அர்ஜூனா மகேந்திரனின் பிரச்சினையில் தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? – புனிதன்


லங்கையின் வரலாற்றில் சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் ஒருபோதும் நடைபெறாத அளவுக்கு பாரிய நிதி மோசடி இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்றிருக்கிறது. இந்த மோசடியில் இலங்கை பல்லாயிரம் கோடி ரூபாவை இழந்திருக்கிறது. இந்த மோசடியைச் செய்தவர் இன்றைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய சகாவான முன்னாள் இலங்கை வங்கி ஆளுநர் அர்ஜூனா மகேந்திரன்.
2015 ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டு வெற்றியீட்டினார். மைத்திரி வென்றவுடனேயே ஜனநாயக சம்பிரதாயங்களை மீறி அன்று பதவியில் அறுதிப் பெரும்பான்மையுடன் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்துவிட்டு, வெறுமனே 47 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ‘நல்லாட்சி’ என்ற பெயரில் அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு வழிவகுத்தார்.


கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் பதவியில் இருந்த ரணில் தலைமையிலான சிறுபான்மை அரசாங்கத்தை நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்ச தலைமையில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரி வழிவகுத்த போது, “ஐயோ ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுவிட்டது” எனக் கூக்குரல் இட்டு அட்டகாசம் புரிந்த அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும், மேற்கு நாடுகளும் 2015 ஜனவரியில் ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்த போது மூச்சும் காட்டவில்லை.
ரணில் 2015இல் ஜனநாயக விரோதமாக பிரதமராக நியமிக்கப்பட்டதும் முதல் செய்த வேலை தனது சகபாடியான அர்ஜூனா மகேந்திரனை மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கும்படி ஜனாதிபதி மைத்திரியிடம் சிபார்சு செய்ததுதான். ஜனாதிபதியும் அதைச் செய்தார்.
மகேந்திரன் மத்திய வங்கி ஆளுநராக இருந்த ஒன்றரை வருட காலத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் அவரது அமைச்சரவைச் சகபாடிகள் சிலரினதும் உதவியுடன் மத்திய வங்கியில் பிணைமுறி என்ற பெயரில் மிகப்பெரிய ஊழல் மோசடி ஒன்றை நடத்தி பல்லாயிரக்கணக்கான கோடி ரூபா பணத்தை சூறையாடிச் சுருட்டிக் கொண்டு பிரஜாவுரிமை பெற்றுள்ள சிங்கப்பூர் சென்று அங்கு பகிரங்கமாகவே வாழ்கிறார்.
மகேந்திரன் மத்திய வங்கியில் மோசடியில் ஈடுபட்டதும், அதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்பு இருப்பதும் ஜனாதிபதி அமைத்த விசாரணைக் குழுவின் மூலம் பட்டவர்த்தனமாகத் தெளிவாக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அர்ஜூனா மகேந்திரனை விசாரணைக்காக இலங்கை திரும்புமாறு அறிவித்தும் அவர் அதைச் சட்டை செய்யவில்லை. மகேந்திரனைக் கைது செய்வதற்கு இலங்கை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பித்தும் அவர் அதற்கும் அவர் தலை வணங்கவில்லை. அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கௌ;ளும்படி ஜனாதிபதி மைத்திரியும் எதிர்க்கட்சிகளும் பல தடவைகள் கோரியும் ரணில் அரசாங்கம் எவ்வித முயற்சிகளும் எடுக்காமல் காலத்தை இழுத்தடித்து வருகின்றனர். ‘இன்டர்போல்’ எனும் சர்வதேச பொலிஸ் நிறுவனம் மகேந்திரனை சிவப்புப் பட்டியலில் போட்டு கைது பிடியாணை விடுத்தும் மகேந்திரன் அதற்கும் மசியாமல் இருக்கின்றார்.
ஜனாதிபதி மைத்திரி சில மாதங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் சென்றிருந்த சமயம் மகேந்திரனை நாடு கடத்தி உதவும்படி நேரடியாக சிங்கப்பூர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தும் அந்த நாட்டு அரசாங்கம் உருப்படியான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. இது சம்பந்தமாக அதிருப்தி அடைந்த ஜனாதிபதி பகிரங்கமாக சிங்கப்பூர் மீது குற்றஞ்சாட்டிய பின்னர்தான் அந்நாட்டு அரசாங்கம் சில சட்டப் பிரச்சினைகளைச் சொல்லி தனது இழுத்தடிப்பை நியாயப்படுத்த முயல்கிறது. ஆனால் சிங்கப்பூர் சொல்லும் நொண்டிச்சாட்டுகள் பொய்யானவை என இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மகேந்திரனின் நெருங்கிய சகாவும், அவரை மத்திய வங்கி ஆளுநராக நியமிப்பதற்கு சிபார்சு செய்தவருமான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மகேந்திரன் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அக்கறையற்று அவரைப் பாதுகாக்க முயல்வதைப் பார்க்கும் போது, மகேந்திரன் குற்றமிழைத்துள்ளார் என்பதும், அதில் ரணில் அரசாங்கத்துக்கும் பங்கு இருப்பதும் புலனாகின்றது.
இது ஒருபுறமிருக்க, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு தமிழரான மகேந்திரன் செய்துள்ள மிகப்பெரிய மோசடி முழு இலங்கைத் தமிழர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழனின் வீரம், தியாகம், மானம், மரியாதை என பலவற்றை வானம் பிளக்க கூக்குரல் இட்டு வரும் எந்தவொரு தமிழ் அரசியல் தலைமையும் மகேந்திரன் செய்த தேசத்துரோக நடவடிக்கை குறித்து இதுவரை வாயே திறக்காமல் இருந்து வருகின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, முற்போக்கு தமிழ் கூட்டணி உட்பட அனைத்து தமிழ் தேசியவாத கட்சிகளும், இயக்கங்களும் இந்த விடயத்தில் மயான அமைதி காத்து வருகின்றன. ‘மகேந்திரன் தமிழன்தானே? அவர் சிங்களவனின் இலங்கையைக் கொள்ளை அடித்தால் நமக்கென்ன?’ என அவை கருதுகின்றனவோ என்னவோ?
இந்த விடயத்தில் மட்டுமல்ல, அண்மையில் மலையக தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் வழங்கக் கோரி பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட போதும் இந்த தமிழ் தலைமைகள் ஒரு ஆதரவு வார்த்தை தன்னும் கூறாது வாயை இறுக மூடிக்கொண்டு இருந்தன.
இவர்களின் இந்த நிலைப்பாட்டுக்கு அடிப்படைக் காரணம் ஆட்சியில் இருக்கும் தமது வர்க்க சகாவான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு இடையூறு செய்யக்கூடாது என்பதைத் தவிர வேறு எதுவும் காரணமாயிருக்க முடியாது.


Source: Vaanavil -99- March 2019 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...