏப்ரலில் ஜாதிக ஹெல  உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் ஓமல்பே சோபித தேரர் இஸ்லாத்துக்கும் அதன்  வழக்காறுகளுக்கும் எதிராக பகிரங்க மேடையில் உரையாற்றினார் என்றும் 8ஆம் திகதி மே மாதம் ஓமல்பே சோபித தேரர் தாங்கள் இனவாதிகளே , மத தீவிரவாதிகளே என்று ஏற்றுக் கொள்கிறார் என்றும் ஆனால் தாங்கள் இனவாதத்தையும் , மத தீவிரவாதத்தையும்  ஆக்குபவர்கள் அல்லர் என்று குறிப்பிட்டிருப்பதாகவும் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.  (12 April – JHU Leader Omalpe Sobhitha Thera addresses a public gathering, speaking against Islam and its customs.-8 May – Nationwide: JHU Leader Ven. Omalpe Sobhitha Thera admits that they are racists and religious fanatics, but that they are not the authors of racism and religious fanaticism in Sri Lanka.)

இங்குள்ள இன்னுமொரு கேள்வி என்னவென்றால் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக  ஆதாரத்துடன் குற்றம் ற்றம்சாட்டப்பட்டவர்கள்  சென்ற நாடாளுமன்றத்  தேர்தலில் ஒன்றாக ஒரே கூட்டில் ஒரே சின்னத்தில் போட்டியிட்டது எப்படி என்பது ஆச்சரியமானது என்பதைவிட  இவர்களை ஆட்டு வித்தோர் யார் என்பதும் இவர்கள் ஒரே நதியில் (குட்டையில்) எப்படி சங்கமிக்க முடிந்தது என்பது மிக மிக ஆச்சரியமானது. சர்வதேச அரசியல் பின்னணியில் இவை யாவும் ஆச்சரியமானதே இல்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.      
 
இந்த 50 பக்க அறிக்கையை நவநீதம்பிள்ளையிடம் கையளித்தவுடன். வழக்கம்போல சிங்கள தீவிரவாத சக்திகள் ஒருபுறமும் , நாட்டின் மீது அக்கறைகொண்ட  தேசாபிமான சக்திகள்  தங்களின் எதிர்ப்பை  முஸ்லிம் காங்கிரசின்   தலைவர் என்ற வகையில் ஹக்கீமிற்கு தெரிவித்தன. அரசில் இருந்துகொண்டு அப்படி ஒரு அறிக்கையை கையளித்தது கண்டிக்கத் தக்கது என்று குரல்கள் எழுந்தபொழுது முன்னாள் ராஜபக்சவும்  தனது ஆத்திரத்தை ஹக்கீமிடம் வெளிப் படுத்தினார் . அவர் ஹக்கீமிடம் விளக்கம் கேட்டார்.  

அதற்கு நெஞ்சில் உரமுமின்றி ,நேர்மைத் திறனுமின்றி ஹக்கீம் "நான் அந்த அறிக்கையைக் கையளிக்கவில்லை " என்றும் , "நீங்கள் (ஜனாதிபதி) எப்படி உங்களின் சில ஐக்கிய மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் மீது முழுக் கட்டுப்பாடு கொண்டிருக்கவில்லையோ அப்படியே நானும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  உறுப்பினர்கள் சிலர் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை " என்றும் அறிக்கையை கையளித்தது ஸ்ரீ லங்கா முஸ்லிம்  காங்கிரசின் செயலாளர் என்றும் ஒரு "காட்டிக் கொடுப்பையும் " ஹக்கீம் செய்தார். 

 ஒரு பத்துப் பேருக்கும் குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எனும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பெரும்பான்மைக் கட்சித் தலைமையுடன் தன்னை ஒப்பிட்டு  தனது கையாலாகா த்தனத்தையும் வெளிப்படுத்தினார்.  

ராஜபக்ச , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எனும் பல கட்சிக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது கட்டுப்பாடு வைத்திருப்பதற்கும்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் தனது "தலைமைத்துவம்" குறித்து அடிக்கடி தனித்துவம் கொடுத்து பிதற்றும் ஹக்கீமின் கட்சியின் உறுப்பினர்கள் மீது கட்டுப்பாடு செலுத்த முடியவில்லை என்பதற்கும் உள்ள வேறுபாட்டை எவரும் புரிந்து கொள்ளலாம். இதை எல்லாம் விட மகிந்தவின் ஆட்சியில் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அறிக்கை கையளித்ததாக கதைவிட்ட ஹக்கீம் செய்த காட்டிக்கொடுப்பில் சிக்கியவர் ஹசன் அலி என்பதை யாரும்  கண்டுகொண்டதாக தெரியவில்லை. ! மாறாக தலைவரின் சாணக்கியம் தெரியுமா என்று பறை சாற்றுகின்றனர்.  

ஹக்கீம்  சொல்வதுபோல் மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் நிலவியது என்ற கதையை ஒரு வாதத்துக்கு "உண்மை" என்று வைத்துக் கொண்டு பார்த்தால் கூட , அறிக்கை கையளிக்கப்பட்டமை குறித்து கட்சியின் உச்சபீட உறுப்பினர்களில் ஒருவரான நிசாம் காரியப்பரிடம் ஒரு பத்திரிக்கையாளர்   "   நீங்கன் கூட்டு வைத்துள்ள பங்காளிக் கட்சியினருக்கு எதிராக சாட்சியமளிப்பது ஒழுக்க முறைக்கு உட்பட்டதா ? " என்று கேட்ட பொழுது "அப்படி    சொல்வது சரியல்ல ! அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் அதி தீவிர தேசியவாத சக்திகள் இந்நாட்டில் செயற்படுகிறார்கள் .அவர்கள் வெளியாட்கள்  , அவர்கள் அரசாங்கத்தின் அங்கமல்ல . நாங்கள் இந்தக் காரணியை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம் , நாங்கள் ஒருபோதும்  அரசாங்கம்தான்  இதன் பின்னணியில் உள்ளதென்று சொல்லவில்லை . நாட்டுக்குள்ளே  செயற்படுகின்ற சக்திகளையே நாங்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தோம் , அந்த சக்திகள் அரசாங்கத்தின் பிரதிமையை களங்கப்படுத்தலாம் "  
   
(“Do you believe it is ethically correct to give evidence against your coalition partner?
A: It is not giving evidence against the partner. It is wrong to say that. What they are saying is that there are ultra national forces working in this country. They are outsiders and not part of the Government. We only mentioned this factor. We have never said that it is the Government that is behind this. We have only brought to the attention of the international community that there are forces acting within this country that may even be tarnishing the image of the Government. “)

இந்த சாட்சாத் நிசாம் காரியப்பரே சென்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இவ்வருடம் மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைப் பேரவையின் புற நிகழ்சிக்  கூட்டத்தில் மஹிந்த அரசுதான் இலங்கையில்  பௌத்த  பேரினவாத தாக்குதல்களுக்கு பின்னணியில் நின்றவை என்று  ஒரு குத்துக் கரணம்  அடித்தவராகும் . ! இத்தகையவர்கள் நாளை வேறு விதமாக கூறினாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.!  ஹக்கீம் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று மஹிந்த சொன்ன பின்னரும். அவர்கள் போகச் சொன்னால் போவோம் -விலகுவோம்- என்று நிசாம் காரியப்பர் சால்ஜாப்பு சொன்னதும், ஹக்கீமோ அரசில் இருந்து விலகாமல் உள்ளே இருந்து கொண்டே அழுத்தம் கொடுப்போம் என்று வாய்மாலம் காட்டி மறைக்க முயன்றதும் என எத்தனையோ உண்மைகளை என்றோ ஒருநாள் மக்கள் தெளிவாக உணரலாம் 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  50 பக்க அறிக்கையில் குறிப்பிட நேரிடாவிட்டாலும் ,  பின்னர் ஐ .நா  மனித உரிமைப் பேரவை காலக்கெடு விதித்து மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிய பொழுது முஸ்லிம்  காங்கிரஸ் எவ்வித அறிக்கையும் வழங்கவில்லை . 2002-2011 வரையான காலப் பகுதியில் வடக்கு கிழக்கில்  முஸ்லிம்களுக்கு புலிகள் இழைத்த அநீதிகளைக்  குறித்து ஏன் முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்பது சாதாரண விடயமல்ல. ஒரு வரலாற்றுக்  குற்றமாகும்.

ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் இன்று சுமக்கும் பதவிகளும் பதாதைகளும் வடக்கு கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களின்  மீது பொதுவாக தமிழ் ஆயுததாரிகளாலும் குறிப்பாக புலிப் பயங்கரவாதிகளாலும் உயிரும் உடைமையும் இழந்த மக்களின்  தியாகத்தால் ஏற்பட்டவை என்பதை முஸ்லிம் காங்கிரஸ் அலட்சியம் செய்துள்ளது.   (இது பற்றிய விரிவாக ஆராய வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது ). 

இந்தியாவில் மொஹாலயரின் ஆட்சிக் காலத்தில் அரசனை , அவர் (அக்பர்) பாதுஷாவாக இருக்கலாம் அல்லது சிறு நகரத்தின் ஆட்சியாளர் (ஆற்காடு) நவாபாக  இருக்கலாம் , அவர்களை "ஆலம்பனா " ( அரசே !) என்று உருது மொழியில் விளிப்பார்கள் . முஸ்லிம் காங்கிரசின்  தேசிய , மாகாண , மாவட்ட ,  நகர ஆலம்பனாக்களின் அலம்பல்களை  இன்னும் எத்தனை காலத்துக்கு மக்கள் சகிக்கப் போகிறார்கள். 

10/10/2015

http://www.bazeerlanka.com/search?updated-max=2015-10-03T22:36:00%2B01:00&max-results=10

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...