அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (2)

அங்கெங்கெனாதபடி எங்குமாய்  ! -     ஒரு தொடர் பார்வை  (2)
- எஸ்,எம்.எம். பஷீர்
"ஒரு பத்திரிகை எழுத்தாளர் என்பவர் , ஒரு செய்தியின் மறைமுக நிகழ்ச்சி  நிரல்களையும் அதனைச் சுற்றியுள்ள வெற்றுப் புனைந்துரைகளையும் உணருந்திறனற்று வெறும் செய்தியாளனாக தங்களைக்  காண்பது  போதுமானதன்று."

( உல ஏகாதிபத்தியங்களின் நயவஞ்சக முகத்திரைகளை கிழித்து வரும் அவுஸ்திரேலிய பிரபல  எழுத்தாளர். -  ஜான் பில்ஜெர் )

 “It is not enough for journalists to see themselves as mere messengers without understanding the hidden agendas of the message and the myths that surround it.”  John Pilger 

tariq-al-mainaஅண்மைக்காலமாக இலங்கையில் நடைபெறும் பௌத்த இனவாத குழுவினரின் அடாவடித்தனங்கள் ஒரு ஒருங்கிணைகப்பட்ட வகையில் இலங்கையின் பல பாகத்திலும் முஸ்லிம்களுக்கும் சிங்கள கிறித்தவர்களுக்கும் எதிராக நடைபெற்று வருகினறது. பல் வேறுபட்ட பௌத்த இனவாத,  மத அரசியல் இயக்கங்கள்,  1910களில்  இருந்து அவ்வப்போது தோன்றி வருவதும் அவை இலங்கையின் சக வாழ்வுக்கு சவாலாக  அமைந்து  வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதும் வரலாறு.  வட கிழக்கு  தமிழரின் தாயகம் என்ற கோட்பாட்டினடிப்படையில்  முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகள் இனச் சுத்திகரிப்புக்கள் இன்றுவரை வட கிழக்கு முஸ்லிம்களின் வாழ்நிலையில் மாறாத வடுவாய்  ஊடாடி நிற்கின்றன. 
காலத்துக்கு காலம் தோன்றிய   பௌத்த சிங்கள தேசியவாத மத அரசியல்  இயக்கங்கள் பல இலங்கையின் பெரும்பான்மை பௌத்த மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டன , எனினும் ஹெல உறுமய மாத்திரம் தமிழ் தேசிய புலி பயங்கரவாதத்தினால் தன்னை மத அரசியல் கட்சியாக நிலைநிறுத்தி கொள்ள முடிந்தது.  அவர்களால்  ஆட்சி மாற்றத்தை மத , இன அடிப்படையில் செய்ய முடியவில்லை . ஹெல உறுமய கூட பெரும் செல்வாக்கு பெற்ற கட்சியல்ல. புலிகளின் பின்னர் தங்களைத் தக்க வைக்க அரசியல் ரீதியல் எதிர்கால அரசியல் களத்தில் உயிர்வாழ  முஸ்லிம் இனவாதம் அவர்களுக்கு தேவைப்படுகிறது.  என்றுமே  நீறு பூத்த நெருப்பாய் ஒரு பௌத்த சிங்கள தேசியவாத அடிநீரோட்டம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவற்றினால் பாரிய சமூகப் பிறழ்வை ஏற்படுத்த முடியவில்லை. மறுபுறத்தில் பௌத்த மத பீடங்கள் இலங்கையின் பெரும்பான்மை மக்களான பௌத்த சிங்கள மக்களின் சமூக அரசியல் வாழ்நிலையில் செல்வாக்கு செலுத்தும் மத அதிகாரத்தினைக் கொண்டுள்ளது. 
பௌத்த மத பீடங்களின்  அரசியல் செல்வாக்கை இரானில்  உள்ள முல்லாக்களின் சுறா சபை  செலுத்தும் அதிகாரத்துடன் ஒப்பிடும் பொழுது , பௌத்த பீடங்களின் செல்வாக்கு சற்றுக் குறைந்ததுதான் . இரானிய தலைநகரான டெஹ்ரானில் ஒரு சுன்னி மத வழிபாட்டு மசூதியை அமைக்கும் உரிமையைக்  கூட  இரானிய மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு வழங்குவதற்கு அதிகாரத்தை முல்லாக்கள் சபை வழங்கவில்லை. 
இலங்கையில் பௌத்த மத பீடங்களின் அரசியல் செல்வாக்கை இரானில்  உள்ள முல்லாக்களின் காப்பாளர் சபையுடன் (Guardian Council) ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது முல்லாக்களின் காப்பாளர் சபையின்  அரசியல் மேல் ஆதிக்கம் சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இரானிய நாடாளுமன்றம் (இஸ்லாமிய ஆலோசனைக் கூட்டம்-Islamic Consultative Assembly   ) முல்லாக்களின் காப்பாளர் சபைக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும். 
யூதர்களின் வழிபாட்டுத்தலமான சினகொக் ( Synagogue ) இரானில் உள்ளன என்று சொல்லப்படுகிறது , ஆனால் உலகின் பெரும்பான்மை முஸ்லிம் பிரிவினரான இரானில் சிறுபான்மையாக வாழும் சுன்னிகளின் பள்ளி அமைக்க அங்கு உரிமை இல்லை. மறுபுறம் சவூதியில் வாழும் பத்து லட்சம் ஷீயாக்கள் வழிபட இரண்டு பள்ளிவாயல்கள் சவூதியில் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு சொல்ல வரும் செய்தி என்னவென்றால் இலங்கையில் பௌத்த மத ஆதிக்கம் என்பது ஷீயாக்களால் உருவாக்கப்படும் அரசியல் ஆதிக்கத்தைப் போல் சட்ட பூர்வமாக பாதுகாக்கப்பட்டதோ அல்லது ஆட்சி அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் மிகப் பெரிய மத நிறுவனம் அல்ல. ஆனாலும் பௌத்த மத பீடங்களைப் பகைத்து அல்லது அதன் தலையீட்டை அடியோடு மறுத்து ஆட்சி செய்வதை ஆட்சியாளர்கள் விரும்புவதில்லை. ஆட்சித்தலைவர்கள் சிரம் சாய்க்கும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களை அனுசரித்து போக வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது  
ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் தொடரும் சிங்கள  தீவிரவாத சக்திகளின் அடாவடித்தனங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்படல்  வேண்டும். அண்மையில் நான் சமூக நல்லிணக்க மொழி அமுலாக்கல் அமைச்சரான வாசு தேவ நாணய்க்காரவை சந்தித்து   இது குறித்து சம்பாஷித்த பொழுது அவர் அது பற்றிய அக்கறையை கொண்டிருந்தார். வழக்கம் போல் இனவாத சக்திகள் பற்றி அவர் கவலையுற்றிருந்தார், அதேவேளை அவர்களின்  துரித மறைவு குறித்தும் மிகுந்த  நம்பிக்கை கொண்டிருந்தார். அண்மையில்  ஒரு அமைச்சரவை பத்திரத்தையும் அவர் இனவெறுப்பு பேச்சுக்கள்  குறித்து சமர்ப்பித்திருந்தார். எனது ஞாபகத்தில் சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில்  இன அடிப்படையில் பாரபட்சம காட்டுதல் தொடர்பாக ஒரு சட்ட மூலம் பற்றி ஆராயப்பட்டது. ஆனாலும் அதனை அன்றைய ஆளும் கட்சியோ அல்லது எதிர்க் கட்சியோ ஆதரிக்கவில்லை, ஏனெனில் இனவாதம் , மதவாதம் அரசியலுக்கு  அடிநாதமாக பல வேளைகளில் பல நாடுகளில் . துணை புரிகிறது.
பலசேனை என்ற அமைப்பு உருவாக  முன்னரே (இது சென்ற வருடம் ஜூலையில் உருவானதாக சொல்லப்படுகிறது.) தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதல்களை  மேற்கொண்ட சிங்கள ராவய அதற்கு சில வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டது. அவ்வமைப்பு தம்புள்ள பள்ளி மீது மேற்கொண்ட தாக்குதல்களினை அடுத்து இடம்பெற்ற கிழக்கு மாகாண தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது , முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம்  இலங்கை வரலாற்றில் பௌத்த மத குருமார்களை காவியுடை தரித்த பயங்கரவாதிகள் என்று பொத்தாம் பொதுவாக பழித்தூற்றுரைத்தார் . பௌத்த மத குருமாரை அதுவரை எந்த தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகளோ அல்லது சாதாரண தமிழரோ அல்லது முஸ்லிமோ அப்படி பகிரங்கமாக அதுவும் அரசியல் மேடையில் குறிப்பிட்டதில்லை. ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவர் ஒருவர் சமூகப் பொறுப்பின்றி அப்படிக் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான பழியுரை பௌத்த மக்களுக்கும் பௌத்த குருமாருக்கும் ஆத்திரத்தை உண்டு பண்ணியதும் ரவூப் ஹக்கீம் , அதற்க்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இல்லாவிட்டால் அது ஒன்றே  பௌத்த முஸ்லிம் கலவரத்தை நாடளாவிய ரீதியில் தோற்றுவிக்க போதுமானதாகும். 
வழக்கம் போலல்லாது நவீன  தொழிநுட்ப ஊடக வியாபகம் இன்று நாடுகளையே பக்கத்து வீடாக மாற்றியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் செய்தியாளர்கள் எழுத்தாளர்கள்  உடனுக்குடன் செய்திகளை கொண்டுவருகிறார்கள், அந்த வகையில் இலங்கையில் நடைபெற்ற பௌத்த இன வன்முறை சம்பவங்கள் பற்றி உலகளாவிய  செய்திகள் பல  அரசுகளை , மனித உரிமை நிறுவனங்களை எழுத்தாளர்களை அக்கறை கொள்ள வைத்தது. அந்த வகையில் தாரிக் அல்  மயீனா எனப்படும் சவூதிய எழுத்தாளர் இலங்கை பற்றி எழுதியவையும் அடங்கும். 
தாரிக் அல்  மயீனா (Tariq A.Al Maeena,) கல்ப் நியூசின் (Gulf News) பிரபல பத்தி எழுத்தாளர், முன்னாள்  பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றி இருந்திருக்கிறார். குறிப்பாக இவருக்கு தெரிந்த  சவூதி உட்பட்ட த்திய கிழக்கில் வாழும் சில முஸ்லிம்கள் மூலமும் அதனால் ஏற்படுத்தப்பட்ட ஓரிரு இலங்கைத் தொடர்புகள் மூலமும், அங்குள்ள சில முஸ்லிம்களை நேர்கண்டு அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி இவர் கடந்த சில மாதங்களாக- இலங்கையில் ஹலால் பிரச்சினை முளைவிட்ட பின்னணியில்- இலங்கை முஸ்லிம்கள் பற்றி தொடர்ச்சியாக எழுதி வருகிறார். மேலும் பௌத்த இனவாத இயக்கமாக செயற்படும் பொது பல சேன இயக்கம் கிறிஸ்தவ மக்கள் மீதும் மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களையும் இவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. 
ஆயினும் இவர் இலங்கையில் இடம்பெறும் பௌத்த இனவாத சக்திகளின் முஸ்லிம் மற்றும் கிறித்தவ எதிர்ப்பு நடவடிக்கைகளை  பற்றி சுமார் மூன்று  கட்டுரைகளை எதுவரை எழுதியுள்ளார். , தனது வாசிப்பு தேடல்களின் மூலமும் தனக்கு தொடர்புள்ளவர்கள் மூலமும் அறிந்து கொண்ட விடயங்களை வைத்து எழுதும் இவர் முழு நாட்டிலும் முஸ்லிம்கள் மீதும் கிறித்தவர்கள் மீதும் ஆங்காங்கு இடம்பெற்ற பௌத்த மேலாதிக்க தீவிரவாத சக்திகளின் அடாவடித்தனங்களை ஒருசேர  நிரலிட்டுள்ளார். பத்தி எழுத்தாளராக உள்ள இவரின் எழுத்துக்கள் ஏற்கனவே நன்கு அறியப்பட்டவை , அதிகம் வாசிக்கப்படுபவை. அந்த வகையில் அவரின் இலங்கை முஸ்லிம்கள் மீதான பௌத்த தீவிரவாத நடவடிக்கைகள் பற்றிய எழுத்துக்கள் உலகளாவிய முஸ்லிம்களையும் குறிப்பாக மத்திய கிழக்கிலுள்ள முஸ்லிம்களை இலங்கையின் பக்கம் சற்று பார்வையை திருப்பச் செய்திருக்கிறது.
தாரிக் அல்  மயீனாவின்  கட்டுரைகளில் இலங்கை அரசின் மெத்தனப் போக்கை கண்டிப்பதை விட  ராஜபச்சவின் அரசே பௌத்த தீவிரவாத சக்திகளை சுயாதீனமாக செயற்பட அனுமதித்துள்ளது என்ற தனது குற்றச்சாட்டை அவர் பதிவு செய்கிறார். இவரது “ நவ பாசிசம் இலங்கையில் எழுச்சி கொள்கிறது _ Neo-fascism on the rise in Sri Lanka ”  என்ற கட்டுரையில் இவர் இலங்கை அரசினை குற்றம் சாட்டும் பொழுது பௌத்த தீவிரவாத இயக்கங்ககளை சண்டையிடும் தீவிரவாதக் குழுவினர் , (பொதுவாக அறியப்படும் மொழியில் ஆயுதம் தாங்கிச் சண்டையிடுபவ்ர்களையும் சேர்த்தே குறிக்கும் ஆங்கிலச் சொல்லான  militant ) என்று குறிப்பிடுகிறார். தனது இன்னுமொரு “Tears of Muslims in divided Sri Lanka “ என்ற கட்டுரையில் பௌத்த தீவிரவாத இயக்கங்ககளை பௌத்த தீவிரவாத தனிமங்கள் , பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர், பயங்கரவாதிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது பொதுபலசேனையை ஆத்திரமூட்டி இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 இவரின் “ Tears of Muslims in divided Sri Lanka” “ (பிரிவுபட்ட  இலங்கையில் முஸ்லிம்களின் கண்ணீர்) என்ற கட்டுரை முதலில் ஏப்ரல் மாதம் பதின்மூன்றாம் திகதிய கல்ப் நியூஸ் (Gulf News) பத்திரிகையில் வெளியானவுடன் பிரித்தானியாவிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் மஹிந்த அரசுக் கெதிராக தீவிரமாக  ஆட்சி மாற்றம் செய்ய  பிரச்சார ஊடகமாக செயற்படும் ஆங்கில இணையமொன்று அக்கட்டுரையின் தலைப்பை “ Bodubala sena  the terrorist group and the tears of Muslims in a divided Sri lanka ( பொதுபலசேன பயங்கரவாத குழுவும் பிரிவுபட்ட  இலங்கையில் முஸ்லிம்களின் கண்ணீரும் ) “ என்று மாற்றி மறுநாள்  வெளியிட்டிருந்தது. அந்த ஆங்கில இணையத்தினை  நடத்துபவர் முன்னாள் பத்திரிகையாளரான  ஒரு சிங்களவர். அவ்விணைனயத்தளம் அக் கட்டுரையின் தலைப்பை மாற்றியதன் மூலமும் அக்கட்டுரை எழுதிய தாரிக் அல்  மயீனாவின் புகைப்படத்தை அவரின் அரபு தேச உடையுடன் பிரசுரித்ததன் மூலமும் அதிக வாசிப்பினையும் நூற்றுக்கணக்கான பின்னூட்டத்தையும் பெற்றுக் கொண்டது. 

ஆனால் அக்கட்டுரைத்  தலைப்பும் அதனை எழுதிய அராபியரும் ஒரு மத தீவிரவாத பிற்போக்கு சக்திகளுக்கு (பொது பலசேன உட்பட ) எவ்வாறான எதிர்வினைத் தாக்கத்தினை ஏற்படுத்தியிருப்பார்கள் என்ற கேள்வி ஒரு புறமிருக்க பொதுவாகவே சிங்கள பௌத்தர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும்., இதனை அவ்வாறு தலைப்பு திரிப்பு செய்து வெளியிட்டவரின் உள்நோக்கம் என்ன நிச்சயமாக , ஒன்று ஆட்சி மாற்ற இலக்கு , மற்றையது முஸ்லிம்களின் மீதான அனுதாபத்தை அக்கறையைக் காட்டி சிங்கள பௌத்த தீவிரவாதிகள் தூண்டி விடுவது. மேலும் இக்கட்டுரை இலங்கையிலுள்ள சிங்கள தேசிய பௌத்த மத சார்பு பத்திரிகைகளில் மொழி பெயர்க்கப்பட்டும் பிரசுரமாகி மேலும் பௌத்த தீவிரவாத தனிமங்களுக்கு தீனி போடலாம். 
அந்த கட்டுரையை மறுபிரசுரம் செய்த  சுவிஸ்ஸை மையமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்படும் தமிழ் இணையம் ஒன்றும் மூலத் தலைப்பை கட்டுரைக்கு இடாமல்  அதே திரிவு படுத்தப்பட்ட தலைப்புடன் அக்கட்டுரையை வெளியிட்டிருந்தது.  
இந்த பின்னணியில் இலங்கைத் தூதுவராலயத்தின் முன்பு  நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை நடத்த உதவி புரிந்தவர்களிலும் சில பத்து பன்னிரண்டு இலங்கை முஸ்லிம்கள் இருந்துள்ளார்கள் என்ற அறிய முடிகிறது. அப்படியானால அவர்கள் ஏன் இலங்கையில் இனப்படுகொலை நடை பெறுகிறதென்ற அபாண்டமான பொய்யையும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  முஸ்லிம்களுக்கு வழங்கினார்கள். அவர்களில் (இலங்கை முஸ்லிம்கள்) சிலர் கலந்து கொண்டிருந்தாலும்  அப்படியான பொய்களை கூறி புனித யுத்தத்திற்கு அழைத்தார்களா அல்லது அகதி அந்தஸ்துக்கு ஆதாரம் தேடினார்களா என்ற கேள்வியும் எழுகிறது, இலங்கை  முஸ்லிம்களின் வாழ்க்கை அவர்களின் எதிர்காலம் குறித்து அக்கறை கொண்டோரின் செயலாக அந்த ஆர்ப்பாட்டம் தெரியவில்லை என்பதும் இங்கு சுட்டிக் காட்டப்படவேண்டியுள்ளது. பூனைக்கு விளையாட்டு..எலிக்கு உயிர் போகுது என்ற கதையாக இவ்வாறான ஆர்ப்பட்டங்களும் அனுதாபங்களும் அமைந்து விடக்  கூடாது. பிரித்தானியாவில் உள்ள இலங்கை புலம் பெயர் அமைப்பின் கையெழுத்து வேட்டை அறிக்கை குறித்து இலங்கையில்  வெளியாகும்  ஒரு முஸ்லிம் இணையம் "அரசாங்கத்திற்கு எதிரான கண்டன கையெழுத்து சேகரிப்பு" என்று தெரிவித்து அரசின் தலையீட்டை கோரிய அந்த அமைப்பினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார்களா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.!!
28 -04-2013
http://www.thenee.com/html/290413-1.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...