தேசாபிமானிகளும் தேசத் துரோகிகளும்
எஸ்.எம்.எம்.பஷீர்
“நாங்கள் கேள்விப்படுபவை யாவும் அபிப்பிராயங்களே , மெய்ந்நிகழ்வுகள் அல்ல ; நாங்கள் காண்பவை யாவும் கண்ணோட்டங்களே, உண்மைகள் அல்ல. “ மார்கஸ் ஔரெளியஸ்
21 ஆம் திகதி 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 1968 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் 1856/41 ஆம் இலக்க  விசேட  வர்த்தமான அறிவித்தல் மூலம் 424 தனிநபர்களையும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை உள்ளிட்ட பதினாறு நிறுவனங்களையும் (அமைப்புக்களையும் ) இலங்கையின்  பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலானவர்கள் என பிரகடனப்படுத்தியது  இலங்கை அரசாங்கம்.
இந்த நிரலில் உள்ளவர்களில் சிலரும் சில அமைப்புக்களும் தடை செய்யப்பட்டது தவறானது அல்லது பொருத்தமற்றது என்று சிலர் தமது கருத்தக்களை காரண காரியங்களுடன் முன் வைத்தனர்.

தடைசெய்யப்பட்டவர்களில் , தடைசெய்யப்பட்ட அமைப்புக்களில் மிக மிகச் சிலர் /சில வெளிப்படையாக பொருத்தமற்றவை என்பது பற்றி   சிலாகிக்கப்பட்டது. 
அந்த விவாதங்களுக்கு அப்பால் , இந்த பட்டியலில் பலரின் பெயர்கள் , அமைப்புக்களின் பெயர்கள் தற்பொழுது புதிய அரசாங்கத்தால்  நீக்கப்படுள்ளன. அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் நிகழ்ச்சி நிரல் இந்த நிரலில் மற்றம் கொண்டுவரப்படுவதை நிர்ணயம் செய்திருக்கிறது என்பதும் தெளிவாகிறது. இலங்கையில் புலிகளின் சார்பு நபர்களை ,அமைப்புக்களை தடை நீக்கம் செய்யும் சந்தர்ப்பத்தில்  "எதோச்சையாக "   அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர் கால் பதித்துள்ளார்.
ஆனாலும் வெளிநாட்டு அமைச்சு " நீக்கப்பட்டவர்கள் , நீக்கப்பட்ட அமைப்புக்கள் என்பன வன்முறையைக் கண்டிப்பவர்கள் , பிரிவினையைக் கைவிடுபர்கள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளபடியால் அவர்களின்/அவற்றின் பெயர்களை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளதுடன் , ஏனையவர்களும்/ ஏனையவையும்  அத்தகைய பகிரங்க பொறுப்பினை வெளிப்படுத்துமிடத்து  (ஏனைய அவசியமான நடவைக்கைளையும் எடுக்குமிடத்து )  அவர்களும் / அவைகளும் தடைசெய்யப்பட்ட நிரலிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது .
அதாவது வன்முறையைக் கண்டிக்கவேண்டும் , பிரிவினையைக் கைவிட வேண்டும்.
தனி நபர்களில் தடை நீக்கப்பட்டவர்கள் 155 பேர் , அமைப்புக்கள் எட்டு.
அமைப்புக்களை ஒருபுறம் வைப்போம் . தனிநபர்களில் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளவர் , புலிகளின் பிதாமகர்களில் முன்னோடியும் முதன்மையானவருமான பாதர் இம்மானுவேல் . இவர் ஜேர்மனியில் வசித்துவருபவர் புலிகளின் புலம்பெயர் தனிநாட்டுக் -பிரிவினைக்- கோரிக்கைக்கு புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளையும் எந்த தருணத்திலும் கண்டு கொள்ளாதவர் , கண்களை இறுக்கி மூடிக் கொண்டவர்.இலங்கை  அரசு மனித உரிமை மீறல்களை மட்டும் கண் திறந்து பார்த்துக் கொள்பவர்.
பாதர் இம்மானுவேல் பிரபாகரனை ஏசு நாதருக்கு இணையானவர் என்று ஒப்பீடு செய்தவர். அதன் மூலம் மத நிந்தை செய்தவர். பிரபாகரனின் மகளுக்கு திருமணம் செய்ய அக்கறை கொண்டு கஜன் பொன்னம்பலத்தை திருமணம் செய்ய பிரேரித்தவர். 
இவர் சுரேன் சுரேந்திரன் முட்டுக் கொடுக்கும் உலகத் தமிழ் பேரவையின்  தலைவர். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அமரிக்க இராஜாங்க செயலாளர் பிளேக்குடன் சேர்ந்து அமெரிக்காவின் இலங்கை மீதான வெளியுறவுக் கொள்கையின் அந்தரங்க நிகழ்ச்சி நிரலுக்கு துனை புரிபவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின்    அமெரிக்க விசுவாசத்தை (ஏகாதிபத்திய விசுவாசத்தை) புலம் பெயர் தேசத்தில் முன்னின்று செயற்படுத்தி வருபவர். அவர்களின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருபவர்.
மத போதகராக பயிற்றப்பட்ட  தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அண்மைக்கால இலண்டன் விஜயங்களின் மூலம் இந்நாள்வரை பயங்கரவாத இயக்கமாக இங்கிலாந்தில் (ஒப்புக்காயினும் பிரகடனப்படுத்தப்பட்ட  )  புலிகளின் பிதா (மகரை) இமானுவேல்லை அவரின் சார்பு அமைப்பான உலகத் தமிழ் பேரவையையுடன் சேர்த்து தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் , கனடாவிற்கும் பிரித்தானியாவிற்கும் பறந்து திரிந்து தமிழ் தேசியக்  கூட்டமைப்பு இந்த  ராஜீய வெற்றியை நிலை நாட்டி உள்ளது. இதில் நோர்வேயின் பங்கும் குறிப்பிடத் தக்கது.
புலிகள் பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது பழமொழி என்று சொல்வதை விட இப்பொழுது அது பழைய மொழி புதிய மொழி புலி பசித்தால் புல்லையும் தின்னும்.
வன்முறையைக் கைவிடுவது என்பது  இப்போதைக்கு  சங்கடமில்லாத சமாச்சாரம். வன்முறைதான் இலங்கையை மூன்று தசாபதங்களாக சிதைத்து விட்டது. புலிப் பயங்கரவாத  வன்முறை முடிவுக்கு வந்தாயிற்று. இப்பொழுது புலியின் வல்லமையைக் காட்டி "சிங்களவனுக்கு அடிதான் புரியும் என்றோ , " "இப்படை தோற்கின் எப்படி வெல்லும் என்றோ ," "உள்ளே விட்டு அடிப்பார் எம் தலைவர்  "  என்றோ "முப்பதினாயிரம் சவப்பெட்டிகள் தெற்குக்கு வரும் " என்றோ சண்டித்தனம் பேச முடியாது. ஆனால் புலி பதுங்குவது பாச்சலுக்குத் தான் என்பது மட்டும் மாறாத முது மொழியாக இருக்கப் போகிறது.  அதனை இலங்கை அரசு மிகக் குறுகிய காலத்தில் உணரத்தான் போகிறது.
இலங்கை அரசு தடைநீக்கம் செய்துள்ள தனி நபர்கள் இயக்கங்கள் குறித்து உலகத் தமிழ் பேரவை சுரேன் சுரேந்திரன் ஏனைய சகல தனிநபர்கள் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் அதற்காகாக  உலகத் தமிழ் பேரவை இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுக்கும் என்றும் பிரகடனப்படுத்தியுள்ளார்.
இங்குதான் ஒரு உண்மைகள் வெளியாகிறது. சுரேன் சுரேந்திரனின் , பாதர் இம்மனுவேலின் தலைமையிலான உலகத் தமிழ்ப் பேரவை தனிநாட்டுக் கோரிக்கை (தமிழ் ஈழக் கோரிக்கையை ) கைவிட்டு விட்டர்கள் என்று வெளிப்படையாக சொல்லவில்லை. அதேவேளை ஏனைய அமைப்புக்கள் தனி நபர்கள் மீது தடையை நீக்க வேண்டும் என்று சொல்லும் உரிமை அவருக்கு இல்லை .
ஏனைய அமைப்புக்கள் தாங்கள் தனி நாட்டுக் கோரிக்கையை , வன்முறையை கைவிடுகிறோம் என்று சொல்லவில்லை என்பதில் எந்த உண்மையும் இல்லை என்பதை சுரேனின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
ஏனைய அமைப்புக்களுக்கும்  , ஏனைய நபர்களுக்கும்  தேவை ராஜீய தலையீடே அன்றி வேறில்லை.  இன்றைய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் , அவர்களின் ஐரோப்பிய முகவர்களின் சொல்லுக்கு இலங்கை அரசை தலை சாய்க்கிறது , அமெரிக்காவின் ஒரு மாநிலம் போல இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலை இடுகிறது. பிரித்தானிய தூதுவர் வேறு தடை நீக்கம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். முஸ்லிம் தலைவர்கள் கூட அமெரிக்க தூதுவர்களை சந்திக்க படை எடுக்கிறார்கள்.  அமெரிக்கா தமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று நம்புகிறார்கள்.
அந்த வகையில் தடை நீக்கப்பட்ட அமைப்புக்கள் பல அண்மைக்காலமாக செய்த மேற்குலக அரசுகளுடனான ராஜீய தந்திரோபாய அணுகுமுறை  வெற்றி பெற்றுள்ளது. அதனை செய்ய அமைப்புக்களும் தனி நபர்களும் முயற்சிப்பார்கள்.
எல்லாமே ஒரு நீண்ட நாடகத்தின் அங்கமே என்பதை புரிய நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை . மேற்குலகும் இந்தியாவும் வளர்த்து ஆளாக்கிய புலி அமைப்பு , தேவைப்பட்ட பொழுது , அழிக்கப்பட்டு , மீண்டும் வேறு வடிவத்தில் உயிரூட்டப்படுகிறது.
 "எங்களைப் போல் நீங்களும் தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடுங்கள் , வன்முறையை கண்டியுங்கள் உங்களுக்கும் இலங்கை அரசு தடை நீக்கம் செய்யும் என்றோ அல்லது  உங்களுக்காக  நாங்கள் இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுப்போம் என்று சுரேன் சொல்லி இருந்தால் , இலங்கை அரசும் (மங்களவும்) உலகத் தமிழ் பேரவையும் (சுரேனும்) உண்மையை சொல்கிறார்கள் என்று நம்பலாம். ஆனால் இருவருமே உண்மையைச் சொல்லவில்லை என்றே புலப்படுகிறது. இவர்களின் மேற்குலக எஜமானர்களின் கட்டளைகளை சிரமேற் கொண்டு இலங்கை அரசு செயற்படுவதாகவே தெரிகிறது.
புலிகளை வெளிப்படையாக ஆதரித்த இவர்கள் யாவரும் இன்று தேச அபிமானிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.
புலியின் அதரவு நபர்கள் அமைப்புக்கள் , இன்றுவரை இன விரோத கருத்தியல்களுடன் , இலங்கையின் இறைமைக்கு விரோதமான  கருத்தியல்களுடன் பவனி வரும் யாவரும் ஒரு பேனா முனை கீறலுடன் தேசாபிமானிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.
இன்னுமொரு புறத்தில் புலிகளையும் இவர்களையும் எதிர்த்து நின்றவர்கள் யாவரும் இப்பொழுது தேச விரோதிகள் போல நடத்தப்படுகிறார்கள்.!
24/11/2015

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...