தேசியப் பட்டியல் நியமன விவகாரம்:




எஸ்.எம்.எம்.பஷீர்

"ஒரே ஒரு ஊரிலே ஒரு ஒரு ராஜா"
-------------------------------------
ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லே

இந்த தலைப்பைக் கண்டதும் கண்ணதாசனின் பாடல் வரிகள் பலருக்கு சட்டென்று ஞாபகத்துக்கு வரலாம்.  மீதமுள்ள பாடல் வரிகளும் நினைவில் வந்து போகலாம் !. ஆனால் இக்கட்டுரையின் பேசுபொருள் சுவாரசியமானது !. தேசியப் பட்டியல் நியமன விவகாரம் இன்று பொதுவாக இலங்கையிலேயே பொது மக்களின் விமர்சனங்களைத் தாண்டி , கனதி இழந்த வேளையில் இலங்கையின் உச்ச நீதிமன்ற கதவுகளைத் தட் டியிருக்கிறது. 


தேசியப் பட்டியல் மூலம் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர்களை நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களாக நியமிப்பது நீதி முறையற்றது , 14 வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்திற்கு முரணானது என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை இலங்கை கமுனிஸ்ட் கட்சியின் தலைவர் டீ .டவ்லியு குணசேகர தாக்கல் செய்துள்ளார். அவ்வழக்கு  இம்மாதம் முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வழக்கின் வாதங்கள் வலுப்வாக உள்ளன என்றாலும் , அடிப்படையில் , தோல்வியுற்ற வேட்பாளர்களை நாடாளுமன்றத்துக்கு , தோல்வியுறச் செய்த மக்களின் பிரதிநிதியாக - அல்லது பொதுவாகவே நாடளாவிய ரீதியிலாயினும்- நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக நியமிப்பது பற்றிய அறம்சார் சர்ச்சை ஒருபுறமிருக்க , ஏற்கனவே தேர்தலின் முன்னர் தேசியப்பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட நபர்களை  புறக்கணிப்பது என்பது பற்றிய அறம்சார் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுகிறது! கட்சியின் மூலம் தேசியப்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களின் (அடிப்படை) உரிமை மறுக்கப்பட்டு , மக்களால் நிராகரிக்கபட்டவர்களை அரசியல் கட்சிகள் தான்தோன்றித்தனமாக நியமிப்பதன் மூலம் அடிப்படையில் கட்சிக்கென மக்கள்  வழங்கும் மொத்த வாக்குகள் மூலம் பெறும் ஒரு ஜனநாயக பொறிமுறை துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. ஏனெனில் தேசியப்பட்டியல் தேர்தலுக்கு முன்னரே  வெளியிடப்பட்டு மக்கள் முன் தேர்தலுக்கு முன்னரே , அவர்களின் வாக்கெடுப்பில் செல்வாக்கு செலுத்துகிறது. அவர்களில் பலரும் தங்களின் கட்சிகளின் வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள் என்பது இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.  

ஐக்கிய தேசிய முன்னனி தனது தேசியப் பட்டியலில் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற ஒருவரை தன்னும் தமது தேசியப்பட்டியலில் நியமிக்கவில்லை என்று சொல்லப்படும்  வேளையில், நல்லாட்சி அமைக்கப் பிரதிக்கினை பூண்ட இலங்கை     ஜனாதிபதி , தனது சுதந்திரக் கட்சி , ஐக்கிய சுதந்திர மக்கள்  கூட்டமைப்பு ஆகியவற்றின் அதிகாரத்தை  தன்னிலைப்படுத்தி , தேர்தலில் நிராகரிக்கப்பட்ட தனக்கு வேண்டிய சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக மட்டுமின்றி அமைச்சர்களாகவும் தான்தோன்றித் தனமாக நியமித்துள்ளார். இந்த நுட்பமான ஆனாலும் வெளிப்படையான , சட்டமுரணான நியமனங்கள் குறித்து, நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதற்காக கமுனிஷ்ட்  கட்சி சார்பில் டீ . டப்ளியு .குணசேகரா தாக்கல் செய்துள்ள வழக்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் வழக்கு வெற்றிபெற்றாலும் தான் நாடாளுமன்றப் பதவியப் பெறப் போவதில்லை என்பதையும் அவர் அழுத்தம் திருத்தமாக கோரி உள்ளார். 

இந்த நேரத்தில் தேசியப்பட்டியல் தொடர்பில் ஜே வீ பீ நியமித்த அவர்களின் கட்சி உறுப்பினர் இல்லாத முன்னாள் கணக்காளர் நாயகம் சரச்சந்திர மாயாதுன்ன தேசியப் பட்டியல் தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்துள்ளார். உருவாக்கப்பட்ட அரசு கூட மக்கள் எதிபார்ப்புக்கு மாற்றமானது என்ற அவரின் கருத்தைவிட , தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வழங்கப்படவிருந்த வாகனத்தையும் ஏற்க மறுத்துள்ளார். இவரைப்போல ஒரு சொலவதும் செய்வதும் ஒன்றேயான மனிதர்களை காண்பதரிது. அதிலும் குறிப்பாக இவரைப் போன்றோரை இன்றைய தமிழர் முஸ்லிம் அரசில்வாதிகளுக்குள் காணவே முடியாது. இவரை ஏதோ "பிழைக்கத் தெரியாத மனுஷன்" என்பது போல மக்களும் அலட்டிக் கொள்ளமுடியாத   ஒரு அரசியல் கலாச்சாரத்தை மக்களும் வரித்துக் கொண்டுள்ளார்கள் !

இந்த தேசியப்பட்டியல் விவகாரத்தில் அடுத்து சர்ச்சைக்குள்ளாகி இருப்பது முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் விவகாரம். இவர்களின் தேசியப்பட்டியல் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியலுக்குள் "கூட்டணி" அடிப்படையில் நான்கு பேரின் பெயர்களை உள்ளடக்கி இருந்தது.  அதில் இருவர் கட்சியின் மிக முக்கிய ஜாம்பவான்களான ,  ஹசன் அலியும் , நிசாம் காரியப்பரு மாகும்.  மற்றைய இருவரில் ஒருவர் ஹக்கீமின் மூத்த சகோதரர் , அப்துல் ரவூப் ஹபீஸ் , மற்றவர்  ஹக்கீமின் நீண்டகால நண்பரும்  ஹக்கீமின் நலன்களைப் பாதுகாக்க தன்னால் முடிந்த சகலவற்றையும் , பிறர் மீது அவதூறு செய்வது உட்பட செய்யக் கூடிய ஹக்கீமின் விசுவாசியான பாதுக்கையைச் சேர்ந்த சட்டத்தரணி  சல்மான் என்பவராகும். இவர் பற்றிய தேசியப்பட்டியல் விவகாரமே இக்கட்டுரைக்கு  தலைப்பாகக் கூட ஆனது. 1990 களுக்கு முன்னர் பாதுக்கை என்பது முழுக்க முழுக்க ஒரு  சிங்களவர்களைக் கொண்ட  நகராகும் . அங்கு ஒரே ஒரு முஸ்லிம் குடும்பமே இருந்தது. அந்த  குடும்பம்தான் சல்மானின் குடும்பமாகும். அரசியலுக்கு என ஒரு தளமும் கொண்டிராத, நடைமுறை அரசியலில் எவ்வித வகிபாகமும் வகிக்காத சல்மான் இப்பொழுது ஹக்கீமின் விசுவாசி என்பதற்காக மாத்திரம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிக்குள் அவர் பல பாத்திரங்களை வகித்தாலும் அவரின் அரசியல் தளம் அல்லது ஆதரவாளர்கள் என்பதைப் பொருத்தவரை அவருக்கு எந்த பின்னணியும் கிடையாது. அதேவேளை , முன்னரும் தேசியப்பட்டியலில் உள்வாங்கப்பட்ட ஹக்கீமின் சகோதரர் ஹபீஸ்ஸுக்கு  இம்முறையே நாடாளுமன்ற அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

 

இரண்டு மிக முக்கிய கிழக்கின் அரசியல் ஜாம்பவான்களை கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களை ஓரந்தள்ளி செய்யப்பட்ட மேற்படி இருவரின் நியமனங்கள் தொடர்பாக  இருவரும் தங்களின்  சொற் கேட்டு பதவிகளை இராஜினாமாச் செய்வார்கள் , அதனைத் தொடர்ந்து வேறு இருவருக்கு அந்த நியமனங்கள் பிரதியீடு செய்யப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர்களில் ஏற்கனவே தேசியப்பட்டியலில் உள்ள இருவருமா அல்லது வேறு இரு நபர்களா என்ற சர்ச்சைகள் இப்பொழுது எழுந்துள்ளது.  ஆனால் இதில் ஒருவரோ அல்லது இருவருமோ அவர்களின் பதவிகளை விட்டுக்  கொடுப்பார்களா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க , அவர்களை ஹக்கீம் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்யச் சொல்வாரா என்ற கேள்வி எழுப்பப்பட்ட பொழுது சிலர்  இருவரில் ஒருவரையே (தனது சகோதரரையே )  ஹக்கீம் பிரதியீடு செய்வார் என்றும்  சொல்லப்படுகிறது. எது எப்படியோ ஜே வீ பீ   கூட தங்களின் தோல்வியுற்ற வேட்பாளரான ஹன்டுநேட்டியை இராஜினாமா செய்த மயாதுன்னையின் இடத்துக்கு  தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதிலீடு செய்துள்ளனர். மக்களின் இறைமைய மதித்து இராஜினாமா செய்கிறேன் என்று கூறி இராஜினாமா செய்த ஒருவரின் இடத்துக்கு மக்களின் ஆணைக்கு எதிராக (மக்களின் இறைமைக்கு எதிராக  ) ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் .

மக்களின் இறைமையை நாட்டின் "நல்லாட்சிக்கான "ஜனாதிபதியே மதிக்காத பொழுது ஜே வீ பீ மதிக்காத பொழுது, முஸ்லிம் காங்கிரஸ் மதித்திருப்பதாக  தோன்றினாலும் யதார்த்தத்தில் அவர்கள் மக்களிடம் வேட்பாளர்களிடம் ஏற்படுத்திய  நம்பிக்கைக்கு எதிராக செயற்பட்டுள்ளார்கள்  என்றே தோன்றுகிறது. அந்த வகையில் நாடாளுமன்ற பதவியை கொள்கைக்காக தூக்கி எறிந்த மாயாதுன்ன மகத்தான மனிதர்தான்
Bazeerlanka.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...