இலங்கையில் இஸ்லாமிய மத உள்முரண்பாடுகள் : உம்மாக்களும் உலமாக்களும்


எஸ்.எம்.எம்.பஷீர்   

" இஸ்லாம் என்றால் என்ன என்பது பற்றிய அறிவை , அதன் மெய்பொருளை அதன் செய்தியை நாகரிக உலகினூடாக பரப்புதல்  செய்வதே  இஸ்லாத்தை பின்பற்றுவோரின் கடமையாகும் "   - அண்ணி பெசன்ட் அம்மையார்    

தமிழ் நாட்டைச் சேர்ந்த  பீ . ஜே என  அழைக்கப்படும் பீ.  ஜெய்னுலாப்தீன் எனும் மத அறிஞர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08/11/2015)இலங்கை  வருகிறார் !
படம் : பீ . ஜே வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் கொழும்பு தேவட்டகஹா பள்ளிவாயலில் இன்று நடைபெற்ற பொழுது. (05/11/2015)

இலங்கையில் பீ . ஜே பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கை வழி அமைப்பின் இலங்கை கிளையின் அழைப்பின் பேரில் அவர்கள் நடத்தும் ஒரு மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவே அவர்அங்கு செல்கிறார்  என்று செய்திகள் கூறுகின்றன! 

இவர் முன்னரும் இலங்கை வந்துள்ளார், ஆனால் அப்பொழுது  அவர் வருவதில் எதிர்ப்பு ஒருமுகப்படுத்தப்படவில்லை. பீ . ஜே வந்தார் , வந்த பின்னரே அவருடன் கொள்கை முரண்பட்டவர்கள்  அவரை நாட்டைவிட்டும் திருப்பி அனுப்பும் கைங்கரியத்தை  முஸ்லிம் அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் செய்து முடித்தனர். 
இலங்கை அரசு கெடுபிடியை இறுக்கியது பீ . ஜே  திரும்பி போய் விட்டார். இலங்கைக்கு  போய் ஆங்காங்கு இவர் மத சொற்பொழிவுகள் நடத்தினர், இலங்கையில் ஏற்கனவே பலம் வாய்ந்த மத நிறுவனங்கள் அமைப்புக்கள் என்பன அதனைக் கண்டு ஆத்திரமுற்றன, தாங்கள் அசட்டையாக இருந்து விட்டோமோ என்ற அங்கலாய்ப்புற்றன, ஆனாலும் கொள்கை ரீதியில் முரண்பட்ட அரசில் செல்வாக்கு பெற்றிருந்த சில அமைச்சர்கள் அவர்களுக்கு கை கொடுத்தனர். 

ஆனால் இம்முறை  "வருமுன் காப்போம்" என்று இலங்கையில் உள்ள பாரம்பரிய மத நிறுவனங்களும் முஸ்லிம்களை நாடளாவிய ரீதியில் பிரதிநிதித்துவப்படுத் மத அதிகார  மையமாக திகழும் ஜம்மியத்துல் உலமா எனப்படும்  குடை மத நிறுவனமும் எப்படியாவது பீ ஜேயை வரவிடாமல் தடுக்க வேண்டும் , வந்தாலும் வந்ததும் வராததுமாய் பெட்டியை கட்டிக் கொண்டு போகச் செய்ய வேண்டும் என்பதில் ஒன்றாக செயற்படுகின்றன.

 ஜம்மியத்துல் உலமா பத்திரிகை அறிக்கை ஒன்றை  வெளியிடப்பட்டுள்ளது. பீ . ஜே யின் முன்னைய விஜயத்தின் பொழுது அவரை நாட்டை விட்டும் கிளப்ப "ஜம்மியத்துல் உலமாவும்" பின்னணியில் இருக்கத் தவறவில்லை என்று சொல்லப்படுகிறது. 

ஆளைக் கிளப்ப வேண்டும் ஆனால் பல முஸ்லிம் பிரிவினர்களின் தாய் வீடாக இருந்து கொண்டு எப்படி அதை செய்வது என்பதில் தாங்களும் அவரை அழைத்துள்ள  பிரிவினருக்கு எதிரானவர்களே என்பதையும் தங்களின் அறிக்கையில் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.  

"கடந்தகால அவரது விஜயத்தின் பொழுது ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் மற்றும்  சமூக ஒற்றுமையையும்,சகவாழ்வையும் சீர்குலைக்கும் சம்பவங்கள் ஏதும் ஏற்படாமலிருப்பதை கவனத்திற் கொண்டு இலங்கையின் பல முன்னணி இஸ்லாமிய நிறுவனங்களும் அமைப்புக்களும் ,அறபுக் கல்லூரிகளும் அவரதுவிஜயம் ஆரோக்கியமற்றது என எழுத்து மூலமும்,தொலைபேசி மற்றும் நேரடியாகவும் ஜம்இய்யாவுக்கு அறிவித்த வண்ணம் இருக்கின்றனர்."  என்று அவர்களின் கருத்தே தங்களின் கருது என்றும் தங்களின் ஊடக  அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். 

இலங்கையின் அதிகளவான முஸ்லிம் மக்களினதும் , அவர்களின் மத நம்பிக்கைகளினதும் குடை நிறுவனமாக செயற்படும் ஒரு நிறுவனம் ஒரு அமைப்புக்கு மட்டும் பாரபட்சம் காட்டி உள்ளதுடன் மக்களையும் எச்சரித்துள்ளது.  இந்த குடை நிறுவனம் முன்னர் பல்வேறுபட்ட இஸ்லாமிய மத அமைப்புக்கள் அல்லது அவ்வாறு  தங்களை தாங்களே அழைத்துக் கொள்ளும் அமைப்புக்களை சார்ந்த தலைவர்கள் இலங்கை வந்த  பொழுது அவர்களுக்கு எதிராக எந்தக் கருத்துகளையும் முன்வைக்கவில்லை , அவர்களின் வருகையை தடுக்கவில்லை , ஆனால் ஏன் இவரை ( பீ . ஜேயை ) மட்டும் ஆட் சேபிக்கிறீர்கள் என்று அவரை நிகழ்ச்சிக்கு அழைத்த இலங்கை பிரதிநிதிகள் காட்டமாகவே கேள்வி எழுப்பி உள்ளார்கள். 
படம் : அசாத் சாலி தேர்தல் வெற்றிக்காக அடக்கம் செய்யப்பட்ட மனிதரிடம் உதவி வேண்டி நடத்திய வழிபாடு.

எல்லாவற்றையும் விட  பீ . ஜே இலங்கைக்கு வரக் கூடாது,  வந்தால் இனக் கலவரம் வெடிக்கும் என்று ஊடக மாநாடு நடத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார் நுவா கட்சியின் தலைவர் அசாத் சாலி, இதற்காகவே ஒரு விசேட ஊடக மாநாட்டை நடத்தி பெரும்பான்மை சமூகத்தில் உள்ள பலசெனா போன்ற அமைப்புக்களை உசார்படுத்தி உள்ளார் ஆசாத் சாலி. "பாலுக்கு காவல்; பூனைக்கு தோழன்' என்ற விதமாக இவர் குறித்த இஸ்லாமிய இயக்கத்தினருக்கு எதிராக செயற்பட்டு வருபவர். பொதுபலசேனா  இலங்கையில் உள்ள குறிப்பிட்ட தவ்ஹீத் அமைப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த பொழுது , இன்னுமொரு குற்றச்சாட்டை  , அந்த  அமைப்புக்கு எதிராக கொண்டு வந்தவர் ஆசாத் சாலி என்பதுடன் அவரும் பலசேனாவும் அடிப்படையில் ஒத்த முகாந்திரத்திலேயே வழக்கை- விசாரணையை -நோக்கி நகர்த்தி செல்கின்றனர் எனச்  சொல்லப்படுகிறது.  

படம்: ரவூப் ஹக்கீம் , சேகு தாவூத் பசீர் ஆகியோர் 2008 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வெற்றிக்காக  அடக்கம் செய்யப்பட்ட மனிதரிடம் உதவி வேண்டி நடத்திய வழிபாடு.

" எனது எதிரின் எதிரி எனது நண்பன் " என்று ஒரு கட்டுறுதியான எதிர்ப்பு அணி ஒன்று சேர்ந்துள்ள வேளையில், பரவலாக ஒரு ஏகோபித்த எதிர்ப்பினை பல்வேறுபட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் தங்களைக் கிடையிலான வேறுபாடுகளைக் களைந்து முன்னெடுக்கையில் உலமாக்கட்சியின் தலைவரான முபாரக் மவ்லவி என்பவர் 
படம் : அலி சாகிர் மௌலானா , 2015 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக அடக்கம் செய்யப்பட்ட மனிதரிடம் உதவி வேண்டி நடத்திய வழிபாடு.


"பீ ஜே த‌மிழ் பேசும் முஸ்லிம் உல‌கின் முத‌ன்மை வாய்ந்த‌ சீர்திருத்த‌வாதி. அவ‌ர‌து க‌ருத்துக்க‌ளில் சில‌ க‌டுமையான‌ க‌ருத்து வேறுபாடுக‌ள் கொண்டிருந்தாலும் அவ‌ர் குர் ஆன் ஹ‌தீத் அறிவுள்ள‌ மிக‌ச்சிற‌ந்த‌ அறிஞ‌ர்க‌ளில் ஒருவ‌ர். அவ‌ர் இல‌ங்கை வ‌ருவ‌தை உல‌மா க‌ட்சி வ‌ர‌வேற்கிற‌து." என்று ஒரே ஒரு அறிக்கை மாத்திரம் இப்போதைக்கு வெளி வந்துள்ளது. ஜனநாய பாரம்பரியத்தை பேணி நடந்துகொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இலங்கையில் கடந்த காலங்களில் இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளில் கருத்து வேறுபாடுகள் கொண்ட மிகச் சிறு குழுவினர் இருந்து வந்துள்ளனர். அவர்களுக்குள் வன்முறை தலைவிரித்தாடி உள்ளது

காத்தான்குடி அத்தகைய வன்முறைகளை சந்தித்த இடம். அங்கு 2005 இல் பீ . ஜே மத பிரச்சார நிகழ்வுகளில் கலந்து கொண்ட பொழுது இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது. 

ஆனால் பின்னர் 2009 இல் வேருவளையிலும் இஸ்லாமிய அடிப்படை கொள்கையில் நேர் எதிரான இரண்டு  மதப் பிரிவினர்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. அங்கு இருவர் கொல்லப்பட்டனர் , 52  பேர் காயமுற்றனர்  பள்ளிவாசலின் ஒரு பகுதி எரிக்கப்பட்டது , சொத்துக்கள் வாகனங்கள் எரிக்கப்பட்டன. இலங்கை  வரலாற்றில் அதிகம் பேர் கைது செய்யப்பட்ட நிகழ்வு நடந்தது. 

2014 இல் அழுத்கமவில் பௌத்த தீவிரவாதிகள் முஸ்லிம்கள்  மீது தாக்குதல் நடத்தினர்.
நால்வர் (ஒரு தமிழர் உட்பட ) கொல்லப்பட்டனர் . பாரிய அழிவு நடந்தேறியது.  

முந்தியது முஸ்லிம்கள் தங்களுக்குள்  தாங்களே தீவிரவாதிகளாக மாறி பரஸ்பரம் சுய அழிப்பு செய்தது. 

பிந்தியது பௌத்த (மாற்று மத ) தீவிரவாதிகள் முஸ்லிம்களை அழித்தது.

முஸ்லிம்களுக்குள் ஜனநாயக மறுப்பு , கருத்துச் சுதந்திரம் என்பன சுய விமர்சனத்தை நாடி நிற்கிறது, ஆரோக்கியமான விவாதங்களை நடத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. சீர்திருத்தங்கள் அப்பொழுதான் ஏற்படும், ! 

வெளியே தங்களுக்கு எதிரிகள் உள்ளார்கள் என்று முறையிடும்  "முஸ்லிம்கள் "  இனிமேல்  அதை ஒத்த எதிரிகள் தங்களுக்குள் , தாங்களாவே  
இருக்கிறோம்  என்பதையும் அங்கீகரிக்க வேண்டி உள்ளது என்பதையே இத்தகைய சமபவங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மத சகிப்புத்தன்மை வெளியே இல்லை உள்ளே - அதிலும் - உள்ளுக்குள்ளே-தான் இருக்கிறது!

பிற் குறிப்பு

அரபு மொழியில் : உம்மா   : இஸ்லாமிய சமூகம்
உலமாக்கள் :  முஸ்லிம் மத அறிஞர்கள்
bazeerlanka.com

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு என்ன ஆயிற்று?- கு.பாஸ்கர்

நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது நா முதலாளித்துவத்தின் உச்சகட்ட ஜனநாயக அமைப்பு முறைகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் இப்படிப்பட்ட ...