கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறியும் சுமந்திரன்! – சேதுபதி

ஒக்ரோபர் 26, 2015


மிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அண்மையில் சில குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “கருணாவும் டக்ளசும் கூட கைது செய்யப்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்” எனக் கூறியிருக்கிறார்.

பிரபல சட்டத்தரணி என்று சொல்லிக் கொள்ளும் அவரது இந்தக் கூற்றில், அரசியல் நாகரீகத்தை விட, கீழ்த்தரமான அரசியல் பழிவாங்கும் மனோபாவத்தின் தொனி இருப்பதைக் காண முடிகிறது. அத்துடன், சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையானின் நிலையை, குற்றம் நிரூபிக்கட்டவர் என்ற கணிப்பில் வைத்து இந்த எல்லாம் தெரிந்த சட்டத்தரணி கருத்துச் சொல்வதாகவும் இருக்கின்றது.


முன்னைய அரசாங்க காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்கதவு (தேசியப் பட்டியல்) பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சுமந்திரன், இந்தமுறை யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார். (ஆனால் இதிலும் கூட சில சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அதாவது இம்முறை யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களில் முக்கியமான சிலர் தோல்வியடைந்ததாகவும், பின்னர் அவர்கள் மோசடியான வாக்கு எண்ணுகை மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கப்பட்டதாகவும், தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட சில அதிகாரிகளை மேற்கோள்காட்டி மக்கள் பேசி வருகின்றனர்)
சுமந்திரன் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினராக வந்த பின்னர், முன்னர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் என்று சொல்லிக்கொண்டு, எப்படி வாயில் வந்ததை எல்லாம் உளறிக் கொட்டினாரோ அதேபோல, சுமந்திரனும் செயற்படுவதைக் காண முடிகிறது. அத்துடன் எல்லா விடயங்களிலும் ‘முந்திரிக் கொட்டையென’ மூக்கை நுழைப்பதையும் காண முடிகிறது.

கருணாவையும், டக்ளசையும், பிள்ளையானையும் பற்றிக் கருத்துச் சொல்வதற்கு முன்னால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக் தலைவர்கள், தமது முகங்களை ஒருமுறை கண்ணாடியில் பார்த்து, தமது அசிங்கங்களை ஒருமுறை நோட்டம் விடுவது நல்லது.
குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்க முடியாது. ஆனால் சட்டத்தை விருப்பு வெறுப்புக்கேற்ப பிரயோகிப்பதையும், அரசியல் பழிவாங்கல் நோக்கத்துடன் பயன்படுத்துவதையும் ஏற்க முடியாது. அத்துடன் எய்தவன் இருக்க அம்பை மட்டும் தண்டிப்பதையும் ஏற்க முடியாது.

இலங்கையில் நடைபெற்ற அத்தனை மனித உரிமை மீறல்களினதும் சூத்திரதாரிகள் இருவர். அதில் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சி. மற்றவர் தமிழ் தலைமை. இவர்கள் இருவரும்தான் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய மாபெரும் குற்றவாளிகள்.
1976இல் தமிழ் தலைமை வட்டுக்கோட்டையில் மேற்கொண்ட தமிழ் ஈழ தீர்மானம்தான், தமிழ் இளைஞர்களை வன்முறைப் பாதையில் தூண்டி 30 வருட மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்தது. அதற்கு முன்னதாக யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியை சிரமம் இல்லாமல் கைப்பற்ற வேண்டும் என்ற மிகக் குறுகிய அற்ப தேவைக்காக, யாழ் மாநகர முதல்வராக இருந்த அப்பிரட் துரையப்பாவை தமிழரசுக் கட்சித் தலைமை பிரபாகரன் குழுவினரைப் பயன்படுத்தி படுகொலை செய்தது.

அன்றிலிருந்து தமிழ் பாராளுமன்ற உறுப்pனர்கள், இடதுசாரித் தலைவர்கள், கல்விமான்கள், சமய-சமூகத் தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள், மனித உரிமையாளர்கள், மாற்றுக் கருத்தாளர்கள் என பல்லாயிரக்கணக்கானோரை புலிகள் படுகொலை செய்வதற்கு தமிழ் தலைமை வழிவகுத்துக் கொடுத்தது. இவர்களில் அன்றைய தமிழ் தலைவர்களான அ.அமிர்தலிங்கம், வெ.யோகேஸ்வரன், அ.தங்கத்துரை, நிமலன் சௌந்தரநாயகம், கிங்ஸ்லி இராசநாயகம் போன்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.
மறுபக்கத்தில், 1977இல் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம் இனப்பிரச்சினையை யுத்தமாக மாற்றி, ஆயுதப்படைகள் மூலம் எல்லையில்லா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது. அத்தயை ஒரு வழிவந்த ஐ.தே.க. அரசுதான் இன்றும் பதவியில் இருக்கின்றது. அந்த அரசைப் பதவிக்குக் கொண்டு வந்ததில் இன்றைய தமிழ் தலைமையான சுமந்திரனின் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பங்கு இருக்கின்றது. அத்துடன் கூட்டமைப்பு அந்த அரசுடன் முன்னொருபோதும் இல்லாத வகையில் கொஞ்சிக் குலாவியும் வருகின்றது.

நிலைமை இவ்வாறிருக்க, ஐ.தே.க அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமது தரப்புகளால் (புலிகளாலும், ஐ.தே.க குண்டர்களாலும்) கொலை செய்யப்பட்டவர்கள் பற்றி எவ்வித விசாரணையையும் முன்னெடுக்காமல், தமக்கு எதிரானவர்கள் மீது மட்டும் விசாரணைகளை நடாத்த முற்படுவது முற்றுமுழுதான அரசியல் பழிவாங்கலே தவிர வேறொன்றும் அல்ல.
உண்மையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், அரசியல் படுகொலைகள் என்பன பற்றி துரையப்பா கொலையிலிருந்து அதை ஆரம்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி விசாரணை செய்வதானால், இலங்கை – இந்தியப் படைகள் செய்த மனித உரிமை மீறல்கள், புலிகள் உட்பட பல்வேறு தமிழ் ஆயுதக்குழுக்களும் செய்த படுகொலைகள், ஐ.தே.க. குண்டர்கள் 1981 யாழ்.மாவட்ட அபிவிருத்திச்சபைத் தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் கட்டவிழ்த்துவிட்ட அராஜகங்கள் என அத்தனையையும் விசாரிக்க வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான ஒரு மனித உரிமை மீறல் பற்றிய விசாரணையாக அது இருக்கும்.

அப்படி விசாரிக்கும் போது, தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை மேடையில் வைத்துக் கொண்டு, அவரது ஆட்சேபனை எதுவும் இல்லாமல், “தமிழ் துரோகிகளுக்கு இயற்கை மரணம் கிடையாது” என்று பேசிய அன்றைய தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர்களின் (மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன் போன்றவர்கள் அன்றைய பிரபல தலைவர்கள்) உரைகள், எப்படி புலிகளின் மிக மோசமான அராஜகம் வரை இட்டுச் சென்றது என்பதை வரலாறு பதிவு செய்வதுடன், சுமந்திரன் இன்று அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும்.

ஏனெனில், தமிழ் மக்களை வகைதொகையில்லாமல் கொன்று குவித்த அந்தப் புலிகளைத்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என திரும்பத்திரும்பப் பிரகடனப்படுத்தி வந்துள்ளது. அந்தக் கொலைகாரர்களை அங்கீகரித்து நியாயப்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எவ்வாறு தம்மைவிடக் குறைவான குற்றங்களைப் புரிந்த கருணாவையோ, பிள்ளையானையோ நோக்கி விரலை நீட்டுவதற்குத் தார்மீக உரிமை இருக்க முடியும். அதுவும் அவர்கள் புலிகளை ஆதரித்த காலத்தில்தான் அதிகமான அராஜகங்களைப் புலிகள் செய்துள்ளார்கள் என்பதை அனைவரும் அறிந்த பிறகு.
அதுமாத்திரமல்ல, ஜோசப் பரராசசிங்கத்தைக் கொலை செய்தவர்கள் பற்றிய விபரங்களை முன்னைய அரசாங்கத்திடம் கொடுத்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பொழுது கூட்டமைப்பினர் கூறுகின்றனர். அப்படியானால் அவர்களது கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களான தங்கத்துரை. நிமலன் சௌந்தரநாயகம், கிங்ஸ்லி இராசநாயகம் ஆகியோரைக் கொலை செய்தவர்களைக் கைதுசெய்யும்படி இவர்கள் ஏன் கோரவில்லை. இவர்களில் ஒருவர் தேர்தலில் தோல்வியடைந்த ஜோசப் பரசாசாசிங்கத்தை பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்காகத்தான் கொலை செய்யப்பட்டார் என மக்கள் பேசிக்கொண்டார்களே? புலிகள் அவர்களைக் கொலை செய்தபடியால்தான் கூட்டமைப்பு அவர்கள் கொலை பற்றி வாய் திறக்கவில்லையா?

எனவே, குற்றவாளிக் கூண்டில் முதலில் ஏற்றப்பட வேண்டியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே. ஆனால் அவர்கள் தாமே கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு மற்றவர்களை நோக்கி கல் வீசுவதுதான் வேடிக்கையானதாக இருக்கின்றது. அவர்களது இந்தச் செய்கை தவறானது மட்டுமல்ல, தற்கொலைக்கு ஒப்பானதும் கூட.

மூலம்: வானவில் இதழ் 58- அக்டோபர்


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...