மகிந்தவால் மட்டுமே வெல்ல முடியும் என்று சந்திரிகா சொன்னார் டி.ஈ.டபிள்யு குணசேகரவுடனான ஒரு நேர்காண

மகிந்தவால் மட்டுமே வெல்ல முடியும் என்று சந்திரிகா சொன்னார்
டி.ஈ.டபிள்யு குணசேகரவுடனான ஒரு நேர்காணல்
கம்யுனிஸ்ட் கட்சித் தலைவரும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரGunasekara1ுமான டி.ஈ.டபிள்யு குணசேகர கடந்த மாத ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத விளைவையும் மற்றும் ராஜபக்ஸ ஆட்சியின் வீழ்ச்சியும் அதன் காரணமாக நாட்டில் எழுந்துள்ள நிலமையையும் பற்றி சி.ஏ. சந்திரப்பிரேமவுடன் பேசுகிறார்.
  • கேள்வி: ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டாம் என்று நீங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை வழங்கி வந்தீர்கள். எனவே வெளிப்படையாக இந்த முடிவையிட்டு நீங்கள் ஆச்சரியப் படவில்லை.
பதில்: இல்லை. 2005 மற்றும் 2010 தேர்தல் முடிவுகள் உட்பட 1977 ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல் முடிவுகளைப்பற்றி நாங்கள் ஒரு ஆய்வினை மேற்கொண்டிருந்தோம். எங்கள் மதிப்பீடு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு (யு.பி.எப்.ஏ) வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் வாக்குகள் அதிகரிக்கும் என்பதாக இருந்தது, ஆனால் கணிசமான அளவுக்கு அது இருக்கவில்லை. மகிந்த வழக்கமாக முஸ்லிம் வாக்குகளில் 20 விகிதத்தை பெற்று வந்துள்ளார். ஆனால் இந்த முறை பொதுபல சேனா காரணமாக கிட்டத்தட்ட அது முற்றாகவே நஷ்டமாகி விட்டது. எங்கள் கட்சியில் இருந்த முஸ்லிம் அங்கத்தவர்கள் கூட மகிந்தவுக்கு வாக்களிக்க மறுத்துவிட்டார்கள். ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதியை நான் மூன்று முறை சந்தித்தேன். முதல் தடவை சந்தித்தபோது வாசு, திஸ்ஸ(விதாரண) மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர் உடனிருந்தார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் வரை நாங்கள் பேசினோம். தற்போதைய ஆட்சி பற்றிய காரணிகளை நான் ஜனாதிபதியிடம் சொன்னேன். அவர் 9 வருடங்களாக ஜனாதிபதியாக இருந்து வருகிறார், மற்றும் அதற்கு முன்பு அவர் ஒரு அமைச்சராக கிட்டத்தட்ட மற்றொரு தசாப்தத்துக்கு மேல் இருந்துள்ளார். எங்கள் நாட்டில் அத்தகைய நீண்ட காலம் யாரும் பதவிகளில் இருந்ததில்லை. மேலும் 1994க்குப் பிறகு பிறந்த இளைஞர்கள் இப்போது முதல் முறையாக வாக்களிக்கத் தயாராக உள்ளார்கள் அது மட்டுமே கிட்டத்தட்ட 600,000 வாக்குகள் வரை வரும். இந்த வாக்காளர்கள் ஒரு ஐதேக அரசாங்கத்தை ஒருபோதும் பார்த்ததில்லை மற்றும் அவர்கள் யாருக்கும் கறுப்பு ஜூலை(1983) பற்றியோ அல்லது ஜூலை வேலைநிறுத்தம்(1980) பற்றியோ எந்த நினைவும் இல்லை. அவர்கள் ஸ்ரீ.ல.சு.க அமைச்சர்களைத் தவிர வேறு எதையும் பார்த்ததில்லை. எனவே ஒரு மாற்றத்தை நோக்கிச் செல்லும் போக்கு அவர்களிடம் இருக்கக் கூடும்.
மேலும் நான் மகிந்தவிடம் மூன்றாவதும் மற்றும் மிகவும் முக்கியமானதுமான ஒரு காரணத்தை சொன்னேன், அது கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவர் அரசியல் செய்யவில்லை என்பதாகும். அவர் விழாக்களில் பங்கெடுப்பதும், குழந்தைகளை முத்தமிடுவதும் போன்றவற்றைத்தான் செய்து கொண்டிருந்தார் ஆனால் அரசியல் செய்யவில்லை. முந்தைய நாட்களில் மக்களுக்கு படிப்பினை ஊட்டுவதற்காக நாங்கள் கிராமங்களுக்குச் செல்வது வழக்கம் மற்றும் மக்களும் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கி விடுவார்கள். அந்த சக்தி இப்போது முற்றிலும் மறைந்துவிட்டது. பின்பு எழும் கேள்வி அரசியல்வாதிகள் அனுபவித்துவரும் சலுகைகளைப் பற்றியது. அது அநேகமாக மிகவும் தீமையான ஒரு காரணியாக உள்ளது. எங்கள் ஆய்வுகளின்படி 11 மாவட்டங்களில் மட்டுமே அவர் முன்னணியில் இருப்பதாகவும் மற்றும் இன்னும் இரண்டு வருடங்கள் பாக்கி இருக்கின்றன, இந்தக்காலத்தில்; தீhக்கப்படாத பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இன்னமும் இரண்டு வரவு செலவுத் திட்டங்கள் உள்ளன, மற்றும் இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நாங்கள் தோல்வி அடைந்தாலும்கூட அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்று நான் அவருக்கு எடுத்துக் கூறினேன். ஆனால் இதுதான் சிறந்த தருணம் என அவர் வலியுறுத்தினார்.
  • கேள்வி: அவருடைய குற்றங்குறைகள் மற்றும் தோல்விகளுக்கு அப்பால், மகிந்த ராஜபக்ஸ மீண்டும் அரசியலுக்கு வருவதைக் காண நீங்கள் விரும்புகிறீர்களா?
பதில்: அதனால்தான் அவருக்கு நான் பின்துணை வழங்கினேன். அது வெறுமே ஒரு ஆளுமை பற்றிய விடயமல்ல. எங்கள் கட்சி பொதுவாக ஒட்டுமொத்த நிலமை மற்றும் கொள்கைகளைத்தான் பார்க்கிறது. மைத்திரிபால சிறிசேன வெளியே வந்ததும் அவருக்கு ஜதேக வாக்குகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருடன் ஒருமித்த அனைவராலும் 10 விகித வாக்குகளையே வழங்க முடிந்தது. எனவே அடிப்படையில் இது ஒரு ஐதேக ஆட்சி. ஒரு ஐதேக நிருவாகத்துக்கு ஆதரவு வழங்கமுடியாது என்கிற நிலைப்பாட்டையே நாங்கள் மேற்கொண்டோம். பிறகு அங்கு பல்வேறு மேற்கத்தைய சக்திகள் வேலையில் ஈடுபட்டிருந்தன, அதை எங்களால் சகிக்க முடியாது.
  • கேள்வி: நீங்கள் அவரை (மகிந்தாவை) இன்னும் ஸ்ரீலங்காவுக்கு சாத்தியமான ஒரு தலைவராகத்தான் பார்க்கிறீர்களா?
பதில்: ஆம், ஏனென்றால் அவர் ஒரு பிரசித்தமான தலைவர். அவர் மதிக்கப்பட்டவர். அவர் மக்களோடு பழகும் ஒரு தலைவர். இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைதான் அவரைப் பாழடித்தது. 18வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, நான் அவருடன் பெரிய விவாதத்தில் ஈடுபட்டேன் மற்றும் அவரிடம் நான் சொன்னேன் நீங்கள் விரும்பும் காலம்வரை பிரதமராக பதவி வகியுங்கள் என்று. 2005ல் ஒருநாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க என்னை அழைத்திருந்தார், சுமார் ஒரு மணி நேரம்வரை நாங்கள் கலந்துரையாடினோம். அப்போது தனக்கு பின்னால் ஜனாதிபதியாக வரக்கூடிய ஒருவர் தன்னிடம் இல்லை என அவர் சொன்னார். சாத்தியமான பல நபர்களின் பெயரை அவர் குறிப்பிட்டார், ஆனால் நான் விரும்புகிறேனோ அல்லது இல்லையோ தேர்தலில் வெற்றிபெறும் சாத்தியமுள்ள ஒரேமனிதர் மகிந்ததான் என்று அவர் சொன்னார். மங்கள மற்றும் எஸ்.பி ஆகியோரே தன்னை மகிந்தாவிடம் இருந்து தூரப்படுத்தியது என்றும் அவர் சொன்னார்.
  • கேள்வி: 1994க்குப் பிறகு பிறந்த இளைய தலைமுறையினர் ஐதேக அரசாங்கத்தை பார்த்ததில்லை என்று நீங்கள் சொன்னீர்கள். நல்லது இப்போது கிட்;டத்தட்ட நான்கு வாரங்களாக நடைமுறையில் இருக்கும் பகுதியளவு ஐதேக அரசாங்கத்தை அவர்கள் பார்க்கிறார்கள். முந்தைய தலைமுறை வாக்காளர்கள்கூடப் பார்த்திராத பேயோட்டல் வேலைகளை அவர்கள் இப்போது பார்க்கிறார்கள் - ஒரு கூட்டம் ஆட்கள் பல்வேறு இடங்களைச் சூழ்ந்து கொண்டு சட்டவிரோத தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இரவில் பிரதம நீதியரசரின் வீடு ஒரு கும்பலால் ஆக்கிரமிக்கப்படுகிறது மற்றும் அவர் அச்சுறுத்தப் படுகிறார். அடுத்த நாள் காலை மற்றொரு கும்பல் உயர்நீதிமன்ற வாசலில் நிற்கிறது மற்றும் பதவியில் உள்ள பிரதம நீதியரசரை அகற்றிவிட்டு முன்னாள் பிரதம நீதியரசரை மீண்டும் பதவியில் அமர்த்தும் கடிதங்களுடன் சிலர் வந்துள்ளார்கள். இந்த விடயங்களை யாரும் எப்போதும் எந்த அரசாங்கத்திலும் அது ஐதேகவோ அல்லது ஸ்ரீ.ல.சு.க விலோ ஒருபோதும் பார்த்திராத விடயம்.
பதில்: ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் நான் ஆற்றிய எனது முதல் பாராளுமன்ற உரையில் இந்த சட்டவிரோத தேடுதல்களைப் பற்றிய கேள்வியை நான் எழுப்பியிருந்தேன். புதிய நிதி அமைச்சரான ரவி கருணாநாயக்கா தொலைக்காட்சியினரின் புகைப்படக் கருவி மற்றும் காவல்துறையினர் சகிதம் ஒரு வீட்டைச் சோதனையிடச் சென்று காவல்துறையினர் பார்த்துக் கொண்டு நிற்கையில் இவர் கேள்வி கேட்கும் வேலையை செய்கிறார். பிறகு, பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க என்பவர் ஒரு சீருந்தினை தேடி சில வீடுகளுக்குச் செல்கையில் மீண்டும் காவல்துறையினர் பார்த்துக் கொண்டு நிற்கையில் அவர் விசாரணை செய்கிறார், என்று நான் சொன்னேன். இதுதான் மக்கள் எதிர்பார்த்த சட்டத்தின் ஆட்சியா என நான் ரணிலிடம் கேட்டேன்.
  • கேள்வி: ஐதேக அதேபோல ஜேவிபி மற்றும் ஜேஎச்யு (JHU) ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ள அப்படியான விடயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
பதில்: மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக வாக்களித்த கல்வியறிவுள்ள நடுத்தர வகுப்பினர் மற்றும் புத்திஜீவிகள் இப்படியான விடயங்கள் நடப்பதை பார்த்தால் உண்மையில் அதிர்ச்சி அடைவார்கள். ராஜபக்ஸ அரசாங்கத்தால் ஷிராணி பண்டாரநாயக்காவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முயன்றபோது நான் வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்திருந்தேன். அந்தநேரம் போராட்டக்காரர்கள் பிரதம நீதியரசரின் வீட்டுக்கு வெளியே முகாமிட்டிருந்தார்கள், மற்றும்; அவருக்கு எதிரான குற்றச்;சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப் பட்டிருந்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவர் போராட்டக்காரர்களிடம் தொலைக்காட்சி புகைப்படக் கருவி சகிதம் விஜயம் மேற்கொண்டிருந்தார். அது தவறு. இப்போதைய அரசாங்கமும் கிட்டத்தட்ட அதேபோன்ற தவறைத்தான் செய்துள்ளது. ஜனாதிபதி நீதியரசர்களை நியமிக்கிறார், அனால் அவர்களை அகற்றுவது பாராளுமன்றத்தால் மட்டுமே செய்யமுடியும். அவர்;கள் இந்த விடயத்தை பாராளுமன்றத்தின் முன்பாக கொண்டுவந்து, மோகான் பீரிஸின் நியமனம் தவறானது என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும், அப்படிச் செய்திருந்தால் பதவியிலிருந்த நீதியரசர் சிறிதளவு சுயமரியாதையுடன் வீட்டுக்குச் சென்றிருப்பார். நிறுவனத்தின் மதிப்பையும் சற்று கவனத்தில் எடுத்திருக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் பதவிக்கு வரும் அடுத்த நீதியரசருக்கும் ஒரு வித தர்மசங்கடமான நிலை ஏற்பட்டிருக்கும்.
  • கேள்வி: 2001க்கு திரும்ப வருவோமானால், ஜதேக அதிகாரத்தை வெற்றி கொண்டபோது, அவர்கள் மற்றவாகள் பின்பற்றக்கூடிய விதத்தில் நடந்து கொண்டார்கள் என்றுதான் நான் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் சந்திரிகா குமாரதுங்க பின்னால் சென்று விசாரிக்கவோ அல்லது தங்கள் அரசியல் போட்டியாளர்களை தொந்தரவு செய்யவோ இல்லை. 2004ல் பாராளுமன்றத்தில் சந்திரிகா தனது பெரும்பான்மையை பெற்றுக்கொண்ட பின்னும் அவரும் தான் முன்பிருந்ததைவிட  மிக அதிகம் ஆhப்பாட்டமில்லாமல் நடந்து கொண்டார். பின்னர் அதிகாரம் மகிந்த ராஜபக்ஸவின் கரங்களுக்கு சென்றபோது அவரும் கூட பாரம்பரியத்தை கடைப்பிடித்தார் மற்றும் ராஜபக்ஸ அரசாங்கத்தின் கீழ் ஐதேக,ஜேவிபி,அல்லது ரிஎன்ஏ அங்கத்தவர்கள்கூட துன்புறுத்தல்களுக்கு ஆளாகவில்லை. ஷிராணி பண்டாரநாயக்காவை அகற்றியதில்கூட சரியான நடைமுறை பின்பற்றப்பட்டது. குற்றவியல் பிரேரணைக்கு எதிராக யாராலும் எதுவும் சொல்ல முடியவில்லை, ஐதேக கூட இரண்டு தடவை குற்றவியல் பிரேரணைகளில் ஒப்பமிட்டிருந்தது, முதலில் நெவில் சமரக்கோன் விடயத்திலும் பின்னர் சரத் என்.சில்வா விடயத்திலும் அது நடந்தது. ஜேவிபி கூட சரத் என் சில்வாக்கு எதிரான  குற்றவியல் பிரேரணையில் ஒப்பமிட்டிருந்து. எனவே இது நிறுவப்பட்டதும் மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான ஒரு நடைமுறை.
பதில்: எனது கருத்துப்படி, தற்போதைய பிரதம நீதியரசரை பதவி விலக்குவதும் மற்றும் ஷிராணி பண்டாரநாயக்காவை மீண்டும் பதவியில் அமர்த்துவதும் ஆகிய இரண்டு விடயங்களும் பாராளுமன்றத்தின் முன் வந்திருக்க வேண்டும். ரணிலைப் பற்றி தெரிந்த அளவில் இப்படியான ஒரு விடயம் அவரிடம் இருந்து வந்திருக்காது என்றே எங்களில் பலரும் நினைத்தார்கள். அவரை இப்படிச் செய்ய வேண்டும் என்று எது தூண்டியிருக்கும் என்று என்னால் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. இது பயங்கரவாதத்தை தவிர வேறு எதுவுமில்லை. இதில் சம்பந்தப்பட்டிருக்கும் நிறுவனம் நீதித்துறை. சட்டத்தின் மதிப்பு இங்கு குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இப்போது நீதிபதிகள் விரும்பத் தகாத தீர்ப்புகளை தங்களுக்கு வழங்கினார்கள் என்று, மக்கள் அவர்களை வேறு இடங்களில் வைத்து தாக்கவும் தொடங்கலாம். ஜே.ஆர் வழக்கமாகச் சொல்வது நிறைவேற்று அதிகாரத்தினால் ஆணைப் பெண்ணாக்கவும் மற்றும் பெண்ணை ஆணாக்கவும் மட்டுமே முடியாது மற்ற அனைத்தையும் செய்யலாம் என்று, இந்த விடயம் அந்தக் கருத்தை உறுதி செய்வதற்காக எங்களுக்கு கிடைத்துள்ள ஒரு உதாரணம்.
  • கேள்வி: முன்னோடியற்ற இத்தகைய நடவடிக்கைகளுடன் இணைந்ததால்தான், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வது பற்றியும் மற்றும் தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை மற்றும் விருப்பு வாக்கை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறையை மறுசீரமைப்பது பற்றியும் நாங்கள் கேட்பது உண்மையில் வர வரக் குறைந்து வருகிறது.
பதில்: மக்கள் அமைதியாக இருந்தாலும் அவர்கள் அதையிட்டு மகிழ்ச்சி அடையவில்லை.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்


 source: http://www.thenee.com/html/070215-5.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...