இடதுசாரிக் கட்சிகள் அவசியமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்! – சுப்பராஜன்


லங்கையில் இடதுசாரிகளுக்கு மீண்டும் ஒரு போதாத காலம் ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17இல் நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து (ஐ.ம.சு.கூ) தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பட்டியலிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டியு குணசேகரவினதும், லங்கா சமசமாஜக் கட்சிப் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவினதும் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
D.E.Wடியு குணசேகர
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1994இல் மீண்டும் ஆட்சிபீடம் ஏறியதிலிருந்து ஒவ்வொரு தேர்தலின்போதும் இவ்விரு இடதுசாரிக் கட்சிகளுக்கும் தேசியப்பட்டியலில் இடம் வழங்கப்பட்டு வந்த 20 ஆண்டுகால நடைமுறை இதன் மூலம் மாற்றப்பட்டுள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியினதும் (சிறீ.ல.சு.க.) ஐ.ம.சு.கூவினதும் தலைமையை மைத்திரிபால சிறிசேன – சந்திரிக வலதுசாரி அணி கைப்பற்றியதின் விளைவே இந்த மாற்றத்துக்கான காரணம்.
Prof. Tissa Vitaranaபேராசிரியர் திஸ்ஸ விதாரண
அதன் காரணமாக, தற்போதைய பாராளுமன்றத்தில் மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக இடதுசாரி முன்னணித் தலைவர் வாசுதேவ நாணயக்காரவும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட சந்திரசிறீ கஜதீரவும் மட்டுமே இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கப் போகிறார்கள்.
VAsuவாசுதேவ நாணயக்கார

Chandrasriசந்திரசிறீ கஜதீர
1964ல் முதன்முதலாக லங்கா சமசமாஜக் கட்சி திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து, அக்கட்சியின் தலைவர் டாக்டர் என்.எம்.பெரோரா நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றார். ஆனால் அதற்கு முன்னரே சிறீமாவோவின் கொலை செய்யப்பட்ட கணவரான எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் அரசின் ஏகாதிபத்திய விரோதக் கொள்கைகளை (நடவடிக்கைகளை) சமசமாஜக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரிக்கத் தொடங்கியிருந்தன.
அன்றிலிருந்து சுதந்திரக் கட்சிக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்குமான உறவுகள் படிப்படியாக வளர ஆரம்பித்தன. 1965 பொதுத் தேர்தலிலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஏழு கட்சி கூட்டரசாங்கம் அமைந்த பின்னர், சுதந்திரக் கட்சியும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியும், சமசமாஜக் கட்சியும், ஒரு பொதுவான ஐக்கிய முன்னணியின் கீழ் செயற்படத் தொடங்கின. ஆனால் இந்த முன்னணி பாராளுமன்றத் தேர்தலை மட்டும் இலக்கு வைத்து அமைந்திருந்ததுடன், சுதந்திரக் கட்சியே அதன் தலைமைக் கட்சியாகவும் இருந்தது.
1970 பொதுத் தேர்தலின் போது இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய ‘மக்கள் கூட்டணி’ (Peoples Alliance) மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அந்த அரசாங்கத்தின் பிரதமரான சிறீ.ல.சு.க. தலைவி சிறீமாவோ பண்டாரநாயக்க முக்கியமான அமைச்சுப் பொறுப்புகளையும் வழங்கினார்.
ஆனால் 1977 தேர்தலுக்கு முன்னதாக சிறீ.ல.சு.கவுக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, இடதுசாரிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறியதினால், இரு பகுதியினரும் தனித்தனியாகப் போட்டியிட்டுத் தோல்லி கண்டனர்.
அந்தத் தோல்வியிலிருந்து கற்ற பாடங்கள் காரணமாக இரு பகுதியினரும் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற அமைப்பில் இணைந்து செயற்படத் தொடங்கினர். அதன் காரணமாக 1994இல் அந்தக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சந்திரிக பிரதமரானார்.
அதன் பின்னர் நடைபெற்ற எல்லா ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் சிறீ.ல.சு.கவும், இடதுசாரிக் கட்சிகளும் ஒன்றிணைந்தே தேர்தல்களைச் சந்தித்ததால், சுலபமாக வெற்றிபெற முடிந்தது. அதிலிருந்து ஒன்று தெளிவானது. அதாவது சிறீ.ல.சு.கவும் இடதுசாரிக் கட்சிகளும் ஒன்றிணைந்தாலே ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிக்க முடியும் என்ற உண்மை பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

இந்தக் கட்டத்தில் தமது தவறுகள் என்ன என்பதையும், எதிர்காலத்தில் தாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் இடதுசாரிக் கட்சிகள் சிந்திப்பது அவசியமானது. இந்த விடயங்கள் மிகவும் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. இருந்தாலும் இங்கு சில விடயங்களைச் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
இலங்கையின் முதல் இடதுசாரிக் கட்சியாக 1935இல் லங்கா சமசமாஜக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போதும், அது நாட்டின் உடனடிப் பிரச்சினைகளை இனம் காணத் தவறியதாலும், சர்வதேச அரங்கில் ஏற்பட்ட சித்தாந்த முரண்பாடுகளாலும் தவறான பாதையில் போனதால், மக்களுக்குத் தலைமை தாங்கும் நிலையையும், பலத்தையும் இழந்தது. பின்னர் அது இடதுசாரிகளின் தொடர் பிளவுகளுக்கும் இட்டுச் சென்றது.
இந்த நிலைமையில் நாட்டு மக்களின் உடனடித் தேவையான ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, பெரும் முதலாளித்துவ எதிர்ப்பு கடமைகளைப் பூர்த்தி செய்யுமுகமாக சிறீ.ல.சு.க. உருவானது. எனவே அந்தக் கட்சியுடடன் கூட்டுச் சேர்ந்து அரசியல் செய்ய வேண்டிய ஒரு தேவை இடதுசாரிக் கட்சிகளுக்கு உருவானது. அது தவிர்க்க முடியாததும், தவறற்ற மார்க்சிச அணுகுமுறையுமாகும்.

ஆனால், இலங்கையின் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய முதலாளித்துவ வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிறீ.ல.சு.கவுடன் இடதுசாரிகள் கூட்டுச் சேர்ந்தது சரியென்றாலும், அந்தக் கட்சியின் மறுபக்கமான வலதுசாரிப் போக்குகளை இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்துப் போரடியிருக்க வேண்டும். ஆனால் அவை அப்படிச் செய்யவில்லை.

அத்துடன் தேர்தல்களில் சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டாலும், அதன் தலைமையிலான அரசாங்கங்களில் பங்குபற்றாது வெளியிலிருந்து கொண்டு அதன் மக்கள் சார்பு நடவடிக்கைகளை ஆதரிக்கின்ற அதேவேளையில், அதன் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும். ஆனால் இடதுசாரிக் கட்சிகள் அப்படிச் செய்யத் தவறிவிட்டன. இந்த அணுகுமுறைக்கு எமது அயல்நாடான இந்தியாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு உதாரணமாக இருந்த போதிலும், அந்தக் கட்சியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள எமது இடதுசாரிக் கட்சிகள் தவறிவிட்டன.

இந்த நிலைமைகளால், இடதுசாரிக் கட்சிகளுக்குப் பின்னால் ஸ்தாபன ரீதியாக அணி திரண்டிருந்த தொழிலாளி வர்க்கமும், பரந்துபட்ட பொதுமக்களும் இடதுசாரிக் கட்சிகளில் நம்பிக்கை இழந்ததுடன், கட்சியும் படிப்படியாகப் பலவீனப்பட்டு, இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு இடதுசாரிக் கட்சிகள் வந்துள்ளன.

அதன் காரணமாகவே சிறீ.ல.சு.கவின் வலதுசாரித் தலைமை மிகச் சுலபமாக இடதுசாரிக் கட்சிகளைக் கழற்றி விட்டுள்ளது. இந்தப் பாதகமான நிலைமையில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, தமது எதிர்கால கொள்கைகளையும், வேலைத் திட்டங்களையும், தந்திரோபாயங்களையும் இடதுசாரிக் கட்சிகள் வகுக்க வேண்டும்.
அதற்கு முதலில் செய்ய வேண்டியது, இடதுசாரிக் கட்சிகள் ஒவ்வொன்றும் தத்தமது கட்சிகளை சிந்தாந்த ரீதியாவும் ஸ்தாபன ரீதியாகவும் பலப்படுத்துவதுடன், இடதுசாரிக் கட்சிகளின் ஒன்றுபட்ட முன்னணியையும் உருவாக்க வேண்டும். அதன் பின்னர் தமது தலைமையில் மக்களை ஸ்தாபன ரீதியாக அணி திரட்ட வேண்டும். அப்படியான ஒரு உறுதியான அடித்தளத்தில் நின்று கொண்டே, சிறீ.ல.சு.க போன்ற ஏனைய ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுடன் பின்னர் பரந்தபட்ட முன்னணிகளை உருவாக்க வேண்டும். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட வேண்டுமேயொழிய, மேல் மட்டத்திலிருந்து உருவாக்கப்படுவதல்ல. அப்படி உருவாக்கப்படுவது நிலையானது அல்ல என்பதற்கு இன்றைய நிலை ஒரு உதாரணம்.

இடதுசாரிக் கட்சிகள் 1964இன் பின்னர் தாம் கடந்து வந்த பாதையைச் சுயவிமர்சன ரீதியாக ஆராந்து பார்ப்பதன் மூலமே இதைச் சாத்தியமாக்க முடியும். இதற்கு திரும்பவும் மார்க்சிச தத்துவத்தை ஆழமாகக் கற்பதும், அதன் வெளிச்சத்தில் எமது நாட்டுப் பிரச்சினைகளை ஆராய்வதும் மிகவும் இன்றியமையாதது.

(‘வானவில்’ 2015 செப்ரெம்பர் இதழுக்கென எழுதப்பட்ட இக்கட்டுரை, இடமின்மை காரணமாக இவ்விதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
Source: Vaanavil September 2015 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...