இலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை

-28 மார்ச் 2013
40வது இலக்கியச் சந்திப்பை நடத்துவது குறித்து இலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவுக்கும் இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக இரண்டு சந்திப்புக் குழுக்களிலும் அங்கத்துவம் கெண்டுள்ள  ராகவன் ஒரு பொருத்தமான தீர்வை முன்வைத்திருந்தார். 40 வது சந்திப்பை லண்டனிலும் 41வது சந்திப்பை இலங்கையிலும் நடத்தும் முடிவை இரு ஏற்பாட்டுக் குழுக்களும் ஏற்றுக்கொள்வது என்ற அவரது தீர்வை நாங்கள் முழுமனதாக ஏற்றுப் பொது அறிக்கையை வெளியிட்டடிருந்த போதிலும் ராகவன், நிர்மலா நீங்கலாக இலண்டன் ஏற்பாட்டுக் குழு அந்தத் தீர்வை ஏற்றுக்கொள்ள மறுத்தது ஆழ்ந்த வருத்தத்தை எங்களுக்கு ஏற்படுத்துகின்றது.
‘இலங்கையில் சந்திப்பை நடத்தும் முடிவைப் பொது அரங்கிலேயே தீர்மானிக்க வேண்டும் ‘ என்ற இலண்டன் குழுவின் அறிவிப்பின் பின்னால் இருப்பவை வெறும் பொய்மையும் கயமையும் மட்டுமே என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.



இலங்கைக்கு இலக்கியச் சந்திப்பைக் கோரி நாங்கள் பாரிஸ் இலக்கியச் சந்திப்பிலும் கனடா இலக்கியச் சந்திப்பிலும் பொது அரங்கிலேயே எமது கோரிக்கையை வைத்திருந்தோம். அந்தப் பொது அரங்குகளில் இலங்கையில் சந்திப்பை நடத்துவதை யாரும் மறுத்துப் பேசவுமில்லை, நிராகரிக்கவுமில்லை. இதற்கு மேலாக மூன்றாவதாக ஒரு பொது அரங்கை நிர்மாணித்து அதன் உச்சியில் பௌஸரும் கிருஷ்ணராஜாவும் அமர்ந்திருந்து தீர்ப்பு வழங்க எத்தனிக்கும் அவல நாடகத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இலங்கையில் சந்திப்பை நடத்துவது குறித்து மாற்றுக் கருத்துகள் இருந்திருப்பின் அதை பாரிஸ் இலக்கியச் சந்திப்பிலேயே பௌசரோ கிருஷ்ணராஜாவோ அல்லது வேறுயாராவதோ தெரிவித்திருக்க வேண்டும். அல்லது கனடா சந்திப்பிலாவது இந்த மறுப்புத் தெரிவிப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். ஆகக் குறைந்த பட்சம், சுமார் ஆறுமாதகாலம் நாங்கள் லண்டன் குழுவினருடன் பேச்சுவார்தைகளை நடத்திய போதாவது அவர்கள் இந்தப் பொது அரங்கு விடயத்தை நம்மிடம் விவாதித்திருக்க வேண்டும். இம்மூன்று சந்தர்ப்பங்களிலும் வாயை இறுக முடிக்கொண்டிருந்து விட்டு நாங்கள் இலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவை அமைத்து நிகழ்வு நடக்கும் தேதியையும் அறிவித்த பின்பு பௌஸரும் ராஜாவும் பொது அரங்கு அது இதுவென  எகிறி ‘பல்டி’ அடிப்பதன் பின்னால் வேறு அரசியல்காரணிகள்  உள்ளதாக உறுதியாக நாங்கள் நம்புகின்றோம்.
இலங்கையில்  இலக்கியச் சந்திப்பு நடத்துவதற்காக புகலிடத்தில் வாழும் எட்டுப்பேர்களாலும் இலங்கையிலிருக்கும் பதினைந்து பேர்களாலும் கோரப்பட்டிருக்கும் நிலையில் அதை மறுக்கவோ, இலக்கியச் சந்திப்பு மரபுக்கு மாறாக மூன்றாவது பொது அரங்கம், இரகசிய வாக்கெடுப்புகள் எனக் கூத்தடிக்கவோ இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவினருக்கு எந்த உரிமையும் கிடையாது. இவர்களிற்கு சந்திப்புத் தொடரை இலண்டனில் நடத்த எவ்வளவு உரிமையுள்ளதோ அதேயளவு உரிமை இலங்கையில் சந்திப்புத் தொடரை நடத்த, நீண்ட கால இலக்கியச் சந்திப்புச் செயற்பாட்டளர்களான எங்களுக்குமுள்ளது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆரம்பம் முதலே இலண்டன் இலக்கியச் சந்திப்பு குழு சதிகளையும் அடாவடித்தனத்தையும் செய்துவருவதை இங்கே பதிவு செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் இலங்கைச் சந்திப்புக் குறித்து தேதிகளை அறிவித்த மாத்திரத்திலேயே இலங்கையில் சந்திப்பை நடத்துவதா வேண்டாமா என்பதை ஒரு  வாக்கெடுப்பின் மூலம் தாங்கள் தீர்மானிக்கப் போவதாக பௌஸரும் கிருஷ்ணராஜாவும் அறிவித்தார்கள். நாங்கள் அதற்குக் கூடச் சம்மதம் தெரிவித்திருந்தோம். ஆனால் அந்த வாக்கெடுப்பு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடத்திய தேர்தல் வாக்கெடுப்பு மாதிரியே நடந்து முடிந்திருக்கிறது. பல இலக்கியச் சந்திப்பு செயற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே இவ்வாக்கெடுப்பில் தவிர்க்கப்பட்டார்கள். ஆகக் குறைந்தது 38வது சந்திப்பு ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு தவிர்க்கப்பட்டார்கள் என்பதை எங்களால் உறுதியாகச்  சொல்ல முடியும்.
நடந்து முடிந்த வாக்கெடுப்பின் முடிவுகள் இலங்கையை நிராகரித்து இலண்டனுக்குச் சாதகமாகவே இருந்தது எனப் பீற்றிக்கொள்ளும் பௌஸரும், ராஜாவும் அந்த வாக்கெடுப்பின் முடிவுகளையும் வாக்களித்தோர் பட்டியலையும் பகிரங்கமாக முன்வைக்க இன்றுவரை மறுப்பது ஏன்? இலக்கியச் சந்திப்பு மரபை நுண்ணிய சதிகளால் நாறடிக்காமல் விடுவதில்லை எனப் பௌஸரும், ராஜாவும் கச்சை கட்டி நிற்பது இலக்கியச் சந்திப்பின் ஜனநாயக மரபுக்கு ஏற்பட்டுள்ள தீராத அவமானம் என்பதை வெளிப்படையாக நாங்கள் அறிவிக்கின்றோம். இலங்கையில் சந்திப்பை நடத்தவிடாமல் இவர்கள் போடும் முட்டுக்கட்டைகளிற்குப் பின்னால் இரு முக்கியமான காரணங்களுள்ளன:
1. சில வருடங்களிற்கு முன்பு இலங்கையில்  முருகபூபதி அவர்கள் முன்னின்று நடத்திய சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை குறுந் தமிழ்த் தேசியவாதிகளும் நாடு கடந்த அரசாங்கத்தின் பிதாமகரான கவிஞர் சேரன் போன்றவர்களும், பிழைப்புவாதி யமுனா ராஜேந்திரன் போன்றவர்களும், நாம் தமிழர் கட்சி போன்ற பாஸிசவாதிகளும் எவ்வாறு முன்னின்று தடுக்க முயன்றார்களோ அது போன்றே இலக்கியச் சந்திப்பை யாழ்ப்பாணத்தில் நடத்துவதை விரும்பாத சக்திகள் இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவுக்குப் பின்னால் உள்ளன. இலங்கையில் எந்தவொரு  நல்ல காரியமும் நிகழவே கூடாது,  எப்போதும் சாவும் ஓலமும் ஒப்பாரியுமே அங்கிருக்க வேண்டும், அதன் முலமே குறுந் தமிழ்த் தேசியவாதத்தையும், புலிகளது பாணி அரசியலையும் முன்னெடுக்க முடியும் என இவர்கள் கருதுகிறார்கள். எங்களது இந்தக் குற்றச்சாட்டை இலண்டன் இலக்கியச் சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் தெளிவாக நிரூபித்துக்காட்டும் என நாங்கள் எதிர்வு கூறுகிறோம்.
இதற்கு மாறாக நாங்கள் இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கும் சிறியதொரு ஜனநாய இடைவெளியைப் பயன்படுத்தி அங்கே இலக்கியச் சந்திப்பை நிகழ்த்த வேண்டும் என்பதிலும் இதன் மூலமாக தாயகத்துப் படைப்பாளிகளிற்கும் புலம்பெயர் படைப்பாளிகளிற்கும் இடையே மட்டுமல்லாமல்  இலங்கையின் மூவினங்களின் படைப்பாளிகளிற்கு இடையேயும் புரிந்துணர்வும்  ஐக்கியமும் ஏற்படக் களம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென்பதிலும் உறுதியாக உள்ளோம். இலங்கையிலிருக்கும் எந்தவொரு படைப்பாளியும் இலங்கையில் சந்திப்பை நடத்த வேண்டாம் என இதுவரை சொல்லவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். புகலிடத்திலிருந்து தாயகத்திலுள்ளவர்கள் மீது வழிநடத்துகைளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கும் எதேச்சாதிகாரத்தை அரசியல் வெளிகளிலிருந்து இலக்கிய வெளிக்கும் எடுத்த வந்துள்ள இலண்டன் இலக்கியச் சந்திப்பின் செயல் வெறுக்கத்தக்கது.
2. இலங்கை இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவின் புகலிட உறுப்பினர்கள் அனைவருமே நீண்ட காலமாக சாதியொழிப்புச் செயற்பாடுகளிலும் தலித் அரசியலிலும் முன்னின்று செயற்படுபவர்கள்.
ஆக நாங்கள் முன்னெடுக்கும் நிகழ்வுகளிலே  எப்போதுமே தலித் இலக்கியமும் தலித் அரசியலும் முதன்மை பெறுவது போலவே யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பிலும் தலித் அரசியலும் தலித் இலக்கியமும் முதன்மை பெறும். எனகின்ற அச்சம் இலணடன் இலக்கியச்சந்திப்பு குழுவினரை பின்னால் நின்று இயக்குகின்ற சாதிமான்களுக்கு ஏற்பட்டுள்ளது.எனவே எப்பாடு பட்டவாது யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பை நிறுத்த வேண்டுமென அவர்கள் முயற்சிக்கிறார்கள். சாதியவெறியர்களின் இந்தச் சூழ்ச்சிக்கு   யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பை நிகழ்த்தி தக்க பதிலடியை நாங்கள் வழங்குவோம். ‘ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல,  எனவே ஆடுகளாக இருக்காதீர்கள்’  என பாபா சாகேப் அம்பேத்கர் எங்களை உஷார்படுத்தி வைத்திருக்கிறார்.
எனவே இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவினது பொது அரங்கு விவாதம், இரகசிய வாக்கெடுப்புப் போன்ற சதிகளை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம். குறும் தமிழ்த் தேசியவாதிகளினதும் சாதி வெறியர்களதும்  தொங்கு தசையாக இலக்கியச் சந்திப்பை மாற்றிவிடத் துடிக்கும் இலண்டன் சந்திப்புக் குழுவினருக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் எமது உறுதியான  எதிர்ப்புகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இலக்கியச் சந்திப்பை உடைக்க ஆதிக்க சக்திகள் காலம் காலமாகவே முயற்சித்திருந்தாலும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு இலக்கியச் சந்திப்பு தனது தீராத ஜனநாயக மரபுடன் சளைக்காத செயற்பாட்டுடனும் உறுதியாக வளர்ந்து நிற்கிறது. இலக்கியச் சந்திப்பு பிளவுறுவதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. எனவே மூன்றாவது முறையாகவும் எமது இறுதி எத்தனமாகவும் இலண்டன் இலக்கியச் சந்திப்பிலும் 41 வது சந்திப்பை இலங்கையில் நடத்துவதற்கான எமது கோரிக்கையை முன்வைப்போம். அங்கே எங்களுக்கு நீதி மறுக்கப்பட்டாலும், திட்டமிட்டபடி எதிர்வரும் யூலையில் நாங்கள் இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடத்துவோம். அவ்வாறாக இலக்கியச் சந்திப்புப் பிளவுபடும் ஒரு சூழல் ஏற்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பும் இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவையும் அதை இயக்கும் குறுந் தமிழ்த் தேசிய வெறியர்களையும் சாதிவெறியர்களையுமே சேரும்.
யூலையில் நடைபெறவிருக்கும் இலங்கை இலக்கியச் சந்திப்புக்கு சமூக முற்போக்காளர்களதும் சமூக நல்லிணக்கவாதிகளதும் சாதியொழிப்பாளர்களதும் சக இலக்கியத் தோழர்களதும் ஆதரவையும் ஒத்துழைப்பையும்இலங்கை இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டுக் குழு கேட்டு நிற்கின்றது.
நன்றி.
- இலங்கை இலக்கியச் சந்திப்புக் குழு
(புகலிடப் பிரிவு)

மூலம் :  http://www.thuuu.net/?p=1495#more-1495

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...