அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (1)
எஸ்,எம்.எம். பஷீர்


 அதிகமான மக்கள் தங்களின் மதங்களுக்காக சாக விரும்புகிறார்கள், ஆயினும் மிகச் சிலரே தாங்கள் சாக விரும்பும்  மதங்களை சரியாக பின்பற்றுகிறார்கள்                                                                                                                                                                                                            சோபித தேரர் 

ண்மைக்காலமாக இலங்கையில் பௌத்த மத பாதுகாவலர்களாக தங்களைச் சுயபிரகடனப்படுத்திக் கொண்ட  சில பௌத்த மதகுருமாரின் வழிகாட்டலில் செயற்படும்  பௌத்த தீவிரவாத சக்திகள் முஸ்லிம் மத அனுஷ்டானங்கள் , உடை உணவு நடைமுறைகள் பண்பாட்டு அம்சங்கள்  , பலவற்றை கேள்விக்குட்படுத்தி வருகின்றனர். 


 அரசியலமைப்புச் சட்டத்தின்படி சகல இலங்கை பிரஜைகளுக்கும் பொதுவான அடிப்படை   உரிமைகளில் ஒன்றுதான்,  தான் தேர்கின்ற நம்பிக்கையை அல்லது மதத்தை பின்பற்றும்  உரிமை ; அந்த உரிமை அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாம் அத்தியாயத்தில் 10ம் சரத்து மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது ஒரு குடியியல் உரிமை. இந்த உரிமையைப் பிரயோகிப்பதில் சகல பிரஜைகளும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்பதும் அவர்கள் சட்டத்தின் பாதுகாப்பிற்கு சமமான உரித்துடையவர்கள் . என்பதும்,  சகல பிரஜைகளும் மத , இன , மொழிசாதி , பால், அரசியல் அபிப்பிராயம் என்ற எந்த அடிப்படையிலும்   பாரபட்சம் காட்டப்படக் கூடாது என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 12ல் சொல்லப்பட்டுள்ளது.
படம்: இலண்டன் முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டம் 

ஆனால் இன்று இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தினை /மதத்தினைச் சேர்ந்த ஒரு பிரஜை அல்லது பிரஜைகள் இன்னுமொரு சமூகத்தினை  /மதத்தினைச் சேர்ந்த   பிரஜையின் அல்லது பிரஜைகளின்  தனிமனித/சமூக உரிமைகளில் அத்துமீறல்களை /அடாவடித்தனங்களைச் செய்கிறார்கள்.   ஆக மொத்தத்தில் பெரும்பான்மை சமூக மத ஆதிக்க வெளிப்பாட்டினை  அச்சமூகத்தில்  அல்லது மதத்தில் உள்ள மிகச் சிறுபான்மையினரே  மேற்கொள்கின்றனர்.  ஒரு சக இலங்கைப் பிரஜையின் தனிமனித ( தனித்துவ  அடையாளக் குறியீட்டு  வேறுபாடுகளுக்கு அப்பால் ) அடிப்படை உரிமை மீறலை இன்னுமொரு இலங்கைப் பிரஜை மேற்கொள்கின்றார் .  அத்தகையோரின்   ஆத்திரமூட்டும் செயற்பாடுகளின்  எதிர்வினை என்ன என்பதை முஸ்லிம் மக்களின் அல்லது சில முஸ்லிம் இயக்கங்களின் பொறுமையுடனான செயற்பாடுகள் மெதுவாக  பலன் தர ஆரம்பித்திருக்கின்றன என்ற அபிப்பிராயமும் நிலவுகிறது. மறுபுறத்தில் பௌத்த தீவிரவாத சக்திகள் பெரும்பான்மை பௌத்தர்களின் ஆதரவை எத்ர்பார்த்தளவு பெற முடியவில்லை.

இலங்கையில் பௌத்த அமைப்புக்கள் மேற்கொள்ளும் முஸ்லிம் மக்கள் மீதான மத உரிமை மறுப்புக்கள் கூட இலங்கை அரசு அரசியலமைப்புச் சட்டப்படி சம பாதுகாப்பு வழங்காமல் பாரபட்சம் காட்டுகிறது என்ற கோதாவில் அரசுக் கெதிராக அரசியலமைப்பு சட்ட மீறலுக்காக காத்திரமான  சட்ட  நடவடிக்கைள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை

ஆனாலும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத் தளங்கள் மூலமும்  பௌத்த முஸ்லிம் அடிப்படையிலான  பரஸ்பர கருத்துச் சமர் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இக்கருத்துச் சமர் மனித நாகரிக விழுமியங்களை தகர்த்து வருகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த பின்னணியில் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இலண்டனிலுள்ள இலங்கை தூதுவராலயத்திற்கு முன்பாக பிரித்தானிய முஸ்லிம் குழுவொன்று பௌத்த தீவிரவாத அமைப்புக்களும் இலங்கை அரசும் இலங்கை முஸ்லிம்களை படுகொலை புரிவதாக , அவர்களின் மீது அடக்குமுறைகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த  ஆர்ப்பாட்டம் பிரித்தானியாவில் வாழும் முஸ்லிம்களை மட்டுமல்ல இலங்கை வாழ் முஸ்லிம்களையும் சங்கடத்திற்குள்ளாக்கியது  என்பதை  மறுப்பதற்கில்லை.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கையில் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள் அங்கு ஒரு  இனப்படுகொலையே (Genocide) நடக்கிறது என்று குற்றம் சாட்டியதுடன் இந்நிலை தொடர்ந்தால் தாங்கள் இலங்கைக்கெதிராக ஒரு புனித யுத்தம்  (ஜிஹாத் ) செய்யப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் மியன்மாரில் (பர்மா) நடைபெறும் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை , இனப்படுகொலை சிரியா அரசுக்கு எதிரான புனித யுத்தம் என கடந்த காலங்களில் பல புனித யுத்த பிரகடனங்களை விடுத்துள்ளனர்.

மேலும் இலங்கை முஸ்லிம்கள் தங்களின் பிரதிநிதிகளாக இந்த இலண்டன் முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களை நியமித்துபோல  அல்லது இலங்கை அரசு இலங்கை முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக இவர்களை அங்கீகரித்து போல்  இவர்கள் " இலங்கை அரசுக்கு சமாதானம் தேவையென்றால் நாங்கள் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராகவிருக்கிறோம் " என்று வேறு  பேச்சுவார்த்தைக்கு சமிக்ஞை  காட்டியும் இருக்கிறார்கள்.  அதேவேளை "  முஸ்லிம்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்து! ; . இலங்கை அரசு முஸ்லிம்களின் எதிரி!.; முஸ்லிம்களே  அடக்குமுறைக் கெதிராக கிளர்ந்தெளுங்கள்இலங்கை அரசை அகற்றுங்கள்! ; கொடுங்கோன்மையை ஒழியுங்கள் ! கொடுங்கோலர்களை அகற்றுங்கள்! என்றெல்லாம் பதாதைகளை  சுமந்ததுடன் கோஷங்களும் எழுப்பியிருந்தனர். உலக முஸ்லிம் ஆதிக்கம் எனும் கோட்பாட்டின்  இந்த தீவிரவாத முஸ்லிம் குழுவினர் இலங்கையில் நடைபெறும் பௌத்த தீவிரவாத சக்திகளின் பௌத்த மேலாதிக்க அடக்குமுறைகளை அறிந்து கொண்டோ அல்லது சுயமாகவோ இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்களா என்று கேள்வி எழுகின்றபோது  அவர்கள் உலக முஸ்லிம் சகோதரத்துவம் உலக முஸ்லிம் தேசியம் என்றெல்லாம் தாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தமைக்கான முகாந்திரத்தைச் சொல்லி தாங்கள் வரிந்துகொண்ட உரிமையை எடுத்தியம்பியிருக்கிறார்கள்.  

ஆனாலும் இவர்கள் எப்படி பொத்தாம்
 பொதுவாகவே பௌத்தர்கள் இலங்கையில்  முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கிறார்கள், முஸ்லிம்களை பௌத்தர்கள் கொலை செய்கிறார்கள் இனப்படுகொலை செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டமுடியும். முஸ்லிம்களுக்காக புனித யுத்தம் புரியப்போவதாக  கூறும் அல்லது அதனை செய்யும்படி முஸ்லிம்களை கிளர்ந்தெழச் சொல்லும் இந்த பிரித்தானிய முஸ்லிம் குழுவினர் எப்படி உண்மையை தெரிந்துகொள்ளாமல் ஒரு பிற மத சமூகத்தினர்   முஸ்லிம்களை இனப்படுகொலை செய்கிறார்கள் என்று கூற முடியும் .  ஒரு சமூகத்தின் மீது அபாண்டமாக குற்றம் கூறும் பிறிதொரு சமூக.சமய மக்கள் என்ற வகையில் ஒரு புனித யுத்தத்தை முஸ்லிம்கள் எப்படி நியாயப்படுத்த முடியும்.!

அடிப்படையிலே ஒரு பொய்யை (இனப்படுகொலை ) சொல்லி புனித யுத்தத்திற்கு எப்படி ஏனைய முஸ்லிம்களை அழைக்க முடியும். அது போகட்டும் இவர்கள் மியன்மார் தூதுவராலயத்தின் முன்பும் இதற்கு முன்னர் ஒரு ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியிருந்தார்கள், அதிலும் இதே விதமான குற்றச்சாட்டுக்களை யுத்த முரசு  அறைதலை செய்திருக்கிறார்கள். அங்கும் இவர்கள் புனித யுத்தம் செய்யப்போகிறோம் என்று எச்சரிக்கை செய்தனர். மியன்மார் தூதுவராலயத்தின் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் இலங்கை தூதுவராலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் யாரும் ஜிஹாத் செய்ய பர்மாவிற்கு போனதாக தென்படவில்லை , போயிருந்தால் புதியவர்கள் பலரை இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டு கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். 
ஐக்கிய இராச்சியத்திலிருந்து சில முஸ்லிம்  இளைஞர்கள் உலகில் முஸ்லிம்களுக் கெதிராக நடைபெறும் அடக்குமுறைகள் யுத்த நிலையினை அடைந்தபொழுது அவ் யுத்தங்களில் கலந்து கொண்டுள்ளனர். முஸ்லிம் ஆட்சியாளர்கள் கூட அடக்குமுறையாளர் எனப் பெரும்பான்மை சுதேசிய மக்களால் குற்றம்சாட்டப்பட்டு அந்நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு யுத்தங்களில் கூட புனித யுத்தம் புரிவதாக பிரகடனப்படுத்திக் கொண்டு   ஐக்கிய இராச்சியத்திலிருந்து சில முஸ்லிம் இளைஞர்களும் அந்நாடுகளுக்கு சென்று அங்கு போர்களில் பங்கு கொண்டுள்ளனர் என்று தகவல்கள் உண்டு.  ஆனாலும் இந்த முஸ்லிம் அமைப்பின் அங்கத்தவர்கள் போய் அப்படியான புனித யுத்தம் புரிந்ததாக செய்திகள் வெளிவரவில்லை. அதனால்தானோ என்னவோ இவர்கள் இப்படி புனித யுத்தம் செய்யப்போவதாக கூறுகின்ற போதிலும் இவர்களை பிரித்தானிய அரசு கண்டு கொள்வதில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் ஆட்சி மாற்றம் வேண்டி நிற்கிற பல சர்வதேச நிறுவனங்கள்  ஊடகங்கள்  என்பவற்றுடன் இந்த முஸ்லிம் அமைப்பு கைகோர்த்திருக்க நியாயமில்லை, அப்படி நடக்கவும் வாய்ப்பில்லை. ஆனாலும் இவ்வமைப்பின் கோஷங்கள் இலங்கையில்  அரசு மாற்றத்தை வேண்டி நிற்கிறது என்பது ஆச்சரியமானதே.  ஹிஸ்-புத்-தாஹிர் எனும் ஒரு முஸ்லிம் அமைப்பு இந்த ஆர்ப்பட்டக்காரர்களின் மூல இயக்கமாக இருக்கிறது . இவர்கள் உலக முஸ்லிம் ஆட்சி அதிகாரம் பற்றிய பகிரங்கமாக பேசுபர்கள், அந்தக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களின்  எச்சரிக்கைகள் இலங்கையில் எவ்வித எதிர்வினையையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது., ஆனாலும் இவர்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து இலங்கை முஸ்லிம்கள் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. இந்த அமைப்பினர் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பிரித்தானியாவில் தமது தீவிர கருத்துக்களுடன் சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றனர். ஆனாலும் இவர்கள் பிரித்தானியாவில் 90களின் ஆரம்பத்தில் ஓமர் பக்ரி என்பவரின் தலைமையில் செயற்பட்டனர்.
ஓமர் பக்ரி லெபனான் சென்றிருந்த பொழுது
 மீண்டும் இவர் பிரித்தானிய திரும்புவதை பிரித்தானிய அரசு தடை செய்தது என்பதால் இவர் லெபனானில் இப்பொழுது வாழ்கிறார். ஆனால் கடந்த தசாப்தத்துள் நடந்த முஸ்லிம் மக்கள் மீதான புலிகளின் படுகொலைகளையோ மூதூர் வெளியேற்றம் போன்ற இனச் சுத்திகரிப்புக்களையோ இந்த அமைப்பினர் மட்டுமல்ல ஐக்கிய ராச்சியத்தில் உள்ள எந்த முஸ்லிம் அமைப்பும் கண்டு கொள்ளவில்லை. உண்மையின் அடிப்படையில் ஆதரவுக் குரல்களை தெரிவிப்பது என்பது வேறு , ஆடசி மாற்றமும் , யுத்தப் பிரகடனமும் செய்வதென்பது வேறு. முதலாவது அக்கறையுடன் தொடர்புபட்டது, பின்னையது ஆபத்தை விளைவிக்கக் கூடியது.


தொடரும்.
21 .04.2013
bazeerlanka.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...