மாவீர நாள் எதுவோ மக்களின் துயர் மறவோ !


எஸ்.எம்.எம்.பஷீர் 

"நொந்த புண்ணைக் குத்துவதில் பயனொன்றில்லை
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் !
அந்தணனாம் சங்கராசர்யன் மாண்டான்
அதற்கடுத்த ராமனுஜனும் போனான்.
சிலுவையிலே அடியுண்டு ஏசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;
பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர். "(பாரதி அறுபத்தாறு).
நவம்பர் மாதத்தின் இறுதி வாரம் மாவீரர் வாரம் என்று புலிகளாலும் புலிகளின் ஆதரவாளர்களாலும் உலகெங்கும் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினம் புலிகளின் உத்தியோகபூர்வ மாவீரர் தினமாக பிரகடனப்படுத்தபட்டு வருடந்தோறும் புலிகளின் தலைவரின் பிரபாகரனின் மாவீரர் தின "வீர" உரையுடன் நினைவு கூரப்பட்டு வந்தது.  

"முன்னொரு காலத்தில்" இலங்கையில் மாவீரர் தினமென்றால் நவம்பர் மாதம் 27ஆம் திகதி , புலிகள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் நாள் . மிகவும் பரபரப்பாக இலங்கை மட்டுமல்ல உலகின் பல நாடுகளாலும் செவியுற நேரம் ஒதுக்கிய நாள்.  

"மாவீரர் தினம்" என்றால் என்ன புலிகளின் ஆயததாரிகள் மரித்த நாள் என்று மட்டும்தான் என்று புலிகள் வரைவிலக்கணம் செய்தனர். 

மாவீர்கள் யார் என்றால் தமிழர்களின் விடுதலைக்காக தங்களை ஆகுதியக்கிவர்கள் என்று புலிகள் சொல்வார்கள் , பெரும்பான்மைத்  தமிழர்களும் அதை அங்கீகரிக்கிறார்கள். ஏனென்னில் அவர்கள்தான் அதற்கு உதவியும் ஒத்தாசையும் புரிந்தவர்கள். அதனால்  பாசிசத்தை வளர்த்தவர்கள். 

அதற்கு காரணம் மாவீரர் என்றால் புலிகளின் சகல போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு உயிர்களை "இலட்சியத்துக்காக " இழந்தவர்கள் என்றுதான் புலிகள் சொல்லுகிறார்கள். ஆனால புலிகள் செய்த மனிதப் படுகொலைகள் எண்ணற்றவை! 


புலிகள் தங்களுக்கு வேண்டாத தமிழர்களையும் கொன்றனர்.அப்பாவி தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களையும் கொன்றனர். கொலையே அவர்களின் தாரக மந்திரமாக மாறி போயிற்று.

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர். உலகும் புலிகளை பயங்கரவாதிகள் என்றனர்.  மாவீரர்கள் மிகப் பெரும்பான்மையானோர் புலிப் பாசிச நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்.
பாசிஸ்டுகள் , அவர்களில் பலர் இன்று மாவீர்கள். அவர்களுக்காக ஒரு தினம் ! 

தமிழ் தலைவர்களை புலிகள் கொன்றார்கள் ஜனநாயக வழிமுறைகள் ஒழிக்கப்பட்டன புலிப் பாசிச ஆட்சி வடக்கு கிழக்கில் கோலோச்சியது. புலிகளின் மிருகத் தர்பார் நடந்தது. 

மகிந்தவின் ஆட்சி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து.ஆனந்த சங்கரி போன்றோருக்கும் புலிகளிடமிருந்து தப்பி உயிர்வாழ பாதுகாப்பு வழங்கியது. சங்கரியும் பிரபாகரனுக்கு கடிதம் எழுதியபோல , முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளையருக்கும் ஒரு கடிதம் எழுதினார்.

இலண்டனில் பிரபாகரனின் மாவீரர் தின உரைக்கு அன்டன் பாலசிங்கம் பொழிப்பு சொன்ன வேளையில் சங்கரிக்கு மறைமுகமாக  எச்சரிக்கை  விடுத்தார். பொட்டம்மானின் கிளிநொச்சி விருந்து பற்றி சிலாகித்தார்.  

ஆனந்த சங்கரி புலிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உண்டு என்று டோனி பிளையருக்கும் கடிதம் எழுதினார். 

ஆனால் இப்பொழுது சங்கரி அவர் வடக்கில் வாழும் அதிக மக்களுடன் கதைத்ததாகவும் , அவர்கள் யாவரும் தங்களின் இறந்த உறவுகளுக்காகவே மாவீரர் தினம் கொண்டாடுவதாகவும் , அவர்கள் ஒரு காரணத்துக்காகவே உயிர்களை தியாகம் செய்ததாகவும் ,  மாவீரர் நாள் பிரபாகாரனுக்கான நாள் அல்லவென்றும்  கடந்த இரண்டரை தசாப்தங்களாக மாவீரர் நாள்  நிகழ்வு  கொண்டாடப்பட்டு  வருவதாகவும் குறிப்பிட்டு அத்தினத்தில் சமய சடங்குகளை செய்ய அரசு தடை விதிக்கக் கூடாது என்றும்  வேண்டி உள்ளார். 

பிரபாகரன் இப்பொழுது இல்லை பயங்கரவாதமும் இல்லை , புலிகள் மாவீரர் தினத்தைக் கொண்டாடவில்லை என்கிறார் சங்கரி.கொண்டாடுவது பொது மக்கள்.  

ஆனால் புலிகள்தான் மாவீரர் தினத்தினை பல தசாப்தாங்களாக கொண்டாடி வந்தார்கள் என்பதையும் ஒரு சில மாவீரர்கள் தான் தனது தலைவர் அமிர்தலிங்கத்தை கொன்றனர் என்பதையும்  , தன்னைக் கொல்லவும் தயாராக இருந்தவர்களும் "மாவீரர்கள்தான் " எனபதையும் மறக்க , மன்னிக்க ஆனந்த சங்கரியின் அரசியல் இடமளித்திருக்கிறது.

ஒருவேளை இனி வரும் காலத்தில் , அவர் ஒரு மடலையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு எழுதலாம்.     

இந்த நிலையில் தமிழர்களில் புலம் பெயர்ந்து நிபுணத்துவ துறைகளில் பயிலும் பயிற்சி பெறும்  இளம் தமிழர்கள் இந்த நாளை தமது  பல்கலைக்கழகங்களில் , வேலைத்தளங்களிலும்  வேறு விதமாக நினைவு கூறுகிறார்கள். இறந்தவர்களை மொத்தமாக தமிழ் மக்களை  சிங்கள அரசு கொன்றழித்தது என்று கண்காட்சி நடத்துகிறார்கள். அந்த வகையில் சென்ட் ஜோர்ஜெஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இந்த வாரத்தின் ஒரு நாளை ஏற்கனவே தமிழர் அழைப்பை நினைவு கூரும்  நாள் என்று கொண்டாடி விட்டார்கள். அங்கு முஸ்லிம்களையும் ஏனையோரையும் புலிகள் கொன்றது குறித்த ஒரு தனி நபர் கொலைச் சம்பவத்தைப பற்றிக் கூட சொல்லவில்லை,  சொல்லப்படவில்லை . எப்படியான நீதியான உலகத்தில் புதிய தலைமுறை பயணிக்கிறது.!

புலிகள் அழிந்து போனார்கள் புலிகளின் சடங்குகளும் அனுதாபிகளின் மத்தள முழக்கங்களும் இன்னமும் முடியவில்லை . யுத்தம் முடிவுக்கு வந்த தினமே தமிழ் மக்களின் பேரவல, பேரழிவு நாள் என்றால் , அந்த நாளை தமிழ் மக்களின் துக்க தினமாக அனுஷ்டிக்கலாமே !

 மாறாக புலிகளின் நிர்ணயிக்கப்பட்ட திகதியான மாவீரர் நாள் புலிகளின் பலகொலைஞர்களையும் , அவர் தம் மனித உரிமை மீறல்களையும் மூடி மறைக்க செய்யப்படும் ஒரு நாள்.

தமிழ் சமூகம் தங்களின் குழந்தைகளை புலிகளின்  பலாத்தகார ஆட்பிடிப்பினால் ஆயிரக்கணக்கில் இழந்திருக்கிறது. 

அவர்களில் பலர் புலியாக்கப்பட்டு புனிதமிழந்து , மனித விழுமியங்கள் இழந்து புலியாக செயற்பட்டு தங்களின் உயிர்களை இழந்திருக்கிறார்கள்.

புலிகளின் மாவீரர்கள் எனப்படுவோர் உலகெங்கும் விரிந்து கிடக்கும் அவர்களின் குடும்பங்களுக்கு "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல்" ஏனைய சகல மனிதர்களையும் போல துயரத்தையும் துன்பத்தையும் சாசுவதமாக்கியவர்கள்! 

அதேபோல புலிகளின் "மாவீரர்"களால் பாதிக்கப்பட்ட  சகல சமூகங்களும் குடும்பங்களும் , தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை , துயரங்களை எப்படி என்ன பெயரில் எங்கே கொண்டாட போகிறார்கள்.  


27/11/2015

No comments:

Post a Comment

தற்போது உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா-– இணைப்பேராசிரியர் சோம்தீப் சென் (Somdeep Sen)

Home கண்ணோட்டம் தற்போது உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா அக்டோபர் 1, 2022 இ ந்தியாவின் இந்து வலதுசாரிகள் நீண்ட காலமாக உலகம் ...