இலங்கையின் எதிர்காலம் சிவப்பு நிறமே! D. E. W. GunasekeraD.E.W GunasekaraD. E. W. Gunasekera

ற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டியு குணசேகர ‘டெயிலி மிரர்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டி

கேள்வி: நாட்டில் தேர்தலுக்குப் பிந்திய அரசியல் நிலைமைகள் குறித்த உங்கள் அவதானிப்புகள் என்ன?
பதில்: 20 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி முறையிலும் பாராளுமன்ற முறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்போது அரசியல் அதிகாரம் அமைதியான நாடக பாணியில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றப்பட்டுள்ளது. சட்டவாக்க அதிகாரமும் சிறிதளவு மாற்றப்பட்டு, நாட்டில் முதல் தடவையாக இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் கூட்டரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு இணங்கிக் கொண்டன.கேள்வி: இதை நீங்கள் எப்படி வகைப்படுத்துகிறீர்கள்?
பதில்: இதை ஒரு தேசிய அரசாங்கம் என நான் அழைக்கமாட்டேன். இது ஒரு இன்னொரு கூட்டரசாங்கம். ஆனால் இந்தமுறை இது ஒரே வர்க்க சக்திகளின் கூடுதலானவொரு கூட்டாக இருக்கின்றது. ‘தேசிய’ என்ற சொல் புதிய நிலைமையை மறைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
கேள்வி: அரசின் தலைவராக மீண்டும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் தலைவரே இருக்கிறார். இந்த எதிர்பாராத நிலைமை குறித்து எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: இது ஒரு அசாதாரணமான நிலைமை. இதைப் பெரும்பாலான மக்கள் விளங்கிக் கொள்ளவில்லை. இது இயற்கையாக இருப்பதைவிட யாந்திரீகமாக இருப்பதுடன், சிக்கலானதாகவும் இருக்கின்றது.
கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தில் சபாநாயகரின் தீர்ப்பு சரியானதா?
பதில்: பாராளுமன்ற சம்பிரதாயம் மற்றும் நடைமுறை விதிகளின் பிரகாரம் இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
கேள்வி: உங்கள் பார்வையில் புதிய அரசாங்கம் எதிர்நோக்கும் பயமுறுத்தலான சவால்கள் என்ன?
பதில்: இலங்கைக்கு சாதகமற்ற போர்க்குற்றங்கள் எனக் கூறப்படுவனவற்றுடன் சம்பந்தப்பட்ட ஜெனிவா விடயமும், உலகளாவிய நெருக்கடியுடன் கூடிய சர்வதேச நிலைமையும் கவனத்துக்குரியன. உள்நாட்டு ரீதியாக எமது உலகமய ரீதியிலான பொருளாதாரத்தின் அடிப்படைகள் ஸ்திரமற்று அல்லது மோசமாக இருக்கின்றது. தெளிவான முறையில் வீழ்ச்சி அடைந்து வரும் அரச வருவாய் பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும். தூரதிஸ்டவசமாக, எனது பார்வையில் மிகவும் பாரதூரமாக இருக்கும் இப்பிரச்சினையே மிகவும் குறைவாகப் பேசப்படும் பிரச்சினையாக இருக்கின்றது.
முன்னைய அரசாங்கத்தில் நான் ஒரு அமைச்சர் என்ற வகையில், இப்பிரச்சினை குறித்துத் தொடர்ந்து போராடி தோல்வி அடைந்திருக்கிறேன். முன்னைய ஜனாதிபதியிடம் வளர்ந்து வரும் இந்த அபாயம் குறித்து என்னால் முடிந்தளவு எடுத்துச் சொல்லியும், எவ்வித பயனும் ஏற்படவில்லை. ஒருமுறை அரச தலைவர் உட்பட இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் முன்னிலையில், வரிக் கொள்கை, வரி நிர்வாகம், வரிச் சட்டம் என்பன குறித்துப் பகிரங்கமாகவே விமர்சனம் செய்துள்ளேன். எனது நிலை சரி என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: புதிய கூட்டரசாங்கம் போதிய துணிவுடன் இந்தப் பிரச்சினையைக் கையாளும் என நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: வர்க்கரீதியாகப் பார்த்தால் ஐ.தே.கவின் கொள்கை மிக மோசமானது என்றபடியால், அவர்களால் இதைச் செய்ய முடியும் என நான் எதிர்பார்க்கவில்லை. சாராம்சத்தில் இது அடிப்படையில் அரசாங்கத்தின் வருமானம் சம்பந்தமான தலைவிதியுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். அரசாங்கத்தின் வருமானம் வீழ்ச்சியடையும் இந்தப்போக்கு, 1978இல் நவ – தாராளவாதக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப் பட்டவுடன் ஆரம்பமாகிவிட்டது. இந்த விடயத்தில் அப்போதைய நிதியமைச்சர் ரொனி டி மெல், நவ – தாராளவாதத்தின் தந்தையான மில்ரன் ஃபிறைட்மனை (Milton Friedman) விடவும் சுறுசுறுப்பானவராக இருந்தார். புதிய கூட்டரசாங்கத்துக்கு வேறு மாற்று வழிகள் எதுவுமில்லாதபடியால், யதார்த்தத்துக்கு முகம் கொடுத்து வரிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இந்த வரிக் கொள்கை பாரதூரமான பிரச்சினைகளை உருவாக்கி, சமூக சமத்துவமின்மையையும், வரிப் பற்றாக்குறையையும் உருவாக்கக்கூடும்.
கேள்வி: இரு பிரதான அரசியல் கட்சிகளும் கூட்டரசாங்கம் ஒன்றை அமைத்தபோதிலும், 2015இல் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளது. எங்கே அவர்கள் தவறிழைத்துள்ளார்கள் என்பதை உங்களால் அடையாளம் காண முடிகிறதா?
பதில்: முதலாவதாக, அங்கே நிர்வாகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டதேயொழிய, கொள்கை மாற்றம் எதுவும் நிகழவில்லை. இரண்டாவதாக, 2015 ஜனவரி முதல் செப்ரெம்பர் வரை அரசியல் ரீதியாக அவர்கள் இரண்டு தேர்தல்களில் ஈடுபட்டிருந்தார்கள். மூன்றாவதாக, புதிய நிதியமைச்சர் நிலைமை மோசமடைவது சம்பந்தமான தள யதார்த்தத்தைப் புரிந்திருக்கவில்லை. நாட்டுக்குத் தேவை பொருளாதார விற்பன்னரான ஒரு நிதியமைச்சரேயொழிய, முடிவில்லாத பிதற்றல்களையும், வெட்டிப் பேச்சுகளையும் நிகழ்த்தும் இன்னொரு அரசியல் மிருகமல்ல.
கேள்வி: 2016 வரவு செலவுத் திட்டம் மூலம் இந்த நிலைமையை சீர்திருத்த முடியுமா?
பதில்: ஆம். முதலில் அவர்கள் நான் முன்னர் குறிப்பிட்டவாறு, நிலைமையின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் சம்பந்தமாக ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுக்க நான் விரும்பவில்லை. அவர்களுக்கு காலம் தேவை. ஆனால் அவர்கள் பெரிதாகப் பேசிய ஐ.தே.கவின் தகைமைசார் (Profeessionalism) நிலை எங்கே? ஐ.தே.க., உலகம் முழுவதும் இந்தப் பிரச்சினை ஏறபடுவதற்கு நவ – தாராளவாதக் கொள்கையே காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிரபஞ்ச ரீதியிலான பொருளாதார அடிப்படைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவததற்கு ஐ.தே.க. சிக்கன (Austerity) நடவடிக்கைகளை நாடுகின்றது. அத்தகைய அதி சூரத்தனங்களுக்கு அரசியல் யதார்த்தம் இடமளிக்காது. அவர்கள் மேலும் கூடுதலாக யதார்த்தபூர்வமானதும், மக்கள் நலன் சார்ந்ததுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய அரசாங்கம் ஒன்று தனது குறிக்கோளை அடைவதற்காக சிக்கன நடவடிக்கைகளை எடுப்பதானால், சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒரு இணக்கப்பாடு ஏற்பட வேண்டும். கூட்டரசாங்கத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி கூர்மையான பார்வையைக் கொண்டிருக்கும்.
கேள்வி: ஜெனிவா சிக்கலின் வெளிப்பாடு எப்படியிருக்கும் எனப் பார்க்கிறீர்கள்?
பதில்: அந்த விடயங்களைப் பொறுத்தவரை, இது ஒரு இறுதித் தீர்மானமேயொழிய அறிக்கை அல்ல. 2011இற்குப் பின்னர் பல விதமான அறிக்கைகளைப் பார்த்திருக்கிறோம். தற்போதைய ஐ.நா. அறிக்கையும் அதுபோன்ற ஒன்றுதான். இதை நிராகரிப்பதைத் தவிர எமக்கு வேறு தெரிவுகள் இல்லை. நிறைவேற்றப்பட்ட இறுதித் தீர்மானம் இறுதியாக்கப் படவில்லை. இடதுசாரிகளைப் பொறுத்தவரை, உள்நாட்டு விசாரணையும், பொறிமுறையுமே எமது நிலைப்பாடாகும். அதனால்தான், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசின் பங்காளிகளாக இருந்த நாம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையைத் துரிதமாக நடைமுறைப்படுத்தும்படி கோரினோம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தாமைதான் அடிப்படைத் தவறாகும். அதை நடைமுறைப்படுத்தாமையே வெளிநாட்டு தiயீடு அல்லது உள்நுழைவு அல்லது அழுத்தம் என்பனவற்றை இலங்கை மீது உருவாக்கியது. இடதுசாரிகள் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். வடக்கிலும் தெற்கிலும் உள்ள தீவிர போக்குள்ளவர்கள் தமது அரசியல் இருப்புக்காக இதைப் பயன்படுத்தக் காத்திருக்கின்றனர். நாம் அதற்கு இடம் அளிக்கக்கூடாது. நல்லிணக்கத்தின் ஊடாக தேசிய ஒற்றுமையை அடைவதே இறுதி இலக்காக இருக்க வேண்டும். முழு செயற்பாடும் அந்தக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். எந்தவொரு வெளிநாட்டுச் சக்தியும் எமது விவகாரங்களில் தலையிட நாம் அனுமதிக்கக்கூடாது. அது அரசியல் ஸ்திரமின்மைக்கு இட்டுச் செல்லும்.
கேள்வி: இந்த புதிய அரசியல் சூழ்நிலையில் இடதுசாரி இயக்கத்தின் எதிர்காலம் என்ன?
பதில்: வரலாறு என்பது அதிவேக நெடுஞ்சாலைகளைக் கொண்டதல்ல. அது வளைவுகள், மலைகள், பள்ளத்தாக்குகளில் பயணிப்பது. கடந்த இரண்டு தசாப்தகால வரலாற்றைப் பாருங்கள். சில சித்தாந்தவாதிகள், சோசலிசத்தின் வீழ்ச்சியுடன் அதன் வரலாறு முடிந்துவிட்டதென்றும், நவ – தாராளவாதம் வெற்றிபெற்று விட்டதென்றும் கூறினர். அவர்களது கருத்து தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. பூகோளரீதியிலான பல்வேறு நெருக்கடிகளால் உலகம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. ஆனால் இடதுசாரி இயக்கம் புதிய வடிவங்களிலும், வழிகளிலும் எழுந்துள்ளது அல்லது எழுந்து வருகின்றது. இலங்கையில் இடதுசாரி இயக்கத்துக்கு ஒரு பரந்த இடைவெளி இருப்பதாக நான் கருதுகின்றேன். தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை இதற்கான வழியைத் திறக்கும். இது தர்க்கவியல் ரீதியிலானதும், பொருள்முதல்வாத ரீதியிலானதும் ஆகும். ஒரு புதிய ஐக்கிய இடதுசாரி இயக்கத்துக்கான சாத்தியக்கூறு இருப்பதாக நான் கருதுகிறேன். தற்போதைய தட்டிக்கழிக்க முடியாத அரசியல் நிலைமை உற்சாகமான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது. பின்வாங்குவதும் பின்னடைவுகளும் இடதுசாரி இயக்க வாழ்வில் வழமையாகும். சிவப்பே எதிர்காலத்தின் நிறமாகும். இடதுசாரிகள் இன்னொரு கதவினூடாக நுழைவார்கள்.
பேட்டி கண்டவர்: சந்துன் ஜெயசேகர (Sandun Jayasekara)
தமிழில்: சேகர்
மூலம்: வானவில்

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...